யாதுமாகி …

Spread the love


நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல்
பேசிக்கொள்கிறார்கள் ..
நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே
அவை சென்று விட்டதாகவே
நினைத்து கொள்கிறார்கள் …
கண்ணோரச் சுருக்கங்களையும்
மோவாயின் தளர்ந்த தசைகளையும்
நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில்
பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்
குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே
தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து
இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில்
சமைத்து பரிமாறுகிறார்கள் ..
தோல்விகளை திரையிட்டு மறைத்து
வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் ..
புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக
பறைசாட்டுவர் …
சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும்
இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் …
“தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை
சுழலவிடுவர் …
சற்றே அயரும் நேரத்தில்
நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர்
சிலவரிகளில் நீங்கள்  வாசிக்கும் பொருட்டு
அவர்கள் உங்கள் அருகிலோ,
அல்லது நீங்களாகவோ
அல்லது நானாகவோ இருக்கக்கூடும் ..
ஷம்மி முத்துவேல் ..
Series Navigationஇரு கவிதைகள்தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !