ராஜமௌலியின் “ நான் ஈ “

This entry is part 27 of 41 in the series 8 ஜூலை 2012

மகாதீரா மாவீரனாக டப் செய்யப்பட்டபோது, லோக்கல் தியேட்டரில் என்பதால், பார்த்து, ஓரளவு இம்ப்ரெஸ் ஆனவன் என்கிற வகையில், காசுக்கு நட்டமில்லை என்கிற மினிமம் கியாரண்டி எதிர்பார்ப்புடன் பார்த்த படம். கூடவே கிரேசி மோகன் வசனம் ( Misplaced ), சந்தானம் ( just a pickle) இருந்ததால் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்.

கன்னட சுதீப் (பா) அதே பெயரில் வில்லன். தெலுங்கு நானி அதே பெயரில் கதை நாயகன். கலர்புல்லுக்கு சமந்தா பிந்துவாக. அப்புறம் கிராபிக்ஸ் ஈ.. சமந்தாவிடம் இன்ஸ்டண்ட் காமம் கொள்ளும் சுதீப், இடையில் வரும் காதலன் நானியைப் போட்டுத் தள்ள, அது மறுபிறவியில் ஈ யாக வந்து பழி வாங்கும், பாடம் பண்ணும் அளவிற்குப் படித்து விட்ட, குண்டூசி முனைக்கதை. தானே அழிந்து, வில்லனைக் கொல்லும் நான் ஈ, மறுபடியும் வேறொரு ஈ யாக பிறந்து தொடர்ந்து சமந்தாவைக் காக்கும் முடிவு..

ஒன்று சொல்லியாகவேண்டும். பெரிய நடிகர்கள் இல்லாமல், வெறும் கிராபிக்ஸ் ஈயை வைத்து 136 நிமிடம் கதை சொல்ல தைரியம் வேண்டும். மௌலிக்கு இருக்கிறது. கூடவே சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் கதை சொல்லத் தெரிகிறது அவருக்கு.

ஈ தத்தித் தத்தி முட்டையிலிருந்து வெளியே வந்து, பறக்க எத்தனித்து, இறக்கைகள் பிரியாமல் அவஸ்தைப்பட்டு, பறவையால் துரத்தப்பட்டு, திடீரென ரிலீஸ் ஆகும் இறக்கைகளினால் பறக்கும் காட்சிக்கு, ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஒப்பாக கைத்தட்டுகிறார்கள் ரசிகர்கள். வெற்றி அங்கே ஆரம்பிக்கிறது.

ஈ செய்யும் ஆண்டிக்ஸ் எல்லாம் கிரேசி ரகம். ஒரு மனிதனைப் போலத் தலையைச் சொறிந்து கொள்வது, வழி தெரியாமல் கால்களைத் தூக்கி விரக்தியாகத் தலையைச் சாய்ப்பதும், வில்லனைக் கொன்று விட்டு விஜய், சிம்பு போல டான்ஸ் ஆடுவதும் சூப்பர் கிட்ஸ் ஷோ! கொஞ்சம் வன்முறையைக் குறைத்திருந்தால் இது ஒரு சிறந்த சிறுவர் படமாக ஆகியிருக்கும்.

சுதீப்பின் அடுத்த மொழிமாற்றுப் படம் கொருக்குப்பேட்டைக் கூலி என்கிறார்கள். ஆனால் suave வில்லன் பாத்திரத்தை, இவரை விட வேறு யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம். குரூரக் கண்களும், வளைந்த மூக்குமாக அசத்தி விட்டார். அவரை ஈ பாடாய் படுத்துகிறபோது, நமக்கெல்லாம் உவகை பீறிடுகிறது. இயக்குனரும் நடிகரும் வெல்லும் இடம் அது.

நானி காமெடி பீஸ் போல வருகிறார். அவரெப்படி மேனனின் ஹீரோ ஆனார் என்பது உறுத்திக் கொண்டிருக்கும் விசயம். சாக்லெட் பாய் இமேஜை, அவர் வி.தா.வருவாயா தெலுங்குப் பதிப்பில் கொண்டு வந்திருந்தால் அவர் ஒரு தேர்ந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை.

இடைவேளைக்கப்புறம் மூன்று காட்சிகளில் வருகிறார் லொள்ளு சந்தானம். ஆனால் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. சமந்தா ஈயிடம் ஐ லவ் யூ சொல்வதை, திருட வந்த தன்னிடம் சொல்வதாக எண்ணிக் கொண்டு, திருந்தும் அவர் அடிக்கும் காமெண்டுகள் விரசம் இல்லாதவை.

“ என்னண்ணே கை காய் காச்சிருக்கு? “

“ ஏண்டா! கல்லு ஒடைச்சா பின்னே கத்திரிக்காயா காய்க்கும்? “

0

( கோயிலில் ) “ஆஞ்சநேயா! எப்பவும் உன்னோட உண்டியலைத்தான் ஒடைப்பேன். இப்ப திருந்திட்டேன். ஒனக்கு தேங்கா ஒடைக்கிறேன்.”

( பக்தர் ) “ தட்சிணாமூர்த்தி என்னைக் காப்பாத்து சாமி!”

“ உள்ளே இருக்கறது ஆஞ்சநேயர்டா! வர வர கிரில்லு போட்டவன் பேரையெல்லாம் சொல்லி கும்பிட ஆரம்பிச்சுட்டீங்க”

0

கிரேசி மோகனுக்கு பெரிய வேலை இல்லை. ஒரே இடத்தில் நானி “ ஒங்களுக்கு முடியை டைட்டா கட்டினா நல்லாருக்கும்” ( பெண்) எனக்கு லூசா இருந்தாத்தான் பிடிக்கும்” “ நீங்க லூசுன்னு தெரியும்.. ஆனால் முடி? “

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து, படம் முடிவில் பங்காற்றியவர்கள் பெயர்கள் ரோல் ஆகும்போது வந்து, எழுந்து போனவர் திரும்ப வந்து உட்காரவைக்கும் அளவுக்கு ரகளை பண்ணியிருக்கிறார் கிரேசி..

சமந்தாவிடம்: “ பெட் டாக் அறியும்.. பெட் கேட் அறியும்.. இது எந்தா பெட் ஈ? “

( ஆள் ) “இதோ சார்.. பெட்டி”

“ போடா பட்டி! “

“ டாக்டர் நான் இத லவ் பண்றேன் “

“ ஆளை லவ் பண்றது அறியும். ஈயாளையோ? “

0

அருமையான செட்டுகள் போட்டிருக்கும் கலை இயக்குனருக்கு சபாஷ். சுதீப்பின் வீடும், சமந்தாவின் அடுக்கு மாடி குடியிருப்பும் அசத்துகின்றன. ஒரு பாடல் காட்சியில் மூங்கில்களால் செய்யப்பட்ட செட், கண்ணை விட்டு அகல மறுக்கிறது. அனாவசிய நீட்டல்கள் இல்லாத நறுக் எடிட்டிங். வின்சென்டிற்கு அப்புறம், வித்தியாசமான கோணங்களில் ஒளிப்பதிவு. ஈ க்கு மாஸ்க் தயார் செய்யும் சமந்தா, அரிசியில் சிற்பம் செய்யும் கலையைச் செய்பவர் என்கிற லாஜிக். மிரட்டல் கார் சேசும் விபத்தும், டிராபிக் போலீசை பாடாய்ப்படுத்தி டிராபிக் ஜாம் ஏற்படுத்தும் ஈயின் தந்திரமும், இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகின்றன. காட்சிகளின் நேர்த்தி இவர் தெலுகு தேசத்து ஷங்கர் என்று பறை சாற்றுகின்றன. நேரடி தமிழ் படத்திற்கு ஒஸ்தாரென்றால் கால்ஷீட் கொடுக்க ஹீரோக்கள் கியூ கட்டி நிற்பார்கள்.

0

கொசுறு

முதல் நாள் மாலைக் காட்சியில், போரூர் கோபாலகிருஷ்ணாவில் பக்கவாட்டுக் கதைவை எல்லாம் அடைத்து விட்டார்கள். மற்ற படங்களுக்கெல்லாம், திறந்து தான் வைப்பார்கள். இம்முறை இல்லை. ஒரு வேளை ஈ பறந்து போய்விடும் என்கிற முன் ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம்.

Series Navigationசிரியாவில் என்ன நடக்கிறது?மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *