ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

This entry is part 6 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011


இரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில்.

 

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிகைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிகைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப்  பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம்.  ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோக மித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம்.  ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில் தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப் படுகிறது” என்று ந.முத்துசாமி தனக்கு சௌகரியத்துக்கு  ஒரு புதியதும் வேடிக்கையானதுமான  சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence, when they should protest, makes cowards of men” என்று  Abraham Lincoln. சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்துக்கு  தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.

 

அப்போது அதே சதங்கை என்ற சிறுபத்திரிகையில் பார்ட்டி என்றும் ஒரு கதை வெளிவந்தது. அந்தக் கதை இப்பொது கையிலிருக்கும் தொகுப்பில் சேர்ந்திருக்கிறது. 1973 சதங்கை தீபாவளி மலர் கதை 2010-ல் தான் மற்ற கதைகளோடு புத்தக வடிவம் பெற்றுள்ளது. கடைசியாக சிந்துஜா எழுதிய  அயோக்கியர் என்ற கதை மேகலா மார்ச் 1980 என்பதை இத்தொகுப்பில் பார்க்கிறேன். முதல் கதை கணையாழியில் 1971-ல் வெளிவந்தது  1971 லிருந்து 1980 வரையில் உள்ள காலத்தில் எழுதப்பட்ட சுமார் 18 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

 

அதற்குப் பின் முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. முதலில் நான் அறிந்த, கலாப்ரியா, அசோகமித்திரன், முத்துசாமியை யெல்லாம் கலாய்த்து, அவர் எழுதியபோதெல்லாம் சிலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு திகிலையும் தந்த ஸிந்துஜாவைப் பின்னர் நாம் காணவில்லை. அந்த ஸிந்துஜாவுக்கு சிறுபத்திரிகைகளில்தான் இடம் இருந்திருக்க முடியும். ஆனால் கதைகள் எழுதிய ஸிந்துஜா  கணயாழி, சதங்கை என்று மாத்திரமல்ல, கலைமகள், தினமணிகதிர், விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வரவேற்புப் பெற்றவர்.

 

ஆக இரு தரப்புகளிலும் அவர் வரவேற்கத் தக்கவராகவே இருந்திருக்கிறார். அவர் கதைகளில்  சரளமாக கதை சொல்லும் நடை கைவந்திருப்பது தெரிகிறது. அந்த சரளம் அவர் தனக்கு பழக்கமான, தெரிந்த சரளமாகச் சொல்லத் தெரிந்த உலகையும் அனுபவங்களையும் தான் அவர் கதைகளில் பார்க்கிறோம். உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். பெரும் வர்த்தக நிறுவனங்களில், வேலை செய்பவர்கள்.  பெரும் அரசு அதிகாரிகளுடன் உறவு வேண்டி, உறவு கிடைத்து பழகுகிறவர்கள். அலுவலக நேரம் முடிந்ததும் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள். மது, மாது எல்லாம் எவ்வித சம்பிரதாய தடைகளும் அற்ற உலகில் வாழ்பவர்கள். மரபு சார்ந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக அவர்களைக் கஷ்டப்படுத்துவ தில்லை. இந்த உலகில் பாவனைகள், சாமர்த்தியமான பேச்சுக்கள், மேல்தட்டு வர்க்க நாகரீக ஆசைகள் எல்லாம் உண்டு.

 

வெகு அநாயாசமாக அந்த உலகை, அந்த உலகின் மனிதர்களை, நம் முன் நிறுத்திவிடுகிறார் ஸிந்துஜா.. இவர்கள் புத்திசாலித்தனமாகப் பேசக் கற்றுக்கொண்டவர்கள். பேசத் தெரிந்தவர்கள். அது மாலை நேரக் கேளிக்கைகளில் சகஜமாக உறவாட, நாகரீகமாக கேலிப் புன்னகை செய்ய, காலை வாற எல்லாம் பயன் படும். இந்த புத்திசாலிப் பேச்சும் சாமர்த்தியமும் இல்லையெனில் பார்ட்டீயிங்  அவ்வளவாக கலகலக்காது. சப்பென்று போகும். அதற்கல்ல இந்த மாலை நேர சந்திப்புகள்.

 

“யாரோ கூப்பிட்டதால் காமினி எழுந்து சென்றாள். ஸ்டெல்லா வேணுவைப் பார்த்து கண் சிமிட்டினாள். அந்த சிமிட்டலில் வம்புக்கு இழுக்கும் பாவனை துள்ளிற்று.

 

“என்ன ஸ்டெல்லா,” என்று கேட்டான்.

 

வயிற்று வலியை உண்டாக்கியது யார் என்று நீ கேட்பாய்

என்று எதிர்பார்த்தேன்,” என்றாள் அவள்.

 

“வாட் டு யு மீன்?”

 

“அந்தப் பெண் பானர்ஜீயுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் அந்த ஃபில்ம் டைரக்டரின் பையனுடன். ஏக சுற்று. அவன் தான் அந்த வயிற்று வலியை………

 

இன்னொரு இடத்தில்…..

 

“பியாரேலாலுக்குக் கல்யாணம் ஆகப் போகிறது.”

 

“தனது துரதிர்ஸ்டத்தையும் சந்தோஷமாக வரவேற்கிற பிரகிருதியை இப்போது தான் நான் பார்க்கிறேன்.” என்றான் வேணு.

 

இப்படித்தான் ஏதேதோ உறவுகள். எது எதற்காகவோ உறவுகள். அதை ஒரு கேளிக்கை நேரப் பேச்சுக்கான விஷயமாக சகஜமாக எடுத்துக்கொள்வது அல்லது ஒரு கேலிப் புன்னகையோடு உதறி விடுவது சகஜமான உலகம்.

 

பெரும்பாலான கதைகளில் பேசும் பேச்சுக்கள, தமிழில் தரப் பட்டிருந்தாலும் அது தமிழில் பேசப்படவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. அது தான் மதுரையானாலும் தில்லியானாலும் பேசப்படும் மொழி.

 

கதைகள் அனைத்துமே முதலில் மதுரை, பின்னர் தில்லி, பின்னர் கடைசியாக பங்களூரில் களம் கொண்டவை. இதே வரிசையில் தான் ஸிந்துஜாவும் அந்த கால கட்டத்தில் அந்த இடங்களில் இருந்திருக்கிறார். அவர் கதைகள் சொல்லும் சூழலில் அவர் பார்வையாளராக இருந்திருக்கிறார். ஒதுங்கி நின்று வேக்கை பார்த்தும் சற்று மனம் வெறுப்புற்றும்.  ஆனால்  இச்சூழலில் உலவுகிறவர்கள் அதை சந்தோஷத்துடனும், கொஞ்சம் பெருமிதத்துடனும் அனுபவிப்பவர்கள். அவர்கள் தேர்வும் தான். அவர்கள் சாமர்த்தியப் பேச்சுக்களும், பெருமிதங்களும் மதிப்புகளும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யத்துக்காக ஸிந்துஜா சேர்த்ததல்ல. சுஜாதாவின் எழுத்திலும் இந்த புத்திசாலித்தனமும் கிண்டலும் இருக்கும். அது அவரது கேலியும் புத்திசாலித்தனமும். அதற்கான சின்னச் சின்ன வெட்டித் தெறிக்கும் உரைநடை அவரது ஆளுமையிலிருந்து பிறந்தது. ஸிந்துஜா தன் பழகிய அனுபவத்திலிருந்து உருவாக்கிக்கொண்ட நடை மிக எளிதாகவே அவருக்கு கைவந்துள்ளது. எனக்கு ஒரு நெருடல். கதைகளில் சில விஷ்யங்கள் தாமே தம்மைச் சொல்லிக் கொள்கின்றன. காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள் என்றெல்லாம் கதைத் தலைப்புகள் கொடுத்து உரக்கச் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று. அது எள்ளலாகவும் பொருள் கொள்கிறது தான். ஊனம் என்ற  ஒரு கதையில் ஊனமடைந்த பெண்ணுக்கு ஒரு செல்வாக்கு மிகுந்தவர் வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு வேலை தேடிக்கொடுத்து நல்ல நிலைக்குக் கொணர்ந்து தன் பெண்ணை அவனுக்குக் கொடுக்க. அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும் தான். ஆனால் கௌரவப் பிரசினை அவனுக்கு. அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு விருப்பம் தான். ஆனால் தான் பெற்ற உதவிக்கு பிரதியாக அல்ல. தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவளை மணப்பதாகச் சொல்கிறான். அதை அவன் உரக்க நீண்ட வசனத்தில்  சொல்வது அகிலன் கதை போலாக்குகிறது. கதை முழுதும் எழுத்து ஸிந்துஜாவினது. ஆனால் கடைசி பாராவும் முடிவும் அகிலனது. தவிர்த்திருக்கலாம்.

 

லக்ஷியங்களோ மதிப்புகளோ வேறாகிவிட்ட  ஒரு உயர்

மத்திம வகுப்பு மக்களின் வாழ்க்கைச் சூழலைத் தான் ஸிந்துஜா வின் கதை உலகம். அதன் வர்ணம் தானே வெளிப்படுத்திக் கொள்ளும்.

 

என் வருத்தம் எல்லாம் எங்கே போனார் அந்த ஸிந்துஜா? என்பது தான்.  நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்தத் திறனும் பார்வையும் சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின? ஸிந்துஜாவை நாம் தொடர்ந்து பார்க்க முடியாது போனது ஒரு இழப்புத்தான்.

 

இப்படித்தான் நல்ல திறன் காட்டுகிறவர்கள் எல்லாம் திடீரெனெ நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்கள். க.நா.சு. சிலர் எழுத்தைப் பாராட்டிஎழுதியிருப்பார். இப்போது ஒன்றிரண்டு பெயர் சொல்லக் கூட அவர்கள் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. (பி.எம் கண்ணன் என்று ஒரு பெயர் நினைவுக்கு வருகிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் சில கவிஞர்கள் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது. எனக்கும் பாராட்டத் தோன்றியது. பாராட்டி எழுதவும் செய்தேன். ஆனால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள்? சிலர் பாட்டாளி மக்கள் துயரத்திற்கும், வியட்நாம் மக்களுக்காக கண்ணீர் உகுத்தும் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும்.

தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அசோகமித்திரன் சொன்னது விஷயம் தெரிந்தும் சொல்லப் பட்டதுதான். எல்லோரும் மௌனியாக முடியுமா? முப்பது வருடங்கள் கழித்து க.நா.சு. தேடி எடுத்து பிரசுரித்திராவிட்டால் மௌனியை நாம் இழந்திருக்கக் கூடும். விட்டல் ராவ் “இந்த நூற்றாண்டுக் கதைகள் என்ற தலைப்பில் மூன்று பகுதிகளில் எல்லாரையும் தேடி எடுத்துத் தொகுந்திருந்தார். சந்தோஷமாக இருந்தது.

 

ஸிந்துஜாவுக்கும் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கும் பாவை சந்திரனுக்கும் பொதுவான ஒன்று என்று ஆரம்பித்திருந்தேன். பாவை சந்திரன் நல்ல நிலம் என்ற ஒரு நீண்ட கிட்டத்தட்ட 500 பக்க நாவலை புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது தொன்னூறுகளில் எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட நூறு வருட கால வாழ்வின் கதை. எவ்வளவு அழகாக, கலை நேர்த்தியுடன் எழுதப்பட்ட முதிர்ந்த எழுத்து என்று நான் வியந்திருக்கிறேன். அத்தகைய முதிர்ச்சிக்கு முன்னும் பின்னுமான செய்தி எனக்கு ஏதும் இல்லை. குங்குமம் பத்திர்க்கைக்கு பொறுப்பு ஏற்றிருந்த போது அதை வெகுஜனபத்திர்கை என்ற தளத்திலிருந்த் உயர்த்த முயன்றிருக்கிறார். குங்குமத்தில் க.நா.சு. தொடர்ந்து எழுதியிருக்கிறார் என்றால் பலர் ஆச்சரியப்படக் கூடும்.

நல்ல நிலம் நாவலாக வெளிவந்தது அதைப் மனமாரப் பாராட்டி எழுதியிருக்கிறேன்., தஞ்சை விவசாயகுடும்பத்தின் ஒரு கால காட்டம் நம் முன் விரியும். சுகமான எழுத்து. அவர் மறக்கப் படக்கூடியவர் அல்ல.

 

எங்கே போனார் அந்த பாவை சந்திரன்.? தன்னைப் போலவே இன்னொருவரான  ஸிந்துஜாவை வெளியிட்டது பொருத்தம் தான். ஒருவரை ஒருவர் நமக்கு நினைவு படுத்துகிறார்கள்.

 

 

ஸிந்துஜா சிறுகதைகள்: வெளியீடு: நன்னூல் அகம்   A -8, 29, தெற்கு கால்வாய்க் கரை சாலை, மந்தைவெளி சென்னை-28

ப.160 விலை ரூ. 70,

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)நினைவுகளின் சுவட்டில் – (74)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Comments

  1. Avatar
    P.Ayynaar says:

    Sindhujavai naan 1986 aam aandu Bangalooril santhithen.

    Piraku thodarpay illai. Eppothu inthak katturaiyai padiththavudan avarippatiya ninaivukal manathil ezukintrana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *