ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் பிடியுங்கள். என் நிலைமை எப்படியிருந்தாலும் உங்கள் பசியைப் போக்குகிறேன்’’ என்றது. சிங்கத்தின் உத்தரவைக் கேட்டதும் அவை காடெங்கும் சுற்றிப் பார்த்தன. ஒன்றும் அகப்படவில்லை. சதுரகன் யோசிக்கத் தொடங்கியது. ‘இந்தச் சங்கு கர்ணனை (ஒட்டகத்தை) சிங்கம் கொன்றால் எல்லோரும் தின்று சிலநாள் திருப்தியாயிருக்கலாம். ஆனால் சிங்கத்தின் சிநேகிதன் இது. சிங்கம் இதைக் கொல்லாது. இருந்தபோதிலும் என் புத்தி சாதுரியத்தால் எஜமானர் இதைக் கொல்ல மனங்கொள்ளும்படி தூண்டிவிடுகிறேன். ஏனென்றால்,
எதையும் அறிய முடியும். எதையும் அடைய முடியம். எதையும் கொல்ல முடியும். புத்திசாலிகளுக்கு முடியாததென்று ஒன்றுமில்லை.
ஆகவே, அறிவைத் தக்கபடி உபயோகிக்கிறேன்’ என்று யோசித்துத் தீர்மானத்துக்கு வந்தது.
பிறகு, சங்குகர்ணனைப் பார்த்து, ”சங்குகர்ணனே! அரசர் பத்தியமிருந்து பசியால் மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் இறந்துவிட்டால் நாமும் சாவது நிச்சயம். ஆகையால் உன் நன்மைக்காகவும் அரசரின் நன்மைக்காகவும் சில விஷயங்களைச் சொல்கிறேன், கேள்’’ என்றது நரி.
”நண்பனே, சீக்கிரம் சொல், உன் பேச்சைத் தட்டாமல் செய்கிறேன். எஜமானனுக்குச் செய்யும் ஒரு நன்மை நூறு நல்ல காரியங்கள் செய்வதற்குச் சமம்’’ என்றது ஒட்டகம்.
”நண்பனே, உன் உடம்பை இரண்டு மடங்கு லாபத்துக்குக் கொடுத்துவிடு. அதனால் உனக்கு இரண்டு மடங்கு பெரிதான உடம்பு கிடைக்கும். அரசருடைய ஆயுளும் நீடிக்கும்’’ என்றது நரி.
”நண்பனே! அப்படிச் செய்ய முடியுமானால் அது என் பாக்கியமே, அப்படியே செய்யும்படி எஜமானரிடம் சொல். ஆனால் இந்த விஷயத்தில் யமதர்மராஜன் மட்டும் ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்’’ என்றது ஒட்டகம்.
இப்படித் தீர்மானித்துவிட்டு அவை மூன்றும் சிங்கத்திடம் சென்றன. ”அரசே! ஒரு மிருகம்கூட இன்றைய தினம் கிடைக்கவில்லை. சிங்கம் அதைக் கேட்டு மிகவும் கவலையடைந்தது. சதுரகன், ”அரசே! இந்தச் சங்குகர்ணன், ‘யமதர்மராஜன் எனது உடம்பை இரண்டு பங்காகத் திருப்பிக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டால் எனது உடலைத் தருகிறேன்’ என்று சொல்கிறான்’’ என்றது.
”நண்பனே, அது நேர்த்தியான வேலைதான். அப்படியே செய்யுங்கள்’’ என்று சொல்லிற்று. ஒட்டகம் ஒப்புக்காண்டதுதான் தாமதம். உடனே சிங்கம் ஒட்டகத்தைத் தனது கைகளால் அறைந்தது. ஓநாயும், நரியும் அதன் வயிற்றைக் கிழித்தன. ஒட்டகம் செத்துப் போயிற்று.
அப்போது சதுரகன், ‘நான் ஒருவனே இதைத் தின்பதற்கு வழியுண்டா?’ என்று யோசித்தது. ரத்தம் தோய்ந்த அங்கங்களோடு இருந்த சிங்கத்தைப் பார்த்து, ‘’எஜமான்! ஸ்நானம், பூஜை செய்வதற்கு நதிக்குச் செல்லுங்கள். நான் கிரவ்யமுகனோடு இருந்து இரையைக் காத்து வருகிறேன்’’ என்றது.
இதைக்கேட்டு சிங்கமும் நதிக்குச் சென்றுவிட்டது. சிங்கம் போனதும், கிரவ்யமுகனைப் பார்த்து, ”நண்பனே, நீ பசியால் ரொம்பவும் வாடுகிறாய். அரசர் திரும்பி வருவதற்குள் ஒட்டகத்தின் மாமிசத்தை நீ சாப்பிடு. உன்மேல் பழி வராதவடி நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லிற்று.
அது சொல்லியபடியே ஓநாய் கொஞ்சம் மாமிசத்தை ருசி பார்க்கத் தொடங்கியதோ இல்லையோ, உடனே சதுரகன் ”கிரவ்யமுகனே! தூர விலகிப் போ, அரசர் வருகிறார்’’ என்றது.
ஸ்நானம் பூஜைகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்த சிங்கம் ஒட்டகத்தின் நெஞ்சு பிடுங்கப்பட்டிருப்பதைக் கண்டது. உடனே கோபங் கொண்டது. ”யார் ஒட்டகத்தை எச்சிலாக்கியது? அவனைக் கொல்கிறேன், பார்’’ என்று சொல்லிற்று. அப்படிச் சொன்னதும், ‘எஜமானர் சாந்தமடையும் படி எதையாவது சொல்’ என்று கெஞ்சுவதுபோல் ஓநாய் சதுரகனின் முகத்தைப் பார்த்தது. ஆனால் சதுரகன் சிரித்துவிட்டு, ”ஒட்டகத்தின் நெஞ்சைத் தின்றுவிட்டு என் முகத்தை ஏன் பார்க்கிறாய்?’’ என்றது. அதைக் கேட்டதும் ஓநாய் தன் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தது. வேறு காடு தேடி சென்றது. சிங்கமும் அதைக் கொஞ்ச தூரம் துரத்திச் சென்றுவிட்டு, ‘என்னைப் போல் அவனும் நகத்தை ஆயுதமாகக் கொண்டிருப்பவன், அவனை நான் கொல்லக்கூடாது’ என்று தீர்மானித்துத் திரும்ப வந்தது.
இதற்கிடையே விதிவசமாக அந்த வழியே பெரிய வர்த்தகக் கூட்டம் ஒன்று வந்தது. அவர்களோடு வந்த ஒட்டகங்கள் மீது அதிக பாரம் எற்றியிருந்தார்கள். அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய மணிகள் பேரொலி செய்தன. அதை வெகு தூரத்திலிருந்தே சிங்கம் கேட்டுவிட்டு, ‘’நண்பனே, பயங்கரமான சத்தமாயிருக்கிறதே. என்ன என்று அறிந்து வா’’ என்று நரிக்குக் கட்டளையிட்டது.
அதன் கட்டளைப்படியே நரி கொஞ்ச தூரம் போய்விட்டு வெகு வேகமாகத் திரும்பி வந்தது. அவசர அவசரமாக, ”ஓடுங்கள், பிரபுவே, ஓடுங்கள்! முடிந்தவரைக்கும் ஓடுங்கள்!’’ என்றது.
”நண்பனே, ஏன் இப்படி என்னை மனங் கலங்கச் செய்கிறாய்? என்னவென்று சொல்’’ என்றது சிங்கம்.
”எஜமானே, யமதர்மராஜன் தங்கள் மீது கோபங் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். காரணம், தாங்கள் அவருடைய ஒட்டகத்தை அகால மரணம் அடையும்படி செய்ததோடல்லாமல் அவரையே சாட்சியாகவும் வைத்தீர்கள். அதனால் அந்த ஒட்டகத்தைப் போல் தங்களிமிருந்து ஆயிரம் மடங்கு திருப்பி வாங்கத் தீர்மானித்து அவர் பல ஒட்டகங்களோடு வருகிறார். இந்த ஒட்டகத்தின் தகப்பனார், பாட்டனார் பற்றியெல்லர் விசாரிக்க விரும்பி, இங்கே அருகாமையிலேயே வந்து கொண்டிருக்கிறார்’’ என்றது நரி.
அதைக் கேட்டதும் சிங்கம் தன் உயிருக்குப் பயந்து செத்த ஒட்டகத்தை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. பிறகு அந்த சரி ஒட்டகத்தின் மாமிசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று வெகுநாள் காலம் தள்ளியது.
அதனால்தான், ”பிறருக்குத் தீங்கிழைத்துத் தன் சுயநலத்தைப் பேண விரும்பும் அறிவாளி தன் சூழ்ச்சியை வெளியிடலாகாது’ என்று சொல்கிறேன்’’ என்றது தமனகன்.
தமனகன் போனபின், சஞ்சீவகன் யோசிக்கத் தொடங்கியது. ‘நான் என்ன செய்யட்டும்? வேறெங்காவது போனால் வேறு கொடிய மிருகம் ஏதாவது என்னைக் கொன்றுவிடும். ஏனெனில் இது மனித நடமாட்டமில்லாத காடு. மேலும் அரசன் கோபமாயிருக்கும்போது வெளியே போவதும் சாத்திய மில்லை.
”குற்றம் செய்துவிட்டு ஓடிப்போய், தூரத்திலிருக்கிறதாக எண்ணி, நிம்மதியடைய முடியாது. ஏனென்றால் அறிவாளிகளின் கை நீண்டு வந்து குற்றவாளியைத் தண்டிக்கிறது.’’
என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆகவே, சிங்கத்திடம் போவதே சரி. அவரிடம் சரணாகதியடைந்தேன் என்பதற்காக ஒரு வேளை அவர் என்னை விட்டுவிடக்கூடும்’ என்று முடிவுக்கு சஞ்சீவகன் வந்தது.
அதன்படியே சஞ்சீவகன் கலங்கிய மனத்துடன் அடிமேல் அடி எடுத்து வைத்துச் சென்றது. தமனகன் சொன்னபடியே சிங்கம் நிற்பதைப் பார்த்ததும் வேறொரு இடத்திற்குப் போய் மீண்டும் யோசிக்கத் தொடங்கியது: ‘என்ன கஷ்டம்! ராஜகுணத்தின் ஆழமே ஆழம்.
அது பாம்புகள் மறைந்து வாழும் வீடு; அல்லது கொடிய மிருகங்கள் இருக்கும் காடு; அல்லது மனோரம்மியமான தாமரை மலர்கள் மறைத்துக் கொண்டிருக்கும் முதலைகள் உள்ள ஏரி; துஷ்டர்கள் திரும்பத் திரும்ச் சொல்லும் அவதூறுகளால் கறைபடிந்த இடம் அது. சாதுவான வேலைக் காரர்கள் அரசன் மனத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
தமனகன் சொன்னபடியே சஞ்சீவகன் வருவதைப் பார்த்த பிங்களகன் திடீரென்று அதன்மேல் பாய்ந்தது. சிங்கத்தின் வஜ்ராயுதம் போன்ற நகங்கள் அதன் உடலைக் கிழித்தன. சஞ்சீவகனும் தன் கொம்புகளால் சிங்கத்தின் வயிற்றைக் கிழித்து எப்படியோ சிங்கத்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. மீண்டும் தன் கொம்புகளால் சிங்கத்தைக் குத்த விரும்பி, சண்டை செய்யத் தயாராக நின்றது.
அப்போது அவை இரண்டும் செந்நிறப் பூக்கள் குலுங்கும் செம்பரத்தி மரம்போல காணப்பட்டன. ஒன்றையொன்று கொல்வதையே குறியாகக் கொண்டு நின்றன. இதைப் பார்த்ததும் கரடகன் தமனகளைத் தூஷிக்கத் தொடங்கியது: முட்டாள்! அவர்களிடையே பகை யுண்டாக்கி நீ கொடுமை செய்திருக்கிறாய். இதனால் காடு பூராவிலும் கலவரமும் குழப்பமும் நீ உண்டாக்கிவிட்டாய். உனக்கு ராஜநீதியே தெரியாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
முன்பின் யோசிக்காமல், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும்படி நடக்கிற சக்கரவுகளை விவேகத்துடன் சமரசமாகத் தீர்க்கிறவனே ராஜநீதியை நன்கறிந்த மந்திரி.
அர்த்தமற்ற அற்ப லாபங்களுக்காக ஆர்வத்துடன் சண்டைபோட விரும்பு கிறவர்கள் துர்நடத்தையும் துர்ப்புத்தியும் உடையவர்களே, அவர்கள் அரசனையும ராஜ்யத்தையும் சங்கடத்தில் மாட்டி விடுகிறார்கள்.
ஆகையால்தான்,
ஸாமம் (சமரசம்) என்கிற உபாயத்தையே விவேகி முதலில் கையாள வேண்டும். ஸாமத்தால் கிடைக்கிற வெற்றி அவமானகரமானதல்ல.
மூடனே, மந்திரிப் பதவியை விரும்பும் நீ ஸாமம் என்கிற வார்த்தையையே கேட்டதில்லை. நீ தண்டம் என்கிற உபாயத்தைக் கையாள விரும்புவதால் உன் ஆசைகளெல்லாம் வீணாய்விடும். ஒரு பழமொழி கூறுவது போல்,
ராஜநீதி அறிந்தவன் முதலில் ஸாமம் என்கிற உபாயத்தையும், கடைசியில் தண்டம் என்ற உபாயத்தையும் கையாள வேண்டும் என்று பிரம்மா உபதேசிக்கிறார். அவற்றில் தண்டம் என்பது பாவம் மிகுந்தது. ஆகையால் அதைக் கையாள்வதைத் தடுக்க வேண்டும். அல்லது தவிர்க்க வேண்டும்.
பகைவனின் மனத்தில் படிந்த துவேஷம் என்கிற இருளை ஒளிவீசும் ரத்தினமும், சூரியனும், நெருப்பும் விலக்குவதில்லை. ஸாமம் ஒன்றுதான் அந்த இருளை விலக்குகிறது. ஸாமத்தினாலேயே காரியம் கைகூடும்போது தண்டத்தை ஏன் உபயோகிக்க வேண்டும்? சர்க்கரையால் பித்தத்தைத் தணிக்க முடிகிறபோது யாராவது சுரைக்காயை உபயோகிப்பார்களா?
ஸாமம், தானம், பேதம் இவை மூன்றும் புத்தி என்கிற கோவிலுக்கு வாயில்களாகும். நான்காவதாகிய தண்டம் என்பது திமிரால் ஏற்படுவது என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.
பலமில்லாமல் புத்தி மட்டுமிருந்தால் அது பெண்மை என்று கருதப் படுகிறது; சூரத்தனம் மட்டும் இருந்து புத்தியில்லாமற் போனால் அது மிருகத்தனம்தான் என்பதில் சந்தேகமில்லை.
யானை, பாம்பு, சிங்கம், நெருப்பு, நீர், காற்று இவற்றின் உண்மையான பலத்தைப் பலசாலி அறிவான் உபாயத்தால் அடைவது பலன் தராது.
அல்லது, ‘நான் மந்திரி குமாரன் அல்லவா’ என்று கர்வங்கொண்டு நீ ஒழுங்கீனமாக நடந்து கொள்வாயானால் உனக்கு நாசம்தான் சம்பவிக்கும். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
ஐம்புலன்களை அடக்காதவன், அன்பு வளர்க்காதவன், மனத்தை நல்வழியில் செலுத்தாதவன், தர்மம் செய்யாதவன், உலகில் விளம்பரம் மட்டும் விரும்பி உண்மையான கீர்த்தியையும் மனச்சாந்தியையும் தேடாதவன் இவர்கள் எல்லாம் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்துதான் என்ன பிரயோஜனம்?
ராஜ நீதி என்பது ஐந்து பகுதிகளில் கொண்டிருக்கிறது. அவையாவன. காரியத்தைச் சரியாக ஆரம்பிப்பது, ஆன்பலம் பணபலம், இருப்பது; சரியான காலம் சரியான இடம் நிர்ணயிப்பது; ஆபத்து வரும்போது தடுப்பது; வெற்றியோடு காரியத்தை முடிப்பது, என்பவையே. தற்சமயம் அரசர் சங்கடத்தில் சிக்கியிருக்கிறார். உனக்குத் திறமை இருக்கிறதென்றால் இந்த ஆபத்தைத் தடுக்க வழி தேடு. முறிந்துபோன நட்பைத் திரும்பச் சேர்த்து வைப்பதில்தானே மந்திரிகளின் மதிநுட்பம் சோதிக்கப்படுகிறது? மூடா, உனக்கு விபரீத புத்தி இருப்பதினாலேதான் உன்னால் அதைச் செய்ய முடிய வில்லை. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
பிறர் காரியத்தை நாசம் செய்யத்தான் நீசனுக்குத் தெரியும். அதை மேம்படுத்துவதற்கு ஒன்றும் தெரியாது. பெருச்சாளிக்குச் செடியைப் பிடுங்கத் தான் சக்தியுண்டோªழிய, செடியைக் காக்க சக்தியில்லை.
என்ன செய்யலாம? இது உன் குற்றம் இல்லை. மந்த புத்தியுள்ள உன் பேச்சை நம்புகிற அரசருடைய குற்றம்தான் இது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
மந்தபுத்தியுள்ளவனுக்குச் சாஸ்திரம் கற்பித்தால் அவனுக்குக் கர்வம் அதிகமாகிறதேயொழிய குறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் எல்லோருக்கும் கண் தெரியும் போது, ஆந்தைகள் மட்டும் குருடாகி விடுகின்றன அல்லவா?
கல்வியால் கர்வமும் மடமையும் நீங்குவதற்குப் பதிலாக அதிகரிக்குமேயானால் அதற்குச் சிகிச்சை என்ன இருக்கப் போகிறது? அமுதமே ஒருவனுக்கு விஷமாகி விட்டால் பிறகு அவனுக்கு எப்படி வைத்தியம் செய்வது?
என்றது கரடகன்.
மிகவும் பரிதாபகரமான நிலைமையில் அரசன் இருப்பதைப் பார்த்துக் கரடகன் அதிகக் கவலைகொண்டது. மீண்டும் தமனகனைப் பார்த்து, என்ன கஷ்டகாலம்! பிறருடைய உபதேசத்தினால் அரசருக்கு மிகுந்த சங்கடம் உண்டாயிருக்கிறது.
புத்திமான்கள் சொன்ன வழியே நடக்காமல் நீசர்களின் சொற்படி நடக்கும் அரசர்கள் சண்டை சச்சரவுகளுக்கு ஆளாகி அனர்த்தம் என்கிற கூண்டில் சிக்கிக்கொள்வார்கள். அதிலிருந்து வெளியேறுவது கடினம் என்றும் தெரிந்து கொள்வார்கள்.
என்று சொல்கிறபேச்சு ரொம்பவும் சரி. மூடனே, குணசாலிகள் சூழ்ந்துள்ள அரசனுக்குத்தான் உலகம் சேவை புரிய விரும்புகிறது கேவலம் மிருகங்களைப்போல் அழிக்கிற கலை மட்டும் தெரிந்துள்ள உன் போன்ற மந்திரிகள் இருந்தால் அரசனுக்கு நல்ல சகபாடிகள் எப்படிக் கிடைப்பார்கள்?
ஒரு பழமொழி கூறுவதுபோல்,
அரசன் நல்ல மனங்கொண்டவனாகயிருந்தாலும், அவனைச் சூழ்ந்து துன் மந்திரிகள்ள இருந்தால் அந்த அரசனை உலகம் வெறுக்கிறது. இனிப்பாக அமைதியாக இருக்கும் குளம் முகமலர்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனால் அதற்குள் முதலைகள் இருக்கும். (என்றால் அதை யார் நெருங்குவார்கள்?)
உன் சுயநலத்தை உத்தேசித்து அரசனைப் பிரித்துத் தனிமையிலே வைத்திருக்க நீ விரும்புகிறாய். மூடனே!
அரசன் சபையின் மத்தியிலேதான் சோபிக்கிறான். தனிமையில் சோபிப்பதில்லை. அவனைத் தனிமைப்படுத்தி வைக்க விரும்புகிறவன் அரசனின் விரோதிதான்
என்பதை நீ ஏன் அறியவில்லை?
கடுமையான சொல்லில் நன்மை இருக்கிறதா என்று பார். அது எப்போதும் விஷம் அல்ல. தித்திக்கும் பேச்சில் துரோக சிந்தனை இருக்கிறதா என்று பார். அது எப்போதும் அமிர்தமாயிருப்பதில்லை.
பிறர் சந்தோஷமாகவும் செழிப்பாகவும் இருப்பதைக் கண்டாலே உனக்கு வருத்தம்தான். அது மிகவும் தவறு. சிநேகிதர்கள் தம் கடமையைச் செய்தபின் அப்படி இருப்பது சரியல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
துரோகத்தால் நண்பனைப் பெற விரும்புகிறவன், கபடத்தால் தர்மம் சேர்க்க விரும்புகிறவன், சுலபமான வழிகளால் கல்வி பெற விரும்புகிறவன், திமிரால் பெண்ணையடைய விரும்புகிறவன் இவர்கள் எல்லாம் கர்வம் பிடித்த முட்டாள்களே.
எந்தச் செய்கை ராஜ சேவை செய்பவர்களுக்கு வளம் அளிக்கிறதோ அதுவே அரசனுக்கும் திருப்தி அளிக்கிறது. ரத்தினங்கள்போல் ஒளி வீசி எழும் அலைகள் இல்லாவிட்டால் கடல் நடம்புரிந்து பிரயோஜனம் என்ன?
மேலும், அரசன் அருளைப் பெற்றிருப்பவன் அடக்கத்தோடு இருக்க வேண்டியது அவசியம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
எவ்வளவுக்கெவ்வளவு எஜமானன் வேலைக்காரனுக்குச் சலுகை கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அந்த வேலைக்காரனிடம் பயமும் அடக்கமும் இருந்தால் அவன் விளங்குவான்.
நீயோ அற்பச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறாய். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
நிலைகுலைந்து போனாலும் பெரியோர்கள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கரையில் பள்ளம் விழுந்தாலும் கடலின் கம்பீரம் குறைகிறதில்லை யல்லவா?
அற்ப விஷயத்திற்குக்கூட நீசர்கள் நிலைமாறுகின்றனர். மெல்லிய காற்று அடித்தாலும் நாணல்புல் குனிந்து கொடுக்கிறது அல்லவா?
குற்றம் எல்லாம் அரசருடையதுதான். ராஜ நீதியின் ஆறு மார்கங்களையும், நான்கு உபாயங்களையும் அறியாமல் மந்திரி என்று சொல்லிக் கொள்ளும் உன் போன்றவர்களிடம் அரசர் குணமும் பணமும் அன்பும் பெறவேண்டி வெற்றிக்கு உபதேசம் கேட்டாரே?
அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசுவதோடு நிறுத்திக்கொண்டு வில்லில் அம்பு தொடுக்க மாட்டாத ஊழியர்களுடன் கேளிக்கையில் மூழ்குகிற அரசனை ராஜ்யலட்சுமி விட்டுச் சென்று எதிரியுடன் தங்கி விளையாடுகிறாள்
என்று சொல்லி வைத்திருப்பது சரிதான்.
பலபத்திரன் என்ற மந்திரி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். நிர்வாண சந்நியாசியை எரித்து அரசனின் அருளைப் பெற்றான். என்ற கதை நியாயத்தைத்தான் சொல்லுகிறது’’ என்றது கரடகன்.
”அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:
- சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்
- நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
- நிறையும் பொறையும்
- அந்தக் குயிலோசை…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
- “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
- கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
- செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
- திண்ணையில் கண்ணம்மா பாட்டி
- சுஜாதா
- இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
- முகமற்றவனின் பேச்சொலி
- ப்ளாட் துளசி – 1
- தேனும் திணை மாவும்
- பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)
- மீன் குழம்பு
- இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
- பாரதிக்கு இணையதளம்
- என்னின் இரண்டாமவன்
- இரு வேறு நகரங்களின் கதை
- மார்கழிப் பணி(பனி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2
- சந்தனப் பூ…..
- வேறு ஒரு தளத்தில்…
- வம்பளிப்புகள்
- பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை
- பெரிய அவசரம்
- அவன் இவன் அவள் அது…!
- காதல் கொடை
- அன்பின் அரவம்
- சுனாமியில்…
- பொருள்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
- முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
- ஏனென்று தெரிய வில்லை