காணாமல் போன ஒட்டகம்

This entry is part 4 of 39 in the series 4 டிசம்பர் 2011

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர்.

வளமான நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதிருந்த காலத்தில் வியாபாரி ஒருவனின் ஒட்டகம் காணாமல் போனது. பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் ஒட்டகத்தைத் தேடிச் சென்ற வியாபாரி வழியில் நால்வரைச் சந்தித்தான். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
“நாங்கள் பெருத்த துயரத்தில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டில் மந்திரிகளாக இருந்தோம். மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் கொடுங்கோல் ஆட்சி செலுத்தும் அரசனை விட்டு, வேறு இடம் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார் ஒருவர்.

“அப்படியா?” என்றான் வியாபாரி வருத்தத்துடன்.

“ஆமாம்.. நீங்கள்?” என்று கேட்டார் மற்றொருவர்.

“என்னுடைய காணாமல் போன ஒட்டகத்தைத் தேடிச் செல்கிறேன்” என்றான் ஆதங்கத்துடன்.

அதைக் கேட்டதும் நால்வரும் கூடிப் பேசினர். அவர்கள் பேசியதைக் கேட்க முயன்று தோற்றான் வியாபாரி.

அவர்கள் பேசிக் கொள்வதைப் பொறுக்காமல், “நீங்கள் என் ஒட்டகத்தைப் பார்த்தீர்களா?” என்று ஆவலுடன் கேட்டான்.

உடனே முதல் நபர், “உங்களிடம் ஒன்றைக் கேட்க வேண்டும்” என்றார்.

“என்ன?”

“உங்கள் ஒட்டகம் முடமா?”

“ஆமாம்.. ஒட்டகத்தை எங்காவது பார்த்தீர்களா?”

ஒன்றும் கூறாமல் அமைதியானார் முதல் நபர்.

இரண்டாம் நபர் “ஒட்டகத்திற்கு ஒரு பக்கக் கண் பார்வை கிடையாதா?” என்று ஆரம்பித்தார்.

“ஆமாம்.. ஆமாம்.. ஒட்டகத்தை எங்காவது பார்த்தீர்களா?”

ஒன்றும் கூறாமல் அமைதியானார் இரண்டாம் நபர்.

அடுத்து முன்றாவது நபர் “உங்கள் ஒட்டகத்தின் வால் சற்றே நீளம் குறைந்ததா?” என்று கேட்டார்.
“போதும்.. போதும்.. என்னைக் கேலி செய்தது. முதலில் ஒட்டகத்தை எங்கு பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்?” என்றான் வியாபாரி கோபத்துடன்.

ஒன்றும் கூறாமல் அமைதியானார் மூன்றாம் நபர்.

நான்காம் நபர் அடுத்ததாக, “ஒட்டகத்திற்கு இருமல் போன்ற உபதை இருந்ததா?” என்று ஆரம்பித்தார்.
வியாபாரி பன்மடங்கு கோபத்துடன், “ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்.. ஒட்டகத்தை எங்கே பார்த்தீர்கள் என்று சொல்கிறீர்களா.. இல்லையா?” என்று கத்தினான்.

முதல் நபர், “எங்களை மன்னியுங்கள். நாங்கள் யாரும்; ஒட்டகத்தைப் பார்க்கவில்லை” என்று சொன்னதுதான், உடனே வியாபாரி, “என்ன விளையாடுகிறீர்களா? ஒட்டகத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று மேலும் கோபத்துடன் கேட்டான்.
“நாங்கள் யாருமே உண்மையில் ஒட்டகத்தைப் பார்க்கவில்லை” என்றார் உறுதியுடன் இரண்டாம் நபர்.

“என்ன கதை அளக்கிறீர்கள்? ஒட்டகத்தைப் பற்றி இத்தனை விவரங்கள் தெரிந்து கொண்டு, பார்க்கவில்லையென்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நீங்கள் பொய் சொல்கிறீர்கள். வாருங்கள்.. எங்கள் அரசரிடம். அவரே தீர்ப்புச் சொல்லட்டும்..” என்று நால்வரையும் அரசரிடம் அழைத்துச் சென்றான்.

வுpயாபாரி நடந்த விவரங்கள் அனைத்தையும் அரசரிடம் கூறி நீதி சொல்லும்படி வேண்டி நின்றான்.

அரசனிடம் நால்வருமே, ஒட்டகத்தை ஒளித்து வைக்கவில்லை என்று உறுதி அளித்ததால், “அப்படியென்றால் ஒட்டகம் பற்றிய விவரங்கள் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டார்.

முதல் நபர், “அரசே.. நான் முதலில் ஒட்டகத்தின் கால் தடத்தைக் கண்ட போது, ஒரு பாதச்சுவடு மட்டும் மற்றவற்றை விட ஆளமாக இருந்ததால், ஒரு கால் முடமாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையே சொன்னேன்” என்று கூறினார்.

அடுத்து, இரண்மாவது நபர், “நான் வழியில் ஒரு பக்கமாக இருக்கும் மரங்களில் மட்டும் இலைகள் உண்ணப்பட்டு இருப்பதைக் கண்டேன். மறுபக்கம் பழங்கள் காய்த்துத் தொங்கியும் உண்ணப்படாமல் இருப்பதைக் கண்டேன். அதனால் ஒரு பக்கப் பார்வை இல்லாது இருக்கலாம் என்று எண்ணினேன்” என்று கூறினார்.

“நான் வரும் போது, வழியில் சிறு சிறு இரத்தத் துளிகள் இருக்கக் கண்டேன். ஒட்டகத்தைப் பூச்சிகள் கடித்து காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்தி இருக்கலாம். அதைத் தடுக்கும் விதத்தில், அவற்றை ஓட்டும் வகையில் நீளமான வால் இல்லாது இருக்கலாம் என்று எண்ணினேன்” என்றார் மூன்றாவது நபர்.

“நாங்கள் வந்த பாதையில், ஒட்டகம் நடந்த பாதச் சுவட்டில் பின்னங் கால்கள் நிலத்தில் அதிகமாகப் படியாமல் இருந்தன. அதனால் ஒட்டகத்திற்கு உடல் நலக் குறைவு இருக்கலாம் என்று எண்ணினேன்” என்று தன் கூற்றிற்கு காரணத்தை விளக்கினார் நான்காம் நபர்.

நால்வரின் அறிவார்ந்த சொற்களைக் கேட்ட அரசர், “அப்படியா.. வியாபாரியே இந்த நான்கு புத்திசாலிகளை அழைத்து வந்ததற்கு நன்றி. ஒட்டகத்திற்கான விலையை நான் தருகிறேன்” என்று வியாபாரியி;டம் கூறி விட்டு, நால்வரிடமும், “நீங்கள் நால்வரும் எங்கள் நாட்டிலேயே தங்கலாம். கூர்ந்து நோக்கும் தன்மையும், புத்திச் சாதுர்யமும் மிக்க நீங்கள் எங்கள் அவையில் மந்திரிகளாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார்.

நால்வரும் அதற்கு உடன் ஒப்புக் கொண்டு, இந்தச் சிறந்த இந்திய அரசர் அவையில் பணியில் சேர்ந்து நாட்டை மேலும் சிறக்கச் செய்தனர்.

இஸ்லாமிய சமயத்தில் “நம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கை என்பது காணாமல் போன ஒட்டகத்தைப் போன்றது” என்ற கூற்று, இந்தக் கதை மூலமாக வந்ததென்று பலரும் கூறுவர். காணாமல் போன ஒட்டகம் மனிதனின் நம்பிக்கை. தங்கள் சக்தியைச் சாதுர்யமாகப் பயன்படுத்தி கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே அதைக் காண இயலும் என்பது இதனால் விளங்கும்.

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 21எங்கே போக விருப்பம்?
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

  1. Avatar
    nandhitha says:

    வணக்கம்
    நல்ல கதை. பாராட்டுக்கள் -தொடரட்டும் உங்கள் பணி,
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *