மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும். பிறர் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மாங்கொட்டைச் சாமி பேச்சு வராததுபோல் பாவனை செய்யும்.
மாங்கொட்டைச் சாமிக்குப் பின்னால் போய் பணிவிடைகள் செய்தால் இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் கற்கலாம், வசிய மந்திரம் கற்றுச் சகலரையும் வசப்படுத்திக்கொள்ளலாம் என்றெல்லாம் நப்பாசை கொண்டு திரிந்தவர்கள் சலித்துப் போய், ’இந்தச் சாமிக்கு தாதா கீக்கீ என்பதற்குமேல் எதுவும் பேசத் தெரியாது. போதாக்குறைக்கு இதற்கு புத்தி சுவாதீனமும் கிடையாது’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
சீலைப் பேன் போலத் தன்னை ஒட்டிக்கொண்டு கிடந்தவர்கள் தாமாகவே இப்படி உதிர்ந்துபோனதில் மாங்கொட்டைச் சாமிக்குப் பரம திருப்தி. யாராவது சாதாரணமாகக் கிட்டே வந்தால்கூட ‘தாதா கீக்கீ’ என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தது.
உயரம் நாலரை அடிக்குமேல் இருக்காது. தலை சிறுசாய் நீள் வட்டமாய் பெங்களூர் மாங்காயின் உள்ளே இருக்கிற கொட்டை மாதிரி இருக்கும். ஆகையால் அது ஊருக்கெல்லாம் மாங்கொட்டைச் சாமி. கற்பனை வளம் அற்ற சிலபேருக்கு மட்டும் வெறும் குள்ளச்சாமி.
மாங்கொட்டைச்சாமி நன்றாகத் தெளிவாகவே பேசும் என்பதை முதல் சந்திப்பிலேயே கவிஞர் புரிந்துகொண்டுவிட்டார். அப்படித் தூண்டித் துருவிப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுங்கூட அவருக்கு இல்லாதபடி மாங்கொட்டைச்சாமியே அவரிடம் பேச்சுக் கொடுத்துவிட்டது. ஒருவேளை கவிஞரின் நடை, உடை, பாவனைகளும் வழக்கமாகத் தென்படும் நபர்களைப் போலன்றி முற்றிலும் வித்தியாசமாகத் தோன்றியதால் இவரும் தனது ஜாதிதான் என்று அது கண்டுகொண்டுவிட்டதோ என்னவோ!
சித்தாந்தசாமி மடத்தில் அமர்ந்தும் கிடந்தும் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த ஆண்டிகள் கூட்டத்தில்தான் கவிஞர் மாங்கொட்டைச் சாமியை முதல் முதலில் பார்த்தது. இதில் ஆச்சரியம், மாங்கொட்டைச்சாமி தானாகவே முன்வந்து கவிஞரிடம் பேச்சுக் கொடுத்தது.
கவிஞர் வழக்கம்போல் இலக்கு இல்லாமல் ஜன நடமாட்டமுள்ள புதுச்சேரித் தெருக்களையெல்லாம் தாண்டி எல்லைப்புறத்து மடு, தோப்பு, துரவு என்று சுற்றித் திரிந்து சோர்ந்தபின் சிறிது இளைப்பாறச் சித்தாந்தசாமி மடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்.
இவர் போய்த் திண்ணையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டதும் மாங்கொட்டைச் சாமி அதுவாக வந்து அவர் எதிரில் நின்றது. கவிஞர் சுவரில் சாய்ந்திருந்த முதுகை நிமிர்த்தி மாங்கொட்டையைப் பார்த்தார். மாங்கொட்டையும் அவரை ஏற இறங்கப் பார்த்தது. பிடரியில் வால்போல் நீண்ட தலைப்பாகை யும் உடம்பை மூடிய கறுப்புக் கோட்டும் முழங்காலோடு நிற்கும் வேட்டியுமாக இருந்த கவிஞரைக் கண்டதும் மாங்கொட்டைச் சாமி சினேக பாவத்துடன் சிரித்தது. பிறகு,
”என்னைத் தள்ளினாலும் என்னை நம்பியவரைத் தள்ளேல்னு சொன்னது ஆரு?” என்று கேட்டது.
“பாம்பன் சாமிகள்னு நினைக்கிறேன். சரிதானா சாமீ” என்றார், கவிஞர்.
“நொம்ப சரி. நாஞ்சொல்றதும் அதான். என்னைத் தள்ளினாலும் என்னை அண்டினவனைத் தள்ளாதே. தெரியுதா?”
“சரி சாமி. ஆனா பாம்பன் சாமின்னு பேரு சொல்லறாப்பல உங்களை என்னன்னு சொல்லணும் சாமீ?”
“பேரா? எதோட பேரு? எதுக்குப் பேரு? எதுக்கு அடையாளமா ஒரு பேரு? அடையாளம் போன பெறகு எதோட பேரு?” என்று கேட்டுவிட்டுக் கீக்கீக்கீ யென்று சிரித்தது மாங்கொட்டைச்சாமி.
-2-
தினமும் ஹிந்து பேப்பர் வாசிக்கக் கல்வே காலேஜ் பேராசிரியர் சாமிநாத தீட்சிதர் வீட்டுக்குப் போகும் கவிஞர், அங்கே அவர் மகன் குஞ்சிதபாதத்திடம் தோழனைப் போலத்தான் பழகுவது. ‘அம்பீ, அம்பீ’ என்று ஆசையாய் அழைப்பார். அவனைத் தமக்குச் சமதையாய் வைத்துக் கொண்டு விவாதம் எல்லாம் செய்வார்.
அன்றும் தீட்சிதர் வீட்டுக்குப் போன கவிஞர், அம்பியிடம் பேச்சோடு பேச்சாக முதல் நாள் மதியம் சித்தாந்தசாமி மடத்தில் சந்தித்த பண்டாரத்தைப் பற்றி அங்க அடையாளங்கள், உருவ அமைப்புகள் எனச் சகலமும் விவரித்து ‘யார் அது’ என்று விசாரித்தார்.
“ஓ, அதுவா, நீங்க மாங்கொட்டைச்சாமியைத்தான் அங்க பார்த்திருக்கேள். ஆனா அதுவா உங்ககிட்டப் பேசித்துங்கறேளே, அதுதான் ஆச்சரியமா இருக்கு. அதுக்குப் பேச்சே வராதுன்னுதான் ரொம்பப் பேர் நினைச்சுண்டிருக்கா. ஆனா அது எப்பவாவது யார்கிட்டயாவது பேசணும்னு அதுக்கா தோணினா கொஞ்சமே கொஞ்சம் பேசும். பேச்செல்லாம் நேராத்தான் இருக்கும். ஆனா பூடகமா இருக்கும். அர்த்தம் விளங்கறாப்பலயும் இருக்கும், விளங்காத மாதிரியும் இருக்கும். அதுவாப் பேசினாத்தான் உண்டு, பேச்சுக் கொடுக்க யாராவது நெருங்கினா ‘தாதா கீக்கீ’ன்னு ஒளறிட்டு மின்னல் வேகமாத் துள்ளி ஓடிப் போயிடும்” என்றான் அம்பி.
“அம்பீ, அவர் லேசுப்பட்டவர் இல்லே. சரக்கு நிறைய இருக்கு, அவர்கிட்டே. அவரை விடப்படாது” என்றார், கவிஞர்.
“அது எங்கயும் இருக்கும், இல்லாமயும் போகும். திடீர், திடீர்னு வரும். வந்தது மாதிரியே திடீர் திடீர்னு ஓட்டமா ஓடி மறைஞ்சும் போயிடும். அது நம்மகிட்ட சிக்கினாத்தானே விடாம பிடிச்சு வெச்சுக்கறதுக்கு?” என்று சிரித்தான் அம்பி.
”பார்க்கிறதுக்கு நாப்பது வயசுக்குமேல இருக்காதுன்னுதான் தோணறது.”
”ஆனா, இங்கே பாண்டிச்சேரியிலே ரெண்டு மூணு தலைமுறையா அதை இதே கோலத்துலே கொஞ்சங்கூட முதுமை இல்லாம பார்த்துண்டு வரவா இருக்கா. அறுபது வருஷங்களுக்கு முன்னே கூட அன்னு கண்ட மேனிக்கு அழிவில்லாம அதே உடம்போட தான் இருக்காராம். எப்பவும் வெறும் கோமணத்தோட நிப்பார். சில சமயம் அதுவும் இல்லாம அலைஞ்சிண்டு இருப்பார். யாராவது கட்டிக்குங்க சாமீ, கட்டிக்குங்க சாமீனு ஒரு நாலு முழத்தைக் கையிலே ஏந்திண்டு பின்னாலயே ஓடுவா. அது சிரிச்சிண்டே அங்கயும் இங்கயும் ஓடி ஆட்டம் காட்டும். உடம்ப மூட எதுவும் இல்லாம இருக்கீங்களே சாமீ, இடுப்பிலயாச்சும் இதைக் கட்டிக்குங்களேன்னு கெஞ்சுவா. அது உடம்புத் தோலைக் கிள்ளிக் காட்டிச் சிரிக்கும். உடம்பை மூடறதுக்குத்தான் சருமம் இருக்கே போதாதான்னு அதுக்கு அர்த்தம்!
”ஒருக்கா பகல் பன்னண்டு மணியிருக்கும். தற்செயலா திண்ணைப் பக்கம் வந்தப்ப இது தூணைப் பிடிச்சுண்டு நின்னுண்டு இருந்தது. அண்ணைக்கு என்னவோ இடுப்புல முழங்கால் முட்டி வரைக்கும் ஒரு அழுக்குத் துண்டைக் கட்டிண்டு இருந்தது. என்னைப் பார்த்ததும் ’வா’ன்னு சைகை பண்ணித்து. கிட்டப் போனதும் துண்டைக் கொஞ்சமா விலக்கிக் காட்டித்து. என்னதுன்னு பார்த்தா அடித் தொடையிலே ஆழமான காயம்! அதிர்ந்து போயிட்டேன். ’ஐயோ, என்ன ஆச்சு’ன்னு பதறினேன்.
’நாயெ வெளையாட்டாக் கட்டிப் புடிச்சேன். அதுவும் வெளையாட்டாப் புடிங்கிடிச்சு’ன்னு சிரிச்சுது.
காயம் நாலு அங்குல நீளத்துக்கும் அரை அங்குலம் ஆழமாவும் புண்ணாவே ரணம் கட்டி ரத்தம் கசிஞ்சிண்டு இருந்துது. சாமி அதாவே ’ஒரு பிளாஸ்த்ரி இருந்தா போடறியா’னு கேட்டுது. ’இதோ’ன்னு உள்ள போனேன். பஞ்சு, பிளாஸ்த்ரி, டிஞ்ச்சர்னு எல்லாம் எடுத்துண்டு வந்து காயத்துக்குக் கட்டுப் போடலாம்னு உக்காந்தா அது என் கையைத் தட்டிட்டு ஒரே ஓட்டமா ஓடிடுத்து! ஆனா இதைவிட ஆச்சரியப்படும்படியா ஒண்ணு நடந்துது. மக்யாநா அது தெருவிலே சாவகாசமா நடந்து போயிண்டு இருந்ததைப் பார்த்துப் பின்னாடியே ஓடினேன். எதிரே நின்னு வழியை மடக்கினேன். மாங்கொட்டை சிரிச்சுது.
’என்ன சாமி, எங்கிட்ட காயத்துக்குப் பிளாஸ்த்ரி போடச் சொல்லிட்டு சரின்னு நா பிளாஸ்த்ரி போட வந்தப்ப கையைத் தட்டிட்டுப் போயிட்டியே, நாயமா’ன்னு கேட்டேன்.
’காயமா? என்ன காயம்’னு கேட்டுது, ஒண்ணுந் தெரியாத மாதிரி.
’என்ன சாமீ, தெரியாத மாதிரி கேக்கறே? அதான், தொடையிலே நாய் பிடுங்கின காயம்’னேன்.
‘காயமா? தொடையிலயா? எந்தொடையிலயா? எங்க பார்ப்போம்’னு தானே பார்த்துக்கறாப்பல குனிஞ்சு துண்டை விலக்கித் தொடையைக் காமிச்சுது. அங்க காயம் இருந்ததுக்கு ஒரு சின்னத் தடையத்தைக் கூட காணலே! நா அப்பிடியே மலைச்சுப் போயிட்டேன். ‘இதென்ன சாமீ மாயா ஜாலம்? எதுக்கு என்னை ஏமாத்தினே?’ன்னு கொஞ்சம் கோவத்தோடயே கேட்டேன். அது என்னடான்னா வெளையாட்டா சிரிச்சுது. ’எல்லாமே ஏமாத்தம்தானே’ன்னு சிரிச்சிட்டு ஓட்டமா ஓடிப் போயிடுத்து!”
கவிஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்றிலிருந்து அவரது தினப்படி ஊர் சுற்றலுக்கு ஓர் அர்த்தமாய் மாங்கொட்டைச் சாமியைத் தேடுவதும் ஒரு வேலையாகிப் போனது. அதுவாக விரும்பிக் கண்ணில் பட்டால்தான் உண்டு என்று மற்றவர்களூம் சொல்லக் கேட்டும் தேடலில் அலுப்புத் தட்டவில்லை.
-3-
ஈசுவரன் தர்மராஜா கோவில் தெருவிலேயே வசித்து வந்த நாகப் பட்டணத்து ராஜாராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருடைய தகப்பனார் தமிழில் மொழி பெயர்த்து வைத்திருந்த உபநிடதப் பிரதிகளை கவிஞர் சரி பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாய் எதிரில் வந்து குதித்தது, மாங்கொட்டைச் சாமி. முதுகில் ஒரு அழுக்கு மூட்டை! உள்ளேயிருந்து சிறு சிறு கந்தல் துணிகள் கிழிசல்கள் வழியாகப் பிதுங்கிக் கொண்டிருந்தன!
கவிஞருக்குப் பரம் சந்தோஷம். அதை வரவேற்க உற்சாகத்துடன் எழுந்துகொண்டார். ஆனால் மாங்கொட்டைச் சாமி ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ஓட்டமெடுத்தது. கவிஞர் விடவில்லை. பின்னாலேயே ஓடினார். கழுதைகள் மேயும் குட்டிச் சுவர் அருகே அதை மடக்கிப் பிடித்தும்விட்டார். அது கையை உதறித் திமிறிக் கொண்டு ஓடப் பார்த்தது. கவிஞர் பிடியை இறுக்கினார்.
“சாமீ, நீங்க யாருன்னு எனக்குச் சொல்லணும். உங்க சித்திகள் இன்னதுன்னு சொல்லணும். எதுக்காக ஒரு கந்தையை உடம்பிலே பட்டும் படாம சுற்றிக்கிட்டுத் திரியணும்? தெருவிலே நாய்களோட கட்டிப் புரண்டு வெளையாடறீங்களாம். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? எங்களுக்கு நீங்க சொல்லற சேதிதான் என்ன? எனக்கொரு மந்திரோபதேசம் வேணும் உங்க கிட்டேயிருந்து. தருவீங்களா? தந்துதான் ஆகணும். தரலேன்னா விட மாட்டேன்” என்று சாமியின் கையை மேலும் இறுக்கிப் பிடித்துத் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
குட்டிச் சுவர், குட்டிச் சுவருக்குப் பக்கத்திலேயே புழக்கத்தில் இல்லாத ஒரு கிணறு. மாங்கொட்டைச் சாமி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கவிஞரைக் கிணற்றின் பக்கம் இழுத்துச் சென்றது. குட்டிச் சுவரைக் கவிஞருக்குச் சுட்டிக் காட்டியது. வானை அண்ணாந்து கையை மேலே நீட்டி சூரியனைக் காட்டியது. அப்புறம் கிணற்றை எட்டிப் பார்த்து அதில் தெரிந்த சூரியனின் பிம்பத்தையும் அவருக்குக் காட்டியது. ‘புரியுதா’ என்று கேட்டது.
“தோண்டின வரைக்கும் தண்ணி,. புரிஞ்ச வரைக்கும் சேதி. தா, தா, கீக்கீ அதுதான் சேதி” என்று சிரித்தது.
“அது போகட்டும், இந்த அழுக்குக் கந்தை மூட்டையை எதுக்கு தண்டத்துக்குச் சுமந்துண்டு திரியணும்?”
“நீ உள்ள சொமக்கறே. நா வெளிய சொமக்கறேன். அவ்ளோதானே” என்றது மாங்கொட்டைச் சாமி. கண்களில் குறும்பு தெறித்தது.
அதைக் கேட்டதும் கவிஞர் யோசனையாய்ச் சிறிது அயர்ந்திருக்க, மாங்கொட்டைச் சாமி கையை உதறி விடுவித்துக்கொண்டு ஓட்டமெடுத்தது.
மாங்கொட்டைச் சாமி ஓடி மறைந்த பிறகும் கவிஞர் அது ஓடிப் போன திக்கையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் பிரமிப்புடன் நின்றிருந்தார்.
-4-
மறுநாள் வழக்கம்போல் தீட்சிதர் வீட்டுக்குப் பேப்பர் படிக்கப்போன கவிஞர், முதலில் அம்பியைத்தான் ஆவலோடு அழைத்தார். அவன் அறைக்குள்ளேயிருந்து வெளியே வந்ததும், “அம்பீ உனக்கு விஷயம் தெரியுமா, நேத்து நா மாங்கொட்டைச் சாமியைப் பார்த்தேன். அவர்கிட்ட உபதேசமும் வாங்கிண்டுட்டேன்” என்றார்.
‘அட அப்படியா’ என்று அதிசயித்த அம்பி, “நானும் உங்ககிட்ட ஒரு சேதி சொல்லணும். கொஞ்ச நாழி முன்னாடி மாங்கொட்டைச் சாமி திண்ணையிலே வந்து நின்னது. ‘என்னமும் வேணுமா சாமீ’ன்னு கேட்டேன். ‘அவர் வரலியா’ன்னு கேட்டது. ‘யாரைக் கேக்கறே சாமீ’ன்னேன். ஒடனே வலது உள்ளங்கையைத் தொறந்து காமிச்சது. பார்த்தா ஊதா நிறத்திலே ஒரு வாடா மல்லிகைப் பூ! எனக்கு ஒண்ணும் வெளங்கலே. ‘என்ன சாமி இது’னு கேட்டேன். ‘தெரியலியா? முண்டாசு, கோட்டு, தாடி, மீசே’ன்னு சிரிச்சிட்டு ஓடிப் போச்சு” என்றான்.
கவிஞருக்கு வார்த்தை வரவில்லை.
‘வாடாமல்லிகை, வாடா மல்லிகை‘ என்று இருமுறை தமக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டார்.
ஆதாரம்: 1. பாரதி அறுபத்தாறு 2. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலகட்டத்தில் அவரோடு பழகும் வாய்ப்பைத் தமது இளம் பருவத்தில் பெற்றிருந்த வி. எஸ். குஞ்சித பாதம் (அம்பி) எழுதிய ‘பாரதி நினைவுகள்’ 3. ரா.அ. பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்’ மூன்றாம் தொகுதியில் ‘நான் கண்ட பாரதி’ என்ற தலைப்பில் டி. விஜயராகவாச்சாரியார் எழுதிய கட்டுரை.
–நன்றி: கணையாழி (டிசம்பர் 2011)
- காணாமல் போன உள்ளாடை
- யானையைச் சுமந்த எறும்புகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
- காணாமல் போன ஒட்டகம்
- எங்கே போக விருப்பம்?
- விசித்திரம்
- நினைவுகளின் சுவட்டில் – (82)
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3
- கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை
- நானும் ஜெயகாந்தனும்
- பழமொழிகளில் தொழிற்சொற்கள்
- டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை
- பெயரிடாத நட்சத்திரங்கள்
- புதிதாய்ப் பிறத்தல்!
- கனவுகளின் பாதைகள்
- சொக்கப்பனை
- இரண்டு வகை வெளவால்கள்
- பொருத்தியும் பொருத்தாமலும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)
- ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா
- பஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை
- குரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்
- வாழ்வியலின் கவன சிதறல்
- நனைந்த பூனைக்குட்டி
- சமுத்திரக்கனியின் போராளி
- சரதல்பம்
- “ சில்லறைகள் ”
- வலையில்லை உனக்கு !
- கூர்ப்படையும் மனிதன்…
- எமதுலகில் சூரியனும் இல்லை
- சூர்ப்பனையும் மாதவியும்
- கரிகாலம்
- சில நேரங்களில் சில நியாபகங்கள்.
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3
- முன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51
- மாதிரிகள்