தொழுகைத் துண்டு


(இந்தக் கதையில் பயன்படுத்தியிருக்கும் சில அரபுப் பதங்களுக்கான விளக்கம். தவ்பா-பாவமன்னிப்பு ; மௌத்-மரணம் ; இத்தா- தனிமை ; ஹதியா-தருமம் ; துஆ-இறைவனிடன் விண்ணப்பித்தல் ; இஃப்தார்- நோன்பு திறக்கும் நேரம் ; யாசின்-குர்ஆனின் இதயமாகக் கருதப்படும் வசனங்கள்; இஷா-இரவு நேரத் தொழுகை)

ஏழு நாட்களாகப் பூட்டிக் கிடக்கிறது அல்லாப்பிச்சைக் கடை. யார் இந்த அல்லாப்பிச்சை? ஏழு வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். ஒரு மளிகைக் கடையில் சிப்பந்தியாகச் சேர்ந்தார். பிறகு அந்தக் கடையையே எடுத்து நடத்தினார். அதன் பிறகு சிராங்கூன் சாலையில் இந்தக் கடையை வாங்கினார். கடந்த 40 ஆண்டுகளாக அல்லாப்பிச்சையில் பெருமை பேசிக்கொண்டிருக்கும் கடைதான் இந்த  அல்லாப்பிச்சை மளிகைக்கடை. அந்தப் பகுதியில் மற்ற எல்லார் வியாபாரமும் அவருக்கு அடுத்தபடிதான். இந்தப் பெருமைக்கெல்லாம் காரணம் அல்லாப்பிச்சை மட்டுமல்ல. அவர் மனைவி நாச்சியாரும்தான். நாச்சியார் மூலிகை மருந்துகள் பற்றி நுணுக்கமாக அறிந்தவர். இவர் வைத்தியம் சொல்லி மூலிகை தந்த எத்தனையோ வாடிக்கையாளர்கள் பயனடைந்திருக்கிறார்கள். கூட்டம் இல்லாத நேரமே இல்லாத கடைதான் அல்லாப்பிச்சை கடை. 40 ஆண்டுகளாக ஒரு நாள் கூட பூட்டப்படாத கடை இப்போது 7 நாட்களாக பூட்டிக் கிடக்கிறது.

கடந்த ஓராண்டாக அல்லாப்பிச்சை கடைக்கு வருவதில்லை. நாச்சியார்தான் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அல்லாப்பிச்சைக்கு கடுமையான ரத்த அழுத்த நோய். கல்லீரல் வீங்கி இருக்கிறதாம். இப்போது நுரையீரலில் தண்ணீர் கோர்த்துக் கொண்டதாம். அவர் சென்னைக்குச் சென்றுவிட விரும்பினார். அவரின் சகோதரங்களும் நாச்சியாரின் சகோதரங்களும் சென்னையில்தான் இருக்கிறார்கள். அங்கே அவருக்குச் சொந்த வீடும் இருக்கிறது,  அல்லாப்பிச்சையின் விருப்பத்தை யாரும் தடுக்கவில்லை.

நாச்சியாரும் பிள்ளைகளும் இங்கே வியாபாரத்தை கவனித்துக் கொண்டார்கள். திடீரென்று வந்தது அந்தத் தொலைபேசித் தகவல். ‘அல்லாப்பிச்சை அனைவரையும் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்பட்டு வாருங்கள்’ என்றது அந்தத் தகவல். நாச்சியார், மகன்கள், மகள்கள், மருமக்கள் எல்லாரும் அன்றே புறப்பட்டு விட்டார்கள். அன்றுதான் கடை பூட்டப்பட்டது.

இவர்கள் போய்ச் சேர்வதற்கும் அல்லாப்பிச்சை மௌத்தாவதற்கும் சரியாக இருந்தது. (இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அடுத்த நாள் தமிழ்முரசில் ஒருபக்க விளம்பரம் கண்டபோது வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அன்று பள்ளிவாசலில் நடந்த ஃபாத்திஹாவில்தான் தெரிந்தது அல்லாப்பிச்சையின் வட்டத்துக்குள் எத்தனை மனிதர்கள் என்று. எல்லாரும்  ஆரத்தழுவி துக்கம் விசாரித்துக் கொண்டார்கள். அல்லாப்பிச்சையின் உறவினர்களிடம் கண்ணீர் விட்டார்கள். சென்னைக்குச் சென்ற நாச்சியாரும் பிள்ளைகளும் எப்போது வருவார்கள் என்று விசாரித்துக் கொண்டார்கள்.

கணவர் மௌத்தாகிவிட்டால் மனைவி 4 மாதங்கள் ‘இத்தா’ இருக்கவேண்டும் என்பது சட்டம். மார்க்க அறிஞர்கள் பலர் அதில் முரண்படுகிறார்கள். என்றாலும் நாச்சியார் அல்லாப்பிச்சையிடம் வைத்திருந்த அன்பு ஒரு மானிட அன்பு அல்ல. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. விருப்பப்பட்டு அவர் ‘இத்தா’ இருக்க முடிவு செய்தார். பெண்கள் அவரைப் பார்ப்பதில் குற்றமில்லை. ஆண்களில் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் பிள்ளைகள் மட்டும்தான் பார்க்க அனுமதி. வெளியாட்கள் யாரும் பார்க்கக் கூடாது. தொலைபேசியில்கூட பேசக்கூடாது. இன்னும் எவ்வளவோ. ஆனால் சுருக்கமாக இவ்வளவுதான்.

நாச்சியார் பிள்ளைகளுடன் விமான நிலையத்தில் வந்து இறங்கிவிட்டார். உடலை மொத்தமாகப் போர்த்திய அங்கி, கையுறை, காலுறை என்று முழுமையாக நாச்சியார் மறைக்கப்பட்டிருந்தார். அவர் கண்களைக் கூட யாரும் பார்க்கமுடியாது. வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார் நாச்சியார். அவர் அல்லாப்பிச்சையுடன் வாழ்ந்த அந்த வீட்டில்தான் ‘இத்தா’ இருப்பேன் என்று விரும்பினார். அவர் விருப்பத்தை யாரும் மறுக்கவில்லை.

ஓராண்டுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாப்பிச்சையும் நாச்சியாரும் ஓராண்டுக்கு முன்தான் ஹஜ் முடித்தார்கள். அப்போது அல்லாப்பிச்சை நிறைய தொழுகைத் துண்டுகள் வாங்கி வந்தார். அதில் ஒரு துண்டு மட்டும் தங்கியிருந்தது. ஒரு நாள் நாச்சியார் கேட்டார். ‘இந்தத் துண்டை யாருக்காக வைத்திருக்கிறீர்கள்’. அல்லாப்பிச்சை சொன்னார். ‘எனக்குப் பிறகு ஒரு நல்ல தொழுகையாளிக்கு இந்தத் துண்டை ஹதியா செய்துவிடு. அவர் தொழும்போது எனக்காக இந்தத் துண்டு ‘தவ்பா’ செய்யட்டும். மௌத்து என்பது நிச்சயமான ஒன்றுதான். நாச்சியார் மௌத்தை நினைத்து அழுதார். அப்போது துஆ கேட்டார். ‘யா அல்லாஹ் அவருக்கு முன் என்னை நீ அழைத்துக் கொள்’ என்று. ஏனோ அல்லாஹ் நாச்சியாரின் துஆவை நிறைவேற்றவில்லை. ரகசியம் அவன் மட்டுமே அறிவான்.

இப்போது நிகழ்வுக்கு வருவோம். நாச்சியார் தன் மூத்த மகன் உபயதுல்லாவை அழைத்தார். ‘மகனே இன்று ரமலான் மாதம் துவங்குகிறது. இன்றுதான் முதல்தராவீஹ் தொழுகை. நீ இஷாவுக்கு முன்பதாக பள்ளிக்குச் சென்றுவிடு. பிலால் ஹஜ்ரத்திடன் இந்தத் துண்டை ஒப்படைத்துவிடு. அவரிடம் சொல். ‘இது என் அத்தா மக்காவிலிருந்து  வாங்கி வந்தது. இன்றுமுதல் இன்ஷா அல்லாஹ் இந்தத் துண்டை ஒவ்வொரு தராவீஹிலும் தலைப்பாகையாக அணிந்து கொள்ளவேண்டும். முக்கியத் தொழுகைகளில் இந்தத் துண்டை தாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது என் அத்தாவின் விருப்பம்’ என்று.’ துண்டை வாங்கிக் கொண்டு மகன் உபயதுல்லா சென்றுவிட்டார்.

பள்ளிவாசலில் பிலால் ஹஜ்ரத்து தான் நிர்வாகப் பொறுப்பையும் செய்து வருகிறார். அன்று இஃப்தாருக்காக பலர் நன்கொடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பிலால் ஹஜ்ரத் தன் தொப்பியைச் சுற்றி ஏற்கனவே ஒரு அழகான துண்டை அணிந்திருந்தார். அது மிகவும் மெல்லிய மஸ்லின் வகையைச் சேர்ந்தது. இதுபோல் பல துண்டுகள் அவர் வைத்திருப்பது உபயதுல்லாவுக்குத் தெரியும். அந்த மேசையின் ஓரத்தில் துண்டை வைத்துவிட்டு இஷா தொழுகைக்காக ‘உளு’ செய்யப் போனார் உபயதுல்லா.

அவருக்குப் பக்கத்தில் ‘உளூ’ செய்ய இன்னொருவர் வந்து அமர்ந்தார். அவருக்கு முழங்கால் வரை ஒரு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்தியிருந்தார். அந்தக் காலைக் கழட்டி வைத்துவிட்டு மிக பயபக்தியாக ‘உளு’ செய்தார். அவர் பெயர் சலாவுதீன். அவரைப் பலமுறை உபயதுல்லா பார்த்திருக்கிறார். அவருக்கு ஒரு கால் இல்லாதது இப்போதுதான் தெரிகிறது. சட்டென்று ஒரு யோசனை வந்தது. பிலால் ஹஜ்ரத்துக்கு அந்தத் துண்டை கொடுப்பதை விட இவருக்குக் கொடுப்பது பொருத்தமாக இருக்குமே. நிச்சயமாக இவர் அத்தா துண்டை ஒவ்வொரு தொழுகையிலும் அத்தா விரும்பியபடி பயன்படுத்துவார் என்று உபயதுல்லா நம்பினார். சலாவுதீன் செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டு உபயதுல்லாவிடம் வந்தார். உபயதுல்லாவை அரவணைத்து துக்கம் விசாரித்தார். அவர் சொன்னார். ‘தம்பீ, பத்திரிகை செய்தி பார்த்ததும் அதிர்ந்து போனேன். அல்லாப்பிச்சை அண்ணன் எத்தனையோ தருமகாரியங்கள் செய்திருக்கிறார். அவரின் நன்மையான காரியங்களை அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமென்றும்  அவரின் பாவ காரியங்கள் எதுவா இருந்தாலும் அதை இறைவன் மன்னிக்க வேண்டுமென்றும் துஆ கேட்கிறேன். 40 யாசின் ஓதி அவருக்காக ஹதியா செய்துவிட்டேன். இப்போது கூட அவருக்காக ஒரு யாசின் ஓதிவிட்டுத்தான் இஷா தொழுவேன்’ என்றார்.

‘அய்யா என் அத்தா மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு கண்டு மெய் சிலிர்க்கிறேன். இதுபோல் எத்தனையோ பேரை என் அத்தா சம்பாதித்திருக்கிறார். ஆனால் உங்களின் அன்புக்கு விலையே கிடையாதய்யா. ஆனாலும் நீங்கள் எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும் அய்யா.’ ‘என்ன உதவி தம்பீ?’

என் அத்தாவின் தொழுகைத் துண்டு ஒன்று இருக்கிறது. ஹஜ்ஜிலிருந்து அவர் வாங்கி வந்தது. அதை அவர் ஒரு நல்ல தொழுகையாளிக்குக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினார். அவரின் ஒவ்வொரு தொழுகையிலும் அந்தத் துண்டு அவருக்காக தவ்பா செய்யும் என்பது என் அத்தாவின் நம்பிக்கை. அந்தத் துண்டை உங்களுக்குத் தருகிறேன். இப்போது இஷாவில் அதை தாங்கள் அணிந்து கொள்வதுடன் 30 தராவீஹ் தொழுகையிலும் தாங்கள் அணிந்து கொண்டால் என் அத்தாவின் விருப்பத்தை நிறைவேற்றியவனாக ஆவேனய்யா.’

‘தம்பீ, இதற்கு நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தத் துண்டு எனக்குக் கிடைக்க வேண்டுமென்று அல்லாஹ் நாடி இருக்கிறான் தம்பீ. என் அன்புக்கு சரியான விலை தந்துவிட்டீர்கள் தம்பீ.’ ‘அய்யா, இதோ நான் எடுத்துவருகிறேனய்யா.’ உபயதுல்லா பள்ளி அலுவலகத்துக்கு வந்தபோது ஹஜ்ரத் பிலால் இன்னும் இஃப்தார் நன்கொடைகளை வசூலித்துக் கொண்டிருந்தார். அந்தத் துண்டை எடுத்து வந்து தன் இரு கைகளிலும் ஏந்தியபடி சலாவுதீனிடன் கொடுத்தார். அதை வாங்கிய சலாவுதீன் கண்ணில் ஒற்றிக் கொண்டார். குலுங்கி அழுதார். உபயதுல்லா அவரைச் சமாதானப் படுத்தினார். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். உபயதுல்லா கேட்டார். ‘அய்யா தாங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நான் தெரிந்து கொள்ளலாமா?’

‘தம்பீ, இந்த செயற்கைக் கால் அவர்தான் தம்பீ எனக்கு வாங்கிக் கொடுத்தார்.’ அவர் மீண்டும் தேம்பினார். எந்தப் பொருள் எவருக்குச் சேரவேண்டுமென்று அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

உபயதுல்லா இஷா தொரழுகைக்காக பள்ளிக்குள் சென்றார். முதல் வரிசையில் சலாவுதீன் அந்தத் துண்டை தன் தொப்பியைச் சுற்றி முறையாக அழகாகக் கட்டிக் கொண்டு யாசின் ஓதிக் கொண்டிருந்தார்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

 

author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *