வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -48

சீதாலட்சுமி

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

 

“சாதிகள் இல்லையடி பாப்பா _ குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”

Tanjore Temple -48பாப்பாவிடம் பாடுகின்றான் பாரதி. பிஞ்சு மனத்தில் பதிய வைத்தால் பருவத்தில் அவனை வழி நடத்தும் என்று எண்ணியுள்ளான். பெரியவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே! சொல்லிப் பயனில்லை. அப்படியும் அவன் மனம் சமாதானமாக வில்லை. தனக்குள்ளும் முணங்குகின்றான்

சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்

நீதிப் பிரிவுகள் செய்வார் _ அங்கு

நித்தமும் சண்டை செய்வார்

தனக்குள் புலம்பியும் மனம் சமாதானம் ஆகவில்லை. பெரியோர்களிடமும் வேண்டுகின்றான்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதர வுற்றிங்கு வாழ்வோம் ; – தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்

பாரதியின் தளர்ச்சி போய் முரசு கொட்டுகின்றான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை யில்லை

எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் – இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

இந்த பாரதியைத்தான் பழிக்கின்றது

சாதிகளை வளர்த்தது அதிகாரம். பிரிவினைகள் இருந்தால்தான் அவன் ஆட்சி நிலைக்கும்.

ஓர் நிலத்தில்  பல குழுச் சமுதாயங்கள் வந்து சேரவும் தலைமை ,, குழுமங்களின் புது விதிகள். அதிகாரம் எல்லாம் வளர ஆரம்பித்தன. பழைய குழுச் சமுதாயங்கள் அவர்களின் பழைய விதிகளையும் அவர்களுக்குள் வைத்திருந்தனர். சிற்றரசுகள், பேரரசுகள் தோன்றின. அப்பொழுது ஓர் இனம் ஒதுங்கி வாழ்ந்தது. இன்னொன்று ஒடுங்கி வாழ்ந்தது. இடைப்பட்டவர்கள்தான் பல நிலைகளில், பலமும் ஆதாயமும் பெற்றவர்கள்.

மன்னர்களுக்கு ஆலயங்கள் கட்டுவதில் ஆர்வம். அன்று ஆலயங்கள் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் என்று பல கலைகளை அங்கு வளர்த்தான். விவாத மேடைகளும் இருக்கும். சொற்பொழிவுகளும் நடக்கும்.  பல வகையிலும் கல்விக்கூடமாக , கலைகளின் காட்சி அரங்குகளாக அமைத்தான். பின்னர் ஓலைச் சுவடிகளிலிருந்து பல செய்திகள், மெய்கீர்த்திகள்,  , வரவு செலவுக் கணக்குக் கூட கல்வெட்டில் பொறித்தான். . காவிரிக்கரை ஓரத்தில் ஒன்றரை அடி அஸ்திவாரத்தில் பெரிய ஆலயம் கட்டுமளவு திறன் பெற்றிருந்தனர்.

அப்பொழுது சாதிகளுக்குள் பெரிய சண்டைகள் கிடையாது.

மன்னர்களும் செல்வந்தர்களும்  கொடுத்த மான்யங்களைப் பெற்று கற்பிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். ஒதுங்கி வாழ்ந்த பிராமணர்கள் ஆலயங்களில் ஆகம விதிகளின் படி காரியங்களைச் செய்து வந்தனர். ஆரம்ப காலத்திலிருந்தே சிறு தெய்வ வழிபாடுகளும் நடந்தன. அங்கே பிராமணர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. பழனியில் முருகன் கோயிலுக்கு நாயக்கர் காலத்தில்தான் பிராமணர்கள் அமர்த்தப்பட்டர்கள் என்ற ஓர் செவிவழிச் செய்தி உண்டு. உழைக்கும் கூட்டமோ கிடைக்கும் கூலியில் மனம் நிறைவுற்றுப் பணிகள் செய்தனர்.

இரட்டைக் குவளை முறை கொண்டு வந்தது யார்? பிராமணன் அங்கு போக மாட்டான். உயர் சாதி மக்கள்தான் அதனைக் கொண்டு வந்தது. .

சில அரசர்கள் தங்கள் அமைச்சர் பதவியில்  பிராமணர்களை நியமித்தனர். அது அவன் கற்ற கல்வியும், கல்வியால் அவன் காட்டிய விவேகமும்தான் காரணங்கள். அப்பொழுதும் சத்திரியர்களும் வைசியர்களும்தான் சக்தி பெற்றவர்களாக இருந்தனர். மன்னர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் இவர்களைச் சார்ந்ததே.

எப்படிப் பிராமணன் மேல் இத்தகைய காழ்ப்புணர்ச்சி வந்தது?

பேரரசுகள் போய்ச் சிற்றரசுகள் வந்தன. நாயக்கர்கள் ஆட்சி, மராட்டியர் ஆட்சியும் அங்கும் இங்கும் இருந்தன. நாயக்கர் காலத்திலும் பல பிரச்சனைகளால் முகலாயரிடம்  அவர்கள் உதவி பெற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை வந்தது. வெளி நாட்டவர்களும் வாணிபம் என்று சொல்லிக் கொண்டு பிரிவினைகளை அதிகப்படுத்த ஆரம்பித்தனர். வியாபாரம் என்ற போர்வையில் நாட்டைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் ஆங்கிலேயர். பலமிழந்த சமஸ்தானங்களுக்கு உதவி செய்வதுபோல் அவர்களை தங்கள் வலைக்குள் அடக்க ஆரம்பித்தனர். கிராமங்களில் வரி வசூல் செய்யும் பொறுப்பு பிராமணர்களுக்குத் தரப்பட்டன. கல்வி கற்றவன் என்ற நிலையில் கிராம அதிகாரியானார்கள். இது வரை ஒதுங்கி யிருந்தவர்களுக்கு கிராமங்கள் அளவில் அதிகாரம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியதுடன் ஆங்கிலேயர் அலுவலகங்களிலும் அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து வைத்துக் கொண்டனர்.

மன்னர்கள் ஆட்சி இருக்கும் வரை அதிகாரம் மிக்கவர்களாக இருந்தவர்கள் உயர் ஜாதியினர். பிறநட்டவர்கள் வருகை குறிப்பாக ஆங்கிலேயர் களால்  நிலைமை மாறிவிட்டது.. கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர் களிடம் கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லும் நிலை மாறியது. மனம் குமுறினர். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தவர்கள் அதிகார பீடத்தில் இருப்பதைக் காணவும் மனம் புழுங்கியது. இது மனித இயல்புதான்.

பிராமணர் , பிராமணர் அல்லாதார் என்ற இரு பிரிவும் ஏற்பட்டன.. பிராமணர் அல்லாதவர்களுக்கு ஓர் தனி அமைப்பும் தோன்றியது. தமிழ் நாட்டில் அதற்குத் தலைமை ஏற்று நடத்தியவர் இராமனாதபுர மன்னர்  பாஸ்கர சேதுபதி அவர்கள்.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம் என்று தொடர்ந்து தமிழ் கோலோச்சி கொண்டிருந்தது.  சம்ஸ்கிருதம் இடையில் தலை காட்டிக் கலந்த பொழுதும்  அப்பொழுது முகம் சுளிக்கவில்லை. சூழ்நிலை மாறவும் பிராமணனுடன் இருந்த மொழியும் பாதிக்க ஆரம்பித்தது. எந்த வகையிலும் குறையில்லாதது மட்டுமல்ல, மிகச் சிறந்த படைப்புகளை ஈன்றது தமிழ் மொழி. இந்த சூழ்நிலையில் தன் மொழியின் சிறப்பை கலப்பின்றிக் காக்க வேண்டியது தன் கடமை என்று  உணர்ந்தான். தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. மறைமலை அடிகளார், தேவநேயப் பாவணர் இன்னும் பலர் இந்தப் பணியில் இறங்கினர். பிரிவினையின் இடைவெளி அதிகமாகியது.

சுதந்திரப் போராட்ட இயக்கம் மனிதர்களிடையே தங்கள் சுயமரியா தையைக் காக்கும் உணர்வையும் ஏற்படுத்தியது. ஒவ்வொன்றாக வளர ஆரம்பித்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் இது போன்ற உணர்வுகள் இயக்கங்களாக மாறின.

பிரிட்டீஷார் எங்கு சென்றாலும் அவர்கள் கால் ஊன்ற பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளுவர். எதிர்ப்புகளை என்ன செய்தாயினும் உடைப்பர்.

இப்பொழுதும் ஆஸ்திலரேலியாவைக் எடுத்துக் காட்டாகக் காட்டுவதற்குப் பொறுக்கவும்.

ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர்களுக்குப் பிரச்சனையாக இருந்தவர்கள் பழங்குடியினர். 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறியவர்கள் கூட்டமும் பெரிது. இவர்கள் அங்கு சேர்ந்தவுடன் பழங்குடியினருக்கு உடைமையாக இருந்த நிலப்பகுதிகளுக்குப் பத்திரம் காட்டச் சொன்னார்கள். எழுத்தே வராத காலத்தில் வந்தவர்கள். எழுதப்படாத விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள்.

இப்பொழுது நமக்கு நிறைய சட்டங்கள் இருக்கின்றன. இருந்தும் எத்தனை பேர்களுக்கு நீதி கிடைக்கின்றது. புகார்கள் பதிவது குறைவு. அதற்குப் பல காரணங்கள். பதிந்தவைகளும் வாய்தாக்களில் உறங்க ஆரம்பித்துவிடும். சாட்சிகள் கூற்றின் அடிப்பினை என்று வரும் பொழுது அங்கும் தடுமாற்றம்.  ஆனால் பழைய சமுதாயங்களில் அவர்கள் விதிகள் கடுமையானவை. ஏமாற்ற முடியாது. தண்டனைகளும் உடனே செயல்படுத்தப்படும்.

இப்பொழுது ஆங்கிலேயர்கள் கேட்கவும் அவர்கள் பழக்கத்தைக் கூறினர். ஆங்கிலேயர்கள் அவர்களை வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. அதன் பின் நடந்ததுதான் பெரிய கொடுமை.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்பட்டு கடத்தப்பட்டனர். இது போன்ற  அனுபவம் அவர்களுக்குக் கிடையாது. திடீர் திடீரென்று குழந்தைகள் காணாமல் போகவும் குடும்பங்களைக் கூட்டிக் கொண்டு மலைப் பக்கம் ஓட ஆரம்பித்தனர். அந்த முறையில் அவர்களை விரட்டி காலுன்றியவர்கள் ஆங்கிலேயர்கள்.

சிறிது சிறிதாக எல்லோரும் கல்வி கற்க ஆரம்பித்தனர். அரசியலிலும் நுழைந்தனர். சமீபத்தில்தான் அவர்கள் பார்லிமெண்டில் நடந்தவைகளூக்கு மன்னிப்பு கேட்டனர். மன்னிப்பு மட்டும் போதுமா? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தீர்கள் என்ற அவர்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வில்லை

இந்தியாவிலும் பல வகையிலும் பிரிவினைகளை உண்டுபண்ணினார்கள். சண்டைகள் ஏற்பட வைத்தார்கள். பலம் குறைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது போல் நடந்து தங்களுக்கு அடிமைகளாக்கினர். தமிழகத்திலும் சிதறிக் கிடந்தவைகளை மேலும் சிதைத்துப் பிரித்தார்கள். இங்கிருந்த சாதிப்பிரிவினைகள் அவர்களுக்கு ஆதாயமாகிவிட்டது.

மதராஸ் மாகாணத்தின் கவர்னராக   இருந்த  GRANT DUFF ஒரு பட்டமளிப்பு விழாவில் பேசும் பொழுது சொன்னது. அப்பொழுது அவர்களிடம் பணியாற்றும் பிராமணர்கள் ஒருபக்கமும் மற்ற உயர் சாதியினர் இன்னொரு பக்கமும் உட்காரவைக்கப் பட்டிருந்தனர்.

“இது உங்கள் பூமி. உங்கள் இடத்தில் எதற்காக இந்த பிராமணர்களை வைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவனை உட்கார வைத்துக் கொண்டு எப்படி பொறுமையாக இருக்கின்றீர்கள்? ஏன் விரட்டவில்லை ?”

இது நடந்த ஆண்டு 1872

எவ்வித மனக் கசப்பின்றி எல்லோரும் சேர்ந்து வாழ்ந்த சமுதயம்தான் இது. சூழ்நிலை மாறியது. மனக் கசப்பு தோன்றியது. அதுவும் மனித இயல்பு. காலச் சுழற்சியில் இத்தகைய மாற்றங்கள் வருவதும் இயல்பு. ஆனால் இன்று காணப்படும் காழ்ப்புணர்ச்சிக்கு வித்திட்ட ஆண்டு 1872. விதை விதைத்தவன் ஓர் ஆங்கிலேயன்.

டில்லியில் ஓர் அரசியல்வாதி  ஒருசமயம் கூறியது. இந்திய அரசை ஆள்வது அரசியல்வாதிகளல்ல. தஞ்சாவூர் பிராமணர்கள் என்றார். காரணம் பெரும்பாலான  ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் அந்த சமூகத்தவராக அமைந்துவிட்டது. காரணம்  அப்பொழுது கற்றவர்கள் அவர்களில் அதிகம்.

அதிகாரப் பகுதிகளில் மட்டுமல்ல மக்களை ஈர்க்கும் ஊடகங்களிலும் அவர்கள்தான் அதிகமானவர்கள். சங்கீதம், நாட்டியம், நாடகங்கள், கதாகாலஷேபம், பத்திரிகைகள், சினிமா இப்படி எதிலும் அவர்களைக் காணவும்  பிராமணர் அல்லாதார் விழித்தனர். கசப்பு கோபமாகியது. ஒவ்வொன்றிலும் வெளிவர ஆரம்பித்தது. திராவிட இயக்கத்திற்கு இது சரியான சூழ்நிலையாயிற்று. அதிலும் அறிஞர் அண்ணா முதல் பலரும் எழுத்து, பேச்சு,  நாடகம், சினிமா போன்றவைகளில் தங்கள் திறமையைக் காட்டவும் மக்களின் ஆதரவு அவர்கள் பக்கம் சென்றது. தோன்றியிருந்த கசப்புணர்வு காழ்ப்பாக மாறி இப்பொழுது பிராமணர்கள்   தாக்கப்படுகின்றனர்.

இன்னொரு காரணத்தையும் பார்க்கலாம். ஒவ்வொரு சமுகத்திலும் சில விதிமுறைகள் உண்டு. பழகிவிட்டதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அக்காலத்தில் மாற்றங்களை அவ்வளவு சுலபமாக சமூகங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்களிடம் இருந்த பழக்கம் ஆச்சாரம். கோயில் பணிகள், கற்றுக் கொடுத்தல் என்று இருக்கும் வரை அவர்கள் ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தனர். காலம் மாறவும் சமுதாயத்தில் ஒருவருக் கொருவர் பழக வேண்டிய நிலை வந்தது. தங்கள் பழக்கங்களையும் பாதுகாத்து மற்றவர்களையும் காயப்படுத்தாமல் இருந்தவர்கள் உண்டு.

எனக்கு கிருஷ்ணா ஶ்ரீனிவாஸ் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் ஆங்கிலக் கவிஞர்களுக்காக ஓர் அமைப்பு வைத்திருந்தார். மேலும் “ POET “ என்ற மாதப் பத்திரிகை ஒன்றும் நடத்தி வந்தார். உலகில் பல நாட்டி லிருந்து கவிஞர்கள் கவிதைகள் அனுப்புவார்கள். அவர் மனைவியின் பெயர் கோதை. இருவரும் ஆச்சாரமானவர்கள். இவர்கள் அமைப்பின் செயலாளர் ஓர் முஸ்லீம். பெயர் சையத். இவர் நியூ காலேஜில் ஆங்கிலப் பேராசிரியரக இருந்தார். கிருஷ்ணாவிற்குக் குழந்தைகள் கிடையாது. சையத்தைத் தன் மகன் என்று சொல்வார். சையது வீட்டிற்கு வந்தால் இரவுதான் தன் வீட்டிற்குத் திரும்புவார். உணவு, சிற்றுண்டி எல்லாம் கிருஷ்ணா வீட்டில்தான். அடிக்கடி தண்ணீர், காபியும் குடிப்பார் .ஒரு நாள் கூட அவர்களின் ஆச்சாரம் அவரைக் காயப்படுத்திய தில்லை. அவர்கள் ஆச்சாரத்தை வெளிக்காட்டாமல் விருந்தினர்களைப் பரிவுடன் கவனிக்கும் குடும்பம். எனக்கு இந்த குடும்பத்துடன் நல்ல பழக்கம். அதுமட்டுமல்ல, அந்த அமைப்பில் நானும் ஓர் உறுப்பினர். மாதம் தோறும் நடக்கும் கூட்டத்திற்குத் தவறாமல் போவேன். மற்றவர்கள் ஆரம்பத்தில் கிருஷ்ணாவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பின்னால் புரியவும் உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் வீட்டிற்கு அடிக்கடி வருவர். பத்மஶ்ரீ பட்டம் கிடைத்தது. அவருக்கு வயதாகிவிட்ட படியால் அவருடைய அமைப்பில் உயர்திரு பத்மநாபன் ஐ.ஏ எஸ்அவர்கள் பொறுபெடுத்துக் கொண்டு உதவி செய்ய ஆரம்பித்தார். இவர் இல்லத்திற்கு உயர்திரு அப்துல் கலாம் அவர்களும் வருகை புரிந்திருக்கின்றார். எடுத்தவுடன் காரணமாகத்தான் நல்ல காட்சியை முன் நிறுத்துகின்றேன்.

இனி கசப்பான செய்திகள் தொடரும்.

என்னுடைய ஆறு வயதில், குழந்தைப் பருவத்தில் நான் வெறுத்த சாதி. பிறந்தவுடன் பெற்றவர் சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்றவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானவுடன் வீட்டிற்கு வந்தார். அதென்ன சொந்த வீடா? ஓர் வீட்டில் கிணற்றடி பக்கத்தில் ஓர் அறை. ஒண்டுக் குடித்தனம். ஆசையுடன் பள்ளிகூடத்திலிருந்து வந்தேன். அம்மாதான் “அப்பா” என்று அடையாளம் காட்டியது. உடனே அவர் மடியில் உட்கார்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. அந்த வீட்டுக்காரம்மாள் வந்து கத்தினார்கள்

அவர்கள் ஆச்சாரம் போய்விட்டதாம். என் அப்பா எல்லா சாதிகளுடனும் சேர்ந்து வாழ்ந்ததால் பிராமணீயம் தீட்டுப் பட்டுவிட்டது. இது பிராமணர்கள் வாழும் வீடு. அவர் இங்கே உட்காரக் கூடக் கூடாது. உடனே அவர் வெளியே போக வேண்டும்.

என்  அம்மாவிற்கு அப்பொழுது 23 வயது கூட நிரம்பவில்லை. பல ஆண்டுகள் பிரிந்திருந்த கணவனுடன் சேர்ந்து சில மணி நேரம் கூட இருக்க முடியாமல் செய்தது பிராமண ஆச்சாரம். அம்மா ஓவென்று கத்தி அழுதார்கள். நான் கோபத்துடன் அந்த அம்மாவை முறைத்தேன். அப்பாதான் சமாளித்து சமாதானம் செய்துவிட்டு வேறு வீடு பார்த்து கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார். என் மனத்தில் ஆறாத புண் ஏற்பட்டுவிட்டது. எங்களிடம் ஒரு சாதி மட்டுமா விளையாடியது. சாதியையே வெறுக்க வைத்தது இந்த சமுதாயம்.

வீடு பார்த்து கூட்டிப் போகின்றேன் என்று சொன்னவர் மூன்று மாதங்கள் கழித்து எங்களை எட்டயபுரம் வரவழைத்துக் கொண்டார். சாதிப் பிரச்சனை எங்களை நிழல்போல் தொடர்ந்தது. இப்பொழுது எங்கள் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தவர்கள் பிராமணர்களல்ல. ஆளைவிட்டு அடித்தார்கள். கொலை செய்யவும் முயன்றார்கள். தொழிலை முடக்கினார்கள். ஊரில் பெரும்பாலோர் அன்புடன் இருந்த பொழுது அவர்களில் சிலர்தான் இப்படி நடந்து கொண்டது. அப்பொழுது கூட போலீஸ் விசாரணையில் அப்பா யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. ஒரு பிராமணன்  ஊர்ப் பொது வேலைகளில் முன்னின்று நடத்த வரக் கூடாது. ஊருக்குப் பெரியவர்கள் வந்தால் பார்க்கக் கூடாது. எல்லாவற்றிலும் ஒதுங்கியிருக்க வேண்டுமாம். என் பிள்ளைப் பருவத்தில் பெற்றவர் பட்ட துன்பங்கள், தொல்லைகள் சாதியையே வெறுக்க வைத்தது. எதையும் விளக்கமாக எழுத விரும்ப வில்லை.

எந்த சாதியாயினும் எல்லோரும் அப்படி நடப்பதில்லை. ஒரு சிலரின் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்தமாக விமர்சிக்கப்படுகின்றது. சாதியில் மட்டுமல்ல மதங்களைப்பற்றிப் பேசும் பொழுதும் இது போன்றே விமர்சிக்கப் படுகின்றது. கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வரும் பொழுது அமைதி காப்பவர்கள் கூட மாறிவிட நேரிடுகின்றது.

காலம் மாறிவிட்டது. நாமும் மாற வேண்டிய கட்டாயத்தில் மாறிக் கொண்டிருக்கின்றோம். அதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவு, எப்படியென்பதை முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவுகள் அர்த்த முள்ளவைகளாக இருக்க வேண்டும்.

ஓர் உதாரணம்மட்டும் கூற விரும்புகின்றேன். ஏற்கனவே எழுதிய பிரச்சனைதான்.

அக்காலத்தில் பெண்கள் வீட்டு விலக்கமானால் மூன்று நாட்கள் வீட்டின் பின்புறம் தங்க வேண்டும். என் காலத்தில் தள்ளியும் இருக்க வேண்டும். கொஞ்சம் அருகில் வந்தால் கூட தீட்டு என்பார்கள். இன்று பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். மேலும் வீடுகளின் அமைப்பும் மாறிவிட்டன. இப்பொழுது பெண் குளித்துவிட்டு வீட்டிற்குள் வரலாம், ஆனால் சில அறைகளுக்குச் செல்லாமல் வீட்டிற்குள் ஒதுங்கி யிருக்கலாம் என்றனர். பின்னர் குளித்துவிட்டு வீட்டிற்குள் நடமாடலாம் என்றார்கள். பின்னால்  குளித்துவிட்டு சமையல் செய்வது தப்பில்லை என்று வந்துவிட்டது. சாமி பக்கம் மட்டும் போகக் கூடாது என்று கூறும் நிலைக்கு வந்து விட்டோம். அப்படியிருக்கும் பொழுது ஒருவர் நடந்து கொண்ட முறையைப் பாருங்கள். அடுக்கு மாடிக் கட்டிடம். கீழே முதல் பகுதியில் வாழ்ந்தவள் 31 வயதில் விதவையானாள். அவள் வெளியில் நடமாடுவதைக் குறை கூறிச் சண்டை போடலாமா? விழித்தவுடன் வெளியில் வரும் பொழுது நிற்கக் கூடாது. வெளியில் போகும் பொழுது வெளியில் நிற்கக் கூடாது. நல்லது பேசிக் கொண்டு செல்லும் பொழுது வெளியில் நிற்கக் கூடாது. அதுசரி, வீட்டை விட்டு வெளியில் போகும் பொழுது எத்தனை விதவைகள் வருகின்றார்கள்?! அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கின்றவர்களில் எத்தனை பேர்கள் விதவைகள் இருப்பார்கள் ?! இந்த அளவு கொடுமையாகப் பேசியவரின் மனைவியும் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கின்றவள். ஆச்சாரம் போய்விட்டது. இப்படியெல்லாம் நடந்தால் பிராமணர்களை விமர்சிக்காமல் இருப்பார்களா? எல்லோரும் இப்படி நடப்பதில்லை என்பதைக் காட்டத்தான் முதலில் கிருஷ்ணாவின் வீட்டைப்பற்றிக் கூறினேன். ஒரு சிலரின் பேச்சும் செயலும் மற்ற சாதியினரைப் பேச வைக்கின்றதே!

தந்தை பெரியார் வாழ்க்கையிலும் ஓர் சம்பவம் நடந்ததாகக் கேள்விப் பட்டிருக்கின்றேன். பசியுடன் இருந்தாராம். ஆனால் ஆச்சாரம் காரணமாக முதலில் பிராமணர்கள் சாப்பிட விட்டு இவருக்கு உணவளிக்கப் பட்டதாம். பசியில் ஏற்பட்ட அனுபவம் அவர் சுய மரியாதையைப் பாதித்துவிட்டது என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இதன் முழுவிபரம் எனக்குத் தெரியாது.

ஒதுங்கியிருக்கும் வரை பிரச்சனைகள் வரவில்லை. வரி வசூல் செய்ய கிராம அதிகாரியானது, ஆங்கிலேயர்களிடம் அதிகாரிகளாகப் பணியாற்றியது, அரசுகளிலும் பெரிய பதவிகளில் அவர்கள் இருந்ததும் உயர்சாதியினரிடையே வெறுப்பும் கோபமும் வளர, ஓர் வெள்ளையன் பேச்சு எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்த்தது போல் ஆகிப் பிரமாணர்களுக்கு எதிரிகளாகிவிட்டனர் இதர சாதியினர். மேலும் தங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஆச்சாரம் பிறரின் சுய மரியாதையைப் பாதிக்கும் வகையில் சில இடங்களில் சில சம்பவங்கள் நடந்ததால் காழ்ப்புணர்ச்சி அதிகமாகி விட்டது.

மேடு பள்ளங்கள் இருக்கும் பாதை சுலபமான போக்குவரத்தைப் பாதிக்கும். எப்படியோ சமுதயத்தில் சாதி என்ற பெயரில் ஓர் மேடும்  ஓர் பெரிய பள்ளமும் தோன்றிவிட்டன. . பயணங்கள் சீராக்க நினைப்பவர்கள் மேடு பள்ளத்தைச் சரியாக்க வேண்டும். ஆனால் இப்பொழுது பல மேடுகள், பல பள்ளங்களாகத் தோண்டி விட்டன அரசியல் உலகம்.  வாழ்க்கையையே சதிராட்டமாகி விட்டது. திண்டாடுகின்றோம்.

மனிதன் பிறந்த பொழுது சாதிகள் கிடையாது. நாகரீகமும் பண்பாடும் கற்றவர்கள் என்று கூறிக் கொண்டு வாழ்க்கையை நரமாக்கிவிட்டோம்.

சட்டம் இயற்ற வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகையில் பிராமணர்கள் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி மிகக் குறைவு. ஒரு சட்டம் கொண்டுவரலாமே!!

யாரும் அவர்கள் பிறந்த சாதியில் பெண் எடுக்கக் கூடாது, பெண் கொடுக்கவும் கூடாது. அந்த மணம் செல்லாது என்று சட்டம் இயற்றலாமே. பிராமணர்களில் ஓர் சட்டம் உண்டு. ஒரே கோத்திரத்தில் மணம் செய்தல் கூடாது.  சட்டம் கொண்டு வரமாட்டார்கள். மற்றவர்கள் சாதிகள் பாதிக்கப்படுமே! யாரெல்லாம் மேடையில் மிக வேகமாக தலித் பற்றி அக்கறை காட்டிப் பேசுகின்றர்களோ அவர்கள் வீட்டுப் பெண்ணை தலித் குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும். வெறும் மேடைக் கூச்சல்மட்டும் பயனில்லை. தலித் இனப்பையன் ஓர் உயர் சாதிப் பெண்ணை காதலித்துவிட்டால் அவன் வாழும் ஊரையே கொளுத்த முயல்கின்றார்களே! இவர்களா தலித் மேல் இரக்கம் உள்ளவர்கள்.?!

சிறுவயது முதல் நான் பார்த்த சாதிப் பிரச்சனைகள் கொஞ்சமல்ல.

சாதிகள் இப்பொழுது பெருகிவிட்டன. இவைகளை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது கூட அர்த்தமில்லாதது. குழுமங்களில் இருக்கும் பல நண்பர்கள் என்னிடம் கூறும் பொழுது அவரவர்கள் சாதி மக்களின் நலனைக் கவனிக்க சாதி வேண்டும் என்றார்கள். குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் ஓர் தலித் பையன் ஒரு உயர் சாதிப் பையனை அடித்துவிட்டால் இது குழந்தைகள் சண்டை என்று சும்மா இருப்பார்களா என்று கேட்டேன். அதற்கு ஓர் அசட்டு சிரிப்பு.

இனி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பள்ளிக் கூடம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கோயில் ஒவ்வொரு சாதிக்கும் ஓர் சுடுகாடு. ஏற்கனவே விளை நிலங்களில்  கட்டடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தனை பிரிவுகளுக்கு ஏது இடம் ?

நாம் சீர்திருத்தம் செய்யவில்லை. சீரழித்துவிட்டோம். ஒற்றுமையுணர்வு போய்விட்டது. எங்கும் சண்டை! எதிலும் சண்டை!. பேராசையால். ஒவ்வொருவனும் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கின்றான்.

மனிதன் யானையைக் கூட அடக்கிவிடுவான் ஆனால் மனத்தை அவனால் அடக்க முடியாது.

சமுதாயத்திலும் எங்கு நோக்கினும் பிரச்சனைகள் மனிதன் மருண்டு போயிருக்கின்றான். இதிலே அவனை முழுவதும் பைத்தியங்களாக்க எங்கு நோக்கினும் மதுக்கடைகள், பாலியல் குற்றங்கள் வன்முறைகள். இதுதான் வாழ்வா?

தனி மனித ஒழுக்கத்தில் நோய்.

இன்னும் மனிதன் செத்துவிடவில்லை. நம்பிக்கை இழக்க வேண்டாம். இப்பொழுதும் கூட நம்மால் சில நல்ல காரியங்கள் செய்ய முடியும். தொடர் முடிவில் என் அனுபவத்தில் கிடைத்த பாடங்களைச் சொல்லுவேன்.  நல்ல இதயம் படைத்தவர்கள், முயற்சியில் இறங்கலாம். நாம் முயன்றால் நம் பிள்ளைகள், அவர்களின் எதிர்காலத்தில்  நல்ல பாதையில் செல்ல முடியும்.  பிரச்சனைகளின் ஆழம் தெரிந்தால்தான் அதில் நீச்சலடித்து வெளியேற முடியும். ஏதோ ஓர் நம்பிக்கையில் இந்த நிலையிலும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.  தவறு.    என்னை எழுத வைத்துக் கொண்டிருப்பவர்   “இறைவன்”

என் எழுத்துக்கள் நான் வணங்கும் இறைவனுக்கு அரச்சனைப் பூக்கள்.

“வாழ்க்கையை ஒரு பிரச்சனையாகப் புரிந்து கொண்டு வாழ்கின்றவன் அப்படியே தன் அனுபவங்களைக் காண்கின்றான். சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள் எல்லாமே பிரச்சனைகளாக உருவெடுக்க அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை துக்க மயமாக அமைந்து விடுகின்றது. வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சனை யிலும்  ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாகச் சந்திக்கும் விதத்தில் தன்னைப் பலப்படுத்திக் கொள்கின்றான். ஒவ்வொரு பிரச்சனையும் அவனை உயர்த்தும்  படிக்கட்டாக அமைந்து  அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகின்றது.

எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப் படுகின்றது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.”

என்.கணேசன்

[தொடரும்]

படத்ததிற்கு நன்றி

 

Series Navigationஅக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்நடு வலதுசாரி திட்டத்தை முன்வைக்கிறார் நரேந்திர மோடி