1
சிறுகதை
நிறையும் பொறையும்
– வே.சபாநாயகம் –
கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும் அறுபதை எட்டிப் பிடிக்காதவர்கள் – ஆணும் பெண்ணுமாய், கைகூப்பி வணங்குகிறார்கள். அப்பா, புதுமெருகுடன் மின்னுகிற பொற்றாலியை அம்மாவின் சிரத்திற்கு வலப்புறமாகக் கையைச் சுற்றி, அணிவிக்கிறார். அனசூயா அம்மாவின் நெஞ்சுக்கு நடுவில் மாங்கல்யம் வருகிற மாதிரி, பழைய தாலிக்கு மேலே பளிச்சென்று தெரிகிறமாதிரி அந்த மங்கல சூத்திரத்தை இழுத்துப் பொருத்துகிறாள். அப்பா குங்குமத்தை அம்மாவின் தலைக்கு வலப்புறமாகக் கையைச் சுற்றியபடி நெற்றியில் இடுகிறார்.
அனசூயா அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். அம்மா புதுமணப்பெண் போல முகம் முழுதும் நாணமும், பூரிப்பும் விகசிக்க குனிந்த தலையுடன்
2
மென்முறுவல் பூக்கிறாள். அனசூயா அப்பாவை ஒருமுறை பார்க்கிறாள். அவரது முகம் பரப்பிரும்மமாய் எந்த உணர்வும் இன்றி ஆனால் கடமையுணர்வு பொலிவுறத் தோற்றமளிக்கிறது. ‘வாத்தியார்’ சொல்கிறபடியெல்லாம் கையும் வாயும் எந்திரமாய்ச் செயலபட, கருமமே கண்ணாக இருக்கிறார். அவருக்கு இதில் ஏதும் மகிழ்ச்சியோ சோகமோ இருப்பதாக முகத்திலிருந்து உணர முடியவில்லைதான். ஆனால் அனசூயாவுக்கு அப்பாவின் மன ஒட்டம் புரியும். ஆனால் அவளாலும் கூட முழுமையாய் அதைப் படித்துவிட முடியவில்லை.
“ஆசீர்வாதம்! ஆசீர்வாதம் பண்றவா முதல்லே பண்ணட்டும். ஆசீர்வாதம் வாங்கிக்கிறவா இது முடிஞ்சப்பறம் வரலாம்” என்கிறார் வாத்தியார்.
மணிவிழாக் காணும் தம்பதிகள் எழுந்து நிற்கிறார்கள். அவர்களைவிட மூத்த – தலை நரைத்து, காலதேவனின் முத்திரைகள் பதிந்து, நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர்கள் ஜோடி ஜோடியாய் வந்து நிற்க, அம்மாவும் அப்பாவும் விழுந்து சேவிக்கிறார்கள், “தீர்க்காயுசோடே, சதாபிஷேகமும் கொண்டாடணும்” என்ற ஆசீர்வாதத்துடன் பெரியவர்கள் அவர்களுக்கு திருநீறும், குங்குமமும் வழங்குகிறார்கள். அப்பாவும் அம்மாவும் பவ்யமாக அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இப்போதும் அனசூயா அப்பா, அம்மா இருவர் முகங்களையும் பார்க்கிறாள். அப்பா ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’யாய் அப்படியேதான் சலனமற்றிருக்கிறார். அம்மாவின் முகத்தில் ஒரு புதுக்களை! தேஜஸ்,! பெருமிதம்! கண்களில் ஆனந்தபாஷ்பம் முண்டியடிக்கின்றன. அனசூயாவுக்கு மனசுக்குள் வலிக்கிறது.
‘அம்மா! நிஜமாகவே உனக்குப் பூரிப்பு தானா? புதுப் பொற்றாலியைச் செல்லமாய் நீவிவிட்டு, பெருமிதததுடன் இழுத்து விட்டுக்கொள்கிறாயே – அதன்மீது மரியாதையும், பக்தியும் மிகுந்ததாலா? இந்தக் கௌரவத்தை –
3
இரண்டாம் தாலி அணிகிற பாக்கியத்தை உனக்குத் தந்தவர் இதோ இந்தத் தியாகபிரும்மம் தான் என்று உனக்கு இப்போது நினைவில் ஓடுகிறதா? உன் கண்களைத் திரையிட்டிருக்கிற ஆனந்தக் கண்ணீர் உன் மனசை மறைக்கிற திரை இல்லையே? நிஜந்தானே?’ – என்றெல்லாம் மனசுக்குள் கேட்டுக் கொள்கிறாள் அனசூயா. அதற்குள் இடித்துப் புடைத்துக்கொண்டு, ஆசி வாங்க வரும் தம்பதிகள் கூட்டம் நெருக்குகிறது. சற்று ஒதுங்கி அந்தக் காட்சியில் மனம் பதியாமல் சிந்தனை வலையில் சிக்குண்டபடி நிற்கிறாள் அனசூயா.
அருகே யாரோ ஒரு மாமி அடுத்தவளிடம் சொல்கிறாள், “என்ன பொருத்தம் பாருங்கோ! சாட்சாத் பார்வதி பரமேஸ்வராள் மாதிரி கண்ணுக்கு நெறைவா – இதக்கண்டு சேவிக்கிற பாக்கியம் எல்லோருக்கும் கெடைச்சுடாது”.
“நன்னாச்சொன்னேள்! பொருத்தம்னா அப்படி ஒரு பொருத்தம்! மாமியப் பாருங்கோ – இத்தன வயசுக்கு இன்னும் கட்டு விடாம, பளிச்சுனு, மஞ்ச மசேர்னு மங்களகரமா – நிறைஞ்ச கட்டுக் கழுத்தின்னா இதும்மாதிரி யாருக்கு அமையும்? மாமா குடுத்து வச்சவர் தான்! ‘பொண்டாட்டி வாய்க்கும் புண்ணியவானுக்கு’ம்பாளே! ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’னு பாடுனா மாதிரி, அந்த வரம் வாங்கிண்டு வந்தவர்னா இந்த மாமா!” என்று அப்பாவின் அதிர்ஷ்டத்தை வியக்கிறாள் இன்னொரு மாமி.
அனசூயாவுக்கு சிரிப்பும் அழுகையும் சேர்ந்து பொங்குகிறது. சொன்னவளது அறியாமை கண்டு சிரிப்பும், உண்மை நிலையை உணரந்தவள் என்ற முறையில் அழுகையும் போட்டி இடுகின்றன. கணகளில் நீர் திரையிடுகிறது. ஆனால் இது ஆனந்தக் கண்ணீர் இல்லை! அப்பாவின் மீது எழும் அனுதாபத்தின் வேதனைக் கண்ணீர்! உலகம் எப்படி வெளிப்பூச்சைக் கண்டு சுலபமாக ஏமாந்து விடுகிறது! அம்மாவின் முகக் களையும், பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் இவர்களுக்கு அவள் மீது பொறாமையை ஏற்படுத்து கிறதே தவிர, அப்பாவின் பொறுமையை, அதன் விளைவான அவரது
4
கருணையை, அதற்கு அவர் தினமும் தரும் விலையை இவர்களில் யார் ஒருவருக்காவது கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா? ‘ஐயோ, அசடுகளா!’ என்று அங்கலாய்க்கிறாள் அனசூயா.
அம்மாவின் இந்தப் பூரிப்பும், பரவசமும் நிலையானதுதானா? இந்த அறுபதாங் கல்யாண நிறைவு நிலைத்திருக்குமா? தாலியைத் தொட்டுத்தொட்டுப் பரவசப்படுகிற மாதிரி காட்டிக் கொள்கிற அம்மா தாலிக்குத் தருகிற மரியாதை என்ன?
‘அம்மா! நீ நிஜமாகவே தாலியைக் கௌரவச் சின்னமாக நினைக்கிறாயா? உன் மனசாட்சியைத் தொட்டுச்சொல் – இப்போது இப்படித் தொட்டுத்தொட்டுப் பழசையும் புதுசையும் இணைத்திணைத்துப் பூரிப்புக் காட்டுகிறாயே இது எத்தனை நாளைக்கு அல்லது நேரத்துக்கு? நாளைக்கே, இந்தக் கல்யாணக்களை மறைந்ததும் இதையும கழற்றி எறியமாட்டாய் எனபதற்கு என்ன உத்திரவாதம்? முன்புதான் பழைய தாலியை எடுத்ததற்கெல்லாம் கழற்றி எறிந்து புலம்புவாய் – ‘இந்த வெலங்கு ஒண்ணு இருக்கக்கொணடு தானே நா அடிமையா இருக்கேன்? இந்தச் சனியன் ஒண்ணுகழுத்தைச் சுத்தி பாம்பு மாதிரி’ன்னு. இப்போது எதை வீசுவாய்- பழசையா, புதுசையா? அல்லது இரண்டையுமேவா? உனக்குத்தான் தாலி மீது எந்த வித நம்பிக்கையோ, புனிதமான மதிப்போ கிடையாதே – அப்புறம் எதற்கு இன்னொரு தாலி?
‘அம்மா! நீ யாரை ஏமாற்றுகிறாய்? ஊரையா அல்லது உன்னையேவா? உன் எண்ணமென்ன? இப்போது இரு மாமிகள் பேசிக் கொண்டது போல, உண்மை வெளியே தெரியாமல் உன்னைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்ல வேண்டும், உனது தாம்பத்தியம் பற்றிப் பொறாமைப் படவேண்டும் என்பது தானே? இப்படி இரட்டை வாழ்க்கை வாழவேண்டிய அவசியமென்ன? நீ வேண்டுமானால் அப்படி வாழலாம். அப்பாவால் அப்படி இரட்டை வேஷம் போட முடியுமோ? அது கூட உன் ஆதங்கம் தானே? உள்ளே உன் மீது வெறுப்பை வைத்துக் கொண்டு, ஊருக்காக வெளியே அவர் போலியான
5
மகிழ்ச்சியைக் காட்டி ஏமாற்ற வேண்டும் – இல்லையானால் அதுவே உனக்கு:த் தாலியைக் கழற்றி எறிய ஒரு காரணமாகி விடும்! ஆனால் அப்பாவுக்கு அவ்வளவு நடிப்புத்திறன் போதாதுதான்! அதனால் தான் பரப்பிரும்மமாய் – சித்திரப்பாவை போல், ஒரே மாதிரி – விருப்பு வெறுப்புக் காட்டாமல் இருக்கிறார்.
அப்பா! உங்களால் எப்படி இவ்வளவு அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிகிறது? அம்மாவின் கொடுமைகளை எல்லாம் ஏன் வாய் பேசாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்? தியாக புருஷன் என்று உலகுக்குக் காட்டவா? இதுவே ஒரு சராசரி மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? ஒன்று அறைந்து மயிரைப்பிடித்து இழுததுத் தெருவில் விட்டிருப்பான் – அல்லது ஒளவை கூறியபடி கூறாமல் சந்நியாசம் மேற்கொண்டிருப்பான்! இதில் எதையுமே நீங்கள் ஏன் செய்யவில்லை? கொடுமை என்றால் வாழ்நாள் முழுதுமா? அவமானம் என்றால் ஆயுள் முழுதுமா? அப்பப்பா……..! எத்தனை முறை? எப்படி எப்படி யெல்லாம்………? ஒவவொன்றாய் மனம் அவள் விரும்பாமலே அசைபோடத் தொடங்குகிறது.
ஏட்டிக்குப் போட்டியும், எதிலும் முரண்படுகிற எதிர் சிந்தனைகளும் எல்லா வீட்டிலும், எல்லாப் பெண்களிடமும் காணப்படுவதுதான். ஆனால் இது வித்யாசமானது அல்லவா? அம்மா எந்த நேரத்தில், எந்த இடத்தில் எதைச் சொல்லுவாள் – எப்படி அப்பாவைத் தூக்கி எறிந்து பேசுவாள் என்று அவளுக்கே தெரியாது. சுமுகமாக இருக்கிறாளா, சோகமாக இருக்கிறாளா எனபதை நிதானிக்க முடியாது. சுமுகமாக அப்பாவிடம் அவள் இருந்து தான் பார்த்ததாக தன் – இந்த 25 வருஷ வாழ்க்கையில் நினைவில்லை. பாவம், அப்பா! அவரிடம் ஒரு நாள் கூடக் கனிவாக அம்மா நடந்து கொண்டதில்லை.
ஆனால் இன்று அதை எல்லாம் மறந்துவிட்டாற் போலவோ, அல்லது இதுவரை எதுவுமே நடக்காதது போலவோ புதுமணத் தம்பதிகளின் புதுசந்திப்பு போல பூரிப்புக் காட்ட எப்படி அம்மாவால் முடிகிறது? இன்றைய இந்தக் கௌரவத்திறகும் பூரிப்புக்கும் அப்பாதான் கதாநாயகன் என்பது
6
அவளுக்கு நினைவில்லையா? இந்தக் கல்யாணக் கோலமும், நிறை கட்டுக்கழுத்தியாய் நாலுபேர் கண் கூசும்படி நிற்கவும் அவர் இல்லாமல் எப்படிச் சாத்தியம் என்று எண்ணிப் பார்த்திருப்பாளா? அவர் உயிரும் உடம்புமாய் இத்தனை ஆண்டுகள் அம்மாவின் கொடுமையால் அழிந்து போகாமல் மனோபலத்தால் நிற்பதால்தானே அவளுக்கு இந்த பாக்கியம்? இதெல்லாம் அவளுக்குத் தெரிந்தே இருக்கலாம். ஆனால் அதற்காக அவள் அப்பாவிடம் பரிவோ பச்சாதாபமோ கொள்ளப் போவதில்லை! நாளைக்கே மீண்டும் தாலியை விட்டெறிந்து இந்தக் கல்யாண உறவே வேண்டாம் என்று சொல்லக்கூடும்.
இதையெல்லாம் எதிர் பார்த்துதான் அப்பா அவளது பூரிப்பில் மனம் கரையாதிருக்கிறார். ‘இது போலியானது; இந்தக் கூட்டம் கலைகிறவரை மட்டுமே நிற்கிற அற்பாயுசு ஆனந்தம்’ என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால்தான் எதிலும் பட்டுக்கொள்ளாமல் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல், ,இந்த அறுபதாங் கல்யாணம் நடக்கா விட்டால் அதறகாக ஒருபோரை அம்மா நிகழ்த்துவாள் என்ற அச்சத்தின்பேரில் ஊர் உலகத்திற்காகக் கொண்டாடுவதுபோல் – கல்லாய், மரமாய் நின்று கொண்டிருக்கிறார். அனசூயாவுக்கு மீண்டும் அப்பாவின் நிலை கண்டு மனம் கசிந்து கண்களில் நீர் நிறைகிறது.
அம்மாவை, மேலே சொன்னதை எல்லாம் – ஏன், எப்படி என்றெல்லாம் நேரில் கேட்டுவிட முடியுமா? அதை அவளால் தாங்க முடியுமா? அப்பாவின் ‘ஏன் சாதம் குழைந்திருக்கிறது?’ என்கிற கேள்வியையே அவளால் பொறுத்துக் கொள்ள முடியாதே! ‘என்னால் அதான் முடியும். இஷ்டமிருந்தா சாப்பிடுங்கோ, இல்லேண்ணா ஓட்டலுக்குப் போய் சாப்டுக்கோங்கோ’ என்று நிர்த்தாட்ண்சய மாய்த் தூக்கி எறிந்து பேசும்போது நமக்கே ஆத்திரமும் ஆங்காரமும் எழும் என்றால்,கேட்ட அப்பாவுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பா ஆத்திரப்பட மாட்டார். ‘இந்தக் கேள்வியையே கேட்டிருக்க வேண்டாமே’ என்று அவர் வருந்துவது முகத்தில் தெரியும். ‘நான் ஒட்டலில்
7
சாப்பிடுவதானால் உனக்கு இங்கே என்ன வேலை?’ என்று செவிட்டில் அறைந்த மாதிரி திருப்பிக்கேட்க வேண்டாமோ? அதற்குக் கிடைக்கப் போகும எதிர்வினைகள், குழைந்த சாதத்தைச் சாப்பிடுவதை விட மோசமாக இருக்கும் எனபதை அறிந்த அவர் வாய்மூடி, மௌனியாய் அந்தச் சோற்றைக் கிளறிவிட்டு எழுவார். இப்படித்தான் ஓட்டிவிட்டிருக்கிறார் இத்தனை வருஷத்தையும். இந்த லட்சணத்திறகு இப்படி ஒரு அறுபதாங் கல்யாணம் என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒருவேளை இந்த அபஸ்வர வாழ்க்கைக்குத்தான் அறுபதாண்டு நிறைவோ?
அனசூயாவுக்கு மனம் கனக்கிறது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைகிறது. தனியாக அப்பா கிடைக்கும்போது, ஊருக்குப் போகுமுன் அவரிடம் கேட்டே ஆக வேண்டும் – ‘அவரது பொறுமையின் ரகசியம்தான் என்ன? எப்படி அவரால் இப்படித் தினமும் விஷத்தை விழுங்கிக் கொண்டு அதன் பாதிப்பு இல்லாமல் இருக்க முடிகிறது? இன்னும் என்ன சாதிப்பதற்காக, எந்தப் பொறுப்பிற்காகக் காத்திருக்கிறார்? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? அம்மாவின் இந்த ஆக்கிரமிப்புக்கு ஒரு எதிர் நடவடிக்கை எடுத்து எப்போது அதைத் தகர்க்கப் போகிறார்?’ இதைக் கேட்டுவிட வேண்டும். அம்மா இல்லாத நேரத்தில் கேட்டே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறாள்.
சாயங்காலம் எல்லா அரவமும் அடங்கி, உறவினரெல்லாம் விடை பெற்றுச் சென்று வீடு அமைதியானதும் அம்மா, அப்பா, அனசூயா மூவர் மட்டுமே இருக்கிறார்கள். விளக்கு வைக்கிற நேரம் வந்ததும் அம்மா, “கோவிலுக்குப் போய்விட்டு வரலாமா?” என்று அப்பாவைக் கேட்கிறாள். அறுபதாங் கல்யாணம் முடிந்த கையோடு ஆண்டவனை தம்பதி சமேதரராகத் தரிசித்து அருள்பெற அழைக்கிறாள். அப்பாவின் முகத்தில் அலுப்புத் தெரிகிறது. வேண்டாம் என்று சொன்னால் இன்றைய இந்த நிம்மதி – இந்தக் கோலாகலமும், கும்பலும் விடுவித்த சுதந்திரம் – பாழாகி விடலாம்.. எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல் முகத்தில் வேதனை நெளியத் தவிக்கிறார். அனசூயா அப்பாவின் உதவிக்கு வருகிறாள். “நீ வேணுமானாப் போய்ட்டு
8
வாயேம்மா. அப்பாவுக்கு ரொம்பக் களைப்பா இருக்கு போலே இருக்கு! காலைலேர்ந்து நின்னுண்டேர்ந்தது காலை வலிக்கறதோ என்னவோ? வாயை விட்டுத்தான் சொல்லுங்களேன் அப்பா! நீங்க எப்பவுமே இப்படித்தான்!” என்று ஆதங்கத்தோடு கூறுகிறாள். அவளுக்கு உள்ளுக்குள் ஒரு திட்டம். அம்மாவை மட்டும் அனுப்பி வைத்தால் அப்பாவிடம் தனியாகப் பேச முடியுமே. எனவே அம்மாவை மட்டும் அனுப்பி வைப்பதில் குறியாக இருக்கிறாள்.
ஆனால் அம்மா விட்டு விடுவதாய் இல்லை. “ஆமாண்டியம்மா! உங்கப்பாவுக்குத் தான் அலுப்பு, களைப்பு எல்லாம்! நா மட்டும் இரும்பாலே சேஞ்சு வந்திருக்கேன் பாரு! இத்தனைக்கும் இந்த சஷ்டியப்தப் பூர்த்திக்கு ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டிருப்பாரா உன் தோப்பனார்? உனக்கு அவர் மேலே தானே கரிசனம்? என்னிக்குதான் அவர் எனக்காகக் கவலைப் பட்டாரு – இன்னிக்கு படறதுக்கு? இந்தக் கல்யாணம் நடத்திக்கறதிலே அவருக்குத் துளிக்கூட இஷ்டமே இல்லே! என் பிடுங்கலுக்காகத்தான் மனுஷன் ஒத்துண்டார். வேண்டா வெறுப்பாக் கடனேன்னு மணையிலே உக்காண்டிருந் தார். எல்லாத்துக்கும் குடுப்பினை வேணாமோ?” என்று ஒரு பாட்டம் புலம்புகிறாள். அனசூயா அப்பாவை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல், அம்மாவை வெகுவாகத் தாஜா செய்து அவளை மட்டும் ஒரு வழியாக அனுப்பி வைக்கிறாள்.
அப்பா ஆளோடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அனசூயா அருகில் வந்து அமர்ந்தாள். அப்பாவின் பார்வை மேல்நோக்கி இருந்தது. கூரையையே வெறித்தபடி இருந்தார். ஆனால் முகத்தில் ஆயாசமோ ஆற்றமாட்டாமையோ இல்லை. முகம் தெளிவாக நிச்சிலமாக இருந்தது.
“அப்பா………” என்று அவரது மௌனத்தைக் கலைத்தாள்.
“என்னம்மா………?” என்று பார்வையைத் தழைத்தார்.
“நாளைக்கு நானும் போறேம்பா………”
9
“போகத்தானேம்மா வேணும்.?” என்று அவளது தலையை வாஞ்சையோடு வருடினார்.
“போகத்தாம்பா வேணும். ஆனா உங்களை இங்கே இப்படி விட்டுட்டு அங்கே எனக்கு………..” – அழுகை தொண்டையை அடைத்தது.
“அசடு, அசடு! என்னை இப்படி விடாமே நீ என்ன செய்ய முடியும்? நானும் உங்கூட வந்துடறதோ, நீ இங்கேயே என் கூடவே இருக்கிறதோ சாத்யமா என்ன? வீணா மனசைப் போட்டு அலட்டிக்காதே” என்றார்.
“இல்லேப்பா – நீங்க நித்தியம் படற அவஸ்தையை நெனச்சாத்தான் எனக்கு………….” என்று செருமினாள்.
“அது என்னோட போகட்டும்மா, உன்னப் பாதிக்கப்படாது! அது என் சாபம்! ஆனா அதுக்கு நான் பழகிப் போய்ட்டேன். அது என்னப் பாதிக்காது. நீ அதுக்காகக் கவலைப் படாதே.” என்று :தட்டிக் கொடுத்தார்.
“கவலைப்படாமே எப்படிப்பா இருக்கமுடியும்? நீங்க இருந்துடுறேள்; உங்களுக்குப் பழகிப் போயிருக்கலாம். ஆனா வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்கப் போறேளா? இதுக்கு ஒரு முடிவே இல்லையா?” என்று அனசூயா பதற்றமாகச் சொல்லவே,
“அமைதி, அமைதி! இப்ப என்ன ஆய்ட்டுதுங்கிறே? வாழ்நாள் முழுக்கன்னா……! இன்னும் எத்தனை நாள் நா இருந்துடப்போறேன்? இதோ அறுபது ஆய்ட்டுது. இன்னும் மிஞ்சிப்போனா ஒரு பத்து வருஷம். முப்பத்தஞ்சு வருஷத்த இப்படியே ஓட்டியாச்சு! இந்தப் பத்து வருஷம்
என்ன – சுண்டக்காய்!” என்று சிரிக்கிறார்.
“அப்பா! நிஜமா- கவலையில்லாத சிரிப்பா இது? விரக்தியிலே சிரிக்கிற சிரிப்பில்லையே!”
10
“விரக்தி என்னம்மா? ‘நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன்’ கிற மாதிரித்தான் மனைவியும்னு நெனச்சுக்க வேண்டியதுதான்! வாழ்க்கையிலே எல்லாமே திருப்தியா அமைஞ்சுடணும்னு எதிர் பார்க்கிறது பேராசை இல்லையோ? எனக்கொண்ணும் விரக்தி இல்லே! நீ கவலைப்படாமே கௌம்பு” என்றார் அமைதியாக.
“விரக்தி இல்லேன்னாப்பா சொலறேள்? அது நிஜமில்லேப்பா. உண்மையைச் சொல்லுங்கோ – ஏன் இப்படி உணர்ச்சி இல்லாத கல்மாதிரி, எல்லா அவமரியாதையையும் சகிச்சுண்டு, உங்களோட ஆண்மையைக் கேவலப்படுத்துற சிறுமையைக் கண்டு கொள்ளாம இருக்கேள்? புழு கூட நசுக்கப்பட்டா கொஞ்சம் எதிர்ப்பைக் காட்டுமே! இத்தனை சிறுமைக்கும், அம்மாவின் அத்தனை ஆகாத்தியத்துக்கும் ஆடாமே அலுக்காமே, பாதிப்புக் காட்டாமே எப்பிடி உங்களாலே இருக்க முடியறது? ‘பொறுமை’ன்னு சொல்லாதேங்கோ! அதுக்கும் அளவு உண்டோல்லியோ? நீங்க காட்டறது பொறுமை இல்லேப்பா! ஐயோ! அம்மா எப்படி எப்படியெல்லாம் உங்கள ரணப்படுத்தறா- என்ன மாதிரி எல்லாம் உங்க மனசக் கீறி ரத்தம் சொட்ட வைக்கறா! ஆனா ஏன் உங்களுக்கு ரோஷமே வரலே? ஏன் கொடுமையின் உச்சத்திலே கூட நீங்க சீறி எழலே? ‘பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை அமைய லேண்ணா – கூறாமல் சன்னியாசம் கொள்’னு ஒளவை சொன்னது உங்கள மாதிரி அனுதாபத்திற்குரிய ஆண்களுக்காத்தான் அப்பா! ஒரு தடவை கூட இந்தக் கொடுமைக்காரத் துணையை உதறி விட்டு ஓடிப் போகத் தோணலியா? இதுக்கெல்லாம் முடிவு கட்டிட்டு உசுரை விட்டுடணும்னு ஆவேசம் வரலியா? இது எப்படியப்பா உங்களாலே முடியறது?” – ஆவேசம் வந்தவள் போல் அனசூயா படபடக்கிறாள்.
சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, “அனசூயா………..அனசூயா! என்னம்மா? ஏன் இப்படி ஆவேசப்படறே? இது என்ன நீ புதுசா இன்னிக்குத் தான் பாக்கறயா? உன் இருபத்தஞ்சு வயசுக்கு இதெல்லாம் மரத்துப் போயிருக்க வேண்டாமோ? பாதிக்கப்பட்ட நானே அமைதியா இருக்கேன்,
11
வேடிக்கைப் பார்த்துக் கிட்டிருக்கிற உனக்கு ஏன் இவ்வளவு படபடப்பு?” என்று ஆசுவாசப் படுத்துகிறார் அப்பா.
“வேடிக்கை பார்க்கறவாளுக்கும் ஒரு எல்லை உண்டுப்பா! எலியைப் பூனை கொதறுற போது அது பூனையோட இயல்புன்னு விட்டுட முடியலியே! அந்தப் பரிதாப ஜீவனுக்காக மனசு வலிக்கறதில்லியா? ஆனா அந்தப் பரிதாப ஜந்துகூட மரணப் போராட்டத்திலே முடிஞ்சமட்டும் எதிர்க்கிறது உண்டு தானே? ஆனா நீங்க ஏன் எதிர்த்துச் சீறக்கூட இல்லைன்னுதாம்பா ஆதங்கமா இருக்கு. ஏன் ஒருதடவை கூட எதிர்த்து, அறைந்து முடியைப் பிடிச்சு வெளியே இழுத்துவிடலை? ஏன் ஒருதடவையாவது உங்க பலத்தை, ஆண்மையைக் காட்டலை? இது பொறுமை இல்லை! கையாலாகாத்தனம்! பயந்தாங் கொள்ளித்தனம்! கோழைத்தனம்…………..!” என்று சீறினாள் அனசூயா.
“எப்படி வேணும்னாலும் வச்சுக்கோம்மா. இது என் கையாலாகாத்தனம்தான்; கோழைத்தனம்தான். நீ சொல்றமாதிரி நானும் வீரன்னு காட்டணும்னா நாகரீகம், கௌரவம், மானம் இதெல்லாம் வேண்டாம்னு விட்டாத்தான் சாத்யம். ஒரு கூலிக்காரன், ஒரு குப்பத்து ஆள் இந்த மாதிரி அவன் மனைவி அவனை வருத்தினா – அவளை முடியைப் பிடிச்சு இழுத்து வெளியே தள்ளிக் கதவைச் சாத்திடுவான்கிறது வாஸ்தவந்தான்! இப்படி மானம் மரியாதை எல்லாம் போறமாதிரி அவ வாயாடினா அவளை அறைஞ்சு தெருவிலே வீசறது நடக்கிறது தான்! நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி அவம் பெண்டாட்டி பேசினா – கட்டுன தாலியை விட்டெறிஞ்சு கேவலப் படுத்தினா அவனாலே பொறுத்துக்க முடியாதுதான்! ஆனா, நான் பொறுத்துக்கிட்டிருக்கேன், ரோஷமில்லாமே பிடிச்சுவச்ச பிள்ளையாரா இருக்கேன், கல்லா, மரமா, செவிடா, ஊமையா இருக்கேன்- ஏன்னு உனக்குப் புரியலே! ஒருவேளை உங்கம்மாவுக்கும் அதுதான் ஆதங்கமோ என்னவோ! ஒரு சாமான்யன் மாதிரி, ஒரு படிக்காத பாமரன் மாதிரி கோபம் பீரிட, முரட்டுத்தனமாய் அவளை அடிச்சு நொறுக்கலியேங்கிற கோபமாகக்கூட இருக்கலாம். இவ்வளவு அவமானப்
12
படுத்தியும், இத்தனை குரூரமாக நடந்துண்டும் இந்த மனுஷன் – கோபப்படாம, உடம்பைச் சிலிர்க்காம, மண்ணாங்கட்டி மாதிரி இருக்கானேன்கிற எரிச்சல் அவளை மேன்மேலும் உக்கிரப் படுத்துகிறதோ என்னவோ? ஆனா ஏன் நா அப்படி இருக்கேன்னு கேக்கிறியா? சொல்றேன்.
“கதாசிரியர்களும், சமூக சேவகர்களும் பெண்ணடிமைபத்தியே எப்பவும் பேசுறாங்க. அவங்கெல்லாம் தாம்பத்தியம் என்கிற நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துட்டுப் புலம்புறவங்க. நாணயத்தின் மறுபுறத்தையும் பாத்தா ஆணடிமை பற்றியும் தெரியும். .ஆணைப் போலவே தன் மறு பாதியைக் கொடுமைப்படுத்துற குரூரபுத்தி, பெண்ணிடமும் உண்டுங்கறதப் புரிஞ்சும் ஆணுக்காக அனுதாபப்படுறவா இல்லை. நீயாவது அதைப் புரிஞ்சிக்கிட்டுருக்கியே! ஆனால் நீ சொன்னபடி நான் பொறுத்துப் போவது கோழைத் தனத்தாலோ, கையாலாகாத்தனத்தாலோ இல்லே.. இது ஒரு நாகரீகம்! நிறையுடைமை வேண்டும்கிற நாகரீகம். தாலிமீது நம்பிக்கையோ பக்தியோ இல்லாதவளுக்கு ஏன் புதிசா இன்னொரு தாலி கட்டினேன்னு நீ கேக்கலாம். இப்போது கட்டுன தாலி அவ திருப்திக்காகக் கட்டினதில்ல; எனக்காகத்தான்! ஊரும் உலகமும் – நானும் அவளும் இன்னமும் தம்பதிகளாகத்தான் இருக்கோம்னு நம்பறத்துக்காகத்தான்!
“அறைஞ்சு வெளியே தள்ளுறது முடியாத காரியமில்லே! குப்பத்து ஜனங்களுக்கு இது வேடிக்கை பாக்குற அபூர்வ காட்சியில்லே. அங்கே எல்லா வீட்டிலும் தினமும் நடக்கறதுதான்! மேல்மட்டத்தில இருக்கிறவங்களின் போலித்தனமும் ஊருக்காக வாழுற பொய் வாழ்வும் அல்ல அவங்க வாழறது. பொறையுடை மையும் நிறையுடைமையும் அவங்களுக்குக் கட்டுப்படியாகாது. அதை வச்சு யாரும் அவங்களை எடைபோடப் போறதில்லே. ஆனா நம்மைப் போல நடுத்தர வர்க்கத்துக்கு இதான் அளவுகோல். இதை வச்சுத்தான் நம்மை எடை போடுவாங்க. உள்ளே புண் புரையோடிப் போயிருந்தாலும் அதப் பட்டுத் துணியால அழகா மூடியிருந்தாப் போறும்.. கௌரவம் கெடைச்சுடும். பொய்யை நம்பறவங்க மத்தியிலே பொய்யா வாழறதுதான் கௌரவம்!
13
‘நிறையுடமை வேணும்னா பொறையுடைமை வேணும்’பார் வள்ளுவர். நாலுபேர் பாத்து வியக்கிற நிறையுடைமைய நாம போற்றிக் காக்கணும்னு விரும்பறேன். இத்தனை நாளும் ஊர் மெச்ச நடிச்சதை இனி எதுக்கு உருக்குலைக்கணும்? இதான் என் பொறுமையோட ரகசியம். ‘நிறையுடைமை நீங்காமை வேண்டின் – பொறையுடைமை போற்றி ஒழுகப்படத்தான்’ வேணும்! நீ கவலைப்படாதே. இதுக்கு மேலும் என் பொறுமையச் சோதிக்க முடியாது. நிம்மதியாப் போய் வா!” என்று அப்பா புன்முறுவல் பூக்கிறார்.
“அப்பா! எப்படி உங்களாலே இதை லேசா எடுத்துக்க முடியறது?” என்று தேம்புகிறாள் அனசூயா.
” அதான் நிறையுடமை பேணும் நாகரீகம்!” என்று அவளைத் தட்டிக் கொடுக்கிறார் அப்பா. 0
நன்றி: கணையாழி
- சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்
- நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
- நிறையும் பொறையும்
- அந்தக் குயிலோசை…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
- “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
- கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
- செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
- திண்ணையில் கண்ணம்மா பாட்டி
- சுஜாதா
- இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
- முகமற்றவனின் பேச்சொலி
- ப்ளாட் துளசி – 1
- தேனும் திணை மாவும்
- பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)
- மீன் குழம்பு
- இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
- பாரதிக்கு இணையதளம்
- என்னின் இரண்டாமவன்
- இரு வேறு நகரங்களின் கதை
- மார்கழிப் பணி(பனி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2
- சந்தனப் பூ…..
- வேறு ஒரு தளத்தில்…
- வம்பளிப்புகள்
- பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை
- பெரிய அவசரம்
- அவன் இவன் அவள் அது…!
- காதல் கொடை
- அன்பின் அரவம்
- சுனாமியில்…
- பொருள்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
- முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
- ஏனென்று தெரிய வில்லை