ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-6 பகுதி-2 மதுராவிலிருந்து துவாரகை நோக்கி கம்ச வதம்

அத்தியாயம்-6

பகுதி-2

மதுராவிலிருந்து துவாரகை நோக்கி

கம்ச வதம்

Shrimad Bhagavatam1ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் பிருந்தாவனத்தில் இரண்டு வலிமையுள்ள வாலிபர்களாக வளர்ந்து வரும் செய்தியும், பூதனை மற்றும் அரிஷ்டன்  ஆகிய தனது விசுவாசமான ஊழியர்கள் இவர்கள் இருவரால் அழிக்கப் பட்டனர் என்ற தகவலும் கம்சனை சென்றடைகிறது. தேவரிஷியான நாரதர் கம்சனிடம் சென்று கிருஷ்ணனும் பலராமரும் வசுதேவருடைய பிள்ளைகள் என்ற உண்மையை சொல்லி விடுகிறார்.மேலும் எட்டாவதாக பிறந்த சிசு வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்ததல்ல என்றும் அந்த சிசு நந்தகோபருக்கும் யசோதைக்கும் பிறந்தது என்றும் கூறி விடுகிறார்.வசுதேவரே குழந்தைகளை மாற்றி விட்டார் என்பதையும் ஸ்ரீ கிருஷ்ணர் பத்திரமாக நந்தகோபரிடம் வளர்வதையும் சொல்லி விடுகிறார்.

இந்த உண்மை கம்சனை கொதிப்புற செய்கின்றன.கம்சன் வசுதேவரை சபிக்கிறான்.அவரைக் கொல்ல முடிவு செய்கிறான்.அக்ரூரரை அனுப்பி ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமனையும் துவாரகைக்கு அழைத்து வரும்படி கட்டளை இடுகிறான்.தன்னிடமுள்ள மல்லர்களை திரட்டி தனுர் முகம் என்கின்ற வேள்வியை தொடங்குகிறான்.அந்த வேள்வியினால்  மல்லர்களை பயன்படுத்தி அவர்களை கொன்று விட முடிவு செய்கிறான்.

இதற்கு நடுவில் அக்ரூரர் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் அழைத்துக் கொண்டு மதுரா நகருக்குள் நுழைகிறான். மதுரையை நோக்கி செல்லும் சமயம் ஒரு அசாதாரண நிகழ்ச்சி நடக்கிறது.கூன் முதுகுடன் கூடிய குரூபியான பெண்ணின் கூன் முதுகை ஸ்ரீ கிருஷ்ணர் தொட்டதும் அவள் பேரழகியாக மாறுகிறாள்.

இந்த அற்புத நிகழ்ச்சி பாகவதத்திலும் வைவத்ர புராணத்திலும் மேலும் மெருகூட்டப்பட்டு விவரிக்கப் படுகிறது.விஷ்ணு புராணத்தில் வெறும் தகவல் கூறும் விதமாகவே இந்த நிகழ்ச்சி கூறப் பட்டுள்ளது.இந்த விஷயம் என்றில்லை பல்வேறு தகவல்களை கூறும்பொழுதும் ஸ்ரீமத் பாகவதம் நம்ப முடியாத அதீத கற்பனை புனைவுகளை அளிக்கின்றது.இதுவரையில் இந்த குறிப்புகளை கவனத்தில் எடுத்துக் கொண்டதன் காரணம் வேறு எந்த நூலிலும் ஸ்ரீ கிருஷ்ணரின் பால பருவ நிகழ்ச்சிகள் மிகைப் படுத்தப் பட்டு கூறப் பட்டிருந்தாலும் இவ்வளவு விரிவாக எடுத்துரைக்கப் படவில்லை.

கம்சனின் ராஜ்ஜியத்திற்குள் கிருஷ்ணரும் பலராமனும் நுழைந்த பின்னர் அவர்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும் இடத்திற்கு அழைத்து செல்லப் படுகின்றனர். வழியில் இருவரையும் கொல்வதற்கு மதம் பிடித்த குவலயாபீடம் என்ற யானையை எதிரில் அனுப்புகின்றனர்.இருவரும் அந்த யானைக் கொள்கின்றனர்.சனுரன் முஷ்டிகன் என்ற இரண்டு மல்யுத்த வீரர்களைக் கொல்கின்றனர்.இதனைக் கண்ணுற்ற  கம்சன் நந்தகோபரை சிறையில் அடைக்கவும் வசுதேவரைக் கொல்லவும் உத்திரவு இடுகிறான்.மல்யுத்த மைதானத்தின் அருகில் அமைக்கப் பெற்றிருந்த மேடையின்மேல் ஏறினான். அந்த மேடையின் மேல்தான் கம்சனும் அவன் அமைச்சர்களும் மல்யுத்தத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.கம்சனை கீழே தள்ளி அவன் மேல் நெருப்பென நின்று கிருஷ்ணர் கம்சனைக் கொல்கிறார். பிறகு அங்கிருந்த பெரியோர்களுக்கு தக்க மரியாதை செய்கிறார். பிறகு கம்சனின் தந்தையும் தனது பாட்டனுமான உக்கிரசேன மகாராஜாவுக்கு மகுடம் சூட்டுகிறார்.

ஹரிவம்சம் மற்றும் அனைத்து புராணங்களிலும் கம்ச வதம் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. கம்சனின் இறப்பை ஒரு வரலாற்று அடிப்படையில் நம்மால் மறக்க முடியாது என்றாலும் அது தொடர்புடைய தகவல்கள் எல்லாமே அதீத கற்பனைப் புனைவுகளாக உள்ளதால் அவற்றை முற்றிலும் ஒதிக்கி வேண்டும். நாரதர் கம்சனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் உயிருடன் இருப்பதை கூறுவதும், அசரீரியாக தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனின் மரணம் உறுதி என்பதும் சற்று கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும்.

மேலும் இரண்டு ஆயர்குல வாலிபர்கள் ஒரு சாம்ராஜிய மன்னரை அவ்வளவு எளிதில் கொன்றிருக்க வாய்ப்பில்லை.

இனி நாம் கம்ச வதம் குறித்து மகாபாரதம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். மகாபாரதத்தில் சபா பருவத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தன இளமைக் கால நிகழ்ச்சிகளை யுதிஷ்டிரரிடம் பின் வருமாறு கூறுகிறார். “…… பிறகு யாதவர்களைப் போரிட்டுக் கொன்ற கம்சன் ப்ரகுத்திரனின் இரண்டு புதல்விகளை மணம் புரிகிறான்.பிறகு அந்த அரக்கன் எங்கள் இனத் தலைவனாக முடி சூட்டிக் கொள்கிறான். போஜ மணார்களின் முன்னோடிகளான சிலர் கம்சனின் கொடுமைகளைக் காண சகிக்காமல் எனைக் காப்பாற்ற வேண்டி என்னை வேறு இடத்திற்கு புலம் பெயர செய்கின்றனர்.அக்க்ரூரரின் மகளான அக்ரூராவை கம்சன் மணம் புரிந்து கொண்டதும் நானும் பலராமனும் கம்சனை வாதம் செய்தோம்.”

மேற்கண்ட பத்தியில் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் ப்ருந்தவனத்திலிருந்து கிளம்பி மதுராவிற்கு வந்து கம்சனைக் கொன்றதாக சொல்லப் படவில்லை.இருப்பினும் அவர்கள் ஏற்கனவே மதுராவில் இருந்ததாகவும் யாதவ இனப் பெரியவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனக் கூறியதால் மதுராவை விட்டு அவர்கள் புலம் பெயர்ந்து சென்றதாகவும் ஒரு  சிறு குறிப்பு மட்டும் கூறப் பட்டுள்ளது

ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றிலிருந்து பாலராமனைத் தவிர வேறு யாதவர்க ஒருவரும் கம்சனை கொல்ல உதவி புரிந்ததாக தெரியவில்லை.ஒரு வேளை அந்த துவந்த யுத்தத்தில் மற்ற யாதவர்கள் கம்சனின் பக்கம் சாராமல் இருந்திருக்கலாம்.கம்சனின் அட்டகாசத்தில் ஓய்ந்து போயிருந்த யாதவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமனின் சாகசங்களை கண்டு களிப்புற்று அவர்கள் தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருக்கலாம். இதற்கு மேல் அந்தப் பகுதியில் நாம் தெரிந்து கொள்ள வேறு வரலாற்று உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

நமக்குக் கிடைக்கும் தகவல் என்னவெனில் பலராமனின் உதவியுடன் கம்சனைக் கொன்ற கிருஷ்ணனின் தலைமையின் கீழ் ஒன்று கூடும் யாதவர்கள் கம்சனுக்குப் பிறகு அவனால் சிறையில் அடைக்கப் பட்டிருந்த வசுதேவரின் தந்தை உக்கிர சேனனுக்கு மீண்டும் மணி முடி சூட்டினார்கள் என்பதுதான்.

இங்கு நமக்கு முக்கியமாக படும் விஷயம் என்னவெனில் எவருக்கு உரியதோ அந்த சிம்மாசனம் அந்த உக்கிர சேனனுக்கே திருப்பி அளிக்கப் பட்டது. மற்ற யாதவர்களைக் காட்டிலும் பலசாலியாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஒரு தர்மாத்மா என்பதால் அந்த சிம்மாசனத்தை அவர் கோரவில்லை. இனிவரும் அத்தியாயங்களில் யாதவ குலத்திற்கு எவற்றை செய்தால் நலம் உண்டாகுமோ அத்தைகைய ஸ்ரீ கிருஷ்ண தர்மத்தை மட்டும் பார்க்க உள்ளோம். அவர் நல்ல பலசாலி:எந்த சவாலையும் எதிர் கொண்டு ஜெயிப்பவர்: நீதிமான்: தர்மத்தை நன்குணர்ந்தவர்:மற்றவர் நலன் பேணும் வல்லவர்: தன் குலம் ஓங்குவதற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்தவர்.

 

ஸ்ரீ கிருஷ்ணரின் கல்வி

புராணங்களிலிருந்து கம்சவதம் முடிந்த பின்பு  ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமனும் வாரணாசி சென்றடைந்து சாந்திபனர் என்ற ரிஷியிடம் குருகுல வாசம் இருந்து கல்வி பயின்றனர்.    64 நாட்கள் வரை  நீட்டித்த கல்வியை முடித்து குருதட்சிணை செலுத்திய பின்னர் மீண்டும் மதுரா வந்தடைந்தனர்.  ஆயுதப் பிரயோகம் குறித்து கல்வி பயின்றனர்.

சாந்திபனரிடம் பெற்ற இந்த கல்வியைத் தவிர வேறு எங்கும் அவர் கல்வி கற்றதற்கான வாய்ப்புகள் இல்லை. நந்த கோபருடன் தங்கியிருந்த நாட்களில் ஸ்ரீ கிருஷ்ணர் கல்வி பயின்றதற்கான செய்தி எதுவும் இல்லை.நந்தர் யாதவ குலத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த குலத்திற்கு வேதம் கற்று கொள்ளும் உரிமை இருந்தது.

மகாபாரத சபா பர்வத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிர்ஷ்டிரரிடம் தனது இளமைப் பிராயம் குறித்து கூறியுள்ளதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். இந்த பத்தி மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனைக் கொல்வதற்கென்று மதுராவை நோக்கி வரவில்லை என்றும், வந்த இடத்தில் நேர்ந்த துர் சம்பவங்களால் கம்சனை அழிக்க நேர்ந்தது என்றும் பார்த்தோம். சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணரை பொய்யாக தூற்றுவதன் மூலம்  தன்னைத் தானே சிறுமைப் படுத்திக் கொள்ளும் இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை கம்சனின் சோற்றை தின்று வளர்ந்தவன் என ஏசுகிறான். இதன் மூலம் கண்ணன் சிறு வயதிலேயே பிருந்தாவனத்தை விட்டு மதுராவிற்கு வந்து தன் இளமை காலத்தை கழித்திருக்கலாம் என்று கொள்வதற்கும் அர்த்தம் உள்ளது. அப்படி என்றால் பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்த லீலைகள் அனைத்தும் கற்பனைப் புனைவு என்பது உறுதியாகிறது.

மதுராவில் சாந்திபனரிடம்பெற்ற 64 நாட்கள் கல்வி பற்றிய குறிப்பைத் தவிர ஸ்ரீ கிருஷ்ணரின் படிப்பு பற்றிய குறிப்பு வேறு எதுவும் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் பகவானின் அம்சம் என்றாகும்பொழுது அவருக்கு ஏட்டு கல்வியின் அவசியம் ஏன் என்று சிலர் வாதம் புரியலாம். அப்படியானால் 64 நாட்கள் கல்வி பெற அவர் சாந்திபனரிடம் ஏன் சேரவேண்டும் என்று திருப்பி கேட்கலாம் அல்லவா?

தெய்வாம்சமா அல்லது வேறு எதுவோ தெரியவில்லை ஸ்ரீ கிருஷ்ணர் மனித தர்மத்தை கடைப் பிடித்தும் மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளை முறைப் படி செய்தும் வந்தார். இதை நாம் ஏற்கனவே பலமுறை உதாரணங்களுடன் கூறி வந்துள்ளோம். மேலும் பல உதாரணங்கள் மூலம் விளக்க உள்ளோம். திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனில் கல்வி மிகவும் அவசியம்.ஸ்ரீ கிருஷ்ணர் கல்வி கற்றார் என்பதை சாந்திபனர் என்ற ரிஷியிடம்  பெற்ற குருகுலவாசம் மூலம் அறியலாம். மேலும் அவர் வேறு சில ஆச்சாரியர்களிடமும் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணர் வேதங்களை நன்கு கற்றறிந்தவர் என்பது தெரியும்.யுதிஷ்டிரர் ராஜ சூய யாகத்தில் முதல் மரியாதை செய்வதற்காக பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ணரை தேர்வு செய்வதற்குக் காரணம் ஸ்ரீ கிருஷ்ணர் வேதங்களை நன்கு கற்றறிந்தவர் என்பதனால் என்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரின் வேத கல்வியைப் பற்றி மகாபாரதத்தில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. வேத ஞானம் அவருக்கு தானே வந்தடையவில்லை.சாந்தோக்ய உபநிஷத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆங்கிரச ரிஷியின் பாரம்பரியத்தில் வந்த கோரர் என்ற ரிஷியிடம் வேதம் பயின்றதற்கான சான்றுகள் என்னிடத்தில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்தில் உயர் கல்வியை நிறைவு செய்ய தபஸ் மேற்கொள்ள வேண்டி இருந்தது. பல ரிஷிகளும், ஆன்றோர்களும் தபஸ் மேற்கொண்டதை நாம் புராணங்கள் வாயிலாக அறியலாம்.வேத காலத்தில் உள்ள தபசுக்கும் பின்னால் நம்மால் அர்த்தம் கொள்ளப் பட்ட தபசுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. நமக்கு தெரிந்த வரையில் தபஸ் என்பது காட்டில் ஆள் அரவம் இல்லாத இடத்தி அன்ன ஆகாரமின்றி கண்களை மூடிக் கொண்டு இறைவனை த்யானிப்பது என்றே அர்த்தம். ஆனால் பரமேஸ்வரன் முதலிய கடவுள்கள் தபசு புரிந்ததாகவும் கேள்விபட்டிருக்கிறோம். எனவே தபசு என்ற வார்த்தைக்கு பழங்காலத்தில் என்னவாக இருந்தது என்று தெரியவில்லை. தபஸ் என்பது உள்ளே இயல்பாக அமைந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள மனிதன் சுயக் கட்டுப்பாட்டுடன் செய்யும் கடும் முயற்சி என்று கொள்ளலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் தபசு புரிந்ததாக மகாபாரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மகாபாரதத்தில் ஐசிக  பர்வத்தில் அசுவத்தாமன் பிரயோகித்த பிரம்மாஸ்திரம் உத்தரையின் வயிற்றில் வளர்ந்த சிசுவை நழுவி ஓட செய்வதற்கு முயற்சித்தபொழுது அதனை தடுத்து ஸ்ரீ கிருஷ்ணர் அசுவத்தாமனிடம் கர்வத்துடன் “ ஹே ! அசுவத்தாமா என் தபஸின் வலிமையை இப்பொழுது பார்.” என்று கூறுவதாக உள்ளது.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் மிக உயர்ந்த கல்வியை பெற்றிருக்க வேண்டும் என்பது வெளிச்சமாகிறது.அவருடைய செயலும், நடத்தையும் அவரை உன்னத கல்வி கற்றவராகவே  நமக்கு அடியாளம் காட்டுகிறது.ஆனால் அவரது புலமையின் தன்மையை நம்மால் ஆழ்ந்து அறிய முடியவில்லை.

 

 

Series Navigation“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’