ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி

பீஷ்மர்

போர் நிகழ்வதற்கான காலம் கனிந்தது. யுத்த காட்சிகள் மட்டும் மகாபாரதத்தில் நான்கு பகுதிகளாக விவரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பர்வம். நான்கு போர்த் தளபதிகளின் தலைமையில் நடைபெறும் யுத்தம் என்பதால் ஒவ்வொரு பகுதியும் பீஷ்மப் பர்வம் , த்ரோணப் பர்வம் , கர்ணப் பர்வம் மற்றும் சல்யப் பர்வம் என்றழைக்கப் படுகின்றது.

இந்த யுத்த பரவப் பகுதிகள் மகாபாரதத்தில் சற்று ரசனைக் குறைவாக எழுதப் பட்டப் பகுதிகள் எனலாம்.கூறியவற்றைக் கூறல்,மிகைபடுத்திக் கூறல்,இயற்கைக்குப் புறம்பான விவரணைகள்,தேவையற்ற மிக நீளமான வருணனைகள், மாற்றி மாற்றி விவரித்தல் என்று இந்தப் பகுதிகள் முழுவதுமே அயர்ச்சி ஊட்டுபவையாக உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மூல மகாபாரதத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.அந்த மூலப் பகுதியைமிகைப்படுத்தப் பட்டப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுப்பது கடினம்.முட்புதரிளிருந்து நல்ல மலரினைப் பறிப்பது போன்ற சமாச்சாரம்.என்னதான் கடினமான செயலாக இருப்பினும் என்னுடைய நோக்கம் இத்தகைய புனைவுகளிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி உண்மையான தகவல்கள் கிடைக்கின்றதா என்பதே ஆகும்.

பீஷ்மப் பர்வம் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எதுவும் விஸ்தரித்துக் கூறாமல் போகிற போக்கில் சொல்லி விட்டு இறுதியில் கீதையில் கொண்டு விட்டு விடுகிறது. கீதை பீஷ்மப் பர்வத்தின் முக்கியப் பகுதி. கீதை ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை வெளிச்சம் போட்டுக் காட்டும் பகுதி. கீதையில் தாம் உரைத்த மதத்தைப் பரப்புவதே கிருஷ்ணரின் நோக்கம். கீதை மற்ற எல்லா தோற்றுவாய்களையும் ( source) விட முக்கியமான தோற்றுவாயாக உள்ளது.

நான் ஏற்கனவே என்னுடைய தர்மதாத்வம் என்ற நூலில் கீதையைப் பற்றியக் குறிப்புகளை எழுதி விட்டதால் இங்கே மீண்டும் அதைப் பற்றி எழுதப் போவதில்லை.

மகாபாரதத்தில் கீதை சொல்லி முடித்த உடனேயே பீஷ்மரின் வீழ்ச்சி இடம் பெறுகிறது. யுத்தமானது பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்தான் நிஜமாகத் தொடங்குகிறது எனலாம். இந்தப் போரில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஒரு வெறும் தேரோட்டி மட்டும்தான்.

தேரோட்டிகள் அந்தக் காலத்தில் பாவப்பட்ட ஜன்மங்களாகக் கருதப் பட்டனர். மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள யுத்தம் இரண்டு தேர் வீரர்களுக்கு இடையில் நிகழும் யுத்தமாகவே கூறப் பட்டுள்ளது. போர்வீரர்கள் எதிரிகளின் தேரை அழித்துக் குதிரைகளை வீழ்த்தி எதிரியைத் துன்பத்திற்கு ஆளாக்குவார்கள். தேரோட்டிகளுக்குப் போரில் நேரடியான தொடர்பு எதுவும் கிடையாது என்றாலும் அவர்களும் யுத்தத்தில் கொல்லப் படுவது தவிர்க்க முடியாததாகவே இருந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரும்  இப்படி ஒரு கவன ஈர்ப்பிலாத பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

பதினெட்டு நாள் போரிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தாக்கப் படவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் எதிரிகளின் அம்புகள் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக் கொள்ளவே அவர் யுத்தம் முடிந்ததும் யுத்த பாசறைக்குத் திரும்புகிறார். மற்றத் தேர்ப் பாகர்கள் எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அளவிற்குப் போர் நுட்பம் தரிந்தவர்கள் கிடையாது. அவர்கள் அனைவருமே அதிகம் பயிற்சி பெறாத வைசியக் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் தற்காப்பு அறிந்தவர் என்பதோடு கடைமைக்குக் கட்டுப்பட்டவர் என்பதால் அத்தனை அம்புகளையும் தன் உடம்பில் தாங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் மாபாரத யுத்தம் முடியும் வரையில் ஆயுதம் தாங்க மாட்டேன் என்று வாக்களித்திருந்தார். இருப்பினும்போர் நடுவில் அவர் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. அஃது எதனால் என்பதனைப் பார்ப்போம்.

பீஷ்மர் துரியோதணனின் படைக்குத் தலைமைத் தாங்கி தனக்கு நிகர் எவரும் இல்லை என்று மிகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். அவருக்குச் சரிக்குச் சமமமாகப் போரிட அர்ஜுனன் ஒருவனால் மட்டுமே முடியும்.என்ற போதிலும் அவரை எதிர்க்கும் சமயங்களில் அர்ஜுனன் தனது முழுத் திறமையையும் காட்டவில்லை. இதற்குக் காரணம் உள்ளது. பீஷ்மர் அவனுடைய தாத்தா-பிதா மகர். அந்தப் பாண்டவர்கள் அனைவரையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல முன்னுக்குக் கொண்டு வந்தவர். துரியோதனனின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் அவர் பாண்டவர்களை ஏதோ எதிரியைப் போலத் தாக்கினார். இந்த ஒரு செயலுக்காகவே அவனுக்கு பீஷ்மரை எதிர்க்க உரிமை உள்ளது. இருப்பினும் பழைய நினைவுகள் அவனுக்குக் கிளர்ந்தெழ அவரை எதிர்க்க முடியாமல் நிற்கிறான். அவரை கோரமாகத் தாக்காமல் மெதுவாகத் தாக்கினான். அவரைத் தனது பாணங்கள் அதிகம் தாக்கி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான். ஆனால் பீஷ்மர் அப்படி இல்லாமல் அர்ஜுனனின் இந்தத் தயக்கத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாண்டவர்களின் படை வீர்கள் பலரையும் கொன்று குவிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் இது தொடரவே பொறுக்க முடியாமல் போகும் ஸ்ரீ கிருஷ்ணர் சுதர்சனச் சக்கரத்தை கையில் ஏந்தி ஆவேசத்துடன் பீஷ்மரைக் கொல்ல தேரை விட்டு இறங்கி அவரை நோக்கி ஓடுகிறார்.

இதனைப் பார்த்ததும் பரவசமடைந்த  கிருஷ்ண பக்தரான பீஷ்மர்த் தன்னை ஆயுதத்தால் அழித்து விடும்படி கூறிக் கொண்டே தேரிலிருந்து இறங்கினார்.

அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து அவரை ஒரு மாதிரி சமாதானம் செய்து இனி வரும் நாட்களில் தான் தயங்காது , தீவிரத்துடன் போரிடுவதாக  உறுதி மொழியினை அளித்து அவரை மீண்டும் அழைத்து வருகிறான்.

மேற்சொன்ன நிகழ்ச்சி மகாபாரதத்தில் இரண்டு தடவை மீண்டும் மீண்டும் கூறப் படுகிறது. யுத்தம் தொடங்கிய மூன்றாவது நாளில் ஒரு முறையும், ஒன்பதாம் நாளில் ஒரு முறையும். ஒரே விதமான பாக்களின் கட்டமைப்பே இரண்டு இடங்களிலும் வருகின்றன. பாக்களுக்கு நகல் எடுத்தவர் தவறுதலாக இரண்டு முறை நகல் எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகள் உள்ளது. ஏன் எனில் வடமொழியில் கூறியது கூறல் என்பது அடிக்கடி நிகழும் தன்மையாகும்.

இந்தப் பாணியை வைத்துப் பார்க்கும்பொழுது இந்தக் காட்சி மகாபாரதத்தின் மூல நூலைச் சேர்ந்தது என்று உணரலாம். இங்கே காணப் படும் நடையழகும் கவியழகும் மிகத் தரமாக உள்ளது. விவரித்துக் கூறுவதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. இந்த நம்பகத்தன்மையின் த்வனி மகாபாரதம் முழுவதற்கும் பொருந்துவதாக உள்ளது. கிருஷ்ண பக்தர்கள் இந்த இடத்திற்கு அளிக்கும் விளக்கம் கூட ஏற்றுக் கொள்ளும்படியாகவே உள்ளது. பீஷ்மர் கிருஷ்ண பக்தர்.  குருக்ஷேத்திர யுத்தத்தில் நேரிடையாகப் பங்கேற்க முடியாதென்ற                        ஸ்ரீ கிருஷ்ணருடைய சபதத்தைத்  தான் முறியடிக்கப் போவதாக பீஷ்மர் யுத்த ஆரம்பத்திலேயே சூளுரைக்கிறார். தன் பக்தன் எக்காரணம் கொண்டும் தனது சபதத்தில் தோற்கக் கூடாது என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் போர்க் களத்தில் ஆயுதம் ஏந்திச் சென்றார் என்று விவர்ப்பார்கள்.

இருப்பினும் இதில் உள்ள உண்மையின்மை காரணமாக என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மூல நூலில் இது போன்ற ஒரு சபதத்தை பீஷ்மர் மேற்கொண்டார் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் தன் சபதத்தை எந்த இடத்திலும் முறியடிக்கவில்லை. அவருடைய சபதத்தின் சாரம் அவர் யுத்தத்தில் ஆயுதம் எடுப்பதில்லை என்பதாகும். துரியோதனன் அர்ஜுனன் இருவரிடமும் பாரபட்சமின்றி இருப்பதற்காக அர்ஜுனனுக்குத் துணையாகத் தான் ஒருவர் மட்டும் உடன் இருப்பதாகவும் கூறி விட்டு துரியோதனனுக்குத் தன்னுடைய கோடி வீர்கள் கொண்ட நாரயாணப் படையையும் அளிக்கிறார். இதன் மூலம் தான் போரில் பங்குகொள்வதில்லை என்ற உறுதிமொழியைக் காப்பாற்றவே செய்கிறார். கையில் சுதர்சனச் சக்கரம் ஏந்தி அவர் போர்க்களத்தில் பீஷ்மரைத் துரத்திச் செல்வது அர்ஜுனனின் மனதை மாற்றி அவனைப் போர்க்களத்தில் தன் முழுத் திறமையையும் வெளிப் படுத்துவதற்காகத்தான்.

ஒன்பது நாள் யுத்தம் முடிந்த பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பாசறையில் பாண்டவர்களிடம் தான் பீஷ்மரைக் கொல்லப் போவதாகச் சொல்லுவதும் இதனால்தான். பீஷ்மரை எவ்விதத்திலும் அழிக்க முடியாது என்பதை அறிய வரும் தருமன் ஒன்பதாம் நாள் இரவில் பீஷ்மரை அழிப்பதற்கான உபாயங்களைக் கண்டறிய ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறான். பாண்டவர்களும் அவர்தம் நலவிரும்பிகளும் கலந்து கொள்ளும் கூட்டம் அது. ஸ்ரீ கிருஷ்ணர் அப்பொழுதுதான் தனக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டால் தானே பீஷ்மரை கொன்று விடுவதாகக் கூறுகிறார். அப்படி இல்லை என்றால் அர்ஜுனன் தனக்கிருக்கும் திறமை காரணமாகக் கண்டிப்பாக பீஷ்மரைக் கொல்வான் என்கிறார்.

பீஷ்மரைக் கொல்ல முன்வந்த ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சினை யுதிஷ்டிரன் ஏற்க மறுக்கிறான். ” ஜனார்த்னரே! என் கெளரவம் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக உம்முடைய வாக்குத் தவறவேண்டும் என்பதில்லை. நீர் ஏற்கனவே கொடுத்த வாக்கின்படி போரில் நேரிடையாகக் கலந்து கொள்ளாமல் எங்களுக்கு உதவினால் போதும் “ என்கிறான். பிறகு அவர்கள் ஆலோசனையின் முடிவில் பீஷ்மரை அவருடைய கூடாரத்திலேயே போய்ச் சந்தித்து அவரைக் கொல்வதற்கான உபாயத்தை அவரிடமே கேட்கின்றனர். அதன்படி அர்ஜுனன் அவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிப் பெறுகிறான்.அவருடைய உபாயத்தின்படி– சில போர்த் தந்திர முறைகளாக இருக்கலாம்– அர்ஜுனன் பீஷ்மரை நேருக்கு நேராகப் போரிட்டே ஜெயித்திருக்க வேண்டும். இரண்டாம்தர இடைச் செருகர்களின் இட்டுக் கட்டப் பட்டக் கதைகளைப் போல அவரை மறைந்திருந்து தாக்கினான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

 

Series Navigationசீதாயணம் நாடகப் படக்கதை – 18வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”