மறுபடியும்

This entry is part 15 of 33 in the series 27 மே 2012

தெலுங்கில்: ஸ்ரீ வல்லி ராதிகா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

அடிக்கடி கனவுலகில் நழுவிப் போவதற்கும், இதழ்கள் மீது இடை விடாமல் முறுவல் தவழ்வதற்கும், அரக்க பறக்க ஓடிக்கொண்டே, திடீரென்று ஏதோ நினைப்பில் அப்படியே நின்று விடுவதற்கும் சுனந்தாவின் வயது பதினாறு இல்லை, நாற்பத்தியாறு.

தன்னுடைய நிலை ரொம்பவும் வெளிப்படையாக தென்படுகிறது என்றும், சந்தோஷத்தை தன்னால் மறைக்க முடியவில்லை என்றும் தெரிகிறது. அந்த சந்தோஷத்தைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்களோ, கண்பட்டு விடுமோ என்றும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

ஆனால் கட்டுப்படுத்துவதற்கு அவளால் முடியவில்லை.

இன்றுதான் புதிதாக பிறந்தது போல், இப்பொழுதுதான் இளமையில் காலடி எடுத்து வைத்தது போல், இன்றுதான் கடவுள் தன்னை அழைத்து “சுனந்தா! இதோ உன் வாழ்க்கை. பெற்றுகொள்” என்று வாழ்க்கையை தன் கையில் ஒப்படைத்தது போல் தோன்றுகிறது.

ஆமாம். பிறந்து நாற்பத்தியாறு வருடங்கள் கழிந்து விட்டாலும் இதுநாள் வரையில் சுனந்தா வாழவேயில்லை.

‘மகிழ்ச்சியான தருணங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை.

‘நெருங்கியவர்கள்’ என்று சொல்லக் கூடிய மனிதர்களும் இல்லை.

‘சாத்தித்த வெற்றிகள்’ என்று சொல்லக்கூடிய சாதனைகள் எதுவும் இல்லை. உணமையிலேயே அவள் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

அவள் பிறக்கும் போதே தாய் இறந்து போய் விட்டாள். நினைவு தெரியும் முன்பே மாற்றாந்தாய் அவள் கையைப் பற்றிக் கொண்டாள்.

அதற்குப் பிறகு வாழ்க்கை முழுவதும் மாற்றாந்தாயின் பின்னால் நடப்பதில் கழிந்து விட்டது.

விடியற்காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்வாள் சுனந்தா. வீட்டைச் சுற்றிலும் பெருக்கி, சாணி தெளித்து, கோலம் போடுவதுடன் நித்தியபடி வேலைகள் துவங்கும்.

பால் கறப்பது, எல்லோரையும் எழுப்பி காபி கலந்து கொடுப்பது, வீட்டில் எல்லோருடைய துணிகளையும் தோய்ப்பது, பற்றுப் பாத்திரம் தேய்ப்பது….

சுனந்தாவுக்கு கடியாரம், ரிஸ்ட் வாட்ச் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றுதான். அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் காலம் கழியும். காலம் கழிந்து கொண்டிருந்தாலும் அவள் பாட்டுக்கு வேலை பண்ணிக் கொண்டேதான் இருப்பாள்.

இருபது வயது நிரம்பும் வரையில் அதே விதமாய் கழிந்தது அவளுடைய வாழ்க்கை. அந்த வீட்டைத் தவிர வேறு எந்த உலகம் தெரியாமல், வேலையைத் தவிர வேறு எந்த விஷயமும் தெரியாமல்.

அந்த நேரத்தில்தான் திருமணமாயிற்று.

திருமணம் ஆகப் போகிறது என்று தெரிந்த போதும், திருமணம் நடந்துக் கொண்டிருந்த போதும் கூட சுந்தாவுக்கு வாழ்க்கை பற்று இல்லாமலேயே கழிந்தது.

முதல் இரவு.. சங்கரன் இருந்த அறையில் காலடி எடுத்து வைக்கும் போது .. கதவு அருகில் ஒரு நிமிடம் நின்ற போது..

அப்போது மாத்திரமே சுனந்தா ஒருநிமிடம் போல் வாழ்ந்தாள்.

ஆமாம். அவள் பிறந்தது முதல் எதிர்பார்ப்பு, உத்வேகம் போன்ற உணர்வுகளை எப்போதாவது அனுபவித்து இருக்கிறாள் என்றால் அது அந்த ஒரு நிமிடம் மட்டும்தான்.

உடலைச் சுற்றியிருந்த வெண்பட்டுப் புடவை “போ… உள்ளே உன் மனதை அன்பால் சிறைப் படுத்தக் கூடிய சிநேகிதன் இருக்கிறான்” என்று சொன்ன போது,

தலையில் சூடிய மல்லிகைச் சரம் “இனி வாழ் நாள் முழுவது நறுமணம் தான்” என்று காதில் குசு குசுத்த போது, தான் விரும்பியது போல், தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ற வாழ்க்கை .. கையில் டம்பரில் இருந்த பால் போல் தூய்மையாய் தென்பட்டுக் கொண்டு இருக்கையில் உள்ளே அடியெடுத்து வைத்தாள் சுனந்தா.

சங்கரன் தென்பட்டான். உணர்ந்துகொள்ளப் பட்டான். அவளுக்குள் இருக்கும் உயிரோட்டம் நசிந்து போகும் வரையில் தான் யாரென்று உணரவைத்தான். சுனந்தா ஊகித்துக் கொண்டது போல் கல்யாணம் ஆன பிறகு வாழ்க்கை மாறவில்லை. அவள் மாமியார் வீட்டுக்குப் போகவில்லை. சங்கரந்தான் இங்கே வந்து தங்கி விட்டான்.

அதே வீடு… அதே வேலைகள். இன்னும் சொல்லப் போனால் அதற்குத் துணையாய் பொறுப்புகள் தெரியாத கணவன், அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள், கூட சேர்ந்து கொண்டன.

வீட்டில் இருப்பது நான்கு பேர்தான் என்றாலும் சுனந்தா நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையில் திக்கு முக்காடும் விதமாக கவனம் மேற்கொண்டாள் சுபத்திரை.

தம்பி ஹாஸ்டலில் தங்கி படித்தான். விடுமுறையில் அவன் வீட்டுக்கு வந்தால் இனி சுனந்தாவுக்கு மூச்சு எடுத்துக் கொள்ளவும் நேரம் கிடைத்தது இல்லை. “ராஜேஷுக்கு அதிரசம் பிடிக்கும். கொழுக்கட்டை பிடிக்கும்” என்று விதவிதமாக பட்சணங்கள் தயாரிக்கச் செய்யச் சொல்லுவாள் சுபத்திரை.

ஆமாம் பின்னே! அவள் சுனந்தாவுக்கு மாற்றாந்தாய் என்றால், ராஜேஷைப் பெற்றெடுத்தவள். பெற்றோரின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அவன்மீதே இருந்து வந்தன. ரொம்ப நன்றாக படித்து வந்தான் ராஜேஷ். டென்னிஸ் விளையாடுவான். எதிராளி மயங்கும் விதமாக புல்லாங்குழல் வாசிப்பான்.

வாழ்க்கை என்றால் என்னவென்று சுனந்தாவுக்கு அவனிடம்தான் தென்பட்டது. தான் இறந்து போய் தம்பியின் உடலில் நுழைய வேண்டும் என்று வேட்கை தோன்றியது.

இன்ஜினியரிங் முடிந்ததும் மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு போய்விட்டான் ராஜேஷ். அதன் பிறகு அங்கேயே திருமணம், அங்கேயே வேலை. தந்தை இறந்த போது கூட வரவில்லை.

தந்தை இறந்து போவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு சுனந்தாவுக்கு எப்போதாவது தோன்றியது உண்டு. ‘எனக்கும் ஒரு மகன் பிறந்தால்’ என்று. பேரனைக் கொஞ்சும் தந்தையை கண்குளிர பார்க்க வேண்டும் என்று. அவள் விருப்பம் நிறைவேறி இருக்குமோ என்னவோ. ஒரு நள்ளிரவில், பீரோவில் இருந்த நகைகளுடன், ராஜாமணியின் வைப்பாட்டி காமாட்சியுடன் சங்கரன் ஓடிப் போகாமல் இருந்திருந்தால்.

சங்கரன் ஊரை விட்டு போய் விட்டான் என்று தெரிந்த போது சுனந்தாவுக்கு துக்கம் வரவில்லை. பணத்தையும், நகைகளையும் நினைத்து பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருந்த போதுகூட அவளுக்குப் புரியவில்லை. இறுதியில் அவனுடைய நினைவுகளாக அவள் உடலின் மீது தங்கி விட்ட அவனுடைய அடிகளின் வடுக்கள் கூட அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதில்லை.

ஒரு விதமான பற்று இல்லாத தன்மை அவளை சூழ்ந்து கொண்டு விட்டது. நடக்க தெரிந்த ஒரு இயந்திரம் போல், ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியைப் போல் அவள் அந்த வீட்டில் நடமாடி வந்தாள்.

கால் நூற்றாண்டு காலம்! நீண்ட வருடங்கள்!

எத்தனையோ தைகள் பிறந்தன. எத்தனையோ சித்திரைகள் வந்தன. எத்தனையோ வீடுகள் கைக் குழந்தையின் ஆட்டம் பாட்டத்துடன் நிரம்பி வழிந்தன. வயதானவர்களுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தன.

ஊரில் ஹைஸ்கூல் வந்தது. கல்லூரி வந்தது. பெண்கள் சைக்கிள் மிதித்துக் கொண்டு கல்லூரிக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இவை எதையும் சுனந்தா நேரடியாக பார்த்தது இல்லை.

இவற்றை மட்டுமே இல்லை. தந்தை இறந்து போன பிறகு கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு இந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் ஒருதடவை கூட சுனந்தா போனது இல்லை.

அசல் சுனந்தாவுக்கு என்னதான் தெரியும்? எதுவும் தெரியாது. சித்தி கொடுத்த குரலுக்கு பதறியடித்துக் கொண்டு ஓடுவது, இயந்திரம் போல் வேலை செய்வது தவிர எதுவும் தெரியாது.

இப்போது சுபத்திரையின் உடல்நலம் ரொம்ப மோசமாகிவிட்டது. பேச்சு கூட சரியாக வருவதில்லை. சுனந்தாவுக்கு நாள் முழுவதும் அவளுக்கு பணிவிடை செய்வதிலேயே கழிந்து கொண்டிருந்தது.

ஒரு இடத்தில் ஒரு நிமிஷம் நிற்பதற்கோ, தன்னை மறந்து கொஞ்ச நேரம் தூங்குவுதற்கோ கூட முடியாது.

தோட்டத்தில் பூக்கும் பூக்களை மாலையாய் தொடுத்து தவழும் கிருஷ்ணனின் படத்திற்குப் போடணும் என்ற சின்ன விருப்பம் கூட சுனந்தாவுக்கு நாள் கணக்கில் தீராது.

பக்கத்து வீட்டில் குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்ற விருப்பம் வாரக் கணக்கில் எதிர்பார்ப்பாகவே இருந்துவிடும்.

சிலசமயம் அவளுக்கே பயமாக இருக்கும். “எத்தனை நாட்கள் தன்னால் சித்திக்கு பணிவிடை செய்ய முடியும்? இன்னும் கொஞ்ச காலம் போனால் தனக்கே யாராவது செய்ய வேண்டி வந்தால்?”

ஆனால் அந்த நிலைமை வருவதற்கு முன்பே ராஜேஷ் அவளை அழைத்துக் கொண்டு போகிறான். ராஜேஷிடமிருந்து கடிதம் வந்த அன்றே பாதி நிம்மதி ஏற்பட்டு விட்டது சுனந்தாவுக்கு. சுபத்திரை வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகள் முழுவதும் நடந்து முடிந்த பிறகு இன்னும் நிம்மதியாக இருந்தது..

சுபத்திரைக்கும் இப்போது சுனந்தாவிடம் துவேஷம் எதுவும் இருக்கவில்லை. தன்னுடைய பணிவிடைகளால் அவளுடைய அன்பையும் ஜெயித்து விட்டாள் சுனந்தா. இந்த நிலையில் கூட அந்தம்மாள் “சுனந்தா!” என்று தீனமாய் ஒரு குரல் கொடுத்தால் போதும் சுனந்தா துள்ளிக் குதிப்பாள். “என்ன சித்தி?” என்று ஓட்டமெடுப்பாள்.

வீட்டையும், வங்கியில் இருந்த பணத்தையும் சுனதாவுக்கே விட்டுக் கொடுத்துவிட்டாள் சுபத்திரை. மகனையும் அதற்குச் சம்மதிக்க வைத்தாள். வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியில், வீட்டின் மீது வரும் வாடைகைப் பணத்தில் சுனந்தா நிம்மதியாக இருக்கலாம்.

ஆமாம், சுபத்திரை கிளம்பிப் போன பிறகு.

தனக்குப் பிடித்தமானதை வாங்கிக் கொள்ளலாம். வேண்டியத்தை சமைத்து சாப்பிடலாம். விருப்பப்பட்ட இடத்திற்குப் போகலாம். பிடித்தமானவர்களுடன் பேசலாம்.

நினைத்துப் பார்க்கும் போதே சுனந்தாவுக்கு சந்தோஷமாக இருந்தது.

வீட்டுக்கு அருகிலேயே ஆசிரமம் ஒன்று இருந்தது. தினமும் அங்கே போகணும். இரண்டு மணி நேரமாவது இருந்து பாட்டும், பஜனையும் கற்றுக் கொள்ளப் போவதாய் அவர்களிடம் முன்னாடியே தெரிவித்து விட்டாள்.

பாட்டு என்றால் உயிர் சுனந்தாவுக்கு. இது நாள் வரையில் ஒரு நாளும் வாய் விட்டு பாடுவதற்கு அவகாசம் இருந்தது இல்லை. சித்தியின் முன்னால் பேசுவதற்கே துணிச்சல் இருக்கவில்லை. இனி பாடுவதாவது?

காலையில் கிணற்றடியில் உட்கார்ந்து பற்று தெய்க்கும்போது பக்கத்தில் இருந்த கோவிலிலிருந்து சுப்ரபாதம் காதில் விழும். பண்டிகை வந்தாலும், ஏதாவது விழா என்றாலும் நாள் முழுவதும் லவுட் ஸ்பீக்கரில் ரிக்கார்ட் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதைக் கேட்கும் போது சந்தோஷத்துடன், தாங்கொண்ணாத துயரத்துடன் அவள் இதயம் நடுநடுங்கி விடும்.

தான் ஊமையாக இருந்திருந்தாலும் இவ்வளவு வேதனை இருந்திருக்காது. ஆனால் பேசவும் தெரிந்து எதற்கும் சுதந்திரம் இல்லாமல் இருப்பது!

ஒருநாள் கூட பாடியது இல்லை என்றாலும், தன்னால் நன்றாக பாட முடியும் என்றும், தான் மட்டும் பாட்டு கற்றுக் கொண்டிருந்தால் நல்ல பெயரும், புகழும் கிடைத்திருக்கும் என்றும் சுனந்தாவுக்கு பலமான நம்பிக்கை. சிறுவயது முதல் அவளுக்குள் வளர்ந்து வந்த கோரிக்கை இன்று நிறைவேறப் போகிறது.

யோசித்துக் கொண்டே தயாரானாள் சுனந்தா. தாயையும், அவளுடைய லக்கேஜையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். பட்டணத்தில் ராஜேஷின் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவர்கள் ராஜேஷுடன் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான். ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு வந்திருந்தார்கள், எல்லோரையும் பார்த்துவிட்டுப் போவதற்காக.

அவர்களுடன் சேர்ந்து சுபத்திரை வெளிநாடு போவதாக ஏற்பாடு. அவளை அழைத்துக் கொண்டு போய் அவர்களிடம் ஒப்படைப்பதுடன் சுனந்தாவின் பொறுப்பு தீர்ந்துவிடும். அவர்களும் மரியாதையாக வரவேற்றார்கள். “நாளை காலையில் போய்க் கொள்ளலாம். இரவு இங்கே தங்கி விடுங்கள்” என்று அவர்கள் சொன்ன போதும் சுனந்தா கேட்டுக் கொள்ள வில்லை. “பரவாயில்லை. போய் விடுகிறேன்” என்று கிளம்பி விட்டாள்.

என்னதான் இருந்தாலும் சித்தியை விட்டுவிட்டு வரும் போது வருத்தமாகத்தான் இருந்தது. சித்தியும் அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “ஜாக்கிரதை!” என்று சொன்னாள் நடுங்கும் குரலில். லேசாக பெருமூச்சு விட்டபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சுனந்தா.

அவசர அவசரமாய் பஸ் ஸ்டாப்புக்கு வந்து கடைசி பஸ்ஸை பிடித்து விட்டாள். குளிர்ந்த காற்று எல்லா வேதனைகளையும் துரத்தியடித்துக் கொண்டிருந்தது. எங்கேயும் சுதந்திரம்! மேலே வானம், கீழே பூமி நடுவில் தான். வேறு எதுவும் இல்லை. தன்மீது யாருடைய அதிகாரமும் இல்லை. எந்த கட்டுபாடுகளும் இல்லை. சந்தோஷமானது அவளை கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.

சின்ன வயதில் ஸ்ரீராமநவமி திருவிழாவின் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறாள். அதில் இளவரசி ஏழை இளைஞன் ஒருவனைக் காதலிக்கிறாள். அவனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறாள். ஆனால் இளவரசி இல்லையா! அந்த இளைஞனை… தன் நாட்டில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞனைகூட அவளால் அடைய முடியவில்லை. இறுதியில் அவன் இறந்து போகிறான். இளவரசிக்கு வேறு ஒருவனுடன் திருமணம் முடிகிறது.

அந்த சினிமாவைப் பார்த்துவிட்டு சுனந்தா ரொம்பவும் அழுதாள். “இளவரசியாய் இருப்பதால்தானே அவ்வளவு கஷ்டங்கள்” என்று நினைத்துக் கொண்டாள்.

போகப் போக தோன்றியது. அந்த இளவரசி அவனை நேசித்தது போலவே தான் சுதந்திரத்தை விரும்பினாள். வாழ்க்கையை விரும்பினாள். அவை எதுவும் தனக்குக் கிடைக்கவில்ல. எல்லோருக்கும் அனாயாசமாய் கிடைக்கும் வாழ்க்கை கூட தனக்குக் கிடைக்கவில்லை. பிறந்தாள், அவ்வளவுதான். வாழ்வது மட்டும் வேறு யாருக்காகவோ.

பஸ்ஸை விட்டு இறங்கி ரிக்ஷாவில் ஏறிக் கொண்டாள் சுனந்தா. சந்தோஷமாக கண்களை மூடிக் கொண்டே நினைத்தாள். “அந்த இளவரசியின் விருப்பம் படம் முடியும் வரையில் தீரவே இல்லை. இனி ஒருபோதும் நிறைவேறப் போவதும் இல்லை. அவன் இறந்து விட்டான். ஆனால் தனக்கு? இல்லை இல்லை. கடவுள் தன்மீது கருணைக் காட்டி இப்போதாவது தன்னுடைய விருப்பத்தைத் தீர்த்து வைக்கிறார்.”

வீட்டை நேர்ந்கும் போது சுனந்தா மெதுவாக பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து வைத்துக் கொண்டாள். வீட்டுச் சாவியைக் கையில் வைத்துக் கொண்டாள். அதே வீடுதான். ஒரு காலத்தில் தனக்கு நரகமாகத் தோன்றிய வீடுதான் இப்போது தன்னுடைய விருப்பங்கள் தீர்த்து வைக்கும் கற்பத்தருவாய், தனக்காக உருவாக்கப்பட்ட சுவர்க்கமாய் காட்சித் தந்தது.

நிமிர்ந்து பார்த்தாள். வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள், வாசலுக்கு முன்னால் செவ்வரளி, தன் கையால் நட்ட ரோஜாச்செடிகள் எல்லாம் தென்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே குடில் போன்ற வீடு.

வீட்டின் முன்னால்… வீட்டின் முன்னால் திண்ணையில் யாரது? மங்கலாக ஏதேதோ உருவங்கள் தென்பட்டுக் கொண்டிருந்தன. யாரோ கிழவர் ஒருவர் திராணி இல்லாதது போல் சாய்ந்த நிலையில் கிடந்தார். பக்கத்தில் இளைஞன் ஒருவன்.

“அம்மா! வணக்கம். என் பெயர் கோவிந்தன்” என்றான் சுனந்தா வாசல் கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே அடி எடுத்து வைத்ததுமே.

“இவர் பெயர் சங்கரன். ரொம்ப நாளாய் எங்கள் வீட்டில் குடியிருக்கிறார். ஒருநாளும் வாடகைப் பணம் சரியாக கொடுத்தது இல்லை. வீட்டைக் காலி பண்ண சொன்னாலும் செய்ய மாட்டார். சல்லிக்காசு வருமானம் இல்லை. நோயால் பீடிக்கப்பட்ட உடல். நான்கு நாட்களாய் பிணம்போல் கிடக்கிறார். முழுவதுமாக இறந்து விட்டிருந்தால் இழுத்து வெளியே போட்டிருப்பேன். என்னடாப்பா எங்களுக்கு இந்த சோதனை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது இறுதியில் இந்த அட்ரெஸ் சொன்னார். அம்மா! உங்களுக்கு இவரைத் தெரியும் இல்லையா?”

அவனுடைய கேள்வி முதலில் சுனந்தாவுக்குப் புரியவில்லை. புரிந்த பிறகு அந்தக் கிழவன் பக்கம் பார்த்தாள். ஆமாம். சங்கரன் தான். தன்னுடைய கணவன் சங்கரன்!

அவளுடைய முகத்தில் உணர்வுகளைப் படித்ததுமே அவன் நகர்ந்தான். “அப்போ நான் கிளம்புகிறேன். சீக்கிரமாய் போனால்தான் கடைசி பஸ்ஸை பிடிக்க முடியும்.”

அவள் தேறிக்கோள்வதற்கு முன்பே அவன் அந்த தெருவைத் தாண்டிவிட்டான்.

சுனந்தா சிலையாய் நின்றுவிட்டாள்.

“என்ன நடக்கிறது? இப்போ என்ன நடந்து கொண்டு இருக்கிறது?” அவளுக்கு எதுவுமே புரியவில்லை. மேலே வானம், கீழே பூமி … நடுவில் தான். மூச்சு விட முடியாமல் திக்கு முக்காடிக் கொண்டு.. குளிருக்கு வெடவெடவென்று நடுங்கிக் கொண்டும்.

“சுனந்தா!”

வேதனையில் திளைத்திருந்த அந்த நிசப்தத்திலிருந்து மெதுவாய் ஒலித்தது சங்கரின் அழைப்பு. சுனந்தா திடுக்கிட்டவளாய் நகர்ந்தாள்.

இதயத்தின் ஆழத்திலிருந்து அலையாய் பொங்கிய துக்கம் வெளியே வருவதற்கு திராணியில்லாதது போல் குரல் வளையத்திலேயே சிக்கிக் கொண்டு விட்டது. ஆறுதல் சொல்வது போல் கண்ணீர்த்துளி ஒன்று மெதுவாய் கன்னத்தில் வழிந்தது.

Series Navigationஎன் ம‌ண‌ல் குவிய‌ல்…ஞான ஒளி (கலீல் கிப்ரான்)
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *