361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், நேர்த்தியான அட்டை, ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள்களில் சிறப்பான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.
அந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.
மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:
“மலை
மரணச் சடங்கில் அமர்ந்திருக்கும்
என்னைப் போல்
மெளனமாக இருக்கிறது சரி.
உள்ளே
அவ்வளவு கனமாக இருக்கிறது.
மலர்
ஏன் மெளனமாக
இருக்கிறது. உள்ளே
அவ்வளவு
கனமாக இருக்கிறது போலும்.”
மேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..
“..எழுதிக்கொண்டிருக்கும் எனது
வரிகளுக்கிடையே
மாண்டுபோன அத்தனை எழுத்துக்களும்
தனக்கான இடங்களில் தோன்றிக்கொள்ள
நான் இப்போது
வெற்றுக் கட்டங்களை நிரப்புபவனாகிறேன்.
….
….
எனது தாளில் இப்போது
இங்கொன்றும் அங்கொன்றுமாகச்
சில
எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
அவற்றைக் கூட்டி
ஒரு சில வாக்கியங்களை அமைக்கும்
சாத்தியம் மட்டுமே
கைக்கொண்டவன்
என்னத்தைக் கூறிவிட முடியும்
உங்களிடம்?”
இன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:
“..நீளும் மெளன மலையின் தவம்
அடைக்காப்பது நிலையாமையின்
நிர்மூலங்கள்
தன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல
தன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்
இலவ மனம்.
சுற்றத்தாரைப் பொழியும் அமிலத்திலிருந்து
காப்பதற்கு கோபாலன் நம்பியிருப்பது
ஒற்றைப் பனை..”
காலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’ தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.
எதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.
சிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:
“…ஒரு வாழ்வைப்போலவே
ஒரு பறவையையும்
எதிர்கொள்ளவோ
வரவேற்கவோ
விசாரித்து விருந்தோம்பிக் கொண்டாடவோ
நமக்குத் தெரிவதேயில்லை…
வெறும் நிழலாய்க்
கடந்து சென்றுவிடுகிறது அது
பெயரில்லை
ஊரில்லை
அதற்கோர் கூடுமில்லை.”
நேசமித்திரனின் ‘மற்றும்-ஃ’ :
“சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்…
பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள்
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்…”
நம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..
“.. ஆரத் தழுவமுடியாத
பெரும் மழையை
அள்ளிக் கொண்டோடுவது எப்படி
என் சிற்றோடையே
அண்ணாந்து வியக்கும்
பெரிய வெளியைப்
பறந்து தீர்ப்பது எப்படி
என் சிறிய பறவையே..”
பட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.
“ஒரு இலை அசைவதை
மரத்தைக் கடப்பவர்கள் யாரும்
தலை உயர்த்திப் பார்ப்பது இல்லை.”
அற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு!…’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.
“…அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்…”
“…ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை… ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”
உண்மைதான், இல்லையா? ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து…
“…அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”
அருமை!
மிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்த இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பலாம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்கு சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com
ஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
***
முதல் இதழ் கிடைக்குமிடங்கள்:
New BookLands, T.nagar,chennai 17 (தொலைபேசி எண்கள்: 28158171,28156006)
Discovery book palace,K.K.Nagar,Chennai. (Contact Vediappan- 9940446650)
விலை: ரூ.20
-ராமலக்ஷ்மி
- நிலாச் சோறு
- முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி
- கனா தேசத்துக்காரி
- குங்குமச்சிமிழ்
- ஆட்கொல்லும் பேய்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)
- இனிக்கும் நினைவுகள்..
- யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்
- அட்ஜஸ்ட்
- சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு
- தீராதவை…!
- பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்
- காண்டிப தேடல்
- விதி மீறல்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 4
- தேர் நோம்பி
- சிறை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)
- கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’
- என் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!
- குதிரே குதிரே ஜானானா
- ”முந்தானை முடிச்சு.”
- 361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்
- ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி
- பிணம் தற்கொலை செய்தது
- மலைகூட மண்சுவர் ஆகும்
- செதில்களின் பெருமூச்சு..
- வாசல்
- கரைகிறேன்
- மழையைச் சுகித்தல்!
- அறிதுயில்..
- சிறகின்றி பற
- புன்னகையை விற்பவளின் கதை
- புதிய பழமை
- அந்தப் பாடம்
- நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-
- வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது
- சுவீகாரம்
- கூறியிருக்கவில்லை
- நினைவுகளின் சுவட்டில் – (73)
- பாகிஸ்தான் சிறுகதைகள்
- “நடிகர் சிகரம் விக்ரம்”
- வாரக் கடைசி.
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- காம்பிங் vs இயேசு கிறிஸ்து