பேஸ்புக் பயன்பாடுகள் – 1

This entry is part 28 of 31 in the series 5 பிப்ரவரி 2012

“சேகர்.. உங்க அப்பா இப்போ எப்படி இருக்காரு?”

“நாளைக்கு அவசரமா அறுவை சிகிச்சை செய்யணுமாம்.. அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது.. அதுக்குத்தான் அலையறேன்..”

“என்ன இரத்தம் தேவை?”

“ஓ-பாசிடிவ்..”

“அப்படியா.. இரு.. இன்னும் ஐந்தே நிமிஷத்திலே உனக்கு கிடைக்கச் செய்யறேன்”

“ஐந்து நிமிஷத்திலையா.. நான் நேத்துலேந்து அலையறேன்..”

“சோசியல் பிலட்-ன்னு பேஸ்புக்ல ஒரு பயன்பாடு இருக்கு. அதில் நமக்குத் தேவையான இரத்த வகையைச் சேர்ந்தவரை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம்..”

“அப்ப உடனடியா செய்து, இரத்த தானத்துக்கு ஏற்பாடு செய்தா.. உனக்கு கோயில் கட்டி கும்பிடுவோம்பா..”
“என்னப்பா.. இதெல்லாம்.. என்னால முடியறதைதானே செய்யறேன்..”

மறுநாள்.

“சேகர்.. அப்பா இப்போ எப்படி இருக்காரு..”

“சிகிச்சை முடிந்து நல்லபடியாக இருக்காரு.. உங்க பேஸ்புக் நண்பருக்குத்தான் நன்றி சொல்லணும்..”

பேஸ்புக்கில் இது போல் மிகவும் உபயோகமான பல பயன்பாடுகள் இருக்கின்றன. அது எப்படி அவரால் பேஸ்புக் நண்பரைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று உங்கள் மனதில் ஏற்படும் கேள்வி எனக்கு புரிகிறது.

பேஸ்புக்கில் இருப்போர் சோஷியல் பிலட் என்ற இணையத்திற்குச் சென்று உங்கள் இரத்த வகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். நமக்குத் தேவையான இரத்த வகைத் தேவைப்படும் போது, பேஸ்புக் மூலமாக கோரிக்கை அனுப்பினால் போதும். இதே இரத்த வகை கொண்ட, அதே ஊரில் இருக்கும் எந்த நண்பரால் முடியுமோ அவர்கள் தொடர்பு கொண்டால், அவரது உதவியுடன் இரத்த தானத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கை முகப்பதிவு என்றும் அழைக்கலாம். நம்மைப் பற்றியும் நம்முடைய கருத்துக்களையும் நம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் தளமே இது. நம்முடைய முகவரியைப் பதிப்பதால் அது முகப்பதிவு. எளிமையும் சௌகரியமும் கருதி நாம் பேஸ்புக் என்ற வார்த்தையையே நம் கட்டுரையில் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.

கணினி வளர்ச்சி இந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் அசுர வேகத்தில் உள்ளது. 2004இல் மார்க் சக்கர்பெர்க்கால் உருவாக்கப்பட்ட பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1லிருந்து ஆரம்பித்து, இந்த ஏழு ஆண்டுகளிலேயே 80 கோடி என்றால், நம்ப முடிகின்றதா? அதிலும் இந்தியாவில் மட்டுமே 2 கோடி பேர்கள் பயன்படுத்துகின்றனர். அதில் அப்படி என்ன இருக்கிறது?

பேஸ்புக் என்பது முதலில் ஒரு சமூக வலையாக மட்டுமே ஆரம்பமானது. ஆனால் இப்போது அதில் பலப்பல புதுப்புது விஷயங்கள் புகுத்தப்பட்டு, சமூக வலை விரிந்து, பல நன்மை தரும் வசதிகள் கொண்ட தளமாகவும் உருப்பெற்று நிற்கின்றது.
பேஸ்புக் அறிமுகமான போது, அது கல்லூரியில் ஒருவரோடொருவர் கணினி மூலம் செய்திகள் அனுப்பிப் கொள்ளப் பயன்படும் தளமாக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதுவே பல கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த ஆரம்பித்ததும், பொது மக்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. தொடர்பு கொள்ள வௌ;வேறு விஷயங்களின் தேவை ஏற்பட ஏற்பட, பல புதிய புதிய பயன்பாடுகள் புகுத்தப்பட்டுக் கொண்டே வந்தது. இன்றும் அது வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

நண்பர்களுடன் அரட்டை அடிப்பதோடல்லாமல், வேறு பல விசயங்களும் அதில் அடங்கியுள்ளன. பைசா செலவில்லாமல் பல பயன்பாடுகளை உபயோகிக்கலாம். அன்பைப் பரிமாறிக் கொள்ளலாம்.

தற்போது பல்வேறு நாடுகளிலும் தொலைக்காட்சியை விடவும் பேஸ்புக் போன்ற சமூக வலை மென்பொருட்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. டிவிட்டர், ஹை 5, லின்க்ட்; இன், மீட் அப், யூ டியூப் போன்ற சமூக வலைகளில் ஏதேனும் ஒன்றாவது கணிணி பயன்படுத்தும் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
டிவிட்டர் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலமாக பிலாகிங், மற்றும் உடனுக்குடன் செய்திகளை அனுப்பலாம். பல பிரபல்யங்கள் தங்கள் கருத்துக்களை இதன் மூலம் வெளியிட்டால், அதை அவர்களது விசிறிகளும், தொண்டர்களும் உடன் பார்க்கலாம். தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். டிவிட்டர் மூலமாக, தொடர்வது, தொடராமல் இருப்பது மற்றும் தடை செய்வது மூன்று விஷயங்கள் மட்டுமே செய்யலாம். அது மிகவும் எளிமையாக அமைக்கப்பட்ட சமூக வலை.

அதற்கு மாறாக, இவை அனைத்தும் பேஸ்புக் மூலமாகவும் செய்யலாம். இதற்கு மேலேயும் இதில் செய்யலாம். பேஸ்புக் சமூக வலை மட்டுமின்றி பல பயன்பாடுகளுடன் இருக்கும் வலையதளம் என்றே சொல்லலாம். அதனாலேயே நாளுக்கு நாள் அதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இன்று வரையிலும் 80 கோடி மக்கள் இதில் பயனர்களாக இருக்கின்றனர் என்றால் பிரமிப்பாகவே இருக்கும். 2011 ஆரம்பத்தில் இது 50 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஆறு மாதங்களில் அது 30 கோடிக்கு மேல் அதிகரித்து இருக்கின்றது. அதிலிருந்தே அதனைப் பயன்படுத்துவோர் வெறும் பொழுது போக்கிற்கு மட்டுமன்றி வியாபாரத்திற்கும் இதர காரணங்களும் பயன்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமே 2 கோடி பேர்கள் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளைக் காட்டிலும், இதன் பயனர்கள் இந்தியாவில் சற்றே குறைந்த அளவில் இருக்கின்றனர். இதன் பயன்களைப் புரிந்து கொண்டால், இந்தியப் பயனர்களும் அதிகரிப்பர் என்பதில் சற்றும் ஐயமில்லை.

பேஸ்புக்கை தினமும் 50 சதவீதப் பயனர்கள் திறந்து பார்க்கின்றனர். 40 கோடி பேர்கள் வரை.

25 கோடி படங்கள் தினமும் ஏற்றப்படுகின்றன.

இது 70 மொழிகளில் இருக்கின்றது.

75 சதவீதத்தினர் அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கின்றனர்.

ஒரு மாதத்தில் 50 கோடி பேர் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.

70 இலட்சம் பயன்பாடுகளும் இணையகங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

35 கோடி பேர்கள் தங்கள் கைபேசியுடன் இணைத்துள்ளனர்.

லேடி காகா என்ற பாடகருக்கு 4 கோடி விசிறிகள் பேஸ்புக் மூலமாக பதிவு செய்துள்ளனர். ஜாக்கி சான் நடிகருக்கு 2 கோடி விசிறிகள்.

இத்தனை பேர்கள் அனுப்பும் செய்திகள் எங்கே செல்கின்றன? எப்படி சேமிக்கப்டுகிறது? எவ்வளவு நாட்கள் சேதிக்கப்படுகின்றன? பேஸ்புக்கைப் பயன்படுத்துவோரே, யோசித்ததுண்டா?

இவையெல்லாவற்றையும் ஒரு சேர பாதுகாக்கும் தகவல்களம் எத்தனை என்று தெரிய வேண்டாமா? பத்தாயிரத்திற்குகும் மேற்பட்ட சேவையகங்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கலாம். பேஸ்புக் எப்படி மாபெரும் பயன்பாட்டுக் களமாக இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த எண்ணிக்கைகள். இதைச் சரியான முறையில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்மை பெறலாம் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் அது முதன்மையாகத் திகழ்ந்தாலும், இன்றும் இந்தியாவில் அதன் பயனர்கள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளனர்.

பேஸ்புக் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் வந்துவிட்டது.
பேஸ்புக்கின் பக்கத்தைத் தமிழில் பார்க்க வேண்டுமா? பேஸ்புக் முக்கியப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் மொழிக்குச் சென்று, சொடுக்கினால், பல்வேறு மொழிகளின் வரிசை தரப்பட்டு இருக்கும். அதில் எம்மொழி வேண்டுமோ, அதைச் சொடுக்கினால் போதும், பக்கம் அம்மொழி கொண்ட பக்கமாக மாறிவிடும். வந்த செய்திகள் ஆங்கிலத்தில் இருந்தால், அந்த மொழியில் தான் இருக்கும். தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்திருந்தால் பேஸ்புக் அம்சங்கள் அனைத்தும் தமிழில் விளக்கப்பட்டிருக்கும். பேஸ்புக்கில் இருக்கும் ஆணைகள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் பக்கமாகக் காட்டும் இதுவும் ஒரு பயன்பாடே.

பேஸ்புக் பற்றிய விவரங்களை அறிய நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் கீழ் பகுதியிலுள்ள சிறுசிறு வார்த்தைகளில் உள்ள “அபௌட்” அல்லது “எங்களைப் பற்றி” என்ற தொடுக்கையை சொடுக்க வேண்டும்.

இனி வரும் வாரங்களில் இதிலுள்ள சில பயன்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Series Navigationஉம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்தற்கொலை
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    பேஸ்புக்கை முகப்பதிவு என்றும் அழைக்கலாம்— முகநூல் என்று facebook தமிழ் தளத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *