விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்

விவேக் ஷங்கர், ஒரு நல்ல எழுத்தாளராக, மறைந்த நடிகர் கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டு, பரிமளித்தவர். கோபாலகிருஷ்ணன் இருந்தவரை, அவரைச் சார்ந்தே இருந்தார். 30 நாளும் நாடகம் என்று, அவர் எழுதிய ஒரு நாடகத்தை, கோபாலகிருஷ்ணன் நாரத கான சபா மினி ஹாலில் நடத்தியும் காட்டினார். என்ன! கூட்டம் தான் இல்லை. ஷ்ரத்தாவின் முதல் நாடகமான தனுஷ்கோடியும் இவர் எழுதியதுதான். பரவலாக வரவேற்பு பெற்ற நாடகம் அது.
பிரய்த்னா என்னும் அவரது நாடகக் குழு சார்பில் இன்று ( 23.2.2012) நாரத கான சபாவில் அரங்கேறிய நாடகம் ‘ தொடரும் .. ‘ உழைப்புத் திருட்டு அல்லது ஆங்கிலத் தில் பிளேகியேரிஸம் எனப்படும் நடப்பைப் பற்றிச் சொல்லும் கதை.
அர்ஜுன் வைத்யா மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர். அவரிடம் தன் ஆத்மார்த்தமான கதையை திரைக்கதையாக்கிக் கொடுக்கிறான் பெல்லி சதீஷ். கதை மிக நன்றாக இருக்கிறது. ஆனால் சதீஷ் விபத்தில் காலமாகிறான். உரிமை கொண்டாட யாரும் இல்லை என்பதால், அர்ஜுன் அதைத் தன் கதையென்றே சொல்லி, படமும் எடுத்து, வெற்றியும் பெற்று விடுகிறார். அடுத்த படத்துக்கான கதை விவாதத்திற்கு ஊட்டி அருகே ஒரு பகுதிக்குப் போகிறார்கள். அங்கு எந்தத் தொடர் பும் இல்லை. செல்போன் கூட சிக்னல் இல்லாமல் இருக்கும் இடம். தங்கும் இடத்தில் அய்யா என்கிற பெரியவர் குழுவிற்கு உதவிகள் செய்கிறார். உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் பழனியுடன் அர்ஜுன் அங்கு தங்குகிறான். அவனைத் தேடி அனன்யா என்கிற புதுமுகம் வருகிறாள். அவள் சில படங்களில் தங்கைப் பாத்திரத்தில் நடித்திருப்பவள். இரவு சதீஷின் ஆவி அர்ஜுனைப் பயமுறுத்துகிறது. ஓர் இரவு அனன்யாவிடம் தன் காதலைச் சொல்கிறார் அர்ஜுன். ஆனால் சதீஷின் ஆவி அனன்யாவின் உள்புகுந்து அவரை பயமுறுத்துகிறது. மற்றொரு இரவு அது கிருஷ்ணா உடம்புக்குள்ளும் புகுந்து அர்ஜுனை மிரட்டி, சதீஷை ஏமாற்றிய உண்மையை அவர் கைப்பட எழுதச் சொல்கிறது. எழுதிய காகிதத்தை அதற்கப்புறம் காணவில்லை. வெளியே செல்வதாகச் சொல்லிப் போன அர்ஜுன், திரும்பி வரும்போது அவருக்கு உண்மை தெரிகிறது. கிருஷ்ணா சதீஷின் நண்பன். சதீஷின் கதையை அர்ஜுன் திருடியதற்கு பழி வாங்கவும், அவர் வாயாலேயே உண்மையை உலகுக்குச் சொல்லவும் அனன்யாவும், பழனியும், கிருஷ்ணாவும் போட்ட நாடகம்தான் பேய் நடமாட்டம். சதீஷின் அப்பாதான் அய்யா என்கிற பெரியவர். அவன் வாக்குமூலமாக எழுதிய கடிதம் அதற்குள் சென்னை போய், பத்திரிக்கைக்கு போய் விடுகிறது. தடுக்க முடியவில்லை அர்ஜுனால். எல்லோரும் அவரை விட்டு விலகி விடுகிறார்கள். தனியாக இருக்கும் அர்ஜுனிடம் மறுபடியும் சதீஷின் ஆவி வருகிறது. பயத்தில் ஓடும் அவர் மலையில் இருந்து விழுந்து செத்துப் போகிறார்.
நாடகத்தில் மிகவும் ரசிக்கத்தக்க அம்சம் ஊட்டி மலையில் அர்ஜுன் தங்கும் காட்டேஜ். முழுவதும் மூங்கில்களால் ஆன செட். பெரிய சாளரத்தின் வழியே தெரியும் மலைப்பகுதி. இரவில் மெல்ல எழும்பும் நிலவு. சமீப காலமாக மேடை நாடகங்களுக்கு செட் போடுவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். பாராட்ட வேண்டிய மாற்றம். பளிச் வசனங்கள் எல்லாம் இல்லை. கதை ஒரே இடத்தைச் சுற்றி வருகிறது. பெரிய திருப்பங்களும் இல்லை. ஆனாலும் இதை ஹாரர் திரில்லர் வகையாகக் கொடுக்க நினைத்திருக்கிறார்கள். காட்சிகளில் அது எதுவும் வெளிப்படவில்லை. நடித்த நடிக நடிகையரைக் குறை சொல்லமுடியாது. அதிலும் அர்ஜுனாக நடித்திருக்கும் தொலைக்காட்சி நடிகர் அப்சர், பல உணர்ச்சிகளை அனாயசமாகக் காட்டுகிறார். இன்னொரு விசயம். குறுக்கும் நெடுக்குமாக நடப்பதுதான் மூவ்மெண்ட் என்கிற கான்செப்டிலிருந்து, தமிழ் மேடை நாடகம் மாறவே மாறாது போலிருக்கிறது. எல்லா பாத்திரங்களும் மேடையைச் சுற்றி நடந்து கொண்டே இருக்கிறார்கள். சுஜாதா சொன்னதுபோல், மேடையை முழுமையாக பயன்படுத்துபவர் யாரும் இல்லை. பூர்ணத்தின் ‘ மாமா விஜயம் ‘ என்கிற சுஜாதாவின் நாடகத்தில் மேடையில் இருக்கும் ஊஞ்சல் கூட ஒரு கதாபாத்திரம்.
முன்பெல்லாம் வயதானவர் பாத்திரம் என்றால் ஒரு கண்ணாடி போட்டு விடுவார்கள். அது வெறும் பிரேமாகத்தான் இருக்கும். சமயத்தில் சோகக் காட்சியிலோ அல்லது கண் உறுத்தினாலோ நடிக்கும் நடிகர் அனிச்சையாக விரலை பிரேமுக்கு வெளியிலிருந்து நுழைத்து கண்ணைக் கசக்குவார். பார்வையாளர்கள் சிரிப்பார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை. நடிப்பவர்கள் எல்லாருமே விஆர்எஸ். கண்ணாடியுடனே நடிக்க வருகிறார்கள். அதனால் இந்த கண் கசக்கல் அபத்தம் எல்லாம் நிகழ்வதில்லை. ஆனாலும் அர்ஜுன் வாசிக்கும் கிடாரில் தந்திகள் இல்லை. ஸ்ட்ரம்மர் தகடு கூட இல்லாமல் கையாலே வாசிக்கிறார். அதற்கு பிஜிஎம் வேறு.
மேடை நாடகத்துக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. சில குழுக்களுக்கு போஷகர்கள் இருக்கிறார்கள். ஏதோ ஒடுகிறது. இப்போதெல்லாம் சென்னைக்கு மிக அருகில் என்று, லே அவுட் போட்டவர்களெல்லாம், வாங்கியவர்களுக்கு ஓசியாக டிக்கெட் கொடுத்து, நாடகம் பார்க்க அழைத்து வருகிறார்கள். அதற்குப் பதிலாக லே அவுட் விளம்பரங்களில் நாடக நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படித்தான் வருகிறது கூட்டம்.
விவேக் ஷங்கரிடம் ஏதோ எதிர்பார்த்து சுமாரான கூட்டம் வந்திருந்தது. பின்னால் இருக்கையிலிருந்து ஒருவர் ‘ இண்டர்வெல் விட்டா போயிடலாம் ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தார். விட்டால் போய் விடுவார்கள் என்று தெரிந்து விட்டது போலிருக்கிறது. இடைவேளை இல்லாமல் மொத்த நாடகத்தையும் முடித்து விட்டார் விவேக் ஷங்கர்.
#

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1s. பாலனின் ‘ உடும்பன் ‘