காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட பதவி காரணமாய் எழுத்தாளர்களாக ஆக்கப்பட்டவர்களே அதிகம். புதுமைப்பித்தனின் மேதமையை வெகு சீக்கிரமே உணர்ந்து, விவாதத்திற்குள்ளான அவரது ‘சாபவிமோசனம்’ போன்ற கதைகளை வெளியிட்டு புதுமைப்பித்தன் வரலாற்றில் இடம் பெற்ற ‘கலைமகள்’ தான், பின்னாளில் கவைக்குதவாத, சில காவல்துறை அதிகாரிகளின் பிதற்றல்களை அவர்களது பதவிகாரணமாய் வெளியிட்டு சேறு பூசிக் கொண்டது. இன்றும் புதுமைப்பித்தன் பேசப்படுவதும் பதவி காரணமாய் தூக்கி நிறுத்தப்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதும்தான் யதார்த்தம். இதில் பரிதாபம் என்னவெனில் புதுமைப்பித்தனை இனம் கண்டு வெளிச்சமிட்ட சிறந்த இலக்கியவாதியும் தரமான பதிரிகையாசிரியருமான மதிப்பிற்குரிய வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களே இப்பழிக்கு ஆளாகி இருப்பதுதான்!
காக்கிச்சட்டை போட நேர்ந்ததாலேயே கல்லாக மனதை மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும், கலை நெஞ்சம் இயல்பிலேயே அமையப் பெற்றவர்கள், பாலைவனத்து நீரூற்று போல தமது இறுக்கமான பணிக்கிடையே இலக்கிய ஈடுபாட்டை பேணிக்காத்தே வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அபூர்வ காக்கிச் சட்டைக்காரரர் கவிஞர் பேனா மனோகரன் அவர்கள்.
இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியக் குடிமகனான அவர், ஈழத்தின் கல்லூரிக் காலத்திலேயே கவிஞராக அறியப்பட்டவர். தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்தபோதும் கவிதை வாசிப்பும், கவிதையாக்கமும் தொடர்ந்திருக்கின்றன. ஆனால் பிழைப்புக்காக ஏற்கநேர்ந்த காவல்துறை பணி காரணமாய் முடக்கப்பட்ட கவிதைமை- பணியிலிருந்த விட்டு விடுதலையான பின்னர் மீட்டெடுக்கப்பட்டதை பெருமிதத்தோடு இப்படி எக்காளமிடுகிறார்:
''பள்ளியில் பாரதியைப் படித்தேன் வெள்ளைச் சட்டை போட்டிருந்தேன் கல்லூரியில் காரல் மார்க்ஸ் படித்தேன் சிவப்புச் சட்டை போட்டிருந்தேன் காலம் என்மீது காக்கிச் சட்டை போர்த்தியது. விட்டு விடுதலையாகினேன். மறுபடியும் எனக்குப்பிடித்தமான கவிதைச் சட்டையோடு காலமெல்லாம் உங்களோடு நான் காலாற நடந்திடுவேன்".
பேனா.மனோகரன் அவர்கள் பணிக்காலத்தில் அவ்வப்போது எழுதிய கவிதைகளில் 35 கவிதை களைத் தேர்ந்து ‘கற்றறிந்த காக்கைகள்’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மனநிறைவைத் தருவன. கவிதைகளின் பாராட்டுக்குரிய முதல் அம்சம் அத்தனையும் புரிகின்றன! இன்றைய நவீன கவிதைக்காரர்கள் போல வாசிப்பவனுக்குப் புரிந்துவிடக்கூடாது என்கிற வறட்டுப் பிடிவாதமில்லாமல், தன் படைப்பு வாசகனைச் சென்றடைய வேண்டும் என்ற கவனத்துடனும், பொறுப்புடனும் கவிஞர் செயல்பட்டிருப்பதே அவரது வெற்றிக்குக் காரணம் எனலாம். பூடகமில்லாத, படிமம் பின்நவீனத்துவம் போன்ற மர்மங்களற்ற, இறுக்கமும் சிடுக்குமில்லாத, நெஞ்சை ஈர்க்கும் இனிய எளிய, கவிதைகள் இவை. இவரது பாடுபொருள் சிக்கல் இல்லாத, அன்றாடம் அனைவருக்கும் தென்படுகிற யதார்த்த காட்சிகள் என்பதால் வாசகருக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. யாப்புடைத்த முயற்சிகள் என்றாலும் மரபுக் கவிதைகளின் சந்தநயமும் உறுத்தாத எதுகை மோனை அணி அழகும் விரவி வாசிப்புக்கு ஆர்வமூட்டுவன.
முதல் கவிதையான ‘அற்றைத் திங்கள்’, செ.கணேசலிங்கம் அவர்களின் ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ போல கடந்த நாட்களின் நினைவை உருக்கமாகச் சொல்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையான ‘கற்றறிந்த காக்கைகள்’ மென்னகை பூக்க வைக்கும் ஒரு ரசமான கவிதை. காலத்துக்கேற்றபடி காக்கைகளும் தங்கள் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு ‘கமண்டலத்தைக் கவிழ்த்த காக்கைகளாக்கும் நாங்கள்’ என்று கலகம் செய்யக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுவது ரசமான கற்பனை.
புலம் பெயர்ந்த வலியை ‘அணில்’ என்னும் சின்னக் கவிதையில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். ‘புலம் பெயர்ந்த புங்கை மரம்’, ‘அகதி அணில்’ என்னும் பதிவுகள் புலம் பெயர்ந்த அகதி வாழ்வின் உருக்கமான குறியீடுகள்.
புதிதாகக் கட்டிய வீட்டின் முன் புறத்து புங்கைமரம் வெட்டப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழும் பறவைகளுக்காக இரங்கும் ‘வீடும் கூடும்’ கவிதையிலும், முச்சந்தியில் சடைத்து நின்ற வேப்ப மரமொன்று வெட்டப்பட்டபோது ‘மனுநீதி மனிதனுக்கு மட்டும்தானா?’ என்று விசனப்படும் ‘வேப்பமரத்திடம் ஒரு விசாரணை’ என்ற கவிதையிலும் கவிஞரின் உயிர்நேயத்தைக் காண்கிறோம்.
அற்ப நோய்க்கும் ஆயிரக்கணக்கில் சிகிச்சைக்காக கொள்ளையடிக்க முயலும் இன்றைய அலோபதி மருத்துவர்களைக் கிண்டலடிக்கிறது ‘பாலுண்ணிகள்’ என்ற கவிதை. ‘உறவுகள்’ என்ற கவிதைஇன்றைய சில சௌகரியங்களால் ஏற்படும் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. கூரியர் சேவையால் தபால்காரரின உறவு தொடராத யதார்த்தத்தை இக்கவிதை பேசுகிறது. ‘அக்னிக்கோளம் ஆகும் பூமி’என்கிற கவிதையில் கவிஞரின் லோகோதய அக்கறையைப் பார்க்கிறோம்.
‘நெல் விளைந்த வயல்களில் கல் விளைந்து கட்டங்கள்’ –
என்று தொடங்கி, மணல் கொள்ளையால் மறைந்து வரும் ஆறுகள், இறால் பண்ணைகளால் இழக்கும் மலர்த் தோட்டங்கள், இரும்பு ஆலைகளால் மறைந்துவரும் கரும்புத்தோட்டங்கள்….என மனிதர்கள் இயற்கையைச் சூறையாடி மறுபடியும் பூமியை அக்னிக்கோளம் ஆக்கும் கொடுமையை ஆற்றாமையோடு விவரிக்கிறது கவிதை.
மேனாட்டு இயற்கை உபாசகரான கவிஞர் Wordsworth போல, பேனா.மனோகரனும் இயற்கையழகில் நெஞ்சைப் பறிகொடுத்து, அதைத் தன் கவிதைகளில் பதிவு செய்பவர். அவருடைய கவிதைகளில் அதிகமும் அத்தகையவையே. ‘இயற்கையின் இரங்கராட்டினம்’ எனும் கவிதையை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ‘Doffodils’ கவிதையில் Wordsworth தான் கண்ட மஞ்சள் மலர்களில் மயங்கிய காட்சியை விவரிப்பது போல,
‘தகத்தகாயமாய்/ தங்க அரளிகளின்/ தீப ஆராதனைகள், அக்னித் தூக்கலாய்…../ ஆகாயத்துக்கு அர்ச்சனை செய்யும்/
இட்டிலிப்பூக்கள் …………………………………………….. அடடா….இஃது / இயற்கை நங்கை நடாத்தும்/ இரங்கராட்டினம்!’ – என்று வியக்கிறார்.
ஈழம் பற்றி எரியும் கொடுமையையும் ‘தீ இனிது….’ என்று அங்கதமாய் எழுதுகிறார்: ‘கீழ்வெண்மணியில்/ ஏர்வாடியில்/ தருமபுரியில்/ கோத்ராவில்/ குடந்தையில்/ பானிப்பட்டில்/ ஈழத்தில்/ ஈராக்கில் பூமிப்பந்தின்/ எங்காவது ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது மனித ஜீவிதம் எரிதலும் உயித்தலுமாய்’.
சில ஆண்டுகளுக்கு முன் உலகையே அதிரச் செய்த சுனாமியின் இரக்கமற்ற கோரத்தாண்டவம் இவரை வெகுவாகப் பாதித்ததை ‘ஆழிப்பேரலை’ என்ற கவிதை காட்டுகிறது. ‘சூரசம்காரத்தின் சரித்திரம் தெரியும் – இந்த ஈர சம்காரத்தின் இதிகாசம் என்ன?’ என்று வினா எழுப்புகிறார்.’கண்ணில் நீர் வரலாம்/ கடல் வரலாமா?’ என்று மறுகுகிறார்.
இன்னும் எத்தனையெத்தனை ஏக்கங்கள், வியப்புகள், விசாரணைகள் சமூகக்கவலைகள்! ‘பெட்டை’, ‘அஸ்தமனம்’, ‘சீதனச் சிறைகளில் சீதைகள்’, ‘சித்தார்த்தனைத் தேடும் போதிமரங்கள்’ என ஆரோக்கியமான சிந்தனைகளை உள்ளடக்கிய கவிதைகள். எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன.
இவரது உவமைகள் வித்தியாசமானவை. இரை தாக்குதலுக்காக தரை இறங்கும் புறாக்களின் லாகவம் இராணுவ ஹெலிகேப்டர்களின் லாகவம் போல இருக்கிறதாம். சில வித்தியாசமான சொல்லாக்கங் களும் – ‘மரக்குருதி’, ‘மழலை மச்சங்கள்’ போன்றவை கவிதை வாசிப்பை சுகமாக்குகின்றன. வறட்டுத் தனமான இன்றைய புதுக்கவிதை ஆக்கங்களில் அலுத்துப்போன கவிதைப் பிரியர்களுக்கு இவரது கவிதைகள் ஆசுவாசத்தையும் ஆனந்தத்தையும் அளிப்பவை. 0
நூல் : கற்றறிந்த காக்கைகள். ஆரிரியர் : பேனா.மனோகரன்.
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை.
==
– வே.சபாநாயகம் –
- மந்திரப்பூனை. நூல் பார்வை.
- வரவேற்போம் தீபாவளியை!
- Murugan Temple Maryland Upcoming Events
- கூடங்குளம் மின்சக்தி ஆலையம்
- மிம்பர்படியில் தோழர்
- ஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்து
- விருந்து
- வீட்டுக்குள்ளும் வானம்
- அவசரமாய் ஒரு காதலி தேவை
- ஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….
- ஆபிஸ் கைடு : புத்தக விமர்சனம்
- சொல்லி விடாதீர்கள்
- முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை
- சுடர் மறந்த அகல்
- The Hindu Temple, Happy Valley. Hong Kong `Skandha Sashti’
- விவாகரத்தின் பின்னர்
- ஃப்ரெஷ்
- ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)
- கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
- காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்
- தகுதியுள்ளது..
- ஓய்வும் பயணமும்.
- அமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்
- உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,
- மென் இலக்குகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)
- அந்த நொடி
- பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…
- நெஞ்சிற்கு நீதி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
- சாத்துக்குடிப் பழம்
- திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்
- நீங்கள் பேஸ் புக், ட்விட்டர் உபயோகிப்பவரா
- பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி
- முன்னணியின் பின்னணிகள் – 10 சாமர்செட் மாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 12