வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29

சீதாலட்சுமி

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

 

புலம்பெயர்ந்து செல்வோரரின் குடியிருப்புகள் உலகெங்கினும் பெருகிக் கொண்டிருக்கின்றது

தாராவி பழமையான குடியிருப்புகளில் ஒன்று. அங்கும் ஆரம்ப காலங்களில் பல இடங்களிலிருந்து வந்த போதினும் நாளடைவில் தமிழர்கள் பெரும்பான்மையினராயினர். துரையுடன் தாராவிக்குள் நுழையும் முன்னரே அதன் சுற்றுப்புறத்தையும், உள்ளே நுழையவிட்டு அதன் அமைப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய களப்பணியில் முதலில் பார்வையில் பட்டவைகளையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். நிலைமையை மதிப்பீடு செய்ய அது முக்கியம்.. சென்னையில் குடிசைகளை, நடைபாதைக் குடும்பங்களை, குடிசைமாற்று வாரியக் கட்டடங்களை, அங்கே அமைந்த வாழ்வியல் அமைப்புகளைப் பார்த்தவள். தாராவி நெருக்கடியாக அமைந்திருப்பதில் வியப்பில்லை. அது இந்தியக் குடிமகனின் எல்லை. பிழைக்க எண்ணி அவன் செய்யும் ஓட்டப் பந்தயத்தில் அது ஓர் எல்லை. பின்னர் கடல்தான் இருக்கின்றது. சிறு தொழில்கள் செய்வது, பிறரிடம் பணி செய்வது, ஏதோ ஓர் பிழைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றான்.

சங்கத்தை விட்டுப் புறப்படும் பொழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறியதால் தாராவியைச் சுற்றிச் சுற்றி சென்று கொண்டிருந்தோம். நான் சென்றிருந்த பொழுதும் சில அடுக்குமாடி கட்டடங்களும் இருந்தன. பலவகை அமைப்புகள் காணப்பட்டன. ஆனாலும் சுகாதாரம் பற்றிப் பார்த்தால் திருப்தியைத் தரவில்லை

கிராமங்களில் காற்றோட்டமாக இயற்கைச் சூழலில் வாழ்ந்து வந்தவர்கள் குறுகிய இடங்களில் ஆரோக்கியமற்ற சூழலில் வாழ எப்படி முடிந்தது? பசிக்காக ஓட்டமா? சென்னையில் கூவம் பாதையாகப் போகும் பொழுது மூக்கைப் பிடித்துக் கொண்டு மனிதன் நகர்வான். ஆனால் அங்கு குடிசைகள் அமைத்து கொசுக்கடியில் நாற்றத்தில் மனிதன் வாழ்கின்றான். எப்படி முடிகின்றது? எல்லாம் மனம் காட்டும் விந்தை. எதுவும் பழகிவிட்டால் குறையாகத் தெரியாமல் பழகி விடுகின்றது. இருக்க ஓர் இடம், பசிக்கு ஏதோ உணவு, உடுத்த ஏதோ துணி இந்த ஏதோ வாழ்க்கை அவனுக்கு இயல்பாகிவிடுகின்றது. அவனிடம் போய் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்வியல் சட்டங்களைப் பேசமுடியுமா?

நகர்ப்புரத்தில் பங்களாக்களில் மனிதன்.   நடைபாதையில் இன்னொரு மனிதன்.

காரில் பறக்கும் மனிதன்.   மனிதனைச் சுமந்து செல்லும் மனித ரிக்‌ஷா இன்னொரு புறம்.

நாகரிகத்திற்கு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஒருவன் எறிந்த எச்சில் இலைகளை இன்னொரு மனிதன் எடுத்து வைத்துக் கொண்டு பசியுடன் சாப்பிடும் காட்சிகள்!.(இப்பொழுது அந்த இலையும் இல்லை. தட்டு வந்துவிட்டது )

வாழ்வியல் காட்சிகளைக் காணூம் பொழுது  வேதனை பொங்கிவரும்.

பூலோக யாத்திரை என்று ஒரு கதை எழுதி பத்திரிகையிலும் வந்தது. பரமனும் பார்வதியும் தான் படைத்த உலகைக் காண வருகின்றனர். இந்தக் காட்சிகளைக் காணவும் அன்னையின் மனம் பதறுகின்றது. அவள் அன்னையல்லவா. கணவனிடம் கேட்கின்றாள் “ ஏனிந்த வேறுபாடுகள் ? ஒருவன் செழிப்பாகவும் இன்னொருவன் வறுமையிலும் வாட வேண்டும் ?

இறைவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்கின்றார்

“நான் உலகைப் படைத்து மனிதனையும் படைத்தேன். பணத்தை மனிதன் படைத்தான். அவன் படைத்ததில் அவன் உழல்கின்றான்.”

மனிதன் படைத்த விஞ்ஞானமும் வாழ வசதியையும் கொடுக்கின்றது. வாழ்வைப் பறிக்க அழிவும் செய்கின்றது.

மும்பாய் நகரம் மிகப்பெரியது. தாராவி குடியிருப்பும் மிக மிகப் பெரிது. சுற்றுப்புறம் சுத்தமாக வைத்திருப்பது கடினம். ஆரோக்கியம் பாதிக்கப்படும். அத்தனை இடர்களிலும் தான் வசிக்கும் சின்ன இடத்தில் அவன் உலகைக் காண்கின்றான். சின்னஞ்சிறு உலகம் தாராவி.  செய்யும் தொழிகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அவனுக்கும் பாசம் உண்டு. பரிவான குடும்பம் உண்டு. பாசப்பிணைப்பில் பிறந்த பிள்ளைகளும் உண்டு. அது ஓர் குட்டி நாடு. எனவே குழந்தைகளின் கல்வியும் அதன் தரமும் உயர்ந்தவை என்று கூற முடியாது. இந்தக் கருத்து நான் போகும் போது இருந்த நிலை. இப்பொழுது அரசும் பல தொண்டு நிறுவனங்கள், சில அமைப்புகள் இவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயல்கின்றனர். கூட்டம் அதிகம். எனவே சிறந்த வளர்ச்சி வந்துவிட்டது என்று கூறி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இதுவும் எல்லோருக்கும் தெரியும்.

சென்னையைப் பற்றி இங்கே சில தகவல்கள் கொடுக்க விரும்புகின்றேன்

சென்னைக்கும் கிராமப் புறங்களிலிருந்து பிழைக்கும் வழிதேடி வந்தனர். விளையும் விவசாய இடங்களில் குடியிருப்புகளின் தோற்றம். விவசாயத் தொழிலிலும் பல பிரச்சனைகள். சிறு சிறு வேலைகள் செய்வோரைக் காப்பாற்றி வந்த செல்வந்தர்களும் வாழும் முறை மாறுதலால் இவர்களைப் பேணுதல் நின்றது. நடைப்பதை குடும்பங்களைப் பார்த்திருக்கின்றேன். பேசி யிருக்கின்றேன். அதுபோல் அடையாறு, நதிக்கரை, கூவம் நதிக்கரை வாழ்ந்த குடிசை மக்களுடனும் பேசியிருக்கின்றேன்.

ஆட்சியில் அமர்பவர்கள் அவர்கள் ஆளும் காலத்தில் அவர்கள் சாதனைகளாகக் காட்ட சில திட்டங்கள் கொண்டுவருவர். குடிசைமாற்று வாரியம் தோன்றியது. அடுக்குமாடிக் கட்டடங்கள் எழுப்பப்பட்டு குடிசை வாழ்மக்களைக் குடியேற்றினர். அதன் பின் ? அதனை ஆய்வு செய்தால் பல விடைகள் கிடைக்கும். ஆரம்பத்தில் குடியேறியவர்கள் கிடைக்கும் பணத்திற்கு அவைகளை விற்றுவிட்டுச் சென்றவர்கள் கணக்கை எடுத்துப் பார்க்க வேண்டும். இது யார் தவறு.? நன்றாக வாழ வசதி செய்து கொடுத்தாலும் விற்றுவிட்டு மீண்டும் புதிய குடிசைகள் எழுப்பி போகின்றவர்களின் அறியாமையைப் பார்க்கும் பொழுது வேதனை ஏற்படுகின்றது. தொடர் கண்காணிப்பு அவசியம். அப்பொழுதுதான் திட்டத்தில் ஏற்படும் முட்டுக் கட்டைகளும் அவைகளை நீக்க வழிகளும் காண முடியும். வீடு கொடுக்கும் பொழுதே பல விதிகளை சேர்க்கப்பட வேண்டும். விற்கமுடியாத அளவில் பதிவு செய்தல் வேண்டும்..

இன்னொரு திட்டம்

சமத்துவபுரம்

உயர்ஜாதியுடன் பிற்பட்டோரும் தலித் மக்களும் சேர்ந்து வசிக்கும் வீடுகள். குழந்தைப் பருவமுதல் குழந்தைகள் சேர்ந்து வாழ்ந்தால் சாதிப் பிரிவினை உணர்வுகள் தோன்றாது என்ற நல்ல குறிக்கோளுடன் கட்டப்பட்டவைகள். ஆனால் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்க வில்லை. பிராமணர்கள் வருவதில்லை யென்றும் , வாங்கியவர்கள் வாடகைக்கு விட்டுவிட்டு சென்று விட்டார்களென்றும் செய்திகளைக் கூறினர். ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் ஏற்றி வைத்த சமூகம். அவர்களும் அதிகாரம் பெற்று  பிற இனத்தவர் மனம் புண்படும்படியாக நடந்து கொண்டனர். அதிகாரம் வேறு கைக்கு மாறவும் பிராமணனின் வீழ்ச்சி வந்து பெரும் பாலானோர் ஏழ்மையின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுவிட்டனர். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.. டில்லியில் பிராமண தலித் என்று. இந்த திட்டத்தில் மறுத்தவர் பிராமணன் என்று கூறி பல பினாமிகள் நுழைந்துவிட்டது. அதற்கு மறு ஆய்வு செய்யப்பட்டதா?

இன்னொரு திட்டம்.

வடக்கு சென்னையில்  வண்டிகளில் சரக்கு ஏற்றுவதும் இறக்குவதும் இரவு நேரத்தில். எனவே கூலி வேலை செய்பவர்கள், கொத்தவால்சாவடி. கப்பலில் சாமான்கள் இறக்கும் தொழில் உட்பட இரவு நேரப் பணி. அவர்களுக்கு குரோம்பேட்டையில் வீடுகள் கட்டிவைத்து குடியிருப்பு செய்திருக்கின்றோம். குரோம்பேட் என்று உதாரணத்திற்கு சொல்லியிருக்கின்றேன். எனக்கு இடங்கள் தெரிந்தாலும் வெளிப்படையாகக் குறிக்க விரும்பவில்லை. அங்கிருந்து இரவில் எப்பொழுது ரயிலேறி வருவான், வேலை செய்வான் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். வீட்டுக்கு வெகுதூரத்தில் வேலை அமைந்தால் மூட்டை சுமப்பவனுக்குக் கஷ்டம். அவனுக்குத்தான் முதுகு வலி தெரியும். வேலைக்குப் போகும் மன நிலை மாறும். ஆனால் வயிறு இருக்கின்றதே. பசிக்கும். அதற்கு காசு வேண்டும். பூட்டிய கதவுகள் தெரியும். பூட்டை உடைத்து திருடத் தோன்றும். கடும் உழைப்பாளிகள் திருடனாக மாறுவதற்கு யார் காரணம்?

ஓர் திட்டத்தில் ஆட்சியில் இருப்போர்,   அரசுப்பணியில் இருப்போர்,   பயன்பெறுவோர்

இந்த மூன்று நிலைகளிலும் அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறிப்பயனில்லை. எந்த திட்டங்களும் சிறிது காலம் கழித்து ஓர் ஆய்வு செய்யப்பட வேண்டும். நடை முறையில் ஏற்படும் பிரச்சனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்படின் திட்டங்களைச் சீரமைக்க வேண்டும்

அந்தி மயங்கும் நேரம் தாராவியைச் சுற்றி வரும் பொழுது மீண்டும் சென்னை நினைவுதான் வந்தது. எங்கு சென்றாலும் மனிதனின் பழக்கமும் தொடர்ந்து வருகின்றது. வெளி வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பும் நேரம். சின்னைக் கடைகளில் வியாபாரம் நடைபெறுவதைப் பார்த்தேன். அதுவும் வழக்கமானதுதான்.

இங்கும் என் அனுபவம் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன். மேரி அம்மாவைப்பற்றி எழுதும் பொழுது மூன்று பெண்கள் என் பணிக்களத்துக்கு உதவி செய்ததைக் கூறினேன். ஒருவர் மேரி அம்மா. அனுபவ அறிவுரைகளால் ஊக்கம் கிடைத்தது. அடுத்தவர் பெயர் திருமதி ராஜேஸ்வரி அனந்த ராமன். இவரைப்பற்றி தனியாக எழுதவே நிறைய செய்திகள் உண்டு. குடியிருப்பில் அவர்கள் செய்த உதவிகளைக் கூறுகின்றேன். அவருக்கு. நூற்றுக் கணக்கான கைத்தொழில்கள் தெரியும். என்னுடன் அவர்களை குடிசைமாற்று வாரிய இடங்களூக்கும் கிராமங்களுக்கும் அழைத்துச் செல்வேன். மூலப் பொருட்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். இவர்கள் பயிற்சி தருவார்கள். கடையில் வாங்கும் பல பொருட்கள் வீட்டிலேயெ செய்ய முடியும். சிறு தொழிலைக் கற்றால் சிறு வியாபாரமும் செய்ய முடியும்.

ஆரம்பத்தில் உற்சாகமாக பங்குகொண்டனர். விற்பனை செய்ய ஆரம்பிக்கவும் ஓர் தொய்வு ஏற்பட்டது. இருக்குமிடத்தில் விற்பனை செய்வதில் கவுரவம் பார்க்க ஆரம்பித்தனர். இட்லிக் கடை, மீன் வியாபாரம், காய்கறிக்கடை என்று வரும் பொழுது வாடிக்கையாளர்கள் தானாக வந்தனர். இது பழக்க தோஷம். இக்குறை தானாக புதிய பொருட்களை வியாபாரம் செய்வதில் இருந்த தயக்கம் பின்னால் மகளிர் மேம்பாட்டுக் கழகம் வரவும் குறைந்தது. உற்பத்தி, விற்பனை இவைகளை ஊக்குவித்தலில்  தொடர் கவனிப்பு வந்தது. சமூகநலத் துறையில் வழிபாட்டு மையம் மூலமாக வங்கிக் கடன் பெற்ற பொழுது திரும்பிக் கொடுப்பதில் திருப்திகரமான நிலை இல்லை. ஆனால் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் கூட்டு முயற்சியில் வங்கிக் கடன் வாங்க ஆரம்பிக்கவும் கடனைத் திரும்பச் செலுத்துவதிலும் ஓர் ஒழுங்கு காணப்படுகின்றது. அனுபவங்களில் திட்டங்கள் சீரமைக்கப்படும் பொழுது குறைகளும் குறையும். எனவே முயற்சிகளைக் கைவிடக் கூடாது.

மத்திய அரசு திட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சென்னையில் எல்லா நகரச் சேரிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. எக்மோரில் உள்ள குழந்தைகள் மருத்துவ நிலையத்துடன் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சிகளுக்குரிய எல்லாவற்றையும் செயல்படுத்தினோம். 1979 ஆண்டில் இதற்காகச் சிறப்பு பயிற்சி பெற டில்லிக்குச் சென்றேன். இரு ஆண்டுகள் இந்த திட்டத்தில் பணி யாற்றினேன். பின்னர் பதவி உயர்வு பெற்று உலக வங்கி ஊட்டச் சத்து திட்டத்திற்குச் சென்றேன். மீண்டும் துணை இயக்குனராக இதே திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் பொறுப் பேற்றேன். இந்த விபரங்கள் கொடுக்கக் காரணம் நான் தாராவியைச் சுற்றி வரும் பொழுதும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் பெண்கள் குழந்தைகளுடன் பேசியதிலும் பல எண்ணங்கள் தோன்றின. 1975 ஆண்டில் உதித்த எண்ணங்களை என்னால் சில வருடங்களில் செயல்படுத்த முடிந்தது. மேரி யம்மாவின் அனுபவ அறிவுரை எனக்கு உதவியது.

துரையின் இல்லத்திற்குத் திரும்பினோம். சிறிது நேரத்தில் முன்று குழந்தைகளுடன் ஒரு பெண் வந்தாள். சிரித்த முகம். ஆனாலும் எல்லோரும் களைப்பாகத் தெரிந்தனர். பழகியவள் போல் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். குழந்தைகள் என்னை வேடிக்கை பார்த்தன.

வந்தவள் பெயர் மாரியம்மா. மூன்று குழந்தைகள் வெளியில் சுற்றிவந்ததில் களைப்பு இருப்பினும் முகத்தில் உற்சாகம் இருந்தது. என்னைப் பார்க்கவும் பழகியவள்போல் அருகில் வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். துரை எல்லோரிடமும் என்னைப் பற்றி கூறியிருக்கின்றான். அவர்களைப் பார்க்க வருகிறேன் என்ற எண்ணமே அவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். வெளியில் பார்த்தவை களைப் பற்றி முதலில் குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தனர். பெற்றவள் முகத்திலும் மலர்ச்சி. ஏழைகளின் மகிழ்ச்சி எவ்வளவு எளிமையானது! இனிமையானது !    மாரியம்மாவும் குழந்தைகளுடன் கலந்து செய்திகளைச் சொன்னாள். கடற்கரை சென்றது குழந்தைகளுக்கு அதிக உற்சாகமாகத் தெரிந்தது. வேடிக்கை பார்ப்பதிலிருந்து ஓடி விளையாடும் வரை உற்சாகம்.

ஜென்னத் அம்மா குழந்தைகளைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். அன்று அவர்களுக்கு துரையின் வீட்டில் சாப்பாட்டு. எனக்கு செய்த உணவுடன் இன்னும் சிலருக்கும் சேர்த்து சமைத்திருந்தார்கள். இப்பொழுது மாரியம்மாவுடன் நான் தனித்து பேசலாம். எவ்வளவு சாமர்த்தியமாக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

மாரியம்மாளின் கணவருக்கு கப்பலில் சாமான்கள் ஏற்றி இறக்கும் வேலை. இரவில் குடிப்பார். இவளும் வீட்டு வேலைகளுக்குச் செல்வாள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அயராத வேலை. மாரியம்மாளின் பொறுப்பான குணம் தெரிந்தது. ஒரு கேள்வி கேட்டேன். அன்றைய ஊர் சுற்றலுக்கு ஆன செலவைப்பற்றிக் கேட்டேன். அவள் கூறவும் ஆச்சரியமாக இருந்தது. பஸ் செலவு மட்டுமல்ல, போகும் இடங்களில் குழந்தைகளுக்கு கேட்டதை வாங்கிக் கொடுத்திருக்கின்றாள். இத்துடன் பகல் ஆட்டத்திற்கு சினிமாவிற்கும் கூட்டிச் சென்றிருக்கின்றாள். விடுமறை நாள் எனவே உயர் வகுப்பு டிக்கட்டில் படம் பார்க்கச் சென்றிருக்கின்றாள்.

“உழைத்து சம்பாதிக்கின்றீர்கள். இப்படி உயர்தரடிக்கட்டுக்கு காசு கொடுத்து சினிமா பார்ப்பது சரின்னு நினைக்கிறியா?”

“அம்மா, நாங்க அடிக்கடி சுற்றப் போக முடியாது. எப்பொவோ போறோம். இந்த மகிழ்ச்சி இன்னும் கொஞ்ச நாள் இருக்கும். புள்ளங்க இதை நினச்சு சந்தோஷப்படுவாங்க.  எப்போவாவது கிடைக்கற சந்தோஷத்துக்குச் செலவழிக்கறது கஷ்டமா தோணாது. இனி எத்தனை மாசம் கழிச்சுப் போவோமோ?”

என்னை யாரோ அடிப்பது போன்று உணர்ந்தேன்

1962 இல் சென்னைக்கு சிறப்பு பயிற்சிக்குச் சென்றிருந்த சமயம் நடந்த ஓர் சம்பவம் நினைவிற்கு வந்தது. பயிற்சியாளர்களை குடிசைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டே வரும் பொழுது ஓர் குடிசை திறந்திருந்தது. எட்டிப் பார்த்தோம். உள்ளேயிருந்து ஓர் பன்றி ஓடிவந்து வெளியேறியது. எட்டிப்பார்த்தால் சோற்றுப்பானை உருண்டிருந்தது. சோறும் கீழே கொஞ்சம் கொட்டியிருந்தது. அந்த குடிசைக்கு வாசலில் கதவு கிடையாது. திருடு கொடுக்க என்ன இருக்கின்றது என்று கதவைப்பற்றி அக்கறை இல்லையா?

வீட்டுக்காரி வந்தாள். இடுப்பில் ஓர் குடம் தலையில் ஓர் குடம். தண்ணீருக்கு காத்திருந்து கிடைக்கவும் எடுத்து வந்திருக்கின்றாள். குடிசைக்குள் நுழையவும் குடங்களைக் கீழே வைத்துவிட்டு கீழே கிடந்த சோற்றுப் பருக்கைகளை மீண்டும் சட்டியில் போட்டாள். என்னுடன் வந்தவர்கள் சிலர் முகங்களில் சுளிப்பைப் பார்த்தேன்

சமூக நலப்பணிகளில் களம் செல்லும் பொழுது சில உணர்வுகளை வெளிக்காட்டக் கூடாது. அந்தப் பக்குவம் வர வேண்டும்.

உலகவங்கி ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆரம்பத்தில் கல்லூரியில் படித்து முடித்திருந்தவர்களை எடுத்திருந்தோம் அவர்களுக்கு முதல் நாளே நான் சொன்ன அறிவுரை :

“கிராமங்களுக்குப் போகும்பொழுது வீட்டினர் உட்காரச் சொன்னால் உட்காரத் தயக்கம் காட்டக் கூடாது. உட்கார நாற்காலிகள் இருக்காது. சில வீடுகளில் பாய் கூட விரிக்காமல் உட்காரச் சொல்லலாம். நாகரீகம், சுத்தம் என்று நினைத்து தயக்கம் காட்டாதீர்கள். கல்லூரி நாகரீகம் வேறு. இங்கு வேறு. இங்கே அன்பும் பண்பும்தான் முக்கியம்”

மீண்டும் நாம் குடிசைக்குப் போவோம். அவளிடம் நான்தான் கேள்வி கேட்டேன்

“ஏம்மா, வீட்டுக்குள் பன்னி வந்து சோத்துப்பானையை உருட்டியிருக்கு. ஒரு கதவு செய்து வீட்டை மூடிவிட்டுப் போகக் கூடாதா? நாய் , பன்னி வரமுடியாதல்லவா?”

“எங்களுக்கு சோத்துக்கே பிரச்சனை. கதவு அது இதுன்னு செலவழிக்க ஏது காசு?. நாய், பன்னியோடு சேர்ந்து வாழப்பழகிட்டோம்”

கடுமையான பதில். என்னால் மேலே எதுவும் பேச முடியவிலை. என் கேள்வி அவளுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிந்தது. அங்கிருந்து நகன்றோம். இரு நாட்கள் கழித்து எங்களில் சிலர் ஓர் சினிமாவிற்குச் சென்றோம். டிக்கட் எடுக்கும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். உயர்தர வகுப்பு. எங்கள் வரிசையில் இருவருக்குமுன் நிற்கும் பெண்ணைப் பார்க்கவும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த குடிசைக்காரி நின்று கொண்டிருந்தாள். அவளும் தற்செயலாகத் திரும்பியவள் என்னைப்பார்க்கவும் புரிந்து கொண்டாள். முகத்தில் மலர்ச்சி ஓர் புன்னகை தவழ விட்டாள். அவள் முகத்தில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ஆனால் நான் அப்படி இல்லை. கேட்க நினைத்ததை மெதுவாக அருகில் சென்று கேட்டேன்

டிக்கட் உனக்கு வாங்கவா அல்லது வேறு யாருக்காகவா?

எனக்குத்தான்மா. நானும் என் புருஷனும் சினிமா பாக்க வந்தோம்.

தப்பா நினைக்காதே. குடிசைக்குக் கதவு வாங்க காசில்லைனு சொன்னே. இவ்வளவு காசு கொடுத்து சினிமா பார்க்கலாமா

அம்மா, உங்களை நிச்சயம் தப்பா நினைக்கமாட்டேன். மத்தவங்க பின்னாலே பேசுவாங்க நீங்க நேர்லேயே கேட்டுட்டீங்க, ஏழைங்களுக்கு இதுதான் சந்தோஷம். சிவாஜி எம்.ஜி.ஆர் படம்னா எனக்கும் என் புருஷனுக்கும் அப்படி பிரியம்.  சின்ன டிக்கட் வேணும்னா சீக்கிரம் வரணும். வரிசையில் ரொம்ப நேரம் நிக்கணும். ஆம்புள்ளங்களுக்கு ஒரு டிக்கட்தான் தருவாங்க. பொம்புள்ளங்களுக்கு இரண்டு கிடைக்கும். அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. புருஷன் பொஞ்சாதி சந்தோஷத்துக்கு எப்பவோ செலவழிக்கறோம். பரவாயில்லைம்மா.

அன்று எனக்குப் புரியவில்லை. அப்பொழுது வருடம் 1962. இப்பொழுது வருடம் 1975 இடைவெளி 13 வருடங்கள். கிடைத்த அனுபவங்கள் என்னிடம் பக்குவத்தை ஏற்படுத்தி இருந்தது. வாழ்வியலையும்  புரிய வைத்திருந்தது. மாரியம்மாவின் பதில்தான் ஏழைகளின், உழைப்பாளிகளின் வாழ்க்கை.  எங்களிடையே பேச்சு தொடர்ந்தது.

தீரென்று ஓர் மின்னல். இடியோசையும் தொடர்ந்தது “அம்மா: என்று கத்திக் கொண்டே ஒருத்தி ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தாள். இதுவரை வராத மும்பாயில்தான் எனக்கு எத்தனை பெண்கள்!

நான் விழித்தேன். “நான் தான் ராணீ”  யென்று சிரித்தாள்.

“உங்களைப்பற்றி துரை அண்ணன் நிறைய சொல்லிச்சு. பார்க்கணும்னு அப்பவே ஆசை. கூட்டிகிட்டு வரேன்னு சொல்லிச்சு. அதான் பார்க்கவும் சந்தோஷம் தாங்கல்லே”

இத்தனையும் துரையின் விமர்சனத்தால் ஏற்பட்ட சூழல்  ராணி என் பக்கத்தில் ஒட்டி உட்கார்ந்து கொண்டாள். அவள் சின்னப் பெண் இல்லை. முப்பதுக்குமேல் இருக்கலாம். இருப்பினும் சிறியவளின் துடிப்பு  இருந்த்து. அவளை விசாரிக்க ஆரம்பித்தேன்

என்ன செய்கிறாய்

தொழில் செய்யறேன்மா

ஓ முதலாளியா? என்ன தொழில்?

சாராயக் கடை வச்சிருக்கேன்

என்னை உற்றுப் பார்த்தாள்.

உடனே எதுவும் என்னால் பேச முடியவில்லை

டீக்கடை மாதிரி இதுவும் ஒரு கடைதான். நான் வைக்கலேன்னா இன்னொருத்தன் வச்சு நடத்துவான். குடிகாரங்க நிறைய இருக்காங்க.

என்ன கேட்பது என்று தெரியவில்லை

அவளே மேலும் தொடர்ந்தாள்.

காசு மட்டும் போடல்லே, கடையில் நானே உட்கார்ந்து வியாபாரம் செய்யறேன்.

அப்பொழுது என்னையும் அறியாமல் பேசினேன்

உனக்குப் பயமா இல்லையா?

பயம் எதுக்கு? கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருப்பேன். வர்ரவனுக்குக் கொடுக்க ஆட்கள் இருக்காங்க. என்னைக் கண்டாத்தான் பயப்படுவாங்க அம்மா, நீங்க அவசியம் என் கடைக்கு வரணும்.

வரேன்.

அவ்வளவுதான் மீண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு சத்தம்போட்டு சிரித்தாள்.

நான் பட்டிக்காட்டுப் பெண்மணி. உடை, நடை பார்த்தாலும் நகர்ப்புரத்து நாகரீகம் என்றும் என்னிடம் ஒட்டியதில்லை. என் அலுவலகத்தில் கூட என் தோற்றம் கண்டு என்னை மாற்றிக் கொள்ளச் சொன்னதுண்டு. என்னால் முடியவில்லை. அவ்வளவுதான். அந்தத் தோற்றத்தால் எளியவர்கள் உடனே நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவர். .

நீ கல்யாணம் செய்துக்கல்லியா

“இல்லேம்மா, ஒருத்தனோடே பழகினேன். அவன் காசுக்காக சுற்றி வருகிறான்னு தெரியவும் விரட்டிட்டேன். என் தொழில் அப்படி. சாராயக் கடை வச்சிருக்கவ உடம்மையும் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கறாங்க. என்னாலே தொழிலை விட முடியாது. அதனாலே கல்யணத்தை விட்டுட்டேன். எனக்கு குறை இல்லேம்மா. இங்கே பாருங்க இவங்க என்னைப் புரிஞ்சிக்கிட்டவங்க. பாசமா இருக்காங்க. இதுதான் என் குடும்பம். இந்தப் புள்ளைங்க எனக்குப் புள்ளங்க. துரை அண்ணன் பாசமா இருக்கும். போதும்மா. இந்த நிம்மதியை நான் ஏன் இழக்கணும்.?!

மனிதன் தன் நிம்மதி கிடைக்க எத்தனை வழிகள் தெரிந்து வைத்திருக்கின்றான் ! ஏழைகளால் முடிந்த இந்த செயல் பேராசைக்காரர்களுக்குத் தெரியவில்லையே? எதற்குப் பின்னாலோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.!

ருக்மணியின் நினைவு வருகின்றது. அவள் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கள்ளச் சாராயம் தயாரிக்கும் இடத்திற்கு போலீஸ் போகும் பொழுது உடன் போகச் சொல்லி யிருக்கின்றார் மாவட்ட ஆட்சியாளர். சாராயம் காய்ச்சும் இடத்தில் பெண்களும் உதவிக்கு இருப்பதாகத் தகவல்.  அங்கே அவளுக்குக் கிடைத்த அனுபவங்களைக் கூறியிருக்கின்றாள். எங்களால் முடியாது என்று கூற முடியாது.

சமுதாயத்தில் ஓரிடத்தில் சூழல் தாக்கப்பட்டு மக்கள் அல்லல்படும் பொழுது சமுக நலப் பணியாளர்கள் அங்கிருந்து ஆவன செய்ய வேண்டும். தனக்கு என்ன நேருமோ என்று நினைக்கின்றவர்கள் இப்பணிக்கு வரக்கூடாது.

மற்றவர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. துரையின் அம்மாவும் ஜென்னத் அம்மாவும் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.  பின்னர். சாப்பிட்டு முடிய நேரமாயிற்று.

சாராயக் கடை வாசலில் கார் நின்றது. ராணியுடன் நானும் இறங்கினேன். குடிபோதையிலும் மக்கள் இன்னும் முழு நிதானத்தை இழக்கவில்லை என்பது என்னை ஆச்சரியத்துடன் பார்த்ததிலிருந்து புரிந்தது. அந்தக் கடைக்குப் பொருந்தாத ஒருத்தியின் வருகை. ராணி என்னைக் கூட்டிச் சென்று கல்லாப் பெட்டியில் உட்காரவைத்தாள். நானும் தயங்காமல் உட்கார்ந்தேன். ஒரு நாள் கூத்து. என் பக்கத்தில் ராணி நின்று கொண்டே வருகின்றவர்களிடம் பணம் வாங்கி என்னிடம் கொடுத்தாள். நான் அதனை வாங்கி கல்லாப் பெட்டியில் போட்டேன். என் பார்வை அக்கடையில் இருந்தவர்கள் பக்கம் சுழன்று வந்தது. இந்த உலகை விட்டுப் பறந்து கொண்டிருந்தார்கள்.  வலிதீர மட்டும் வந்தவர்களாக இருக்காது என்று தெரியும்.

ஆக நானும் ஒருநாள் சில வினாடிகள் நேரம் சாராயக்கடை தொழிலாளியாக இருந்தேன்.

போதைக் கள் குடிக்கும் பழக்கம் எப்பொழுதோ தோன்றிவிட்டது. காபி, டீ கிடையாது. பச்சையாக கிடைப்பதை உண்ணும் காலத்திலேயே ஏதோ குடிக்கவென்று ஆரம்பித்த பழக்கம். கள்ளின் வரலாறு நான் படித்ததில்லை. சங்க இலக்கியச் செய்திகள் தெரியும். ஆனாலும். சுத்த கள், போதைக் கள், பதனீர் பற்றிய விபரங்கள் தெரியும்.

ராணியைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

“ஒன்றுமட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால்  கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கிவைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே  அவ்வப்பொழுது மனதின் சுமைகளை இறக்கிவைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதைச் சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்”

“ வாழும்கலை”  –    என்.கணேசன்

படத்திற்கு நன்றி

[ தொடரும் }

 

Series Navigationவெள்ளம்இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்