ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்கள் குறும்பு நிறைந்த முகங்களும் இன்னமும் மனத்தில் திரையோடுகின்றன. சின்ன உத்யோகம் தான். குறைந்த சம்பளம் தான். கடுமையான வெயிலும், மழையும், ஒரு ஸ்வெட்டராவது வேண்டும் குளிரும், ஹோட்டல் சாப்பாடும் எல்லாம் எங்கோ தூர தேசத்தில் தூக்கி எறியப்பட்ட வாழ்க்கை என்று அம்மாவும் அப்பாவும், தங்கை தம்பிகளும் நினைக்கலாம் தான். ஆனால் அந்த நாட்கள் எனக்கு சந்தோஷமாகவே கழிந்தன. புதிய இடம், நண்பர்களாக புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை எல்லாம் நன்றாகத் தான் இருந்தன. இப்போது நினைத்துப் பார்க்கும் போது கூட அந்த நாட்களின் சந்தோஷமும், அந்த நட்புகளும் கழிந்து மறைந்துவிட்டது தான் ஒரு சோக உணர்வை மனதில் நிரப்புகின்றனவே தவிர, அவை என்றைக்குமாக இழந்தவையாகி விட்டன, திரும்ப அந்த ரஜக் தாஸையும் மிருணாலின் ஆழமான அத்யந்த நட்பும், மனோஹர்லால் சோப்ராவின் தங்கை கொடுத்த ருசியான சாப்பாடும் இழக்கப் பட்டவை தான். இனித் திரும்ப வாழமுடியாதவை, கிடைக்கக் கூடிய சாத்தியம் என்பது அந்த நினைவுகள் தான் என்பது மாற்றமுடியாத வாழ்க்கையின் நியதிகள். இப்படி ஒரு சோகம் கப்பும் போது, யாராவது ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் அனுபவித்து கடந்து வந்து விட்ட சந்தோஷங்களைப் பற்றி நினைத்து துக்கிப்பார்களா?, இது என்னை மாத்திரம் பாதிக்கும் மனப் பிறழ்வாகவும் இருக்கக் கூடும்.
என்னவாக இருந்தால் என்ன? நான் எப்படியோ அப்படித்தான் என் நினைவுகளும் இருக்கும். இப்போது இன்று நான் எப்படியோ அப்படிக்கூட இல்லை. அன்று எப்படி இருந்தேனோ அப்படியான நினைவுகள் தான் இதில் பதிவாதல் வேண்டும். அது தான் நேர்மையானதும் உண்மையானதும் ஆகும்.
அந்த வருடங்களில் என்னிடம் மிக அன்பு காட்டியவன், ஒரு பார்வையில் படிப்படியான என் வளர்ச்சிக்கும் காரண மானவர்களில் ஒருவன் என்று மிருணால் காந்தி சக்கரவர்த்தியைச் சொல்ல வேண்டும். என்னிலும் மூன்று வயது மூத்தவன். அப்போது எனக்கு வயது இருபது. அவன் கல்லூரிப் படிப்பு படித்து வந்தவன். வித்வத் நிறைந்த தந்தையால் வளர்க்கப் பட்டவன். அப்போது அவன் தந்தையார், சுரேஷ் சந்திர சக்கரவர்த்தி, டாக்காவில் ஒரு ஹைஸ்கூலில் ஹெட் மாஸ்டர். ஹெட்மாஸ்டர் என்றால், இப்போதோ அல்லது நாம் வழக்கமாகப் பார்த்துத் தெரிந்திருக்கும் எந்த ஹெட்மாஸ்டரின் வடிவமும் குணவிசேஷங்களை நினைத்துக்கொள்ளக் கூடாது. அவர் ஒரு விசித்திரமான ஆனால் மிகவும் மரியாதையோடு நினைவு கொள்ள வேண்டியவர். அவரைப் பற்றி மிருணால் எனக்கு நிறையச் சொல்லியிருக்கிறான்.
ஒரு நாள் தேஷ் என்னும் வாரப்பத்திரிகையை என்னிடம் கொண்டுவந்து காட்டினான். அதில் அவன் தந்தையார் பேசிய பேச்சு அச்சாகியிருந்தது. தேஷ் மிகவும் இலக்கியத் தரமான, கலைத் தரமான பத்திரிகை. கல்கத்தாவிலிருந்து பிரசுரமாகும் ஒன்று. மிகுந்த பழம் பாரம்பரியமும் புகழும் வாய்ந்தது. அதே சமயம் அது கிட்டத் தட்ட நல்ல வாசகர் எண்ணிக்கை கொண்ட பிரபல பத்திரிகையும் கூட. என் நினைவு சரியெனில் ஜுகாந்தர் என்ற தினசரிப் பத்திரிகை நிறுவனத்தின் வெளியீடு அது. தரமான பத்திரிகை என்றால் அது பிரபலமாகவும் வாசக எண்ணிக்கைப் பெருக்கமும் கொண்டிருப்பது நமக்கு அதிசயமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வங்காளத்தில் அப்படி இல்லை. தேஷ் பத்திரிகை மிருணாலுக்கு அவனுக்கு நாங்கள் இருந்த புர்லா காம்ப்பில் தினசரிப் பத்திரிகை போடுபவனிடமிருந்தே கிடைத்தது.
அவன் அப்பா அது பற்றி தேஷில் அவர் பேச்சு பிரசுரமானது பற்றி எழுதியிருந்தாராம். மிருணாலின் தங்கைகள் இரண்டு பேர், ஒரு குட்டித் தங்கை, அம்மா எல்லோரும் அப்போது டாக்காவில் இருந்தனர். ஒரு நாள் மாலை மிருணாலின் குட்டித் தங்கையைக் காணோமே என்று தேடிச் சென்றாராம். அந்த சமயத்தில் அவர் தேடிச்சென்ற வழியில் ஒரு கூட்டமும் நடந்து கொண்டிருந்தது. இவரை வெளியில் பார்த்தவர்கள் இவரை வலுக்கட்டாயமாக அழைத்துப்பேசச் சொன்னார்களாம். அந்தப் பேச்சு தான் தேஷில் வெளி வந்திருந்தது. வீட்டிலிருந்து சின்னப் பெண்ணைத் தேடிச் சென்றவர் சரியான உடை கூட உடுத்திக்கொண்டிருக்கவில்லை. கைலியும் பனியனும் ரப்பர் செப்பலுமாக ரோடில் அலைந்து கொண்டிருந்தேன். அப்படியே கூட்டத்துக்கு இழுத்துச் சென்று விட்டனர் என்று அப்பா, சுரேஷ் சந்திர சக்கரவர்த்தி எழுதி யிருந்தார் மிருணாலுக்கு. தயார் செய்து சென்று பேசிய பேச்சும் அல்ல அது.
பின் அவன் அப்பாவைப் பற்றி அவ்வப்போது சொல்வான். அவருக்கு உலகத்தில் எத்துறை பற்றியும் போன மாதக் கடைசி வரை நிகழ்ந்துள்ள வளர்ச்சி, மாற்றங்கள் பற்றிக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியும் என்றான். சின்ன வயசிலிருந்து எங்களையும் அப்படியே வளர்த்தார். சிறு வகுப்புகளில் படிக்கும் போது அப்பாவிடம் மிருணால் எல்லாச் சிறுவர்களும் கேட்கும் கேள்விகள் கேட்டால் அவர் அதற்கு பதிலளிக்கும் விதமே வேறு.
அந்தக் கதையெல்லாம் மிருணால் சொல்லக் கேட்பது வேடிக்கையாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் தவளைக்கு ஏன் கால்கள் முன்னால் சின்னதாகவும் பின்னால் நீளமாகவும் இருக்கிறது என்று கேட்டானாம். அதற்கு அவன் அப்பா, “இதை நீ, நான் சொல்வதை விட ஜூலியன் ஹக்ஸ்லி என்னும் விஞ்ஞானி சொல்லக் கேட்க வேண்டும்.” என்று சொல்லி ஜூலியன் ஹக்ஸ்லியின் விலாசத்தைத் தந்து எழுதிக் கேட்கச் சொன்னாராம். ஜூலியன் ஹக்ஸ்லியிடமிருந்து அவனுக்கு பதிலலும் வந்ததாம்.
இன்னொரு கதை எனக்கு நினைவிலிருப்பது, இந்த மாதிரி வங்காள மொழியில் ஏதோ சந்தேகம். உடனே அப்பா அவனுக்கு டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜியின் விலாசத்தைத் தந்து அவரைக் கேள். அவர்தான் இதற்கு அதாரிட்டி என்றாராம். அவனும் டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜிக்கு எழுதி அவரும் அவனுக்கு அவன் சந்தேகத்தைத் தீர்த்து பதில் எழுதினாராம். சுனிதி குமார் சட்டர்ஜி பல பாகங்கள் கொண்ட அதிகார பூர்வமான, (History of Bengali Language) வங்க மொழியின் வரலாறு என்ற நூல் எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த மொழியியலாளர். மொழி வல்லுனர்.
என்னிடம் ஜூலியன் ஹக்ஸ்லி, சுனிதி குமார் சட்டர்ஜி இன்னும் அனேகர் எனக்கு என் சந்தேகங்களைத் தீர்த்து எழுதிய கடிதங்கள் இருக்கு என்றான்.
டாக்டர் சுனிதி குமார் சட்டர்ஜி நான் தில்லியிலிருந்த போது, அவர சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந்தார். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு அவர் தலைவரானார். அவர் தலைவராக இருந்த போது தான் அகிலனுக்கு சாகித்ய அகாடமி தரும் தமிழ் பரிசு கிடைத்தது. அப்போது நான் அதைக் கண்டித்து Thought என்னும் ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.(இக்கட்டுரையை விவாதங்கள் சர்ச்சைகள் என்னும் தொகுப்பில் காணலாம்} அதை அவருக்கு அனுப்பினேன். சாதாரணமாக இதற்கெல்லாம் பதில் வராது. ஆனால் சுனிதி குமார் சட்டர்ஜி, மிருணால் என்னும் பள்ளிச் சிறுவனின் கடிதத்தை மதித்து பதில் தருகிறவர் எனக்குத் தரமாட்டார என்ன? எழுதினார். “சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பரிசுக்கான புத்தகத்தை சிபாரிசு செய்வது ஒரு தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு. அகாடமிக்கு இதில் சம்பந்தமில்லை. அவர்கள் சிபாரிசு செய்து தான் அகிலனுக்கு பரிசு தரப்பட்டது” என்று எனக்கு பதில் எழுதினார். அந்தக் கடிதம் இப்போது எங்கு தொலைந்ததோ தெரியவில்லை. மிருணால் பெருமைப் பட்டுக்கொண்ட மாதிரி நான் பெருமைப் பட்டுக்கொள்ள சாட்சியமாக அந்தக் கடிதம் இல்லை. என் வார்த்தையை நம்பினால் தான் உண்டு.
இன்னம் கூட ஒரு சுவாரஸ்யமான் விஷயம் மிருணால் தன் அப்பாவைப் பற்றிச் சொன்னது. அந்த ஐம்பதுக்களில் அர்னால்ட் ஜே டாயின்பீ என்னும் வரலாற்று ஆசிரியர் உலகப் புகழ் பெற்றிருந்தார். அவருடைய Study in History என்னும் ஒரு பிரம்மாண்ட புத்தகம் உலக வரலாற்றை நாகரீகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியுமாக பார்த்து ஆராய்ந்து பல பாகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அதன் கடைசி பாகம் அப்போது தான் வெளிவந்திருந்தது. அந்த பத்து பாகங்களையும் D.C.Somerwell இரண்டு பாகங்களுக்கு சுருக்கி வெளியிட்டிருந்தார். ஒரு பள்ளி தலைமை ஆசிரியரான சுரேஷ் ச்ந்திர சக்கரவர்த்தி அதை வாங்கும் சக்தி அற்றவர். ஆனால், அவரது ஈடுபாட்டை நன்கு அறிந்து அதை மதித்தவர்களான அவரது சக ஆசிரியர்கள் எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக பணம் போட்டு அந்த பத்து பாகங்களையும் அவை வெளிவர வெளிவர ஒவ்வொன்றாக வாங்கித் தந்தார்களாம்.
இதையெல்லாம் சொன்ன மிருணால் இன்னொரு விஷயத்தையும் சொன்னான். அவன் அப்பா நெடுங்காலமாக மலச் சிக்கலால் அவதிப் படுபவராம். அவர் கழிப்பரைக்குச் சென்றால் சுலபத்தில் வருபவர் இல்லையாதலால், கையோடு டாயின்பீயின் புத்தகத்தின் பாகம் ஒன்றையும் உடன் எடுத்துச் சென்று அங்கு படித்துகொண்டிருப்பாராம்.
- என் பாதையில் இல்லாத பயணம்
- புணர்ச்சி
- ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்
- சின்னஞ்சிறிய இலைகள்..
- குற்றமுள்ள குக்கீகள் (cookies)
- 10 Day Solo Art Exhibition at Vinnyasa Premier Art Gallery, Chennai on September 1, 2011
- இழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி
- புத்தன் பிணமாக கிடைத்தான்
- மாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா
- எங்கிலும் அவன் …
- முன்னறிவிப்பு
- (75) – நினைவுகளின் சுவட்டில்
- சிப்பியின் ரேகைகள்
- உரையாடல்.”-
- புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது
- தீர்ந்துபோகும் உலகம்:
- எங்கே போகிறோம்
- வாக்கிங்
- ஆர்வம்
- கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- மொழிபெயர்ப்பு
- நாளை ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4
- கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்
- நேயம்
- ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?
- மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ
- உடைப்பு
- ஜென் ஒரு புரிதல் பகுதி 7
- வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்
- யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்
- காகிதத்தின் மீது கடல்
- இருப்பு!
- கூடியிருந்து குளிர்ந்தேலோ …
- நிலவின் வருத்தம்
- பொன்மாலைப்போழுதிலான
- தங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !
- தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு
- இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
- பேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)
- இயற்கை வாதிக்கிறது இப்படி……
- முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்
- சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)