அக்கறை/ரையை யாசிப்பவள்

This entry is part 6 of 53 in the series 6 நவம்பர் 2011

அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி

அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்

எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை

நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்

அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது

இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14முடியாத் தொலைவு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *