இந்தி : அவத் நாராயன் சிங்
தமிழில் : முனைவர் தி.இரா.மீனா
“உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் நான் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் “அவன் மிக இயல்பாகச் சொன்னான். அறிமுகமில்லாத அந்த மனிதனின் பேச்சு என்னைச் சிறிது ஆச்சரியப் படுத்தியது.”எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் ” நான் மிக பணிவாய்ச் சொல்லி விட்டு “நாம் பரிச்சயமானவர்களா?”என்று கேட்டேன்.
“பரிச்சயம் என்றால் உங்கள் பார்வையில் என்ன பொருள்?”
நான் உடனடியாக எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருந்தேன்.ஒரு திருப்தியான பதிலைப் பெற்றவனைப் போல தொடர்ந்தான்.”நீங்கள் நம்பகமானவராகத் தெரிகிறீர்கள். இது எனக்குப் பெரிய விசயமில்லை யென்றாலும் சரியான சந்தர்ப்பத்தில் இதை எப்படி பயன் படுத்திக் கொள்வது என்று எனக்குத் தெரியும். இதில் உங்கள் ஆலோசனையைப் பெறுவது எவ்வித கெடுதலும் தராது. தந்தாலும் எனக்குக் கவலையில்லை.”
நெருக்கத்தை வலிய வரவழைத்துக் கொண்டவனாக அவனுக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி என்றேன். என்னுடைய குரல் தொண்டைக் குள்ளேயே அடங்குவது போல உணர்ந்தேன்.
அவன் என் முக உணர்வுகளைப் புரிந்து கொண்டான்.” வார்த்தை களைக் கடனாக்குவது ரொம்பவும் அபாயமானது. அது மனிதர்களின் முகத் திரையைக் கிழிப்பதுடன் செயற்கையாகவும், பொருளற்றதாகவும் ஆக்கிவிடும்”
அவனுடைய பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியது.அவன் தோற்றமும், நடவடிக்கையும் ஆரம்பத்தில் அவன் ஒரு முட்டாள் என்ற அபிப்பிராயத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. அவன் இப்போது புத்திசாலியாகத் தெரிந்தான். “உம். என்ன சொன்னேன்? எனக்கு உங்கள் ஆலோசனை கண்டிப்பாகத் தேவைப் படுகிறது. ” திருப்தி அடைந்த குரலில் சொன்னான்.
பாறைக்கிடையில் கிடந்து நசுங்குவது போல என்னை உணர வைத் தான்.” நான் உங்களை எந்தவித வலைக்குள்ளும் சிக்க வைக்கவில்லை. நண்பர்களும் தெரிந்தவர்களும் என்னைச் சதிகாரன் என்றும் , வஞ்சகன் என்றும் சொல்வார்கள். ஆனால் அது உண்மையில்லை. நான் பேசுவது எவ்வளவு உண்மையானது என்பதை உங்களால் உணர முடியும். நான் என்னை எந்தத் தவறுமில்லாதவன் என்று சொல்லிக் கொள்ளமுயலவில்லை.
எதையும் மறைக்கும் விருப்பமும் எனக்கு இல்லை” என் மன நிலையை உணர்ந்தவன் போலப் பேசினான்.
நீங்கள் உண்மையானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” பதில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயத்தில் சொன்னேன்.
“என்னைப் பற்றி எதுவும் தெரியாத போது நீங்கள் எப்படி என்னை உண்மையானவர் என்று சொல்ல முடியும்.அந்த பிரகடனம் பொய்யானதும் அர்த்தமில்லாததுமாகும்”
நெருக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டு என்னைத் தாக்க வேண்டும் என்பது போலவே அவன் பேசுவது தெரிந்தது. பலமாக ஆட்சேபம் செய்ய நினைத்தாலும் முடியவில்லை. சமாளித்து ” ஒருவன் தன் தோற்றத்தாலும், பேச்சாலும் தான் யார் என்று காட்ட முடியும். அதற்கு எந்த அடையாள அட்டையும் தேவையில்லை.”என்றேன்.
“நீங்கள் அப்பாவியாகத் தெரிகிறீர்கள்.ஒரு திட்டத்தில் உங்களைப் பலியாக்கவே நான் இப்படிப் பேசலாம் இல்லையா?”
“எந்தச் சூழ்நிலைக்கும் நான் தயாரானவன்தான்” என்று சாதாரணமாகப் பேசுவது போலச் சொன்னேன்.
“எவ்வளவு நாளாக இந்த ஊரில் இருக்கிறீர்கள்?’என்னை அறிய முயல்வது போலக் கேட்டான்.இது மற்ற கேள்விகளோடு தொடர்புடையதாகத் தெரிந்தாலும் அவன் நோக்கத்தை அறிய முடியவில்லை.உரையாடலை ஒரு வழியில் நான் எடுத்துச் செல்ல முயற்சித்தாலும் தோல்வியே கிடைத் தது. “நான் எவ்வளவு வருடங்களாக இங்கிருக்கிறேன் என்று ஞாபகமில்லை.அது முக்கியமானதாகவும் எனக்குத் தோன்றவில்லை.”
“ஆமாம். ஒருவரால் எவ்வளவுதான் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்? தவிர இவையெல்லாம் ஞாபகத்திலிருக்க வேண்டியவையல்ல.நான் இந்த விசயத்தை என் மனைவியிடமும் ஆலோசிக்க விரும்பினேன். ஆனால் அவளுக்கு இதெல்லாம் புரியாது. தவிர நமக்கு நெருக்கமானவர்கள் பாரபட்சம் இல்லாத ஆலோசனைகளைத் தர முடியாது” அவன் பேச்சு சலிப்பூட்டிற்று.
நான் வலைக்குள் விழுந்ததை உணர்ந்தேன். “நீங்கள் சொல்வது சரிதான்” அவன் வேகத்தைத் தடுக்கும் வகையில் சொன்னேன்.
“எதைச் சரியென்கிறீர்கள்?” சரி என்பதன் அர்த்தமென்ன? சரி, தப்பு என்று எதையும் சொல்ல முடியாதென்கிறேன் ” தப்பு கண்டுபிடித்ததைப் போலக் கேட்டான்
“ஓ.கே. அது தப்புதான்” ’
“அப்படியும் சொல்ல முடியாது. இந்த மாதிரி விசயங்களுக்கு ஃபார்முலா எல்லாம் இல்லை”
“சரி . அது தப்பும் இல்லை. சரியும் இல்லை .ஒப்புக் கொள்கிறேன்” என்றேன்.
“சலுகை தருவது எதையும் முழுமைப் படுத்தாது. ஒப்புக் கொள்வதன் மூலமாக நம் இயலாமையைத் தான் வெளிப்படுத்துகிறோம்” நான் அமைதி யானேன். அவன் தொடர்ந்தான். “இது பெரிய அளவில் விவாதிக்கப் பட வேண்டிய விசயம். நேரம் விரயமாவது போல உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. சொல்லப் போனால் எனக்கு நிறைய நேரமி ருக்கிறது. எதையும் சுருக்கமாகச் சொல்ல முடியாததே என் பிரச்னை. நேரமேயில்லை என்று எல்லோரும் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.”
அவன் கன்னங்கள் கோணுவது போல இருந்தது. “இது என் பழக்கம். பழக்கங்களை நான் கெட்டவையாக நினைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பழக்கமிருக்கும். பழக்கங்கள் இல்லாத போதுதான் வாழ்க்கை பிரச்னைக்குரியதாகும். உங்களுடைய பழக்கம் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?”
எனக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. “துரதிர்ஸ்டவசமாக எனக்கு சொல்லிக் கொள்கிற மாதிரி எந்தப் பழக்கமும் இல்லை. ஏன் எனக்கு அந்த மாதிரியான பழக்கம் இல்லை என்று அறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.”
“இதில் எவ்விதக் கட்டாயமும் கிடையாது.என் அபிப்பிராயத்தில் முயற்சி என்பதற்கு அர்த்தமே இல்லை. சுய பாதுகாப்புக்காக மட்டுமே நம் உரையாடல்களில் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறேன்.
எனக்குக் கோபம் வந்தது.’மடத்தனமாகப் பேசுகிறீர்கள். உங்களை புத்திசாலி என்று நினைத்தது என் தவறு” வெடித்தேன்.
என் கோபம் அவனை மகிழ்ச்சிப் படுத்தியது. “சொல்லப் போனால் எல்லா பேச்சும் மடத்தனமானவைதான். சிலர் மட்டுமே அதை ஒப்புக் கொள் கிறார்கள். நீங்கள் அந்த வகை என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.அறிவைப் பொறுத்த வரை அதற்கு முகஸ்துதி ஆதாரம் என்று நான் நினைப்பதில்லை. அறிவுக்கு துணை என்று எதையாவது நினைக்கும் போது தன்னுடையதாக எதுவுமில்லாமல் போகிறது”
பேசாமலிருந்தேன்.
“என்னுடைய பேச்சு உங்களுக்கு வெறுப்பைத் தருகிறது. வெறுப்பு தான் மனிதர்களின் பலத்தை வளர்க்கிறது. நீங்கள் மட்டுமல்ல. என்னைச் சார்ந்தவர்கள் முட்டாள் என்று நேரடியாகவே சொல்கிறார்கள். ஆனால் அது என்னை பாதிப்பதில்லை.மற்றவர் நினைப்பதோ, சொல்வதோ யாரையும் பாதிக்க முடியாது. உங்களுக்குச் சலிப்பு தருவது எனக்கு பொழுது போக்கு என்பதுதானே உண்மை”
“இருக்கலாம்”
“இருக்கலாம் என்பது தவறு. இருக்கிறது என்பதுதான் உண்மை.நீங்கள் இப்போது ஊகமாக பேச ஆரம்பித்து விட்டீர்கள்””அழுத்தமாகச் சொன்னான்.
“உங்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா?மாற்றி மாற்றிப் பேசுகிறீர்களே ”
“ஒவ்வொரு புத்திசாலி மனிதனும் பேசுவது அப்படித்தான்.சரியான சிந்தனைகள் இல்லாதவன் முட்டாள் என்றால் இந்த உலகில் எல்லோரும் முட்டாள்கள் தான். நீங்கள் மடத்தனம் இல்லாதவரா? உங்கள் அனுமதியுடன் நான் உங்களை மடத்தனமானவர் என்று நிருபிக்கிறேன்”
நான் அவனை சரமாரியாக அடிப்பது போல கற்பனை செய்து மகிழ்ந் தேன்.அவன் வலியால் துடிப்பது போல் இருந்தது.”இப்போது உங்கள் முகத்தில் தெரிந்த பாவம் உங்கள் மடமையை வெளிப்படுத்திற்று. இது போதுமே’
எனக்குள் வெறி ஏற நான் அவனை அறைந்தேன். அவன் இரட்டை பலத்தோடு தன் கையை நீட்டித் தள்ள என் மூக்கில் பட்டு கீழே விழுந்தேன். நான் எழுந்திருக்க முயற்சி செய்வதற்கு முன்பே அவன் ஓடி வந்து என்னைத் தழுவிக் கொண்டான்.
“அதிகம் காயமில்லையே” கேட்டான்.
“அதிகம் ஒன்றுமில்லை. லேசாக வீங்கும்” சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்தேன். உணர்ச்சி எதுவுமில்லை.
“இதுதான் மடத்தனம்.இதுதான் வாழ்க்கையின் நிஜம். கவலைப் படாதீர்கள். உங்கள் காயம் சரியாகி விடும்”
’ஓ.கே. எதைப் பற்றி என்னோடு ஆலோசிக்க வேண்டும் ?’
ஞாபகமில்லை.”
’ரொம்பவும் மறதி அதிகமோ?”
’அதுதான் விதி. எனக்கு ஞாபகம் வரும் போது பேசலாம். அடிக்கடி இங்கு வருவீர்களா?”
’இல்லை. எப்போதாவதுதான்”
“இன்று இரவு என்னோடு தங்க முடியுமா?”
“வீட்டில் மனைவி காத்திருப்பாள். தனியாக விட முடியாது’
“நான் அப்படியெல்ல்லம் கவலை பட மாட்டேன். எனக்கு பிடிக்கவில்லை யென்றால் எங்கேயாவது தங்குவேன். உங்களுடன் இன்று தங்கட்டுமா?”
நான் தயங்கினேன். “பரவாயில்லை. நான் வீட்டுக்கே போய்க் கொள்கிறேன். என் மனைவிக்கு என்னைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அதுதான் சில நேரங்களில் பிரச்னையாகி விடுகிறது.”
நான் பேசாமல் இருந்தேன். “நான் கடுமையாகத் தாக்கி விட்டேன்”
“நான் தான் தொடங்கினேன்”
இந்த பேச்சு அவனுக்கு எரிச்சலூட்டியது.”திரும்பவும் ஃபார்முலாவா?ஏதோ நடந்து விட்டது. அவ்வளவுதான். ”
“நேரமாகி விட்டது.வீட்டுக்குச் செல்லுங்கள். இங்கு நிற்பதால் பிரயோ ஜனமில்லை’ என்றேன். ” எதைச் சாதிக்கவும் இங்கு நிற்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் புறப்படுங்கள்’. வேகமாகச் சொன்னான்.
“ஒத்தடம் கொடுங்கள். நாளைக் காலைக்குள் சரியாகி விடும்” சொல்லிக் கொண்டே எனக்கு முன்னால் புறப்பட்டான்.
———————
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?