முகமற்றவனின் பேச்சொலி

Spread the love

பாவனைகளும் தோரணைகளும்

எங்கோ கண்டதின் சாயலில்

வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும்

நம் நிழல் போல்

சுவர்களை மீறி வரும் ஒலி

அறையின் வெக்கையாய்

அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள்

உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல்

ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை

விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி

கனல் நீரில் தத்தளிக்கும்

துடுப்பற்ற பொத்தல் படகாய்

என் அன்னியோன்யத்தில் உலவும்

எனக்கே அல்லாத உறவின் முகம்

எப்போதுமே கதைத்திருக்கும்

தான் கரைந்ததும் கனத்ததுமாய்

கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி

செவிகளில் பதியும் போது

போதுமென்ற மனமே பொன் செய் மனமாய்

அகழ் குழியில்

தனியனாய் நானும் என் எண்ணங்களும்.

-சு.மு.அகமது

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5ப்ளாட் துளசி – 1