Posted in

விடுவிப்பு..:-

This entry is part 20 of 44 in the series 16 அக்டோபர் 2011

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.

குழந்தைகளைப் படிக்கவைக்கும்
வித்தை கைவருகிறது.
அவள் செய்வதை விடவும்
அட்டகாசமாய் செய்வதாய்
மமதை வருகிறது உங்களுக்கு.

இதுவரை வாழ்ந்ததற்கான
பணத்தைக் கணக்கிட்ட
தூக்கி வீசுகிறீர்கள்..
அவள் முன்.. அவளைப் போல..

இரவுகளில் உங்கள் கழிவுகளையும்
பகலில் உங்கள் பேச்சுக்களையும்
உள்வாங்கியவள் அவள்.
உங்களிடம் இருக்கும் பணத்துக்கு
அவளை விட இளமையானவர்கள்
கிடைக்கிறார்கள் இரவைக் கழிப்பதற்கு.

உங்களை எதிர்த்துப் பேசினாள் என்றோ
உங்களைப் போல நடக்க முற்பட்டாள் என்றோ
வெறுக்கத் துவங்குகிறீர்கள்.
எந்தச் சொத்துக்களும் அவள் பேரில்
வாங்கவில்லையென பூரிக்கிறீர்கள்.

எல்லாவற்றிலிருந்தும் நீக்கிவிட்டதாக
செய்தித்தாள்களில் பிரகடனப்படுத்துகிறீர்கள்.
உங்களால் நிறைவேற்ற முடியாத
ஸ்தானம் ஒன்று மட்டும் உறுத்துகிறது
அவள் உங்கள் குழந்தைகளின் தாய் என்பது.

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதாகிளம்பவேண்டிய நேரம்.:

2 thoughts on “விடுவிப்பு..:-

  1. ”கழிவுகளையும்” என்ற சொல் கையாடல் கொஞ்சம் நெருடலாக உள்ளது. ’இரவில் உங்களையும் பகலில் உங்கள் பேச்சுக்களையும் உள்வாங்கியவள்’ என்றிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. வார்த்தைப்பிரயோக உரிமை கவிஞருக்கே என்பதை மதிக்கிறேன்… மறுக்கவில்லை…
    இக்கால ‘விடுவிப்பு’களின் ஆதியந்தத்தை அருமையாக வடித்துள்ளார்..திருமதி.தேனம்மை…

  2. பொன்னி வளவன் அவர்களுக்கு,

    பெண்களின் உடன்பாடில்லாமல், அனுமதி இல்லாமல் அத்து மீறப்படும் சில விஷயங்களை வலியுடன் சொல்லவே அந்த வார்த்தைப் பிரயோகங்கள்.

    கூட வாழ்ந்த ஒரு பெண்ணையே துச்சமாய் வீசமுடிகிறது சிலருக்கு. ஆனால் பல விஷயங்களை சொல்லாமலே அமைதியுடன் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது எந்தப் பெண்ணுக்கும்.

    கவிஞருக்குண்டான உரிமைகளை மதிப்பதற்கு நன்றி அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *