மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை

இலக்கியச் சிற்றிதழ்கள் பல வருகின்றன. அவற்றுள் மெய்ப்பொருள், கனவு, குலவை, காலம், அகநாழிகை, கணையாழி போன்றவையும் விஞ்ஞான இதழாக துளிரும், வணிகம் சம்பந்தமாக வணிகக் கதிரும் சிறப்பாக இருக்கின்றன.

மாதம் ஒரு முறை வெளியாகும் ”துளிர்” இதழ் குழந்தைகளுக்கான விஞ்ஞானத்தகவல்களைத் தருகிறது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்காக நடக்கும் அறிவியல் மாநாடு, மற்ற அறிவியல் செய்திகள், அயோடின் பற்றி, குளிர்காலம் பற்றி, பூதாகாரமாய் வெளிப்படும் கார்பன் பற்றி ( இதில் இந்தியா 7 ஆம் இடத்தில் வருகிறது), உணவுப் பொருளை நன்றாகச் சூடாக்கி காற்றுப்புகாவண்ணம் அடைத்து வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாதது பற்றி, இன்னும் தட்டாரப்பூச்சி, காலண்டர், பூச்சிகளின் பார்வை, புருனோ, இயக்கு சக்தி இயங்கு சக்தி, கோள்களின் நிலை என குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எங்கள் பள்ளிப் பருவத்தில் என் அம்மா விஞ்ஞான விளையாட்டுக்கள் என்ற புத்தகம் வாங்கித்தருவார்கள். அதில் சின்ன சின்ன சோதனைகள் தரப்பட்டிருக்கும். செய்து பார்க்கலாம். ஆங்கிலத்தில் “பில் நை.. த சையின்ஸ் கை ( BILL NYE THE SCIENCE GUY) என்ற நிகழ்ச்சியை குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். அதுபோல் குழந்தைகளுக்கான அரிய முயற்சியான விஞ்ஞான இதழான துளிர் செயல்படுகிறது. ஆசிரியர் ராமானுஜம்.இதற்காக உழைக்கும் அனைவரையும் பாராட்டுவோம். சிறார்களுக்கு படிக்க பரிசளிக்கவேண்டிய மாத இதழ் இது.

விஞ்ஞானம் போல வணிகமும் தமிழில் அருமையான முயற்சி. மக்கள் தாங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் விஞ்ஞானமும், வணிகமும் கற்றால் இன்னும் சிறப்பான கண்டுபிடிப்புக்களும் இன்னும் சிறப்பான பொருளாதாரமும் இந்தியாவில் அமையக் கூடும். ”வணிகக் கதிரு”ம் மாத இதழ்தான். ஆசிரியர் பா சுகந்தி. சிறு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு,தொழில் முனைவோருக்கான அரசிடம் சிறப்பு சலுகைகள் கோரல் என வித்யாசமாக இருக்கிறது. துவரை வியாபாரம், பங்குச் சந்தையின் வளர்ச்சி, வீழ்ச்சி, திறனை வளர்க்கும் பயிற்சி, என்ன தொழில் செய்வது என்ற ஆலோசனை, தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள்., பட்டாசுத்தொழில், ஆன்லைன் தங்கம், சொத்து வாங்க தேவையான ஆவணங்கள், ஆகியவை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் இதில் ஒரு வங்கியின் கதையும் டாக்டர் பாலகுமாரியின் பேட்டியும் , டிஸ்கவரி புத்தக நிலயம் பற்றிய குறிப்பும் பயனுள்ளவை.

கணையாழி முதல் மற்றவை அனைத்தும் இலக்கிய இதழ்கள். எஸ். ராமகிருஷ்ணனின் புத்தனாவது சுலபம் ரொம்ப யோசிக்க வைத்த கதை சா. கந்த சாமியின் மேபின் வனம், ஒப்பிலக்கியத் தோற்றம் வளர்ச்சி, ஞானக் கூத்தனின் நான்கு பைகள், தமிழர் புலமை மரபு ஏற்றமும் இறக்கமும், குட்டி ரேவதியின் நான்கு கவிதைகளில் அடுப்பு பற்றிய கவிதை, இமையத்தின் எது இலக்கியம் எது தலித் இலக்கியம், சினிமா விமர்சனங்கள், அறிவியல் களஞ்சியங்கள், ( சிலி நாட்டு பால்டோமெரோ லில்லோ) மொழிபெயர்ப்புச் சிறுகதை என அருமையாக இருக்கிறது.1969 இல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழியின் மறு பிரவேசம் இது.

அகநாழிகை காலாண்டிதழ். கொற்றவையின் உடையரசியல், அகநாழிகை பதிப்பக வெளியீடுகள், வாமுகோமுவின் கதை, ராஜ சுந்தர்ராஜன், வேல்கண்ணன் விதூஷ், கதிர்பாரதி,செல்வராஜ் ஜெகதீசன் சுகிர்தா, லதாமகன், விக்கிரமாதித்யன் , யாத்ரா, இவள் பாரதி , வசுமித்ர நரன் கவிதைகள், செந்தில் குமாரின் திருடனின் வீடு கட்டுரை, வெ. சித்தார்த்தின் ( செர்பிய எழுத்தாளரான மிலோரட் பாவிச்சின்) மாயவெளி , ரிஷான் ஷெரிஃபின் பூமராங் , ராகவன் சாம்யேலின் வெயிற்பந்தல்., வாழ்வே புனைவாய் என்ற உமாசக்தியின் விமர்சனக் கட்டுரை , கரிசனமும் யதார்த்த இம்சையும் என்ற அய்ய்னார் விஸ்வநாத்தின் சினிமா விமர்சனக் கட்டுரைகள், கிறுக்கனுக்க மகன் கவிதைகள் பற்றி ந. பெரியசாமியின் விமர்சனக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இதில் 7 வது சர்வதேச திரைப்பட விழா பற்றிய கட்டுரையும் கவிதைகளும், கட்டுரைகளும் மிக அற்புதம். பால் வாசம் ததும்பும் இந்திரா பாலசுப்ரமணியனின் கதை இன்னும் அற்புதம்.

குலவையும் காலாண்டிதழ்.சி. சுப்ரமணியனின் நேர்காணல் மிக விரிவான ஆய்வு.வெண்ணிலா, ஆங்கரை பைரவி, திலகபாமா, இரா; கிருஷ்ணன், பா. தேவேந்திரபூபதி கவிதைகள், பெருமாள் முருகனின் கதை பிறந்த கதை, சுப்ரபாரதி மணியனின் சினிமா விமர்சனங்கள், பா. ராஜாவின் சிறுகதை, இருளர்கள் பற்றிய நூல் பற்றி இந்திரசித்தின் பார்வை, செஞ்சோற்றுக் கடன் நூல் பற்றி ஜீவா கவின் அம்மாவின் விமர்சனம் என கட்டுக் கோப்பான சிறியதான நூல் இது.

கனவு 25 ஆண்டுகளாக வருகிறது. ஆர். மணியின் ஃப்ளாட் துளசி, பி. அப்பன், பா. சேதுமாதவன் ராம்ராஜ், ராஜ்ஜா, நலங்கிள்ளி, பாரதி வசந்தன் கவிதைகள். சத்யானந்தனின் இரு நாவல்கள், சினிமா பற்றிய விமர்சனங்கள்.,கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் சிறுகதை, ஆல்பாவின் குறும்பட விமர்சனம். வங்கதேச படங்கள் பற்றி சுப்ரபாரதி மணியனின் கட்டுரை, திருப்பூர் படைப்பாளின் தொகுப்பான பருத்திக் காடு பற்றி இந்திரசித்தின் விமர்சனம், புதிய புத்தகங்கள் பற்றி விமர்சனம், தாண்டவக்கோனின் சிறுகதை, சிற்பி இலக்கிய விருது, கனவு இதழ் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்களோடு வெளியிடப்பட்டது அனைத்தும் அருமை.

மெய்ப்பொருள் கலை இலக்கிய மாத இதழ். ஆசிரியர் அருவின். பழையன கழிதலும் புதியன புகுதலும். சத்யன், சி. சுந்தரமூர்த்தி கவிதைகள், அருவினின் கருத்தும் பௌதீக சக்தியும், ஜோசப் ராஜாவின் சிறுகதை, தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புக்கள் பற்றி லெனின் அகத்திய நாடனின் கட்டுரையும் ஆச்சாரியின் கட்டுரையும் சிறப்பு.

இலக்கியம் நம் வாழ்க்கைக் குறிக்கோளை எய்ய உதவும் ஒரு இலக்காகவும் இருக்கிறது. நல்ல இலக்கியம் செம்மைப்படுத்துகிறது. ஒரே மொழியைப் பேசும் மக்களூடே இருக்கும் வெவ்வேறு வட்டார வழக்கங்களையும் பகிர உதவுகிறது. இனம் மொழி மதம் கடந்து உலகம் முழுமைக்குமான ஒரு இணைப்பு இலக்கியம் என்பது. அதைப் படிக்கப் படிக்க நாம் நம்மை புனர் நிர்மாணம் செய்து கொள்கிறோம். எண்ணங்களில் ஒரு வலிமையான மாற்றம் நிகழ்கிறது.

டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஒருவர் இது போல் சிற்றிதழ்கள் அனைத்திலும் ஒவ்வொன்று வாங்கிச் சென்றதாக அறிந்தேன். பொது ஜனங்களிடையே இந்த மாதிரி இதழ்கள் படிக்கக் கிடைத்தால் வாசிப்பனுபவமும். இலக்கிய அறிவும் மேம்படும். எனத் தோன்றியது. வெகுஜனப் பத்ரிக்கைகள், தொலைக்காட்சிகள், இணையங்கள், மக்களை அன்றாட சினிமா, அரசியல் ஜாலங்களில் ஆழ்த்தி யோசிக்க விடாமல் பண்ணும்போது இந்த மாதிரி இதழ்கள் எல்லா நூலகங்களிலும் வாங்கப்பட்டு வாசிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற நோக்கிலேயே இவைகளை சேகரித்து இந்த விமர்சனம் எழுதி உள்ளேன். வாசிப்பு மொழி வளத்தை அதிகரிக்கும். சிந்திக்கும் திறனை. மற்ற நாடுகள் , கலாசாரங்களை அறிந்து கொள்ளும் திறவு கோலாக. எல்லாவற்றிலும் மேம்பட்ட பரந்த சிந்தனை உள்ள மனிதனாக மாற்றும். மதம் , சாதி, இனம் எனப் பாகுபாடு கருதாமல் இலக்கியத்தை இலக்கியமாகவே பகுத்துண்ணும் அன்னம் போலாவர் மக்கள்.

Series Navigationபுதியதோர் உலகம் – குறுங்கதைகவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்