புன்னகையை விற்பவளின் கதை

This entry is part 33 of 47 in the series 31 ஜூலை 2011

– திலினி தயானந்த
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.

இரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன்? தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய ‘வணக்கம்’ சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.

அதனை விருப்பத்துடன்தான் செய்கிறேனா என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அழகாகப் புன்னகைத்தபடியே இருந்த போதிலும் அப் புன்னகைக்குள் கண்ணீரும் வெளியே குதித்திடவென அலைபாய்கிறது. இச் சமூகத்தில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் ஒரு தொழிலை நான் செய்கிறேன். எனினும் சிலர் இதனை மோசமான கோணத்தில் பார்க்கிறார்கள். நிறுவனத்துக்குள் பிரவேசிக்கும் தலைவாசலிலிருந்து புன்னகையை விற்பது உண்மைதான். உங்களை எமது நிறுவனம் பக்கம் ஈர்க்க நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் எனது தொழில். இலகுவானதும் நிம்மதி தரக்கூடியதுமான தொழிலென நீங்கள் எண்ணிய போதிலும், இது உண்மையில் இலகுவானதா என்ன? புன்னகைக்கக் காசு செலவழியாது என ஒரு பேச்சுக்குச் சொல்வார்கள். எனினும் நான் புன்னகைக்க எனக்கு பணம் கொடுக்கப்படுகிறது. நான் புன்னகைத்தால் மாத்திரமே எனது நிலைப்பாடு உறுதியாகிறது. வாழ்க்கையை வாழ்ந்து செல்லவே இன்று நான் புன்னகைக்கிறேன்.

சில மாதர்கள், தங்களது காரியங்களை ஆற்றிக் கொள்ளவென கனவான்களின் கைகளில் தொங்கிப் புன்னகைக்கிறார்கள். எனினும் எனக்குக் கவலையில்லை. நான் எனது தொழிலைச் செய்கிறேன். பொருளாதாரத்தை வளம் மிக்கதாக்கும் செயன்முறை இது. யார் எவ்விதத்தில் அதனை நோக்கிய போதும், மாதக் கடைசியில் கிடைக்கப் போகும் ஊதியத்தைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். அதற்காகத்தான் நான் புன்னகைக்கிறேன்.

Series Navigationசிறகின்றி பறபுதிய பழமை
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *