கருணையாய் ஒரு வாழ்வு

This entry is part 36 of 54 in the series 4 செப்டம்பர் 2011

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல்.

கருணையாய் ஒரு வாழ்வு…:-
**************************************

செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.??
பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..?

செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை குறித்து ஏதும் சட்டங்கள் இயற்றப்படவில்லை

பிங்கி :- அவள் இப்படியே ஒரு வெஜிடபிளைப் போலக் கிடக்க வேண்டுமா சொல்லுங்கள்.. ஒரே ஒரு ஊசி போதுமே..

செவிலி :- வெஜிடபிள் என்று யார் சொன்னது.. மூளைதான் கோமாவில் இருக்கு.. எந்நேரமும் நினைவு வரலாம்.. இதயம் துடிக்குது., மூச்சு விடுகிறாள்.. சுவாசிக்கிறாள்.. காய்கறிகள் சுவாசித்து பார்த்திருக்கிறீர்களா..?

பிங்கி :- காய்கறிகளும் சுவாசிக்கும். சுருங்கும். அழுகும். அதுபோல் இவள் சுருங்கிக் கொண்டிருக்கிறாளே..

செவிலி :- வயதானால் எல்லாரும் சுருங்குவார்கள்.. முதுமை அனைவருக்கும் வருவது. உங்களுக்கும் எனக்கும் கூட. சுருக்கங்கள் வரும் சிறிது நாளில். முதலில் வெஜிடபிள் இல்லை அவள். அப்படிச் சொல்வதை நிறுத்துங்கள்.. எங்களுக்கு அவள் ஒரு உயிர். மனுஷி..

பிங்கி :- கூண்டுக்குள் வளர்க்கிறீர்கள் அவளை செல்லப் பிராணி போல . உணவும் நீரும் மருந்தும் கொடுத்து,, அடைத்து வைத்திருக்கிறீர்கள். திறந்து விடுங்கள்.. முடமான புறா போல முடங்கிக் கிடக்கிறாள் அவள். ஏதோ ஒரு மனித மிருகம் பிறாண்டியதை .,அதன் தழும்புகளை சுமந்தபடி அதன் சாட்சியாய் விரிந்த விழிகளோடும்., முறுக்கிய கரத்தோடும்..ஒரு அதிர்ச்சியான எடுத்துக்காட்டாய்..

செவிலி :- இல்லை அப்படி இல்லை.. அவள் மூளை நரம்புகள் செயலிழந்தது உண்மை.. ஆனால் எப்போதேனும் விழிப்பு வரக்கூடும். அதில் அவள் கனவைப் போல தன் பழைய வாழ்வைக் காணக்கூடும். தன் காதலனோடு கை கோர்த்து அலைந்த நாட்களை.. போன பத்து வருடங்கள் வரை அவன் இவளுக்காக காத்துக் காத்துக் கிடந்த நாட்களை உணர முடியும்.
அவள் முயன்று கொண்டே இருக்கிறாள்.. இது ஒரு நீண்ட நெடிய பயணம்தான் அவள் வாழ்வில்.. நிச்சயம் வெளிவருவாள்..கர்ப்பத்தில் கிடக்கும் அபிமன்யு போல அவள்.. தன் சக்கர வியூகத்தை உடைத்து வெளிவருவாள்..

பிங்கி :- இத்தனை நீண்ட நாட்களாகிவிட்டதே.. 38 வருடங்கள்.. உடலால் முடியவில்லையே.?.

செவிலி :- உங்களுக்கு ஒன்று தெரியுமா.. அவள் மாதாந்திர தொந்தரவுகளைக் கூட நாங்கள் பார்த்து சுத்தம் செய்திருக்கிறோம். இப்போது அதைக் கடந்து விட்டாள் அவள்.. எங்களுக்கு ஒருபோதும் அருவருப்பு ஏற்பட்டதே இல்லை..எங்கள் குழந்தை போல அவள்.. மாங்கலாய்டு., ஸ்பாஸ்டிக்., மெண்டலி டிஸ்ஸாடர் உள்ள குழந்தைகள் உள்ள பெற்றோர் என்ன செய்வார்கள்.. அதைவிட அதிகம் ஒன்றும் நாங்கள் செய்து விடவில்லை..

மனதின் செயல்பாடு எண்ணங்களில் உறைந்திருக்கிறது… ந்யூரான்களில் பொதிந்திருக்கிறது.. ஏதேனும் அதிசயம் நடக்கலாம்.. அவள் விழிப்பாள்.. அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது . எங்களைப் பார்த்து புன்னகைக்க முடியும். அப்போது அவளைப் பாதுகாக்காமல் விட்டோமே என தோன்றக்கூடாது.. ஒரு உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்..?மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி தாக்கினால் மரணம்தான் என முடிவு செய்யாமல் 47 வயதுவரை போராடிய அனுராதாவை தெரியுமா உங்களுக்கு.. அதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.. அதற்காக தன் உடலை தானமாக கொடுத்து சென்றிருக்கிறாள் அவள்..
அவளும் என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் என தொலைக்காட்சியில் கேட்டவள்தான்.. உயிரை நாம் படைக்காத போது எடுக்க என்ன உரிமை இருக்கிறது..

பிங்கி :- வலியோடு வாழட்டும் என்கிறீர்களா..

செவிலி :- வலி அவளுக்கல்ல பார்க்கும் நமக்குத்தான்.. அதுவும் நாம் அவளுக்கு சேவை செய்வதால் அல்ல.. அவள் நினைவுக்கு வரவேண்டுமே என்ற வலிதான்..எத்தனையோ நாய்கள் எச்சமிட்டு அலைகின்றன.. அவற்றை கழுவி விட்டு நாம் வாழ்வதில்லையா.. அதுபோல் அவளுக்கு நடந்த அநீதியை துடைத்துவிட்டோம் நாங்கள் பீட்டா டையீனுடன்.

பிங்கி :- இனியும் உங்களைப் போல யார் பார்ப்பார்கள்.. அவளின் நிலைமை என்ன..
பராமரிப்பு கிடைக்காவிட்டால் பட்டுப் போகும் மரங்கள் உண்டு.. அதுபோல பராமரிப்பை நிறுத்துங்கள்..கோசாலைகளில் பராமரிக்கப்படும் வயதான மாடுகளைப் பார்ப்பது போல் வருத்தமாய் இருக்கிறது..

செவிலி :- அப்படியானால் பால் கொடுத்தால் உபயோகம்…. இல்லாவிட்டால் வெட்டிப் புதைப்பதா..
மனசாட்சியுடன் பேசுங்கள்.. அவள் வாழ்வை அவள் தீர்மானித்து இருக்கிறாள்.. எங்கள் பரமரிப்பால் அல்ல.. அவள் வாழவேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறாள்.. அவள் கைகளைப் பார்த்தீர்களா அதில் ஒரு உறுதி தெரியும்.. எவ்வளவு ஆண்டுகளானால் என்ன? மீண்டெழுந்தால் அது ஒரு திருவிழாதான்.. உலகுக்கு உரக்கச் சொல்லுவோம் அவளின் உயிர்த்தெழுதலை..

பிங்கி :- இப்படி எத்தனை வருடங்கள் முடியும் உங்களால்..

செவிலி :- நான் இருக்கும் வரை நான்.. அல்லது என்னைப் போல இன்னொருத்தி.. எல்லாரும் ஒரு முடிவோடே இருக்கிறோம் ஏனெனில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இவள் எங்களுள் ஒருத்தி.. எங்களோடு ரத்தமும் சதையும். உயிருமாக உலா வந்தவள்.. கருணை என்று சொல்வதை விட கடமை என்றே நினைக்கிறோம்.. அந்த கால கட்டத்தில் எனக்கு கூட இதேபோல நடந்திருக்கலாம். தவறாக நினைக்காதீர்கள் . உங்களுக்கும் கூட நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் நாம் இப்படி ஒரு படுக்கையில் இருந்தால் நம்மை வெஜிடபிளாக வெட்டி எறிய சம்மதிப்பீர்களா..

சங்கராச்சாரியார் சொல்வார் வீட்டினுள்ளேயே நாம் நம் வதைப் பொருட்களை வைத்திருக்கிறோம் என .. கத்தி., அரிவாள் மணை., அம்மி., ஆட்டுக்கல்.. அடுப்பு., நெருப்பு ஏன் தண்ணீர்க் குடம் என.. ஒரு எறும்புக்குக் கூட தண்ணீர்க்குடத்தால் தீமை ஏற்படலாம் என சொல்வார்.

ஜைனத்துறவிகள் தாம் செல்லும் வழி எல்லாம் மயில் தோகையால் வழி உண்டாக்கியபடி செல்வார்கள் . கவனித்திருக்கிறீ்ர்களா.. ஓரறிவு படித்த உயிரினம் கூட துன்பப்படக்கூடாது என நினைப்பதுதான் மனித இயல்பு.. அப்படி இருக்கும் போது ஆறறிவு படைத்த அவள் என்ன குற்றம் செய்தாள் அழிக்க..

இருக்கட்டும் ..அவள் வாழ்வை அவள் தீர்மானித்திருக்கிறாள்.. வாழ்ந்தே தீர்வதென.. இதற்கு நடுவில் அவள் இருப்பதா ., இறப்பதா என கருத்து சொல்ல., முடிவெடுக்க நாம் யார்.. அவள் விரும்பும் காலம் வரை இருப்பாள்.. உயிர்த்தெழலாம். அல்லது அந்த போராட்டத்தில் வெல்ல முடியாமல் இறக்கலாம். ஆனால் முடிவெடுக்க வேண்டியவள் அவள்.. எத்தனை வயது வரை வாழ்வது .. அதுவும் கருணையாய் வாழ்வதா., சாவதா என்பது..

இந்தாருங்கள் இனிப்புக்கள்.. அவள் மீண்டெழுவாள் என்ற நம்பிக்கையோடு உண்ணுங்கள்.. உங்கள் ஆதங்கமும் கூட அவள் உணரக்ககூடும்.. நல்லதே நடக்கும். நாங்கள் இருக்கிறோம் அவளுக்கு. நிம்மதியோடு செல்லுங்கள்

Series Navigationஎங்கிருக்கிறேன் நான்?ஜ்வெல்லோன்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    chithra says:

    good attempt ..very touching
    “..அவள் வாழ்வை அவள் தீர்மானித்திருக்கிறாள்” that is the point

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *