திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு வெளியேறாமல் தனது நிபந்தனைகளை முன்வைத்து அங்கேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அந்தக் காட்சி மட்டும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதன்பிறகு உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்யும் வரையிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன. முதன் முதலாக பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவற்றின் முன்னால் தொடர்ந்து நடந்து முடிந்த உண்ணாவிரதம் இதுதான். `இது பாதி வெற்றிதான்` என்று ஊழல்களுக்கு எதிரான போராட்டம் தொடர்நிலையில் இருக்கிறது என்கிற கண்ணோட்டத்துடன் ஹசாரே பேசினாலும் இந்த உண்ணாவிரதம் சுதந்திர இந்தியாவின் பெரும் அறப்போராட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு உண்ணாவிரதம் இவ்வளவு சாதிக்க முடியுமா என்ற வியப்பினை அளிப்பதாக ஊடகக் காட்சிகளும் பத்திரிகை செய்திகளும் இருந்தன. உடனுக்குடன் நிகழ்வுகளைக் காட்டியபடியால் தொலைக்காட்சி ஊடகம் மற்ற ஊடகங்களைவிட வெகு முன்னணியில் நின்றது.
இந்தியாவைத்தவிர வேறு எங்காவது இப்படியொரு உண்ணாவிரதம் நடந்திருந்தால் அதை ஊடகங்களும் அரசாங்கமும் இந்த அளவிற்கு பொருட்படுத்தியிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. `நான் சாப்பிடமாட்டேன்` என்று யாராவது அடம் பிடித்தால் `பட்டினி கிட` என்று சொல்லிவிட்டு வேறு வேலை பார்க்கும் மனோபாவம்தான் மற்ற நாட்டினருக்கு இருந்திருக்கும். இன்றும்கூட இரவில் பட்டினியுடன் தூங்கச் செல்கிற லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிற இந்தியாவில் ஒரு எழுபத்தி நான்கு வயதுக் கிழவர் உண்ணாமல் இருந்ததைப் பொருட்படுத்தி அவரது கோரிக்கைகளை எல்லாம் ஏற்றது அசாதாரணமானது. காந்தியின் பேராயுதமான உண்ணாவிரதம் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது என்கிற எண்ணம் இந்தியர்கள் அனைவரிடமும் வேரூன்றியுள்ளது. இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தொலைக்காட்சிகள் இதை பரபரப்பாக்கின. ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு தொலைக்காட்சி ஊடகத்தின் பங்கு மிகவும் கணிசமானது ஊடகங்கள் ஆரம்ப முதலே ஹசாரே குழுவினருக்கு ஆதரவாக செயல்பட்டன. ஹசாரேயின் எதிரிகளை தங்களது எதிரிகளாக அவை பாவித்தன.
உண்ணாவிரதம் ஜன லோக்பால் மசோதாவை சட்டபூர்வமானதாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. அது பற்றிய அனைத்து வினாக்கள், விடைகள், இடர்பாடுகள், விவாதங்கள் ஆகிய எல்லாவற்றையுமே ஊடகங்களின் வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உண்ணாவிரதத்திற்கும் ஊடகங்களுக்குமிடையே இருந்த நெருக்கத்தை உணர்ந்த உண்ணாவிரத எதிர்ப்பாளர்கள் ஊடகங்களை முதலில் தாக்கத் தொடங்கினர். ஹசாரே ஏன் தனது சொந்த கிராமமான ராலேகானில் நடத்தாது தன் போரட்டத்தை தில்லியில் நடத்துகிறார் என்கிற கேள்வியை எழுப்பியவர்கள் தில்லியில் அதை நடத்துவதாலேயே ஊடகங்களின் கவனிப்பை பெறத்துடிக்கிறார் என்று விமர்சித்தன. ஹசாரே குக்கிராமத்தில் நடத்தியிருந்தாலும் அத்தனை சேனல்களும் அங்கே குவிந்திருக்கும். இதைத்தான் சமீபத்தில் வெளிவந்த பீப்லி லைவ் இந்திப்படம் காட்டுகிறது. அதில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளப் போவதைப் படம் பிடிக்க தொலைக்காட்சி சேனல்கள் இரவு பகலாக கூடாரமடித்துள்ளது காட்டப்படுகிறது. பீப்லி லைவ் படத்திற்கும் ஹசாரே உண்ணாவிரதம் ஒளிபரப்பிற்குமான வித்தியாசம் முன்னது ஊடகத்தால் நடத்தப்படுகிறது. பின்னது ஊடகத்தின் முன் நிகழ்த்தப்பட்டது. லோக் பால் போராட்டம் நகர் சார்ந்த போராட்டம்தான். அதில் ஐயமில்லை. நகரத்திலிருந்து ஒரு போராட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்வதால் அது குறைபாடுடையதாகிவிடாது. இந்திய சுதந்திரப் போராட்டமே நகர்ப்புறத்தில் தொடங்கி மிகுதியாக நகர்ப்புறங்களிலேயே நடைபெற்ற ஒன்றுதான் என்பதை மறந்துவிடலாகாது. ஆனால் கடந்த பத்து வருடங்களாக மணிப்பூரில் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கெதிராக உண்ணாவிரதம் இருக்கும் ஷர்மிளாவை ஊடகங்கள் ஏன் பெருத்த அளவில் கண்டுகொள்ளவில்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஊடகங்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. அது ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த பிரச்னையை எழுப்புகிறது. அன்னா ஹசாரேயின் போராட்டம் இந்தியா முழுமைக்குமான ஒன்று என்பதால் அதற்கு அதிக கவனிப்பு கிடைப்பதாக ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
உண்ணாவிரதம் ஏன், ஹசாரேயின் கோரிக்கைகள் யாவை என்பதையெல்லாம் மக்களுக்கு ஊடகங்கள் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. ஏதோ லோக் பால் மசோதாவிற்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறதாம் என்று காற்று வாக்கில் பெறப்பட்ட அரைகுறை அறிவுடன் மக்கள் இருக்கவில்லை. காஷ்மீர், அசாம் பிரச்னகள் முளைத்த பொழுது பொதுமக்களில் பலர் அவை பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஹசாரே உண்ணாவிரதம் முன் வைத்த ஒவ்வொரு கோரிக்கையும் விவாதிக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன. இதற்கு தொலைக்காட்சிகள் மிக முக்கிய காரணம்.
லஹசாரே போராட்டத்தில் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அவருக்கு ஆதரவாளர்கள் என்றில்லை. ஊழல் சமுதாயத்தால் பலனடைபவர்களும் கலந்து கொண்டனர்.ஊழல் என்றவுடன் மற்றவர்களை நோக்கி கைகாட்டும் வழக்கம் எல்லோரிடமும் இருக்கத்தானே செய்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஹசாரே ஆதரவில் அரசியல் லாபம் பார்த்தது. அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் வாதங்களுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். பல சமயங்களில் தொலைக்காட்சி பெட்டி பட்டிமன்றம் போல காட்சியளித்தது. நாவன்மை மிகுந்த அருண் ஜேட்லி, பிரதமர் மன்மோகன் சிங் ஊழல் அரசாங்கத்தை எவ்வாறெல்லாம் தூக்கிப் பிடிக்கிறார் என்பதை பிட்டு பிட்டு வைத்த பொழுது அதே ராஜ்ய சபையில் அமர்ந்திருந்த பிரதமர் தலை குனிந்தவாறு அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார்வையாளர்கள்முன் அவர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட நிலையில் இருந்தார். இந்துவிற்கு எதிராகக் கையைத் தூக்கினால் அக்கையை வெட்டிவிடுவேன் என்று பேசி நிறைய கெட்ட பெயர்களையும் வழக்கையும் சம்பாதித்திருந்த வருண் காந்தி , ஹசாரேயின் போராட்டத்தை ஆதரித்து புதிய அவதாரம் எடுத்தார். பாராளுமன்றத்தின் சலுகைகள் இருக்கட்டும் மக்களின் சலுகைகள் என்னவாயிற்று என்ற அவர் பேச்சு தூள் கிளப்பியது.
லோக் பால் மசோதா எதிர்ப்பாளர்கள் என்னவெல்லாம் மொண்ணையான காரணங்களை முன் வைக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சிகள் உடனுக்குடன் தோலுரித்துக் காட்டின. அதிகப்படியான எதிர்ப்பாக ராகுல் காந்தி உட்பட அனைவரும் பாராளுமன்றத்தின் தலைமை பாதிப்பிற்குள்ளாகிறது என்பதை முன் வைத்தனர். உண்மை என்னவென்றால் பாராளுமன்றத்தில்தான் லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று ஹசாரே போராடினார். அவர் பாராளுமன்றத்தை மதிக்கிறார் என்பதைத் தானே அது காட்டுகிறது. பாராளுமன்றம் என்பது என்ன? அது மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய அவை. மக்களின் கோரிக்கையை பரிசீலித்து ஏற்பது பாராளுமன்றத்தின் உயரிய கடமையல்லவா? அப்பொறுப்பை தட்டிக் கழிப்பவர்களிடம் அதனை நினைவுபடுத்தி வலியுறுத்துகிற போராட்டத்தை பாராளுமன்றத்திற்கெதிரானது என்று எவ்வாறு குற்றம் சாட்ட இயலும்? இவ்வாறெல்லாம் ஹசாரே குழுவினர் பதிலளித்தனர். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு பதில்களைத் தயார் செய்தன.
இப்படியே ஒவ்வொருவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தினால் என்ன ஆவது என்கிற கேள்வியை அரசாங்கம் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் எழுப்பினர். எனக்குத் தெரிந்தவரை ஊடகங்களோ ஹசாரே இயக்கத்தினரோ இதற்கு சரியான பதிலைத் தரவில்லை. ஏதோ அன்னா ஹசாரேதான் உன்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது போல் இக்கேள்வி நினைக்கத் தூண்டுகிறது. இதைத் துவக்கியவர் மகாத்மா காந்தி அல்லவா? எனவே இந்த ஆயுதத்தை அவரிடமிருந்தே யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டிருக்கலாம். சுதந்திரம் அடைந்த கடந்த அறுபத்தி நான்கு வருடங்களில் சமூக விரோத சக்திகள் ஏன் இதைக் கையில் எடுக்கவில்லை? கறுப்புப் பண முதலாளியோ லஞ்சம் வாங்கி அகப்பட்டுக் கொண்ட அதிகாரியோ ஏன் உண்ணாவிரதத்தில் இறங்கவில்லை? தாவூத் இப்ராஹிம் உண்ணாவிரதமிருந்து தன் மீதுள்ள வழக்குகளை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று ஏன் நினைக்கவில்லை? உண்ணாவிரதம் ஒரு அறப்போராட்டம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே துரோகிகள் அதை செய்தால் அதற்கு ஆதரவு தரமாட்டார்கள். ஒரு வேளை ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முன் மாதிரியாகக் கொண்டு நாளை ஒரு மோசடிப் பேர்வழி அல்லது பயங்கரவாதி ஆள் பலத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்வது? அரசாங்கம் ஹசாரே போன்றவர்களுக்கும் தீய சக்தியை உருவகப்படுத்துபவர்களுக்கும் இடையாயான வித்தியாசத்தை உணர்ந்து கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை அரசாங்கத்திற்கு எவரும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை.
அன்னா ஹசாரே மீதே ஊழல் குற்றச்சாட்டினை காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி சுமத்தினார். சாவந்த் கமிஷனின் அறிக்கையை அவர் தனக்கு ஆதாரமாகக் காட்டினார்.
ஹிந்த் ஸ்வராஜ் ட்ரஸ்டிலிருந்து ஹசாரேயின் அறுபதாவது வயது கொண்டாட்டத்திற்கு இரண்டு லட்சத்து இருபதாயிரம் செலவழிக்கப்பட்டது என்பதுதான் அக்குற்றச்சாட்டு. காங்கிரஸ்காரர்களாலேயே அக்குற்றச்சாட்டை மேலெடுத்து செல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு ஹசாரே மீதான அபிமானம் நாடு முழுவதும் கரை புரண்டோடியது. பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் பற்றியெல்லாம் சமீப காலங்களில் கேட்டுப் பழகிய மக்களுக்கு அச்சிறுதொகை உப்பு பெறாத விஷயமாகப் பட்டது. அத்தொகை திருப்பி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனிஷ் திவாரியும் தொலைக்காட்சி கேமாராக்கள்முன் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரது குற்றச்சாட்டிற்கான உரிய பதிலை ஹசாரேயாலோ அவரது ஆதரவாளர்களாலோ தரமுடியவில்லை என்பதுதான் உண்மை.
உண்ணாவிரத ஆதரவாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். வாழ்வின் அனுபவங்கள் பலவும் அவர்களுக்கு கிடைக்கு முன்னரே ஊழல் களத்தில் மட்டுமே அவர்களில் பலரும் விழுப்புண்கள் பெற்றுள்ளனர். அவர்களுடைய லஞ்சத்திற்கெதிரான போராட்டங்கள், அவற்றில் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகள், தோல்விகள் ஆகியனவற்றை அவர்களே ஊடகங்கள்முன் யாதொரு பயமுமின்றி பதிவு செய்யவும் இப்போராட்டம் வழி வகுத்து தந்தது. ஒரு லட்சம் பேர்கள் தில்லியில் திரண்டனர். `ஒரு லட்சம் பேர்கள் தானே. நாங்கள் நூறு கோடி மக்களின் பிரதிநிதிகள்` என்றெல்லாம் அரசியல்வாதிகள் கர்வத்துடன் பேசினார்கள். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அதனால் பதவி, அதிகாரம் ஆகியவற்றை சுகிக்கும் அரசியல்வாதிகள் அவ்வாறெல்லாம் பேசியது நகைப்புக்குரியதாக இருந்தது. ஒரு லட்சம் பேர்களின் உணர்வுகளை மதிக்காதது சிறுபான்மையினரை மதிக்க அவர்கள் தயாராக இல்லை என்பதைத் தானே காட்டுகிறது. நாடு முழுவதும் ஆதரவாகத் திரண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைவிட அதிகமானது. அதுதவிர ட்விட்டர் மற்றும் இணைய தளங்களில் ஆதரவு தெரிவித்தவர்களை கணக்கிலெடுத்தால் சில லட்சங்களைத் தாண்டும்.நேரடியாகக் கலந்து கொள்ளாவிடினும் இத்தகைய இயக்கத்திற்கு கோடான கோடி இந்தியர்களின் ஆதரவு உண்டு என்பது ஊரரிந்த ரகசியம்.
எல்லா மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர். திடீரென தில்லி இமாம் இதில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிக்கை விடுத்தார். வந்தே மாதரம் என்ற முழக்கமும் பாரத மாதா வணக்கமும் இஸ்லாமின் இறை நம்பிக்கைக்கு ஒவ்வாதது என்று அவர் எச்சரித்தார். இதற்கு பிற முஸ்லீம் தலைவர்கள் ஆதரவு கொடுக்காதது மட்டுமின்றி எதிர்க்கவும் செய்தனர். இந்த விவாதங்கள் பத்திரிகைகளில் மட்டுமே இடம் பெற்றன. உண்ணாவிரதம் முடிந்த பின்னர் ஹசாரேவுக்கு தேன் கலந்த இள நீர் பானம் வழங்கிய இரு சிறுமிகளில் ஒருவர் முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர் தலித்.
ராம்லீலாவில் உண்ணாவிரதம் நடந்த அனைத்து நாட்களிலும் எல்லா நேரங்களிலும் அன்னா ஹசாரே தொடர்ந்து காட்டப்பட்ட வண்ணம் இருந்தார். லோக் சபாவையோ விஐபிக்களின் பேட்டிகளையோ ஒளிபரப்பிய பொழுதும் ராம் லீலா நடவடிக்கைகளை திரையில் மறு பாதியாகக் காட்டினர். ஹசாரே ஒன்றுக்கு போவது, ஆடை மாற்றுவதற்காக போவது தவிர மற்ற எல்லா சமயங்களிலும் மக்கள் முன்னிலையிலேயே காட்சி தந்தார். எப்பொழுதும் அவரிடம் உற்சாகத்திற்கு குறைவில்லை. அதே போன்று ஹசாரே குழுவின் முக்கியப் பிரமுகர்களான கிரன் பேடி, அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் போன்றோர் உடனுக்குடன் தங்கள் எண்ணங்களை கேமரா முன்பாக வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் வெளிப்படையானவர்கள், எதையும் மறைத்து வைக்காதவர்கள் என்கிற எண்ணம் உருவானது. மாறாக மத்திய அரசின், காங்கிரசின் பிரதிநிதிகள் அவ்வப்போது தொலைக்காட்சி கேமராக்கள் முன்தோன்றி குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு செல்வதைக்காட்டின. அதன் மூலம் அவர்கள் வெளிப்படுவதும் மறைவதுமாக, ஒளிந்து விளையாடுகிறவர்களாக தோற்றம் கொடுத்தனர்.
அம்ஷன் குமார்
- பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி
- அப்பா…! அப்பப்பா…!!
- சொர்க்கமும் நரகமும்
- வண்ணார் சலவை குறிகள்
- ‘யாரோ’ ஒருவருக்காக
- காயகல்பம்
- ஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்
- குரூரமான சொர்க்கம்
- அன்னா ஹசாரே -ஒரு பார்வை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011
- எது சிரிப்பு? என் சிரிப்பா ?
- புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்
- பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….
- கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா
- மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி
- ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்
- National Folklore Support Centre Newsletter September 2011
- முகம்
- வலியது
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6
- எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)
- அடுத்த பாடல்
- பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்
- பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!
- பீமாதாயி
- புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்
- குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- காணாமல் போனவர்கள்
- அவன் …அவள் ..அது ..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)
- எங்கிருக்கிறேன் நான்?
- கருணையாய் ஒரு வாழ்வு
- ஜ்வெல்லோன்
- மானும் கொம்பும்
- திரும்பிப் பார்க்க
- அந்த ஒரு விநாடி
- மன்னிப்பதற்கான கனவு
- சில்லரை
- நிலா மற்றும்..
- காரும் களமும்
- கனவு
- குப்பைத்தொட்டியாய்
- தாகம்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 9
- சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்
- உன் இரவு
- கனவுகளின் விடியற்காலை
- முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்
- அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.