விபத்துசத்யானந்தன்

முதுகில் சுமையானாலும்
கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும்
தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும்
கால வரிசை தவறாததால்
கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால்
இறந்த காலத்தை விடவும்
மடிக்கணினி தோழமையானது

தலைமுறைகளுக்கு நடுவே
தற்காலிகப் பாலங்கள்
வணிகப் பரிமாற்றங்களுக்கு
வசதிப் படி ஊடகங்கள்
முக்காலங்களை
இருமையான உலகை
பலூன்களாகவோ
கட்டுமானங்களாகவோ
எழுப்பிப் பின் 
தகர்த்து
கண்ணிகள் இல்லாத
சங்கிலியின் வலிமை காட்டும்

தொடுகைக்கு அப்பாற்பட்டு
காணப்படுவதான
சமூக தளம்
வலைப்பதாய்
விரிவதுவாய்
தனிமைச் சிறைத் தாளுமாய்

சாவிகள்
கடவுச் சொற்கள்
காக்கும் கோட்டையின்
மாய அகழிகள்
தென்படும்
மறையும்
நீ தாண்டினால்
அது விபத்தே

Series Navigation