வாழ்தலை மறந்த கதை

Spread the love

அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

சமீலா யூசுப் அலி
மாவனல்லை
இலங்கை

Series Navigationகவிஞனின் மனைவிஊதா நிற யானை