சித்தநாத பூபதி
ஒரு பெண் அதுவும் ஏழு குழந்தைகளுக்குத் தாய் , எப்பொழுது கிணற்றில் விழுவாள் என்று ஊரே எதிர்பார்க்குமா ? ஆனால் பத்மாவதி – லூசுப்பத்மா விசயத்தில் அப்படித்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவள் கெட்டவள் இல்லை. அவள் சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் அது புரியும்.
தீப்பெட்டி விளையும் ஊர்களில் ஒன்று. ஊடுபயிராக பட்டாசும். விடிந்தது முதல் அடையும் வரை வேலை. சினிமா பார்க்கனும் என்றால் பஸ் ஏறி சாத்தூர் போகணும். ஆனால் அது கௌரவமானவர்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்தது. சென்னப்ப நாய்க்கர் ஒருநாள் தன் சம்சாரத்தை வா படம் பார்க்கப் போகலாம் என்ற போது கொண்டம்மாளுக்கு அதிர்ச்சி. நாப்பத்தஞ்சு வயசாகியும் அவர் படமே பார்த்த்தில்லை. அவரே படம் பார்க்கக் கூப்பிட்டுப் போய்ப் பார்த்த படம் காந்தி. கடைசியாக சபரிமலை ஸ்ரீ அய்யப்பனும் பார்த்தார். அதே சமயம் திருழாவிற்குப் போடும் அரிச்சந்திரா மயான காண்டமானாலும் சரி வள்ளி திருமணமானாலும் சரி விடியவிடியப் பார்ப்பார். அவர்களின் ஒரே மகளான பத்மாவதிக்கும் சினிமாப் பார்க்க வாய்க்கவில்லை என்றாலும் பாவைக்கூத்து மேல் பைத்தியமாக இருந்தாள்.
கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலே கிராமத்தில் பட்டப்பெயர் வைத்து விடுவார்கள். சடங்காகி அஞ்சு வருசமாகியும் மழலை மாறாமலும் , முன் பின் தொடர்ச்சி இன்றியும் பேசினால் விட்டு வைப்பார்களா !. திடீரென்று வீட்டு வாசலில் தெருவில் அண்டாவை வைத்துக் குளிக்க ஆரம்பித்துவிடுவாள். கொண்டம்மா பருத்திமாறால் ரெண்டு வப்பு வச்சு உள்ள போய்க் குளிக்கச் சொன்னால் ‘அய்யா இங்க தான குளிச்சாக . என்ன மட்டும் ஏன் வெரட்டுற’ ம்பாள்.
திடீரென்று பக்கத்து வீட்டில் போய் நான் மாசமா இருக்கேன் என்று சொல்லி இருக்கிறாள். அவர்கள் பதறியடித்து கொண்டம்மாளிடம் சொல்ல ‘எவண்டி எவண்டி ‘ என்று சொல்லி அடி வெளுக்க மிரள மிரள விழித்து ரெண்டு நாளா நல்லா சாப்டேன் வயிறு பெருசாயிடுச்சு. அப்ப மாசமா தான இருக்கேன்னு சொல்ல கொண்டம்மாள் மிச்ச இருக்குற மாறையும் அடித்து முடித்து விட்டுத்தான் ஓய்ந்தாள்.
பாவைக்கூத்தில் நல்லதங்காள் கதை போட்டால் தீப்பெட்டி அள்ளுற சாக்கை எடுத்துக் கொண்டு முதல் ஆளாக உட்கார்ந்து விடுவாள். நல்லதங்காள் என்றால் நிற்கக்கூட இடம் இருக்காது. டபுள் ஷோ பார்க்கலாம். திரைக்குப் பின்னால் ராவ் கூத்து. வெளியே பத்மா கூத்து. பகலில் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நல்ல தங்காளுக்கும், மூளி அலங்காரிக்கும் இரவில் பெட்ரோமாஸ் வெளிச்சத்தில் பகையாகும் . அவர்கள் பேசுவது பாதிக்கு மேல் புரியாது. பார்ப்பவர்கள் கற்பனையில் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியது தான். நல்ல தங்காள் என்று கூடச்சொல்லத் தெரியாத சிறுசுகள் நல்ல தேங்கா கதை நல்ல தேங்கா கதை என்று சொல்லி உச்சிகுடும்பனும் உளுவத்தலையுனும் அடித்துக் கொண்டு சண்டை போடும் வரை கெக்க கெக்கக்கேன்னு சிரிச்சுட்டு மட்ட மல்லாக்க தூங்கிவிடுவார்கள். மானா மதுரையில் பஞ்சம் ஆரம்பிக்கையில் , நல்ல தங்காள் தாலி தவிர எல்லாவற்றையும் விற்க ஆரம்பிக்கையில் கேவிக் கேவி அழ ஆரம்பித்து விடுவாள். மூளி அலங்காரி ஒடிக் கதவடைக்கையில் , மண்ணறைந்து சாத்தும்போது அவளுக்கு விழும் வசவுகளைக் கேட்க நேர்ந்தால் அடுத்தமுறை நல்ல தங்காள் வரும்போது மூளி பூசணிப்புக் கோலம் போட்டு பால்கொழுக்கட்டை செய்தாலும் செய்து வைக்கலாம். கிராமத்தில் அத்தனை பேர் பேசியதிலும் திட்டுக்களாக உருவி மாறாத மழலைக் கீச்சுக்குரலில் பத்மா திட்டுவதைப் பார்க்க ஆம்பளைகளுக்கும் பொம்பளைகளுக்கும் ரெம்ப இஷ்டமாய் இருக்கும்.. நல்ல தங்காள் ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளும் போது திரைக்குப் பக்கத்தில் போய் ‘ ஒத்து ஒத்து (வேண்டாம் , வேண்டாம்) என்று கதறுவாள். நான் எடுத்துட்டுப் போய் வளக்குறேன் என்று மாரடிப்பாள். நல்ல தங்காள் கிணற்றில் விழுவது தான் உச்சம் . அதன் பிறகு சிவபெருமான் வருவதை எல்லாம் யாரும் பார்க்க முடியாது . மந்தையில் கிடக்கும் மண்ணை எல்லாப் பக்கங்களிலும் வாரி வாரித் தூற்றுவாள். சின்னப்பிள்ளைகள் எழுந்து வீட்டப் பாத்து ஓடும். எல்லோருக்கும் முழுத்திருப்தி.
‘ இந்தக் கிறுக்கி யார் வீட்ல போயி என்ன கஷ்டப்படப் போறாளோ’ என்று ஒருத்தர் சொன்னால் ‘ இவளக் கட்டிக்கிட்டு அவன் என்ன பாடு படப்போறானோ’ என்று இன்னொருவர் சொல்ல கொஞ்சம் விவரமானவர்கள் நல்ல தங்காள் கிணற்றில் விழும்போது கூட சேலையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு விழுந்த பத்தினித்தனத்தை மெச்சிக் கொண்டிருப்பார்கள்.
ஆனாலும் பத்மாவுக்கு நல்லபடியாக கல்யாணம் ஆகத்தான் செய்தது. வெட்டரிவா கெங்கம்மா – பேசுனாலே அருவாள வச்சு வெட்டுற மாதிரி பேசும் அந்த அவ்வாவின் மகன் அப்புரானி சீனிவாசனுக்கு பத்மாவைக் கல்யாணம் பண்ணி வச்சது விதி. ஊர்க்காரர்களுக்கு இடைவேளை முடிந்து படம் தொடங்கிய மாதிரி ஆச்சு. ரெண்டாம் தாரம் தான். முதல் மருமகள்ட்ட சன்னச் சண்டையா போட்டிருக்கும் அந்த அவ்வா . எப்படியும் இங்கனதான இருப்பான்னு நெனச்சுப் போட்ட சண்டைல அவ தீத்துட்டுப் போயிட்டா. இப்ப சண்டைக்கு ஆள் இல்லாம லூசுப்பத்மாவ கட்டி வச்சாச்சு. சின்ன வயசுல இருந்தே நல்லதங்காள் மாதிரி முடிவளத்துக்கிட்டுத் திரிஞ்சா பத்மா. நான் நல்லதங்கா மாதிரி என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு திரிவாள்.
அவர்கள் போடப்போகும் சண்டையைப் பார்க்க சிலர் அடிக்கடி அந்தப் பக்கம் நடையைக் கூட்டினார்கள். ஆனால் மாமியாரும் மருமகளும் மாற்றி மாற்றிப் பேன் பார்த்துக் கொண்டிருந்த்து எரிச்சலாகத்தான் இருந்த்து. கெங்கம்மாவுக்கும் கையும் வாயும் துறுதுறுன்னு இருக்கத்தான் செஞ்சது. இன்னும் கொஞ்சநாள் விட்டுபிடிக்கலாம்னு நெனச்சோ , அப்புராணிச் சீனிவாசன் கூட முதல் சம்சாரம் தீத்துட்டுப் போனதற்கு நீ தான் காரணம் என்று முகத்திற்கு நேரே சொல்லிவிட்டதாலும் இருக்கலாம். ஆனாலும் கூட பத்மாவதியின் இயல்பும் அவளைக் கலவரப்படுத்தியது.
பத்மாவதியும் சொல்லிவைத்த்து போல் ஏழு குழந்தைகளைப் பெற்று குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாள். ஊரில் இது மாதிரிப் புராண வரலாற்றுக் குடும்பங்கள் சில உண்டு. ஒத்தத்தெரு ராமசாமி இப்படித்தான் முதல் பையனுக்குத் தருமன்னு பேர் வச்சார். வரிசையாக ஐந்தும் பையன்தான்னு எப்படித்தான் ஆரம்பித்தாரோ சகாதேவனில் முடித்தார். ஆனால் ஊர்க்காரர்களின் அக்கிரமத்திற்கு அளவே கிடையாது கர்ணன் எங்கேயே இருக்கான்னு சொல்வார்கள். எட்டு வருசம் கழித்து முத்துப்பாண்டிக்கு பொம்பளப்பிள்ள பெறந்தப்ப வீரமா இருக்கட்டும்னு ஜான்சிராணின்னு பேர் வைக்கட்டான்னு வேம்பு சுப்பையாகிட்ட கேட்டான். ‘வேண்டாண்டா பிள்ளப் பெறக்காது. அவ தத்து எடுத்து தான் பிள்ளகூட்டணும்’ னு சொன்னார்.
ஏழு பிள்ளை பிறந்ததும், பதமாவதியின் அள்ளி முடியாத ஆறடிக் கூந்தலைப் பார்க்கும் போதெல்லாம் மாமியாருக்கு பீதி கூடியது. ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பத்மாவதி தன் வீட்டுக்கு எதிரே இருக்கும் கிணற்றில் விழத்தான் போவதாகவும் , அதற்குக் காரணம் தான் தான் என்று போலிஸ் ஜீப்பில் பிடித்துக் கொண்டு போகப்போவதாகவும் பலவிதங்களில் கற்பனை செய்து வைதிருந்தாள். ஊர்க்காரர்களும் கூட ஏழு பிள்ளை பிறந்தவுடன் அப்படித்தான் ஆகும் என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
என்னேரமும் அவளைக் கண்காணிப்பதிலேயே கெங்கம்மாவுக்கு நேரம் போனது . சண்டை போடவேண்டும் என்று மனம் பரபரத்தால் தண்ணீர்க்குழாயடியில் யாரிடமாவது வாயைக் கொடுத்து வாங்குவதோடு சரி. இதையும் மீறி கோப்ப்பட்ட சில சமயங்களில் பத்மா கெக்க கெக்கன்னு சிரிச்சு மாமியாரின் கையை மடித்து பே! என்று குழந்தைகள் கத்துவது போல் போலியாகக் கத்திவிட்டுப் போய்விடுவாள். நாளாக நாளாக கெங்கம்மாவின் கண்பார்வை மங்கியதே தவிர கிணறும் அப்படியேதான் இருந்தது. பத்மாவும் பிள்ளைகளும் அப்படியே தான் இருந்தார்கள். வருடா வருடம் பத்மா நல்லதங்காள் நாடகத்துக்கு அப்படித்தான் அழுதாள்.
இன்று அந்த திருப்பம் வந்தே விட்டது. பத்மா வீட்டுக்கு எதிரே உள்ள கிணற்றடியில் போடப்பட்ட குழாயில் தண்ணீர் பிடித்து துவைத்துக் கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் வாளியில் துணிகளை அலசினாள்.. மாமியார் பக்கத்து வீட்டிற்குப் போயிருந்தாள் அங்கிருந்து பார்த்த போது யாரோ குழாயில் துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இது கெங்கம்மா தண்ணீர் பிடிப்பதற்கான நேரம் . யாரோ துவைத்துக் கொண்டிருப்பது மேலும் ஆத்திரத்தைக் கிளப்பியது. காலையில் பத்மா போட்ட சோறு வேகாமல் இருந்த எரிச்சல் வேறு. கண்பார்வை வேறு மங்க ஆரம்பித்திருந்ததால் கண்டபடி திட்ட ஆரம்பித்து ஒரு பெரிய கல்லைத் தூக்கி எறிந்தாள். ‘அத்தெ என்னைக் கொல்லாதீங்க’ என்று பத்மா சத்தம் போட்டதும் தான் கெங்கம்மாவுக்கு உறைத்தது. அப்பொழுது பார்த்துத்தானா அந்த வேன் குறுக்க வரவேண்டும். கிணற்றிலிருந்து பெரிய சத்தம் வந்தது.
கெங்கம்மா ஒடிவந்து பார்த்தால் கிணற்றுக்குள் பத்மாவின் சேலை தெரிந்தது. போலிஸ் வருவது போல் தானே நினைத்துக் கொண்டு கெங்கம்மாவும் கிணற்றுக்குள் குதித்து விட்டாள்.
தண்ணீர் இறைக்கிற மோட்டார் வைத்து இறைத்து இறைத்து பத்து மணி நேரம் கழித்துதான் கெங்கம்மாவின் உடல் கிடைத்தது. பத்மாவின் சேலையும் பிளாஸ்டிக் வாளியும் கிணற்றுக்குள் போனதை யாரும் கண்டு கொள்ளவில்லை . அன்று பத்மா வைத்த ஒப்பாரிச் சத்தம் ஊரைக் கலக்கியது.
‘ ஏண்டி நீயில்ல விழுவேன்னு நெனச்சோம்.நல்ல தங்கா மாதிரி ஏழுபிள்ள பெத்து வச்சுட்டு கெணத்தக் கெணத்த வெறிச்ச ‘
‘நல்ல தங்கா மாதிரி எனக்கென்ன அண்ணன் இருக்காரா ? மதினி இருக்காளா? இங்க என்ன பஞ்சம் வந்துச்சா ? பச்ச மட்ட எரிஞ்சுச்சா ? நான் எதுக்குப் பிள்ளைகளப் போட்டுட்டுச் சாகுறேன்.’
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-28
- அறியான்
- ‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’
- நழுவும் உலகின் பிம்பம்
- குசினிக்குள் ஒரு கூக்குரல்
- சிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘
- லிங்குசாமியின் ‘ வேட்டை ‘
- மாநகர பகீருந்துகள்
- மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்
- நல்ல தங்காள்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புராதனக் காதல் புது வடிவங்களில் ! (கவிதை -57)
- ஒரு நாள் மாலை அளவளாவல் (2)
- சோ – தர்பார்
- மூன்று நாய்கள்
- உன்னதமானவர்களின் உள் உலகங்களைக் கண்டு வியக்கும் இந்திரன்
- சந்திரலேகா அல்லது நடனம்..
- புதுசா? பழசா? (2012 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றியது)
- இறந்து கிடக்கும் ஊர்
- பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 10
- திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் வழங்கும் மு வ நூற்றாண்டு விழா
- ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்
- தனி ஒருவனுக்கு
- துபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்
- முன்னணியின் பின்னணிகள் – 23
- பயணி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6