எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)

This entry is part 47 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)

சாகித்ய அகாதமி விருது பெற்ற, சிறந்த திறனாய்வாளர் திரு.சிவசங்கரன் அவர்களுடன் ‘தாமரை’ இதழின் ஆசிரியராக அவர் இருந்த போது எனக்கு ஏற்பட்ட தொடர்பு இன்று வரை கடிதம் மூலம் தொடர்கிறது. அவரும் அவரது குருநாதரான அமரர் வல்லிக்கண்ணன் அவர்களும் தங்களுக்கு வரும் கடிதங்களுக்கு உடனுக்குடன் முத்து முத்தான கையெழுத்தில் தாமே தம் கைப்பட பதில் எழுதும் பண்பிற்காக பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர்கள். இன்று முதுமையினாலும் உடல் நலிவினாலும் தி.க.சி அவர்களால் முன்பு போல எல்லோருக்கும் பதில் போட முடியாதிருப்பினும் ‘தினமணி’யிலும், அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களிலும் அயராமல் அவர் விமர்சனக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பது இளைஞர்களைப் புருவம் உயர்த்த வைப்பதாகும்.

அவர் ஆசிரியராக ஆன பிறகு ‘தாமரை’யின் இலக்கிய அந்தஸ்து வெகுவாக உயர்ந்தது. அநேகமாக இன்றைய புகழ் பெற்ற படைப்பாளிகளில் பலரும் அவரால் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப் பட்டவர்கள் தாம். இன்று நான் ஒரு இலக்கிய விமர்சகனாகவும் இருப்பதற்கு அவர் தான் காரணம். தாமரைக்கு நான் நேரடியாக அனுப்பாதிருந்தும், பக்தனைத் தேடி வந்து அருள்பாலிக்கும கடவுளைப் போல, ‘தீபம்’ பத்திரிகைக்கு நான் அனுப்பிய எனது முதல் விமர்சனக் கட்டுரையை அவரே விரும்பி வாங்கி தாமரையில் வெளியிட்டு என்னை ஊக்குவித்தார்.

அப்போது நான் இலக்கிய இதழ்களில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை. ‘தீபம்’ இதழில் வாசகர்களை ‘நான் ரசித்த புத்தகம்’ என்ற தலைப்பில் எழுதும்படி ஆசிரியர் நா.பா கேட்டிருந்தார். அதற்காக அப்போது நான் மிகவும் லயித்துப் படித்திருந்த ‘நித்தியகன்னி’ என்கிற எம்.வி.வெங்கட்ராமின் அற்புதமான நாவலைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தேன். அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் தீபம் இதழில் அது வரவில்லை. திடீரென்று ஒரு நாள் தாமரை இதழ் ஒன்று எனக்குத் தபாலில் வந்தது. நான் சந்தா எதுவும் கட்டாத நிலையில் இது எப்படி என்று புரியாமல் பிரித்துப் பார்த்தேன். அதில் எனது ‘நித்தியகன்னி’ விமர்சனம் வெளியாகி இருந்தது. தீபத்துக்கு அனுப்பியது எப்படி தாமரையில் வெளியாகி இருக்கிறது என்பது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் தி.க.சி அவர்களுக்கு உடனே நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினேன்.

வெகு நாட்களுக்குப் பின்னர் தான் அந்தப் புதிரை, தீபம் அலுவலகத்துக்குச் சென்ற போது திரு.எஸ்.திருமலை விடுவித்தார். பக்க அளவு காரணமாய் தீபத்தில் வெளியிட இயலாமல் எனக்குத் திருப்பி அனுப்ப இருந்த எனது கட்டுரை, அங்கு வந்த தி.க.சி அவர்களது கண்ணில் பட்டிருக்கிறது. படித்துப் பார்த்த அவர், தீபத்தில் பிரசுரிக்க இயலாவிடில் தாமரையில் தான் பிரசுரிப்பதாக வாங்கிப்போய் வெளியிட்டிருக்கிறார் என்று அறிந்து, சிலிர்த்துப் போனேன்.

பிறகு சில ஆண்டுகள் கழித்து சென்னையில் ‘இலக்கிய சிந்தனை’ ஆண்டுவிழா ஒன்றின் போது தி.க.சி அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அருகில் சென்று வணங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெயரைச் சொன்னதும், “அடடே! நித்யகன்னி சபாநாயகமா?” என்று வாத்ஸல்யததுடன் தட்டிக் கொடுத்தார். அவரது நினைவாற்றலும் மனித நேயமும் என்னை நெகிழ வைத்தன. அன்று தொடங்கி இன்று வரை அந்தப் பெருந்தகையுடன் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருப்பதையும் அவரது கடிதங்களில் தென்படும் பாசமும் நேசமும் மிக்க அக்கறையையும் என் பாக்கியமாகக் கருதுகிறேன். 0

Series Navigationசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *