மெங்பெய்யிலிருந்து வந்த பெண்

This entry is part 19 of 40 in the series 1 ஏப்ரல் 2012

– யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ

தமிழில் : ஜெயந்தி சங்கர்

ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் சுற்றி நின்ற ஆல் மற்றும் பப்பாளி மரங்களைக் கொண்ட தோட்டத்தின் இருபுறமும் எதிரிரெதில் இருந்தன. அவ்வப்போது ஆய்ஜுவாத் தன் ஜென்னல் வழியாக ஹான்ஸுவேய்யை முறைத்துப்பார்ப்பாள். அபாக்கஸ்ஸை வைத்து ஒரு கையால் கணக்கிட்டு இன்னொரு கையால் எழுதிய அவளது நிமிர்ந்த உருவத்தை ஜன்னல் வழியாக அவனும் காண்பான்.

ஹான்ஸுவேய் மிகக் கடுமையாக உழைப்பவள். வகுப்பில் எப்போதும் அவள் தான் முதல் மாணவி. முதலில் ஆய்ஜுவாத்துக்கு அபாக்கஸ்ஸை வைத்து கணக்கிடுவது சிரமமாக இருந்தது. எப்போதுமே வாய்ப்பாடுகள் அவனுக்குச் சரளமாக வரும். ஆனால், ஹான்ஸுவேய் என்றைக்குமே அவனைக் கண்டு சிரித்தாளில்லை. அவனை ஊக்கப் படுத்தும் முயற்சியில் தன் தலையைச் சுட்டி “யோசிச்சு செய். பயப்படாதே”, என்பாள். ஒவ்வொரு முறை ஹான்ஸுவேய்யின் ஜன்னலைப் பார்க்கும் போதும் அவனுக்கு ஊக்கமாக இருந்தது.

ஒருநாள் மதியம், மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து திரைப்படம் காணவிருந்தனர். ஹான்ஸுவேய் திரைப்படம் காணச் செல்வதை அவன் கண்டதே இல்லை. அவளைச் சந்தித்த போது, “ஹான்ஸுவேய், நீ படம் பார்க்கப் போகவில்லையா?”, எனக் கேட்டேன்.

“நானா? இன்னும் முடிவெடுக்கவில்லை.”

“ஏன்?”

அவள் அமைதியானாள்.

“நீயும் வரணும்.”

“நான் துணிகள் துவைக்கப் போகிறேன்.”

“நல்ல திரைப்படம்னு சொன்னாரு காம்ரேட் ஐஃபுவாங். திரைப்படங்களும் நமக்கு ஏதேனும் கற்பிக்கவே செய்கின்றன.”

“சரி, நானும் வருகிறேன். நீ போ”

திரையரங்கிற்குச் சென்றதும், ஹான்ஸுவேய்யைத் தேடினான். அவளைக் காணோம். வருகிறேன் என்றாளே, ஏன் வரவில்லை?

திரைப்படம் முடியும் முன்னரே கிளம்பி விட்டான். ஹான்ஸுவேய்யின் அறைக்குச் சென்றான். அங்கே யாருமில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அவள் குளத்தருகில் குத்த வைத்து உட்கார்ந்திருக்கக் கண்டான். ஆண்கள் அணியும் தொப்பி ஒன்றைத் துவைத்துக் கொண்டிருந்தாள். யாருடையதாக இருக்குமென்று யோசித்தான். அவள் தொப்பி மீது சவர்க்காரத்தைத் தேய்த்த பொழுது அதிலோர் அடர்நீலக் கறை இருக்கக் கண்டான். தொப்பி அவனுடையது. கவனக் குறைவால் முன் தினம் பேனா மையைத் தெளித்திருந்தான்.

ஆர்வம் மிக, அறையை விட்டு ஓடினான். திருப்பத்தில் சடாரென்று திரும்பி, “ஹான்ஸுவேய், ஹான்ஸுவேய்”, எனக் கூவினான்.

குனிந்த தலையாக இருந்ததால் திடுக்கிட்டாள். கண்களை நிமிர்த்தி, “திரைப்படம் முடிந்து விட்டதா?”, என்று கேட்டாள்.

“நீயேன் வரல்ல? இங்கயே இருந்து என்ன செய்ற? எதுக்கு என் துணியத் துவைக்கிற?”

“முட்டாளே பாரு.. நான் என் துணியைத் தானே துவைச்சிட்ருந்தேன். சரி, துவைக்கறதோ துவைக்கறேன் அவனோடதையும் சேர்த்துத் துவைப்பமேன்னு நெனச்சேன். உன்னை விட என்னால வேகமா நல்லாத் துவைக்க முடியுமில்லையா, அதான்.”

அங்கிருந்த பெரிய வாளியில் துணிகளைக் கண்டான் ஆய்ஜுவாத். அவளுடையதும் அவனுடையதும் மட்டுமின்றி இன்னும் பல நண்பர்களின் துணிகளும் அதிலிருந்தன. சட்டையைச் சுருட்டிக் கொண்டு அருகிலமர்ந்தான். “வா, சேர்ந்தே துவைப்போம்”, என்று அவளுடைய ஒரு பாவாடையை எடுத்துக் கசக்கினான். கூச்சப்பட்டவளாக, அதை அவன் கையிலிருந்து பிடுங்கினாள். ”கீழ போடு. கீழ போடுன்றேன்.” கையிலிருந்த பாவாடையைப் பார்த்தவன் சற்றே புன்னகைத்தவாறே, “சாந்தமா இரு. நீ என் துணியத் துவைக்கலாம்னா நான் உன் துணியத் துவைக்கக் கூடாதா?” அன்புடன் அவளைப் பார்த்தான்.

இருவர் கண்களும் கலந்தன. சடாரென்று பார்வையை விலக்கிக் கொண்டாள். திடீரென்று அமைதியானவள், ஏதோ பிரச்சனையைப் பற்றி யோசிப்பவள் போல தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு, வாளியைத் தூக்கிக் கொண்டு அவ்விடம் விட்டகன்றாள். நடந்து போனவள் பின்புறத்தைக் கண்டவன் மிகக் குழம்பினான். பூ போன்ற அழகும் கல்போன்ற இறுக்கமும் கொண்டவளாக இருந்தாளே.

அறைக்குத் திரும்பிய பிறகும் மனக்கொந்தளிப்புடனேயே இருந்தான். திரைப்படம் முடிந்து பிற மாணவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். கணக்கர் பயிற்சிக் கல்விக் கூடத்தின் நிர்வாகியும் கம்யூனிஸக் கட்சியின் இளையர் அணித்தலைவருமான காம்ரேட் ஐஃபுவாங்கைச் சந்திக்கக் கிளம்பினான். “ஹான்ஸுவேய் மிக நல்லவள். படிப்பில் மட்டுமின்றி அன்றாடப் பணிகளிலும் எங்களுக்கு உதவுகிறாள். இன்றைக்கு எங்கள் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள். நாம் அவளை இளையர் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்”, என்றான்.

எந்தப் பிரச்சனை வந்தாலும் ஐஃபுவாங் தளர மாட்டார். இப்போது முகஞ்சுருக்கி நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். பிறகு பெருமூச்செறிந்தார்.

“என்னாச்சு? ஏதும் தப்பாச் சொல்லிட்டேனா காம்ரேட்?”

“இல்லல்ல. நல்ல யோசனை தான். அவளுக்கு உதவ வேண்டும். அதற்குக் காலமெடுக்கும். இப்போ நீ உன் கல்வியில் எப்படி முன்னேறுகிறாய் என்று சொல். ஏதும் பிரச்சனையிருக்கா?” அதைப் பற்றிப் பேசவென்று அவன் வந்திருக்கவில்லை. ஆகவே, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டான்.

அதன் பிறகு அவன் ஹான்ஸுவேய்யின் நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கியிருந்தான். நட்பும் நாகரிகமும் பிடிவாதமும் சேர்ந்த விநோத கலவையாக இருந்தாள். வகுப்பில் மிக அழகாகவும் அன்பாகவும் எல்லோருடனும் அரட்டையடிப்பாள். பிறகு, மூக்குடைப்பது போல பாராமுகமாவாள்.

ஞாயிறன்று காலையில், வீட்டுக்கோ வெளியிலோ போகவென்று மாணவர்கள் சீக்கிரம் எழுந்து கொண்டனர். ஹான்ஸுவேய்யைக் கவனித்தான். அவள் மிகவும் மெதுவாகக் காலையுணவைச் சாப்பிட்டாள். எப்போதும் போல, இன்றைக்கும் அவள் வெளியில் எங்குமே போகப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அருகில் சென்று, “வீட்டுக்குப் போகல்லையா?”, என்று கேட்டான்.

“இல்ல.”

“வீடு எங்க?”

“ரொம்ப தூரத்துல.”

“அப்ப, எங்க வீட்டுக்கு என்னோட வா. என் குடும்பத்தைச் சந்திச்ச மாதிரி இருக்கும்ல.”

“இல்ல. வேணாம்.”

“சும்மா வா. என் வீடு பக்கத்துல மான்ல்யூ கிராமத்துல இருக்கு. ஏன் இவ்ளோ தயங்கற?”

அவள் கையைப் பிடிக்கப் போனவனை ஒரே தட்டு தட்டி விட்டு விடுவிடுவென்று நகர்ந்து சென்றாள். அவனுடைய அழைப்பை ஏன் இவ்வளவு கர்வமாகவும் கசப்பாகவும் புறந்தள்ளுகிறாள்? அவனுக்கும் வீட்டுக்குப் போகும் மனநிலை இல்லாமல் போய் விட்டது. மீண்டும் கல்விக்கூட நிர்வாகி காம்ரேட் ஐஃபுவாங்கைக் காணச் சென்றான். “ஹான்ஸுவேய்க்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதோ?”, என்று தொடங்கினான். “உனக்கெப்படித் தெரியும்?”, எனக் கேட்டார் அதிர்ச்சியுடன். கொஞ்சம் ஆடிப் போனாற் போல் தெரிந்தார்.

“என்னால உணர முடியுது.”

பெருமூச்சறிந்தவராக நெற்று சுருக்கி நின்றார். “ஆமாம் காம்ரேட் ஐஃபுவாங். அதேன் எப்போதும் அவள் பெயரை எடுத்தாலே பெருமூச்சு விடுகிறீர்கள்?”

கேட்டது காதில் விழாதவர் போல அவனருகில் சென்று அவனை முறைத்தார். “உன் வீடு கிட்ட மான்ல்யூ கிராமத்துல தானே இருக்கு?”

“ஆமாம்.”

“வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“ரெண்டே பேர் தான். என் அம்மாவும் நானும்.”

“உன் அம்மா எப்படி?”

“அம்மா கடும் உழைப்பாளி.”

தலையாட்டிக் கொண்டார் காம்ரேட் ஐஃபுவாங். “உன் கிராமத்தில் மூட நம்பிக்கையுடையவர்கள் நிறைய பேருண்டா?”

“ஆமாம். சந்தேகமில்லாம.”

எதற்குக் கேட்டார் என்ற ஒரு புரிதலுமில்லாமல், தொடர்ந்து, “ஆவிகள் தான் நோய்களை உருவாக்குகின்றன என்று பலர் நம்புகிறார்கள். நான் ஒரு முறை நோயுற்ற போது அம்மா, ‘எந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நீர்? என்னிடம் சொல்லும். இல்லையென்றால் புலி நகத்தால் குத்துவேன்’, என்றபடி புலி நகத்தால் என் மார்பில் கீறினார். என் தோல் உறிந்து ரத்தம் கசியும் வரை கீறினார்.”

“நீ ஏதேனும் பேய்களைக் கண்டதுண்டா?”

“ஆமாம். விடுதலைக்கு முந்தைய ஆண்டு. அப்போது பதினைந்து வயதாகியிருந்தேன். கிராமத்தை விட்டு விரட்டப்பட்ட உயிரோடிருந்த ஓர் ஆண் பேயைக் கண்டேன். மனைவியையும் தன்னிரு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றார். கிராமத்துத் தலைவர் சொன்னதற்கிணங்க ஊர் எல்லையில் வீதிகள் நான்கு சந்திக்குமிடத்தில் ஒரு சேவலைப் பலி கொடுத்தார். ‘ஊரை விட்டு குடும்பத்துடன் வெகுதூரம் போய் விடுவேன். என்றைக்குமே திரும்பி வர மாட்டேன். நிஜமாகவே இறந்து ஆவியான பிறகும் இங்கே வரவே மாட்டேன்’, என்று முழந்தாளிட்டு, சத்தியம் செய்தார்.

ஐஃபுவாங்கின் முகபாவம் கோபமாக மாறியது. அவனை இடைமறித்து, “அது மனுஷனா? இல்ல ஆவியா?”

“சந்தேகமில்லாம மனுஷன் தான்.”

“அப்ப, நீ பேயைக் கண்டதேயில்லை, இல்லையா?”

“இல்லை! யார் தான் பேயைக் கண்டிருக்க முடியும்?”

”உண்மையில் பேய் என்று ஏதுமுண்டா?”

“கண்டிப்பாக இல்லை.” அறைக்கு வந்த ஆய்ஜுவாத் தொடர்ந்தும் ஹான்ஸுவேய் குறித்த குழப்பத்திலேயே இருந்தான். ஏன் காம்ரேட் ஐஃபுவாங் திடீரென்று உயிரோடு நடமாடும் பேய்கள் குறித்துப் பேசினார்? ஒருவேளை,..? மேலும் யோசிக்க விரும்பவில்லை அவன். இதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. அது போன்ற எண்ணங்களே மிக அபத்தம் !

***

சந்தேகங்கள் நிரம்பியவனாக ஹான்ஸுவேய்யைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அவள் வீடிருக்கும் இடத்தை அறிய எண்ணினான். வகுப்பு முடிந்த பிறகு அவள் பேசுவதேயில்லை. அதுவும் அவனுடன் பேசுவதே கிடையாது. அருகில் போனால், விலகிப் போனாள்.

ஏப்ரல் மாதத் தொடக்கம். கணக்கர் பயிற்சி வகுப்புகள் முடிந்தன. பட்டமளிப்பு விழாவுக்கடுத்த நாள், மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குப் போகவிருந்தனர். அப்போது ஆய்ஜுவாத் ஹான்ஸுவேய்யுடன் பேச நினைத்தான். இருவருமே ஏழ்மையான குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதால் படிப்பதொன்றும் இலகுவாக இருக்கவில்லை. கட்சியின் உதவி மட்டுமில்லா விட்டால் சாத்தியப் பட்டிருக்கவே முடியாது. நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாவிட்டாலும் குறைந்தது தொடர்பிலாவது இருக்க வேண்டும் என விரும்பினான். பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அருகில் போய், “காலம் தான் எத்தனை வேகம் ஓடுகிறது? மின்னலாய்ப் பறந்து விட்டதே அரையாண்டு.” மான் போல மருண்டு திரும்பினாள். சற்றே சுதாரித்துக் கொண்டவளாக, “ஆமாம்”, என்றாள்.

அங்கே அமர்ந்து அவள் மூட்டை கட்டுவதைப் பார்த்தவாறிருந்தான். “அபாக்கஸ் பயன்படுத்தி கணக்கிடுவது எப்படி என்று கற்றுக் கொண்டு விட்டோம்.”

“புறநகர் பகுதிகளை மேம்படுத்துவது எப்படின்னும் தான்.”

“மிகச் சரி. நம்ம ஊருக்குப் போனதும் கிராமங்களுக்கு என்னென்ன முடியுமோ அதையெல்லாம் நாம செய்ணும்.”

“விவசாயத்துலயும் இன்னும் நல்லாச் செய்லாம்.”

முன்பெல்லாம் ஹான்ஸுவேய் அதிகம் பேசாதிருந்தாள். ஆனால், பேசப் பேச நாளடைவில் நெருக்கமானார்கள். மதியம் கடந்தது. இரவுணவு வேளையுமானது. ஆய்ஜுவாத் துடிப்போடு, “தாயி இன மக்களின் எதிர்காலம் குறித்து மகிழ்ச்சியேற்படுகிறது.”

“ஆமாம். என் கிராம மக்களை நினைத்து எனக்கும் மகிழ்ச்சி.”

குழப்பத்துடன், “உன் கிராம மக்கள் தாயி இனமில்லையா?”, எனக் கேட்டான்.

“இல்லை. அவர்கள்,.. அவர்கள் தாயி இனமில்லை.” சடாரென்று குரலை உயர்த்திச் சொன்னாள்.

“ஓ, உன் கிராமம் எங்க இருக்கு?”, என்று மீண்டும் விடாமல் கேட்டான்.

“இங்க தான். இதே பூமில தான். மனிதர்கள் வாழும் இந்த பூமில. வேறெந்த ஊரையும் விட அருமையான ஊர்.”

“ஓ, அதெங்க இருக்கு? இந்த சொர்க பூமி?”, என்று மீண்டும் விடாமல் கேட்டான்.

“அடடா, நேரமாச்சே. வா, அலுவலகத்துக்குப் போவோம். நாளைக்கிப் போகு முன்ன செய்றதுக்கு நெறையவே இருக்கு.” முகம் வெளிறியவளாகப் பேச்சை மாற்றினாள். மேலும் ஏதும் சொல்வதற்கு முன்பே நடந்து மறைந்தாள். படுக்கை மீது உடைகள் எல்லாம் அப்படியே கண்டபடி கிடந்தன.

அடுத்த நாள் காலையில், பட்டத்தாரிகள் அவரவர் வீடுகளுக்குக் கிளம்பினர். எல்லோரும் விடைபெற்றனர். ஹான்ஸுவேய் வந்து தன்னிடம் விடைபெறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் அதே போல தன்னிடம் எதிர்பார்க்க மாட்டாள் என்று எண்ணிக் கொண்டான்.

பிரியும் முன்னர் ஒரேயொரு முறை இறுதியாக அவளைக் காணும் ஆவலுடன் வெளிவாயிலருகே இருந்த பெரிய ஆல மரத்தருகில் நின்றான்.

இரண்டு பிரம்புக் கூடைகளை தோள் கம்பில் மாட்டித் கொண்டு தலை குனிந்து வந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. அவனைக் கடந்த போது நடையை மேலும் எட்டிப் போட்டாள். தூரத்தில், தென்னை மரத்திற்கு அருகில் திரும்பும் முன்னர் அவனைத் திரும்பி ஒரு முறை பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் தானும் வீட்டுக்குக் கிளம்ப வேண்டுமென்று மறந்தே போயிருந்தான். தொலைவில் அவள் மறைந்த பிறகு ஒரு முறை நிர்வாகியைக் காணச் சென்றான்.

கண்கள் கலங்கியவாறு அவரிடம் ஹான்ஸுவேய் எங்கு வசித்தாள் என்று கேட்டான். அதற்கு பதிலளிப்பதற்கு பதில் அவள் முகவரி உனக்கெதற்கு எனத் திருப்பிக் கேட்டார். முகவரியைச் சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அழுத்திக் கேட்டான். “இப்டியே இருக்கட்டும். நீயும் உடனே போய் மூட்டையக் கட்டிகிட்டுக் கெளம்பு.”

“இல்ல. மாட்டேன்”, என்று குரலை உயர்த்தினான்.

“ஏன்?”

“அவள் மிகவும் மர்மமானவளாக இருக்கிறாள். ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். உண்மையைக் கண்டு பிடிக்க நினைக்கிறேன். கண்டு பிடிக்க முடியாவிட்டால் எனக்கு மன அமைதியேற்படாது.”

“இளைஞர்கள் இலகுவான இதயம் கொள்வது தான் நல்லது. இத்தனை ஆக்ரோஷம் கூடாது.”

“காம்ரேட், அவளோட ரகசியத்தை மாணவியா இருக்கும் வரைக்கும் காப்பாத்தினீங்க. இப்ப சொல்றதுக்கென்ன? அவ தான் போயிட்டாளே? வாழ்நாளெல்லாம் ரகசியத்தை ரகசியமாவே வச்சிருக்கணும்னு இருக்கா, சொல்லுங்க?”

அவனது சோக முகம் நிர்வாகிக்கு இன்னொரு முகத்தை நினைவூட்டியது. ஆறு மாதம் முன்பே, விண்ணப்பிக்கக் கடைசி நாளன்றைக்கு கணக்கர் பயிற்சிக்காக விண்ணப்பிக்க வந்திருந்தவள் முகமது. வெளிர் பச்சை மேலுடையும் பளிச்சென்ற நீலப் பாவாடையும் அளந்த மெலிந்த அப்பெண் அறைக்குள் நுழைந்தாள். மிக அழகிய அறிவாள். அசௌகரியமாகச் சுற்றிலும் பார்த்தாள். அவள் கண்கள் மின்னின. குமாஸ்தா எந்த கிராமத்திலிருந்து வருகிறாள் என்று கேட்டது முகஞ்சிவந்தவளாக, “மெங்ஜாங் மாவட்டம்”, என்றாள்.

“சரி. ஆனால், எந்த கிராமம்?”

“மெங்ஜாங் மாவட்டம்”, என்றார் மீண்டும்.

அந்த உரையாடலைக் கேட்டதுமே நிர்வாகி ஐஃபுவாங் அலுவலகத்திற்குள் வரச் சொன்னார். “உன் பெயர் ஹான்ஸுவேய்யா?”

“ஆமாம்”, என்றாள் சற்றே குழப்பத்துடன் தலை நிமிர்த்தி.

“கிராமத்துப் பேர கேட்டா சொல்லேன்.”

“இல்லை. மாட்டேன்.”

“ஏன்?”

“ஏன்னா, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிட்ட மட்டும் தான் சொல்வேன்.”

“நா யாருன்னு நெனச்ச?” அப்பெண் தலையை நிமிர்த்தினாள். காம்ரேட் சீருடையைக் கடந்தும் தாயி மொழியைப் பேசிக் கேட்காமலே தாயி இனத்தைச் சேர்ந்தவர் என்று அவளால் சொல்ல முடிந்தது. பாவாடையை நிமிண்டியவாறே கூர்ந்து கவனித்தாள்.

“உன் குழப்பம் தாயி இனத்தைச் சேர்ந்தவனும் கட்சி உறுப்பினருமான எனக்கு நல்லாவே புரியும். விடுதலைக்குப் பிறகு அவ்விருண்ட காலமெல்லாம் கடந்து விட்டது. காலம் மாறிவிட்டதென்றால், நம்ப வேண்டும் நீ. முன்பு போல யாரும் உன்னைக் கருத மாட்டார்கள். எப்போதும் பிறரைச் சந்தேகித்துக் கொண்டிருக்கக் கூடாது.”

நீண்ட நேரம் அவளோடு பேசினார். இருந்தும், குனிந்த தலை நிமிராமல், “எனக்குச் சொல்ல இனி ஒன்றுமில்லை. என் கிராம மக்களுக்காக நான் படிக்க வந்திருக்கிறேன். அவ்வளவு தான்”, என்றாள்.

அடிக்கடி அவளுடன் படிப்பு குறித்து மட்டும் தான் பெரும்பாலும் பேசினார். அப்போதெல்லாம் முக பாவனைகளுடன் உற்சாகமாகப் பேசுவாள். ஆனால், அவளது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பேச்சை எடுத்ததுமே பிடிவாதமாக, “எனக்கு இதற்கு மேல் வேறொன்றுமில்லை சொல்வதற்கு”, என்பாள்.

அவள் கல்விக்கூட வளாகத்திற்கு வேளியே போவதே மிக அரிது.

இதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டவராக பதட்டத்துடன் ஐஃபுவாங் அறையில் இப்படியும் அப்படியும் நடந்தார். இறுதியில் ஆய்ஜுவாத் முன்னால் நின்றார். அவன் தோளில் லேசாகத் தட்டி, “அவள் ஏற்கனவே துரதிருஷ்டம் பிடித்தவள். அவள் மனவலியைக் கூட்ட வேண்டாமே”, என்றார்.

“தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள்.”

“அவள்,.. அவள் மெங்பெய் கிராமத்திலிருந்து வந்தவள்.” உடலெங்கும் ஒரு நடுக்கம் ஓடுவதை உணர்ந்தான். மெங்பெய் கிராமமா? அங்குதானே நடமாடும் பேய்கள் விடுதலைக்கு முன்பு வசித்தார்கள். விடுதலைக்குப் பிறகல்லவோ அக்கிராமத்துக்கு முறையான பெயரையே கொடுத்தார்கள்.

“என்னால நம்ப முடியவில்லை. அவள்,.. அவள் நல்ல பெண்.” அவன் குரல் நடுங்கியது. அவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. இது உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டான் மனதிற்குள். ஹான்ஸுவேய் மெங்பெய் கிராமத்திலிருந்து வந்தவள் ! அவளைத் திருமணம் செய்து ஒரே கூட்டுறவங்காடியில் பணியாற்றுவது போன்ற அவனது கனவுகளெல்லாம் தவிடு பொடியாகின. நட்புறவாடும் சொந்தங்களும் அண்டை அயல் மக்களும் அவளைத் தூற்றுவதும் சபிப்பதுமான காட்சியை அவனால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அம்மா அந்தத் திருமணத்துக்கு சம்மதம் கொடுப்பதென்பது நடக்கக் கூடியதே இல்லை. மிகவும் வருந்தினான்.

மனதைப் படித்தவர் போல காம்ரேட் ஐஃபுவாங், “ஹான்ஸுவேய் நல்லவள் தான். அந்த கிராம ஆட்கள் எல்லோருமே நல்லவர்கள் தான். எங்காவது கிராமத் தலைவர் நடமாடும் பேய் என்றோ ஆவியென்றோ குற்றம் சாட்டப்பட்டதை நீ கேட்டதுண்டா? இல்லை. எல்லோருமே அப்பாவி விவசாயிகள்”, என்றார்.

என்ன சொன்னார் என்று அவனுக்குப் புரிந்தது. அவரையே வியந்து பார்த்தான். வருத்தமும் கோபமும் ஏமாற்றமும் நிரம்பியவனாக வெறித்தான். “உண்மையில், ஆவி என்று ஒன்றுமில்லை. ஹான்ஸுவேய்யின் அம்மாவையே எடுத்துக் கொள். அவர் முப்பதாண்டுகளுக்கு முன்னர் மாங்பாங் கிராமத்தில் பல தலைமுறையாக வாழ்ந்த குடும்பத்துப் பேரழகி. கிராமத் தலைவன் ஒரு பெண்பிள்ளைப் பொறுக்கி. எப்படியாவது அவளை அடைய பேராசை கொண்டான். ஒரு நாள் நெல் புடைக்கும் வேலை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கிராமத் தலைவன் மறைந்திருந்து சடாரென்று பாய்ந்து அவளை அணைக்கப் போனான். மிக மென்மையானவர் போலிருந்தவர் பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டு ஓடிவிட்டார். அதிலிருந்து அவனுக்கு அவர் மேல் பயங்கர வெறுப்பு. பழிதீர்க்கத் தீர்மானித்தான். கோடையில் நாற்று நடும் பெண்களில் ஒருத்திக்கு உடல்நிலை மோசமானது. மலேரியா ஜுரம் வந்தது. ஹான்ஸுவேய்யின் அம்மாவுடைய துரதிருஷ்டம் தான் அவரது நோய்க்குக் காரணம் என்றும் அவள் ஓர் ஆவி என்றும் வதந்தியைப் பரப்பினான் கிராமத் தலைவன். அவர்களுடைய குடிசை தீயிடப்பட்டு, குடும்பம் கிராமத்தை விட்டே விரட்டப் பட்டது.”

“இதற்கெல்லாம் முறையான சட்டத்தை ஏன் இயற்றுவதில்லை அரசாங்கம்? ஆவிகளும் பேய்களும் இல்லை, அவ்வாறு மனிதர்களை முத்திரை குத்துவதை ஏன் தடை செய்யக் கூடாது?”, என்று இரைந்து கத்தினான் ஆய்ஜுவாத்.

காம்ரேட் ஐஃபுவாங் தலையாட்டினார். ”அதெல்லாம் ஒன்றும் நடக்காது. மக்கள் இவ்வாறான மூட நம்பிக்கைகளைத் தாமே தான் உணர்ந்து விட்டொழிக்க வேண்டும். இரண்டு முறை நீ என்னிடம் கேட்டும் ஹான்ஸுவேய்யைப் பற்றி நான் சொல்லாமலே இருந்ததற்குக் காரணமே நீ அவளை ஒதுக்கிவிடுவாயோ என பயந்தேன்.”

அவமானத்துடன் தலை குனிந்து நின்றான். ஆவி, பேய்களில் நம்பிக்கை இல்லையென்ற போதிலும் ஏன் அவ்வாறு அப்பாவிகள் ஊரை விட்டு ஒதுக்கப் பட்டார்களென்று அவன் அறிந்ததே இல்லை. முன்பே தெரிந்திருந்தால், ஹான்ஸுவேய்க்கு உதவ முயன்றிருப்பான். எத்தனை வெகுளியாக குழந்தைத் தனத்துடன் இருந்திருக்கிறான் !

***

நிர்வாகியின் அறையை விட்டு வெளியேறிய ஆய்ஜுவாத், மெங்பெய் கிராமத்தை நோக்கி நடந்தான். ஹான்ஸுவேய்யைப் பிடித்து விட முடியுமா என்று முயற்சித்தான்.

அக்கிராமம் தொலைவில் இருமலைகளுக்கு இடையில் மலை அடிவாரத்தில் இருந்தது. வழியில் பல கிராமங்கள், வயல்கள், சிறுமலைகள், ஓடைகளைக் கடக்க வேண்டும். முன்னொரு காலத்தில் புலிகளும் சிறுத்தைகளும் திரிந்த வெறும் காடாக இருந்த இடம். மேலும் மேலும் மக்கள் கூட்டங்கள் ஊர்களை விட்டுத் துரத்தப்பட்ட போது காடுகளை நீக்கி கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அப்படி உருவான எண்ணற்ற கிராமங்கள் இருந்தன. கரடுமுரடான பாதையில் நடந்தான். ஹான்ஸுவேய்யின் அம்மாவைப் போல, அவளது பாட்டியைப் போல அவ்வழியே நடந்திருக்கக் கூடிய எத்தனையோ பேர் இருப்பார்கள்.

விடுதலையும் கம்யூனிஸக் கட்சிச் செயல்பாடுகளும் இல்லாவிடில் ஒதுக்கப் பட்டவர்களாக, ஒடுக்கப் பட்டவர்களாக என்றென்றைக்கும் அநியாயங்களைச் சகித்திருப்பார்கள். அது மட்டுமா, இன்னும் எண்ணற்ற குடும்பங்களும் இப்படித் துரத்தியக்கப் பட்டிருப்பர்.

நேரம் போவதே தெரியவில்லை அவனுக்கு. திடீரென்று பாதை அகலமாகிச் சீரானது. இருமருங்கிலும் ஆல மரங்கள் வரிசையாக நின்றன. கண்டபடி முளைத்த பசும்புல்லிடையே காட்டுப்பூக்கள் கண்ணைப் பறித்தன. குட்டைகள் நீலவானையும் வெள்ளை வாத்துகளையும் பிரதிபலித்தன. பொன்னிற கோதுமைக் கதிர்கள் அபரிமிதமாகக் காற்றிலாடின. திரும்பிய இடமெங்கும் அழகும் ஏகாந்தமும் நிறைந்திருந்தது. அவன் கண்கள் அனைத்து அழகுகளையும் பருகின. சீக்கிரமே மெங்பெய் கிராமத்தை எட்டி விடுவோம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியிருக்கும் அவ்வூர்? அம்மக்கள்?

திடீரென்று கோதுமைப் பயிர்க் கூட்டத்துக்குள்ளிருந்து ஒரு பெண் வருவதைக் கண்டான். ஆ, ஹான்ஸுவேய் ! ஆரோக்கியமாகத் தயாராய் நின்ற கதிர்களைக் கண்ட அவள் கண்கள் மின்னின. அவளருகில் பாய்ந்தோடினான். அவள் கைகளை எடுத்து, “ஹான்ஸுவேய், உன்னைப் பின் தொடர்ந்து இங்கே வந்தேன் !”

ஹான்ஸுவேய்க்கு அவனைக் கண்டதில் ஒரே உற்சாகம். ஆனால், அவன் என்ன நினைத்திருந்தான் என்று அவளுக்கு ஒரு தெளிவுமில்லை. ஏன் தன் பின்னால் வந்தான்?

மாணவியாக இருந்த காலங்களில் அவள் எண்ணங்களில் அவன் இருந்ததென்னவோ உண்மை தான். மிகவும் அன்பான, நேர்மையான கோட்பாடுகளுடனான இளைஞனாக இருந்தான். அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அவன் தன்னைக் காதலிக்கத் தொடங்கியிருந்ததை உணர்ந்திருந்தாள். இருவரது எதிர்காலத்தை எண்ணும் போதெல்லாம் கடந்த காலத்தின் கருநிழல் அம்மகிழ்ச்சியின் மீது படிந்தது.

குழந்தையாக இருந்த போது அது போன்ற வேறுபாடுகள் நிலவியதை அவள் அறிந்திருக்கவில்லை. திருவிழாச் சந்தைகளில் முட்டை விற்ற போதும் அவளைச் சுற்றி இளவட்டங்கள் காதல் பாடல்கள் பாடியபடி கவனத்தை ஈர்க்கும் போட்டியில் ஈடுபட்டு தேன்பானையை மொய்க்கும் தேனீக்களெனச் சுற்றியதுண்டு. எல்லோரையும் அலட்சியப் படுத்தினாள். ஒருநாள் பக்கத்தூர் சந்தையில், எப்போதும் போல தொண்டை கட்டும் வரை பாடிய வாலிபர்கள் அவளைச் சூழ்ந்தனர். திடீரென்று ஒரு குரல், “மெங்பெய் கிராமத்திலிருந்து வந்தவள் இவள் ! இவள் உயிரோடு நடமாடும் ஒரு பேய் இவள் !”, என்றது. மின்னல் வேகத்தில் அனைவரும் அஞ்சிச் சிதறியோடினர்.

மனமுடைந்த ஹான்ஸுவேய் அம்மா தோள் மீது சாய்ந்து நடந்தவற்றைச் சொல்லியழுதாள். கோபத்துடன் “அலட்சியப்படுத்து ஹான்ஸுவேய். நாம மெங்பெய் கிராமத்துல வாழறோம். வெளியுலகம் அதன் போக்குல இயங்கட்டும்.” அன்றிலிருந்து அவளிதயம் மிகவும் கனத்துப் போனது. கிராமத்தை விட்டு என்றைக்குமே வெளியேறுவதில்லை என்று சபதமெடுத்தாள். விடுதலைக்குப் பிறகு நிலமை சற்றே மாறியதில், விவசாயிகளுக்கு நிலங்களைத் திரும்பக் கொடுத்தார்கள். கூட்டுறவங்காடிகளும் உருவாகின.

கணக்கர் பயிற்சி பெற மாவட்ட நிர்வாகம், அவளைத் தெரிவு செய்தது. முதலில், “நான் போக மாட்டேன்”, என்றாள். கட்சி மாவட்டத்தின் முக்கிய உறுப்பினர், “கணக்கர் இல்லாமல் எப்படி கூட்டுறவங்காடி நம் கிராமத்துக்கு வர முடியும்?”, என்றெல்லாம் சொல்லி அவளைச் சம்மதிக்க வைத்தார்.

படித்த காலங்களில் தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காக எங்கேயும் வெளியே போவதைத் தவிர்த்தாள். தன் கடந்தகாலத்தை அறிந்தால் வித்தியாசமாகப் பார்ப்பார்கள் என்று பயந்து வகுப்பு மாணவருடனும் பழக மாட்டாள். ஆய்ஜுவாத் மட்டும் தான் அவளுடைய உண்மையாக நண்பன். அவனுக்குமே அவளுடைய கடந்த காலம் தெரிந்தால் ஒருவேளை அவளை ஒதுக்கி வெறுத்து இதயத்தை உடைப்பானோ என்று நினைத்துக் கொண்டாள். அதை நினைக்கும் போதெல்லாம் நடுங்கினாள்.

இப்போது அவனே அவளைத் தேடி வந்திருந்தான். கம்யூனிஸ்ட் கட்சி மூட நம்பிக்கையை முழுக்க போக்கி விட்டதா? இல்லையென்றால், அவள் தான் அவனைத் தவறாகக் கணித்து விட்டாளோ?

அவளுடைய உணர்ச்சி மாற்றங்களைப் பார்த்தவன் அவளிடம், “இந்த யுகம் தாயி சமூகத்திற்கு புது உயிர் கொடுத்துள்ளது !”, என்றான்

மிகவும் மகிழ்ந்து, “என்னை எப்படிக் கண்டு பிடித்தாய்?”, எனக் கேட்டாள்.

“காம்ரேட் ஐஃபுவாங் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார். அப்போது தான் உன் பின்னால் உன்னைத் தேடி வருவதென்று முடிவெடுத்தேன்.”

நிர்வாகி ஐஃபுவாங்கை மிக்க நன்றியுடன் எண்ணிக் கொண்டாள். எப்போதுமே பிறரிடமிருந்து விலகியே இருக்காதே, எல்லோருமே கெட்டவர்கள் இல்லை என்பார். இருந்தாலும், அய்ஜுவாத் சொல்லிக் கொள்வது போல அதே உறுதியோடு இருப்பானா என்றெண்ணிக் கொண்டாள். “இவ்வளவு துரதிருஷ்டம் பிடித்த பெண்ணை உன்னால் எப்படிக் காதலிக்க முடிகிறது?”

“கடந்த காலம் கடந்ததாகவே போகட்டும். இப்போது நம்மிடமிருப்பது புத்தம் புதிய வாழ்க்கை. புத்தம்புதிய சிந்தனை”, என்றான் அவளைச் சேர்த்தணைத்துக் கொண்டவனாக. குளத்திலிருந்து ஒரு ஜோடி அன்னங்கள் இறகுகள் விரித்து நீலவான் நோக்கி விர்ரெனப் பறந்தன.

(1953)
ஆசிரியர் (கள்) குறிப்பு

1928ல் ஜியாங்ஸுவில் பிறந்த யாங் ஜோவ், இளமையிலேயே எழுதத் தொடங்கியவர். யுன்னான்னில் இதழாசிரியராகப் பணிபுரிந்த போது தன் மனைவி பாய் ஹோங்ஹூவைச் சந்தித்தார். அங்கே பிறந்து வளர்ந்த மனைவி 1940ல் எழுதத் தொடங்கினார். ‘மெங்பெய்யிலிருந்து ஒரு பெண்’ அவரது ‘வசந்த மழையில் தொப்பலாய் நனைந்த மியாங்குவேய்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழுக்கப்பட்டது.

திசை எட்டும் – மொழியாக்க இலக்கிய இதழ் – மார்ச் 2012

Series Navigationஅரியாசனங்கள்!முள்வெளி – அத்தியாயம் -2
author

ஜெயந்தி சங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *