ரசமோ ரசம்

ரசமோ ரசம்
This entry is part 24 of 29 in the series 18 நவம்பர் 2012

மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார்.  மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா.

 

குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என ரசம் டிப்ஸ் அனுப்பி இருந்தேன். அது பிரசுரமாகி இருக்கு. பொதுவா நாம சாம்பார் சாதம் , வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்ட பின்னாடி ரசம் சாதம் சாப்பிடுவோம். சிலர் ரசத்தை குடிக்கக்கூட செய்வாங்க.

 

செட்டிநாட்டு விசேஷ வைபவங்களில் இந்த ரசம் அல்லது தண்ணிக் குழம்பு/இளங்குழம்பு  அல்லது சூப் இடம் பெறும். வீட்டில் என்றால் கீரை மண்டி போன்றவை வைப்போம். முதலில் கெட்டிக் குழம்பு, பின் சாம்பார், பின் ரசம் அல்லது இளங்குழம்பு/தண்ணிக் குழம்பு இருக்கும்.

 

இந்த ரச வகையறாவில் நாம் தினம் வைக்கும் பருப்பு ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம் எலுமிச்சை ரசம், புளி ரசம், போக பைனாப்பிள் ரசம், இளநீர் ரசம், ரோஜாப்பூ ரசம், என்று வெரைட்டியாக இருக்கும்.

மைசூர் ரசம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் தேங்காய் கூட அரைத்து விடுவார்களாம். அட ஆமாங்க ஆமாம்.

மோர் ரசம் என்று மோரில் வெங்காயம், கடுகு  தாளித்து ஒரு கேரளத் தோழி கொடுத்தார். சுவையோ சுவை.அதன் பேரு மோரு கறி. காய் கறியே இல்லாமல் கறி..!

இன்னும் பருப்புருண்டை ரசம், கொள்ளு ரசம், சீரக ரசம், மல்லி ரசம் என்றெல்லாம் கூட வைப்பார்கள்.

 

காரைக்குடிப் பக்கம் இட்லிக்கு ஒரு ரசம் வைப்பார்கள். அது பச்சை ரசம் கொதிக்க வைக்க வேண்டாம். உப்புப் புளி ரசம் என்று அதன் பேர். உப்புப் புளியை ஒரு கப் அளவு கரைத்து அதில் விதை இல்லாமல் 4 வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு, கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம் போட்டு நிறைய சின்ன வெங்காயத்தை வட்ட வட்டமாக அரிந்து போடுவார்கள். இன்னும் இரண்டு இட்லி சாப்பிடலாம். இது தோசைக்கும் நன்றாக இருக்கும்.

 

சும்மா குழம்பு என்று ஒன்றும் உண்டு. அதுவும் சாதத்துக்கும் இட்லிக்கும் அருமையா இருக்கும். ஒரு கைப்பிடி சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, கடுகு பெருங்காயம், வெந்தயம் தாளித்து, ஒரு பச்சை மிளகாய், தக்காளி போட்டு உப்புப் புளித் தண்ணீர் விட்டு சாம்பார்பொடி போட்டு நுரைத்து வந்ததும் பூண்டு தட்டிப் போட்டு இறக்க வேண்டியதுதான். சாம்பார் பொடியில் மிளகாய் தூக்கலாய் இருக்கும். சிவப்புக் கலரில் இந்தக் குழம்பு ரொம்ப ருசியாகவும் கவர்ச்சியாகவும் (! ) இருக்கும்.

 

ஆங். முக்கியமா சொல்ல மறந்துட்டேன், ஹெர்பல் ரசம் நிறைய இருக்குங்க. அது வெற்றிலை, வல்லாரை, தூதுவளை , துளசி ரசம்தான். ரசம் தாளிக்கும் போதோ அல்லது இறக்கும் போதோ இதைத் தட்டிப் போட்டு இறக்கணும்.

 

இன்னும்  வெற்றிலை நெல்லி ரசம், எலுமிச்சை வேப்பம்பூ ரசம் வைச்சு சாப்பிட்டுப் பாருங்க.. இதாண்டா ரசம்னு சொல்வீங்க. இதெல்லாம் குளிர் நாளில் செய்து சாப்பிட்டாலோ குடித்தாலோ உடம்புக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும். சளித் தொல்லை வராது.

 

பொதுவா தினப்படி சமையலில் காரைக்குடிப் பக்கம் ரசம் கிடையாது.

 

சாம்பார் என்றால் பொரியல், அல்லது மசாலா,மண்டி, பிரட்டல்,

 

கெட்டிக் குழம்பு /புளிக்குழம்பு என்றால் கூட்டு, துவட்டல்,

 

ரசம் /சும்மா குழம்பு/தண்ணிக் குழம்பு /இளங்குழம்பு /மண்டி/கீரை மண்டி  என்றால்  இதில் ஏதோ ஒன்றும் அதற்கு உருளை மசாலா அப்பளம் அல்லது  துவட்டல் , கூட்டு   துவரன் என்று வைப்பார்கள்.

 

எங்க அம்மா வீட்டுக்கு வரும் காளிமுத்து அக்காவிடம் ஒரு முறை கேட்டேன். அக்கா நீங்க எல்லாம் டெய்லி ரசம் வைப்பீங்களா என்று. அதுக்கு அக்கா சொன்னார் , ”ஆசாரிக்கு ரசம்னா வெசம். ரசத்த பார்த்தா வெலவெலத்துப் போயிருவாரு. ஏதாவது கொழம்பு வையி.. இல்லாட்டி கஞ்சியையே ஊத்து. ஆனா ரசம் மட்டும் வேண்டாம்பாரு. ஒரு தரம் எங்க ரெண்டாவது மாப்பிள்ளை வந்த போது கேட்டார். என்ன நீங்க ரசம் வைக்கிறதில்லை என்று.அதிலேருந்து அவர் வந்தா மட்டும் வைக்கிறதுன்னு..”சொன்னாங்க அக்கா.

 

அட ரசத்தைக் கண்டுகூட ஓடுற ஆள் இருக்கா என்ன.. அட நீங்களும் ஓடாதீங்க. சூடா ரசம் செய்து சாப்பிட்டு வாழ்க்கையை ரசமா அனுபவிங்க.

 

Series Navigationஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்

6 Comments

  1. Avatar rajee malar

    ரசம் பற்றிய விவரங்கள் மிகவும் அருமை.
    சாப்பாடு என்பது ரசம் இல்லாவிட்டால் முழுமை அடையாது என்பது என் கருத்து .
    காராசாரமான ரசம் சாப்பிடும்போது உள்ள சுவை தனிதான்.
    ரசமோ ரசம்.

  2. Avatar இளங்கோ

    எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், தினமும், மோரில் ரசத்தைக் கலந்து குடிப்பார். அதுவும் அப்போ மோர் ரசம் தானோ?

  3. ரசமான கட்டுரை ரசித்தேன்/ரசமின்றி என் வீட்டில் சமையல் இல்லை.
    ரசனை இல்லாதவர் திண்ணைக்கு வர முடியுமா ? பாகற்காய் பிட்ளை என்றால் என்ன ? செய் முறை எழுதுக
    பீர்க்கை கடசல் நன்றாக இருக்கும்.வேர்க்கடலையில் துவையல் செய்து சாதத்தில் பிணைந்து உண்ணலாம்.அருமை .கட்டுரை நல் ரசம். ஆரா

  4. Avatar Ramachandran R

    rasam patriya seithi migavum rasanaiyaga irundhathu, thanks

  5. Avatar admin

    ராமச்சந்திரன்,
    அடுத்தமுறை தமிழில் கருத்துக்களை எழுதுங்கள்.

  6. Avatar IIM Ganapathi Raman

    படத்திலிருப்பவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *