மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக… வயதாக… வயதாக தூக்கம் தொலைந்து வர அடம் பிடிக்கிறதே..இதே…எனக்குப் பெரிய கவலை…நினைத்தபடியே.. மெல்ல கடிகாரத்தை உற்றுப் பார்க்கிறாள் . இரவு விளக்கின் ஒளியில், மணி இரண்டைத் தாண்டி விட்டதை அறிந்து…அட ராமா..இன்னுமா தூக்கம் வரலைன்னு…அலுத்துக் கொண்டாள். “மெத்தைய வாங்கலாம்…தூக்கத்தை வாங்க முடியுமா”..ன்னு எப்பவோ..எங்கேயோ கேட்ட சினிமாப் பாட்டின் வரிகள் நெஞ்சுக்குள் வந்து மோதியது….
பக்கத்தில் உறங்கும் கணவரின் மெல்லிய குறட்டை ஒலி……! கொடுத்து வெச்சவர்…, படுத்ததும் தூக்கம் வந்துடும் இவருக்கு. கணவனைப் பார்க்க, கொஞ்சம் பொறாமை எட்டிப் பார்த்தது விமலாவிற்கு. தன்னை விட ஐந்து வருடம் வயதில் மூத்தவர் தான், இருந்தாலும் எந்த உபாதையும் இல்லாமல் இருப்பது, அவர் தன் ஆரோக்கியத்தை அவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்வது தான். என்ன செய்ய ? வயதாக… வயதாக… ஏதோ ஒரு கவலை வந்து என் தூக்கத்தில் கை வைக்கிறது. இந்த சக்கரை வியாதி வேற வந்து, அப்பப்போ நானும் இருக்கேன்னு சொல்லி இதயத்தில் கையெழுத்துப் போட்டு என்னை பயமுறுத்தி விட்டுப் போகிறது. அடிக்கடி ஒரு விதமான பசி வயிற்றைப் பிசையும் உணர்வு வேறு வந்து தூக்கத்தை தட்டி எழுப்பும்… இதெல்லாம் போதாதா…!எனக்கு தூக்கம் வராத காரணங்கள். இப்போதும் அதே உணர்வு தூங்க விடாமல் எழுப்ப, அருகில் தயாராக வைத்திருந்த மோரை எடுத்து மடக் மடக் கென்று குடித்துவிட்டு, பசியை அடக்கி விட்டதாய் நிம்மதியானவள், “நத்தை, ஓட்டுக்குள் ஒடுங்கியது போல” போர்வைக்குள் தன்னைச் சுருக்கி உறக்கத்தின் பிடிக்குள் தன்னை பின்னிக் கொள்ள முயன்றாள். எந்தக் கவலையுமே இல்லாமல் சொகுசாக இருக்கும் தனக்கே….உறக்கம் வராமல் அதற்காக கவலைப் படுகிறேனே….எத்தனை பேருக்கு என்னை மாதிரி ஒரு நிம்மதியான வாழ்வு கிடைத்திருக்கும்…? அப்படிக் கிடைக்காமல் கஷ்டப் படுபவர்கள் எல்லாம் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்..? அதுபோல் மற்றவர்கள் படும் அவஸ்தைகளுக்கு முன்னால் என்னை பகவான் நன்னாத் தான் வைச்சிருக்கார்….மனசில்… ஏதேதோ நினைத்துக் கொண்டே அப்படியே உறங்கிப் போனாள்.
காலைப் பொழுது எப்போதோ….விடிந்து விட்டதை டிபன் வாசனை மூக்கைத்துளைத்து உணர்த்திக் கொண்டிருந்தது.இன்று…பூரியும்.. உருளைக்கிழந்து மசாலாவும் என்று வாசனை வீடு பூரா சொல்லி விட்டு படி இறங்கி தெருவரைக்கும் சென்றது…..நித்யா செய்யும் சமையலுக்கு வாசனை ஒன்றே போதும்…பெயர் சொல்லத் தேவை இல்லை…வாசனையை வைத்தே கண்டு பிடித்து விடலாம்….அவள் கைமணம் அப்படி…..இன்னைக்கு குழந்தைகள் ரெண்டு பேரும் சாப்பிடப் படுத்தி இருக்க மாட்டார்கள்….பெரியவள் காயத்ரிக்கு பூரின்னா உயிர்… சின்னவன் சிவாவை … சாப்பிடு… சாபிடுன்னு..கெஞ்சவே வேண்டாம்…..நினைத்துக் கொண்டே எழுந்தாள் விமலா…அதிகாலையிலேயே கணவர், போர்வையை உதறிப் போட்டு விட்டு வாக்கிங் சென்று விட்டதை பக்கத்தில் வெறுமையைப் பார்த்துப் புரிந்து கொண்டவள், மெல்ல எழுந்தவளுக்கு கூடவே,,,,. முழங்கால் வலி… “இதோ, நானும்…. நானும்..என்னை விட்டுடாதேன்னு என கூடவே நொண்டி நொண்டி வந்தது. மணி எட்டுக்கும் மேல் என்று புரிந்ததும், ஏதோ இனம் புரியாத அவசரம் அவளுக்குள் புகுந்தது.
அதிகாலையிலேயே…போர்வையை உதறிப் போட்டு விட்டு வாக்கிங் சென்று திரும்பிய கணேசன் தலையில் குளிர் காற்று படாதபடிக்கு உல்லன் மப்ளர் சகிதமாய். தோட்டத்தில் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார், அவர் வைத்த ரோஜாச் செடி புதிதாய் பூத்திருந்தது. வாஞ்சையோடு மலரைப் பார்த்தவர் அதனருகில் சென்று மனதோடு பேச, அந்த ரோஜாவும் நண்பனைக் கண்ட சந்தோஷத்தில்..தலையாட்டிக் கொண்டிருந்தது .. குழந்தைகளோடு குழந்தையாகவும்….மலர்களோடு மலராகவும் மாறி விடுவதால் தானோ என்னவோ..அவருக்கு வயதாவதே…. தெரியாது.
குழந்தைகளை, காரில் பள்ளியில் கொண்டு போய் விட்டுத்திரும்பிய மகன் ரகு காரில் இருந்து இறங்கும்போதே சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே …இறங்கி , “அப்பா…ஹாப்பி பர்த்டே பா……” சந்தோஷமாய் வாழ்த்தியபடியே அருகில் வந்து கைகுலுக்கி விட்டு, சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டு…”ஏம்பா…எத்தனை தடவை சொல்றது, தோட்டத்துக்கு தண்ணீர் விடற வேலையை நீங்க செய்யாதேங்கோன்னு….அதுக்குத் தான் தோட்டக்காரன் இருக்கானே….இந்த வேலையை அவன் வந்து பார்த்துக்க மாட்டானா…? அப்பறம் அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது..எல்லாத்தையும் அய்யா பண்ணிடாருன்னு சொல்லி டிமிக்கி கொடுப்பான். நீங்க எத்தனை சொன்னாலும் கேட்கவே மாட்டேங்கறேள் . அப்பறம்… ஜலதோஷம், ஜுரம்னு .வந்தால் என்ன பண்றது ? இப்படிக் காலை வேளையில் பனில நின்னுண்டு …. ? சொன்னாக் கேளுங்கோப்பா….. ஏன் தான் இப்படி அடம் பிடிக்கறேளோ…. என பொய் கோபத்தோடு ரகு கேட்க…
தாங்க்ஸ்.. டா.. ரகு, ஆமா பொறந்த நாள் இருக்கட்டும்….என்னடா இது…காலங்கார்த்தாலேயே சிகரெட்டப் பத்த வைக்க ஆரம்பிச்சாச்சா….?
“…………. ”
இந்த தோட்டத்துக்கு தண்ணி விடும் இந்த ஒரு வேலையை மட்டும்…நானே….பார்த்துக்குவேன்னு நிறைய தடவை உன்கிட்டே சொல்லியாச்சு… இப்பவும் சொல்றேன். “என்கிட்டேர்ந்து இந்த ஒரு வேலையில் மட்டும் நீ கத்தி வைக்காதே. இந்தச் செடிகளோட, பூக்களோட நான் பேசலைன்னா…. அன்னிக்கே எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்…ஆமா.! சொல்லிட்டேன்.” என்று சொன்ன கணேசன் …” ஆமா ரகு, உனக்கு எத்தன தடவ சொல்றது ? இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுத் தொலைன்னு …….” கேட்கமாட்டேங்கற…. என அவரும் போய் கோபத்தோடு அதட்ட, ரகுவோ, “சாரிப்பா, அதுவா ரிசைன் பண்ணிடும்”னு சொல்லிக் கொண்டே கடைசியாய் ஒரு இழுப்பு இழுத்து விட்டு தன் விரலில் இருந்த மீதியை மனசில்லாமல் அணைத்துக் அங்கிருந்த ஆஷ் டிரே..யில் போட்டான்.
கணேசன் தனக்குள்ளே, “எல்லாம்….. காலம் செய்யற கோலம், அப்பாவாச்சேன்னு ஒரு பயம் இல்லை… ஒரு பக்தி இல்லை”ன்னு முணுமுணுக்க,
“என்னப்பா சொல்றேள் குசுகுசுன்னு… கொஞ்சம் சத்தமா சொன்னா, நானும் கேட்டுட்டுப் போறேனே…ன்னு ரகு திரும்பிப் பார்த்து கேட்க, “அட.! உன்ன இல்லப்பா, நீ போ. நான் ஏதோ….கடமைக்கு சொல்றேன்….”னு சிரித்துக் கொண்டே தோட்டத்துக்குள்ளே நடந்தார். தானாத் திருந்தாதவன் நான் சொல்லியாத் திருந்தப் போறான்…எங்கேர்ந்து தான் இப்படி வந்து ஒட்டிண்டதோ இந்தப் பழக்கம் இவனுக்கு…மகனிடம் சிறு வயதிலிருந்தே பாசத்தோடும் தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன் என்பது போலவும் தான் பேசுவார், பழகுவார். ரகுவும் அதே போல், அப்பாவிடம் ஒரு நண்பனைப் போல் பழகுவான்.கணேசனுக்கும் ரகுவிற்கும் இடையே இருக்கும் பாசம் , , புரிந்து கொள்ளும் திறன், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் எல்லாம் ஒரு நல்ல இரு நண்பர்களுக்கிடையே இருக்கும் நட்பைப் போன்றது. இதைப் பார்த்து, சொந்தங்களே பொறாமை பட்டதுண்டு. அப்பா… பிள்ளை… என்றால் இவர்களை மாதிரி இருக்கணும் என்று.
கணேசன் தன் மகன் ரகுவிற்கு எல்லாவிதத்திலும் விவேகமானஆரோக்கியமான இடைவெளியோடு பழகுவார்.
ஒரு வாரமா..முன்கூட்டியே திட்டமிட்டபடி..வருஷா வருஷம் அப்பா அம்மாவோட பிறந்த நாளுக்கு எங்காவது இயங்கும் முதியோர் இல்லம் சென்று அங்குள்ள முதியோர்களுக்கு இயன்றதை செய்து வரும் பழக்கம் வழக்கமாய் இருந்தது. அதற்காகவே காத்திருந்த அப்பாவின் பிறந்த நாளும் இன்று வந்தது.
போன வாரமே ரகு அப்பாவிடம்…..அப்பா..இந்த தடவை என்ன பிளான் பண்ணி இருக்கேள்? உங்க பிறந்த நாளில்..என்று ..கேட்டதும்..
ஆமாண்டா ரகு…இந்த முறை நாம .”வேருக்கு நீர்-“…. னு ஒரு முதியோர் இல்லம் இருக்காம்…நித்யா தான் பார்த்ததாகச் சொன்னாள்….
அங்கே போய் நீ எதற்கும் முன்கூட்டியே சொல்லிட்டு வந்துடு..அப்போ தான் எத்தனை பேருக்கு சாப்பாடு என்று கேட்டரிங் க்கு சொல்வதற்கு சரியாக இருக்கும் ……இந்த முறை ..என் பென்ஷன் பணத்தை அப்படியே நன்கொடையா கொடுத்துடலாம்னு இருக்கேன்…அதே போல்..நீயும் அங்க எத்தனை பேர்கள் இருக்கான்னு…விசாரிச்சுக்கோ..அவங்களுக்கு வேஷ்டி…. துண்டுகள், புடவைகள்..இதெல்லாம் கூட வாங்கி தயாரா வெச்சுக்கணும்…..ஒரு மாசத்துக்கு வேண்டிய மல்டி வைட்டமின் மாத்திரைகள் கூட ….கொஞ்சம் மொத்தமா வாங்கிக்கணும்…இதெல்லாம் உன்னோட வேலை புரிஞ்சுதா…? கேள்வியோடு ரகுவின் முகத்தைப் பார்த்தார்.
ரகுவுக்கு தன் அப்பாவின் செய்கை எப்ப்போதும் மிகவும் பெருமையாக இருக்கும்.,…இன்று நேற்றா இவன் அப்பாவை இப்படிப் பார்க்கிறான்…நினைவு தெரிந்த நாளில் இருந்து….அம்மாவும் அப்பாவும்….தங்களால் முடிந்ததை ஒவ்வொரு மாதமும்…..தவிர நல்ல நாட்களில் இது போல் தானம்… தர்மம் என்று செய்து வந்ததைக் கண்டு…கண்டு..இது தான் வாழ்வின் முக்கிய கடமை என்னும் உணர்வோடு தானும் கலந்து கொள்வான்..எந்தவித எதிர்பார்ப்போ…இல்லாமல் தங்களால் முடிந்ததை ஆத்ம திருப்தியோடு தேவையானவர்களுக்கு செய்யும் தன் அம்மா அப்பா என்றும் ரகுவிற்கு முன்னோடி தான்…”எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…உங்களுக்கே நான் மகனைப் பிறக்க வேண்டும்….என்று மனதோடு சொல்லிக் கொள்வான்..”..
என்ன ரகு…என்ன யோசனை.. நான் பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன்..காதில் விழலையா…?
என்ன…புரிந்ததா…அப்பா மறுபடியும்…நினைவுச் சங்கிலியைப் பிடித்து இழுக்க…
ம்ம்ம்…அப்பா…சரிப்பா நீங்க சொல்லிட்டேள்….நானும் நித்யாவும் ரெண்டே நாள்ல தயார் பண்ணிக்கறோம்…இன்னைக்கே அங்க போய்ட்டு எல்லா விபரமும் கேட்டுண்டு வந்துடறோம்…..யூ…ஜஸ்ட்….ரிலாக்ஸ்…பா..சொல்லும்போதே ரகுவின் மனதில் நிம்மதி.
அதேபோல்…சொன்னபடியே தானும்..நித்யாவும் எல்லா வேலைகளையும்…தயார் பண்ணி நாலு நாளாகப் போறது..
ரகுவிற்கும்…அந்த அன்பான குடும்பத்துக்கும் இறைவன் அளித்த கொடை குத்துவிளக்கு நித்யா….! பத்து வருடம் முன்பு ஒரு நாள் தன் நண்பன் கண்ணனின் கல்யாணத்திற்க்காக சென்ற இடத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த நித்யாவை…கோலத்தில் மனம் லயிக்க….சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு நகர்ந்த ரகுவைப் பார்த்த கண்ணனின் தந்தை அருகில் வந்து…என்னடா ரகு….கோலம் போடறாளே…. அவள் நித்யா….எனக்கு சொந்தக்காரப் பொண்ணு தான்…கண்ணன் மட்டும்….உமாவை காதலிக்காமல் இருந்திருந்தால் நித்யா எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்திருப்பா….என்ன செய்ய யார் யாருக்கு எங்கெங்கே முடிச்சு போட்டுருக்கோ…..நித்யா ….தங்கமான பொண்ணு….ஏண்டா ரகு….உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் உங்கப்பாட்ட பேசலாமோ….உன் கல்யாணத்தைப் பத்தி….கண்ணனோட அப்பா பேசிக்கொண்டே சென்று நித்யாவை அருகே அழைத்து அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் கல்யாணத்தைப் முடித்து வைத்துட்டுத் தான் மூச்சு விட்டார் .அன்று.. அப்படி அறிமுகம் ஆனவள் நித்யா…….இன்று இந்த வீட்டின் நித்யராணியாக… என் மனைவியாக எங்கும் நிறைந்தாள்.
அதற்குள் ஹாலிலிருந்து அம்மாவின் குரல், “ரகு…ரகு…..இன்னைக்கு கார்த்தால எல்லாரும் கிளம்பணும்… ஞாபகம் இருக்கோன்னோ….? நித்யா எல்லாம் ரெடி பண்ணியிருக்கா, இதோ நானும் கிளம்பறேன், அப்பா எங்கே ? அவரையும் சீக்கிரமா கிளப்பு, தோட்டத்துக்குப் போனா, அவருக்கு பொழுது போறதே….. தெரியாது. ஒவ்வொரு பூவா பார்த்து, ஹலோ சொல்லிட்டு தான் வருவார் அதுவும் இன்னைக்கு அவருக்குப் பிறந்தநாளா வேறு போச்சா…சொல்லவே வேண்டாம்….. அவரைக் கிளப்பற பாடு உன்னோடது. நான் இப்பவே சொல்லிட்டேன், பிறகு நேரமாச்சுன்னு சொல்லி ஆகாசத்துக்கும் பூமிக்கும் நீ குதிக்கப்படாது” என சொல்லிக் கொண்டே தன் வேலையை கவனிக்கச் சென்றாள் விமலா. ரகுவும் அதே வேகத்தில் தோட்டத்துப் பக்கம் ஓட, அப்பா சொன்ன அஞ்சு நிமிஷம்..அஞ்சு நிமிஷம்….ரகுவிற்கு ஒரு சாக்கு போக்கு கிடைத்தது போல வேகமாக உள்ளே வந்து தனது மடி கணினியை திறந்து வைத்துக் கொன்று மும்முரமாக மெயில் செக் பண்ண ஆரம்பித்தான். சுகமான காலைப் பொழுது அந்த வீட்டில் சக்கரம் கட்டி சுழல ஆரம்பித்தது.
எங்கே அப்பா…? இந்த அப்பா….. ,பிள்ளை கூட்டணி தான்மா எப்பவுமே…சோம்பேறிக் கூட்டணி…இவா ரெண்டு பேரையும் கிளப்பறதும் திருவாரூர் தேரை கிளப்பறதும் ஒண்ணு தான். நின்னா நின்ன இடம் உட்கார்ந்தா உட்கார்ந்த இடம்….னு.. இதோ பாருங்கோன்னா …..என்னதிது….. கால வேளையில அவசரமா கிளம்பணும்னு நாங்க இங்க கால்ல சக்கரம் கட்டாத குறையா இருக்கும்போது இன்னைக்குன்னு பார்த்து இந்த வேலைக்காரம்மா கூட இன்னும் வரலை…அலுத்துக் கொண்ட நித்யா…ரகுவைப் பார்த்து…இப்படி லேப்டாப் முன்னாடி உட்கார்ந்தா எப்படி?….போச்சுடா…..இன்னைக்கு நாம போற இடத்துக்கு போனா…. மாதிரி தான்….பொய்யான கோபத்தோடு பரபரத்தாள் நித்யா. பத்து மணிக்கெல்லாம் வந்துடுவோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன் .இப்போவே மணி எட்டரை ஆயாச்சு…..இன்னும் அரை மணில கிளம்பியாகனும்…டிராபிக் சிக்னல் வேற கண்ட இடத்தில் நிறுத்த வைக்கும். கொஞ்சம் புரிஞ்சுண்டு கிளம்புங்கோன்னா….அவளோட சுறுசுறுப்பு ரகுவையும் பற்றிக்கொள்ள அவனும் கணினியை மூடிவிட்டு கிளம்பத் தயாரானான்.
நித்யா ..நித்யா…அந்த முதியோர் இல்லத்தோட பேரு…என்ன சொன்ன..இன்னொரு தரம் சொல்லு…..ன்னு ரகு…தனது சந்தேகத்தை சத்தமாகக் கேட்க,
“வேருக்கு நீர்-…முதியோர் இல்லம்” அறையில் இருந்து பதில் வந்தது….ரகுவோ…..வேருக்கு நீர்…பேரு ரொம்ப பொருத்தமாக இருக்குன்னு … மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.
நித்யா தான் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் தேவைகளை பார்த்து பார்த்து கவனித்து வருவதில் அவளுக்கு நிகர் யாரும் இல்லை.சின்னக் கூடு தான் அதுவும் அன்பால் பிணைந்து இறுக்கமாய் இருக்க வேண்டும் என்பதில் நித்யா மிகவும் கவனமாக இருப்பாள். முப்பது வயதில் எவ்வளவு விவேகமும் என அவளை தலையில் வைத்து கொண்டாடிய வண்ணம் இருப்பார்கள்.. குறிப்பாக மாமியார் மருமகள் என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை.
அன்றும் என்றுமில்லாத பரபரப்பு வீடு முழுதும்….நித்யா எல்லாம் தயாரா..?.எடுத்து வெச்சுட்டியாம்மா ? ஒரு மாத மருந்து,புது புடவைகள், வேஷ்டி துண்டு..இன்னும் என்னல்லாம் வேண்டுமோ…. நீ பார்த்து பார்த்து வாங்கினியே… எல்லாம் ஜாக்கிரதையா எடுத்துக்கோ எதுவும்… விட்டுப் போகாமல் எடுத்து வெச்சுடு…அம்மாவின் கேள்விக்கு ..
சரிம்மா….எல்லாம் நேற்றே பெட்டில போட்டு கட்டி எடுத்து வெச்சுட்டேனம்மா.. நீங்க ரெண்டு பேரும் கிளம்பி டிபன் சாப்பிடாச்சுன்னா கிளம்ப வேண்டியது தான்.அப்பா தான் பூஜையில் இருக்கிறார்…நீங்களும் எல்லாம் முடிச்சுட்டு கிளம்புங்கோ..அதற்குள் நானும் ரெடியாகறேன்….சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று மறைந்தாள்.
வேருக்கு… நீர்…முதியோர் இல்லத்தில்,….
அனைவரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் அன்று காலையில் காத்திருந்தனர்..ஆமா இன்னைக்கு யாரோ ரெண்டு பேர் வராங்களாமே… ..நம்ம கூட தங்க , நேத்து தான் சொன்னாங்க…ஒருவர் ஆரம்பிக்க இன்னொருவர்…ஆமாம்யா எனக்கும் தகவல் வந்தது…ஆனா அவக இங்க இருக்க மாட்டங்க பணம் கட்டற இடத்தில் இருப்பாக நல்ல பசை உள்ள இடம்….னு நினைக்கறேன்….அந்தம்மா வந்துட்டுப் போச்சு நேத்து . உள்ளார என்னமோ பேசிக்கினாங்க…நாளைக்கு வருவாங்கன்னு மட்டும் என் காதில் கேட்டுச்சு….நம்ம காது தான் சரியாவே கேட்க மாட்டேங்குதே இப்பல்லாம்.. யாரு நம்ம கிட்ட வந்து சொல்லப் போறா…? இங்கயும் எல்லாம் ரகசியம் தான். அந்தக் காலத்துல…அவர் நீட்டி முழக்க ஆரம்பிக்க…. கூடவே ஒரு பத்து தலைகள் வெறும் வாய்க்கு அவல் கிடைத்த சந்தோஷத்தில்…அங்கே …ஒரு சின்ன மாநாடு…
அதற்குள்….
என்ன…. இங்க கூட்டம் போடறீங்க..எல்லாரும் அவங்கவங்க கட்டிலுக்குப் போங்க…கொஞ்ச நேரம் நான்… இல்லாட்டி உடனே இங்க விசுவில் அரட்டை அரங்கம் ஆரம்பிச்சுடுவீங்க……இளவயது மேனேஜர் தன் உரிமையை நிலைநாட்டி உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தார்.
அவர் செல்லும் வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்த அலமேலு அம்மா… மேனேஜர் சென்ற திக்கை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே…அவர் சென்று விட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்டு….. “இவன் நாட்டாமை பெரிய நாட்டாமையா இருக்கு”…இந்த வேலைக்கே துரை… இந்த காட்டு காட்டுது..இன்னும் கோட்டும்… சூட்டும் கொடுத்தா அவ்ளோ தான்..எல்லாம் ..என் தலையெழுத்து….பெத்தது சரியா இருந்தா இந்த நெலமை வந்திருக்குமா…..? விதிய சொல்றதா..இல்ல நாதியில்லாத எனனோட கதியை சொல்றதா…..னு ஆரம்பிக்க பின் பாட்டுக்கு தயாராக கூடவே ஒரு வாய் என் கதைய விட உன் கதை தான் பாவம் அலமேலு…என்று ஆரம்பிக்க….அந்த முருகன் என்னைக்குத் தான் என்னை கூப்பிட்டுக்கப் போறானோ… ஒரு குரல் மேலே பார்க்க ,,அது வரைக்கும் இங்கியாச்சும் இருக்க எடம் கிடைச்சுதேன்னு…சங்கிலியாய் இன்னொரு குரல் எழும்ப ….. பொழப்ப பாப்பியா …சும்மா புலம்பிகினே…ருக்கே..இன்னொருவர் கடைசியாய் வாய் அடக்க…. .! அடிக்கடி நடக்கும் அங்கு இதே புலம்பல் நாடகம்… நடக்கும்.
அத்தனை அட்டைப்பெட்டிகளையும் காரில் ஏற்றி விட்டு….வீட்டை விட்டு கார் கிளம்பியது….ஸ்ரீ கிருஷ்ண கானம் மென்மையாக ஒலிக்க…இசையோடு மனங்கள் ஒன்றி….பயணப் பட்டது..கார். ரகு…சாப்பாடு சரியான நேரத்திற்கு அனுப்பச் சொல்லி கேட்டரிங் ராமனுக்கு கைபேசியில் அழைத்து சொல்லிக் கொண்டிருந்தான்….அப்பா..குறுக்காக…அரிசியை கொஞ்சம் குழைவாகவே வேக வைக்க சொல்லு ரகு…அரிசி அரிசியா சமைசுடப் போறா…என்றார்…அம்மாவும் ஆமாம் ஆமாம்..நல்ல வேளையாக சொன்னேள் என்றாள்…..இப்படியே ..பேசிக் கொண்டே சிக்னல்களைத் தாண்டி…பெரிய சாலைகளைக் கடந்து…சிறு சிறு வீதிகளைக் கடந்து…முதியோர் இல்லம் இருக்கும் தெருவிற்குள் அவர்களின் கார் நுழைந்தது.
காரின் ஹார்ன் சப்தத்துடன் வாசல் கேட்டில் வெள்ளை நிறத்தில் கார் வந்து நிற்க அறைக்கு உள்ளிருந்த அனைவரின் மொத்த பார்வையும் கவனமும் காரின் அருகில் போனது. சின்ன ஜன்னல் முழுதும் தலைசீலைகளாய்..கண் பார்த்தால் சும்மா இருக்குமா,? கருத்து சொல்ல ஒவ்வொருவராய்..தங்களுக்குத் தெரிந்ததை கண் , காது ,மூக்கு என்று..வைத்து…ஏங்க… பாருங்க கொடுமையை, நம்ம சீனு தாத்தா கதை போலத் தான் ன்னு நினைக்கறேன்..ஏதோ…..ஒரு குரல் பிள்ளையார் சுழி போட்டது, அதன் பின்னே தைரியமாய் தங்கள் சொந்த அனுபவமும் சேர்ந்து ஆளுக்கு ஒரு அட்சதை தெளிக்க..அங்கே தங்கள் சொந்தக் கதையோடு பின்னி பின்னிக் கட்டுக் கதைகள் குட்டிக்கதையாக உருவான வண்ணம் கொஞ்ச நேரம் போனது…இதை விட்டால் அங்கே பெரிதாக அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் கிடையாதே…!
அந்த காரின் உள்ளிருந்து ஒவ்வொருவராக இருந்கும் போதும்…அறையின் ஜன்னலருகில் நின்றுகொண்டு திரைப்பட டைரக்டர் போல் காட்சிக்கு காட்சி தான் பார்ப்பதை சொல்லிகொண்டிருந்தார் ஒருவர். பல நேரங்களில் முதியவர்கள்
இதுவா இருக்கும், இல்லைனா இப்படி இருக்கும்,
ம்ஹும்..இது… தான்… நான் சொல்றேன்..கேளும்..!
நாளைக்கு தெரியாமலா போகப் போறது..
அப்போ சொல்லு நீ….. ,
நான்.. சொன்னது தான் கரெக்டுன்னு….!
நான் என்ன சொல்ல வரேன்னா..
என் சம்பந்தி வீட்டில் கூட இதே கதை தான் நடந்தது. .
இப்போ அவங்க எங்கேயோ..
அந்தப் பேர் இப்போ எனக்கு மறந்து போச்சு ன்னு .ஒரு பெரியவர் பட்டயம் கட்டி கொண்டிருக்க….
ஆபிஸ் பையன் வரும் சப்தம் கேட்டு மறுபடியும் மெல்ல மெல்ல அடங்கிப் போக.மனசும் விழியும் மட்டும் அடங்காமல்…
அந்தக் காரை சுற்றி அலைந்தது.
முதியோர் இல்ல அலுவலகம் கொஞ்சம் பரபரத்தது…தலைவர் எழுந்து வரவேற்று கைகுலுக்கி, ஏதோ காகிதத்தில் கையொப்பம் இட்டு…எல்லாம் முடிந்ததும்…ரகுவும் நித்யாவும் எதுவோ அவன் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி காரில் ஏற..கார் மெல்லிய உறுமலோடு ரதம் போல கிளம்பியது..இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கண்களுக்கு புதுத் தீனி கிடைத்தாற்போல்…
இந்தக் கொடுமையைப் பார்த்தியா..?
இவள்லாம் ஒரு ..மருமக,
தன் சொந்த அம்மா அப்பாவா இருந்திருந்தா இப்படி இங்க விட்டுட்டு போவாளா?
என்ன இல்லை ..அவங்ககிட்ட .அந்தம்மா மகாலக்ஷ்மியாட்டம் இருக்கு..
பாவம்..ராஜா கணக்கா பிள்ளைய வெச்சுக்கிட்டு..னு சொல்ல எங்கிருந்தோ ஒரு குரல் கூட துணை பாடியது…
அழகா சிவப்பா மருமவ வேணும்னு பார்த்து…பார்த்து மகனுக்குத் பொண்ணு தேடியிருப்பாங்க ….
அதான் ஆப்பு வெச்சுருச்சு …..
இப்படி தங்களுக்கு தெரிந்ததை கூடிப்பேசி…
பிட்டு பிட்டாக பல மனதுகள் ஒரு வாக்கியத்தை முடித்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மூடிய அறைக் கதவைத் திறந்து தலைவர் உள்ளே நுழைய…..உள்ளிருக்கும் அனைத்து.பெரியவர்களிடமும் ஒரு வாஞ்சையான மரியாதை…அமைதியைப் பார்க்க முடிந்தது. அந்த அமைதியை மெலிதாகக் விலக்கியது தலைவரின் மென்மையான குரல் …எல்லாரும் கொஞ்சம் கவனிக்கணும்…இன்னைக்கு நம்ம இல்லத்துக்கு வந்திருக்கும் இந்த தம்பதிகள் உங்கள் அனைவரையும் பார்த்து அவரோட எழுபத்தைந்தாவது பிறந்தநாளை உங்களோடு சேர்ந்து கழிக்க வந்திருக்கிறார்கள். இரண்டு பேரும் நம்மளோட கூட இருந்து உங்க எல்லாருக்கும் புது துணிகள், ஒரு மாசத்துக்கு வேண்டிய சத்து மாத்திரைகள், பிறகு நம்ம இல்லத்துக்கு வேண்டிய வசதிகள் செய்து கொள்ள… ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாகத் கொடுத்திருக்காங்க. இங்க இருக்கும் எல்லாருக்கும் இன்னிக்கு வடை பாயசத்தோட சாப்பாடும் இவங்க தான் ஏற்பாடு செய்திருக்காங்க இந்த காலத்தில் இப்படி செய்யறவங்க ரொம்ப… குறைவு… மேலும் பெத்தவரின் பிறந்த நாளை இப்படி உங்களைப் போன்ற வயது முதிர்ந்த பெற்றவர்களுக்கு இயன்றதை செய்தால் சிறப்பாக இருக்கும் னு சொல்லி நமது இல்லத்திருக்கு வந்திருக்காங்க. . இந்த குடும்பம் சீறும் சிறப்புமா நல்லா வளரணும்னு எல்லாரும் அவர்களை மனசார வாழ்த்தி..பிரார்த்தனை செய்யுங்கள்….செய்வதறியாது அனைவரின் கரங்களும் கும்பிட்டு மனது நெகிழ்ந்தது.
சற்று நேரத்தில்..கணேசனும் விமலாவும்..தங்களது கரங்களால் அங்கிருக்கும் அனைவருக்கும் தாங்கள் கொண்டு வந்திருந்த புத்தாடைகளை எடுத்துக் கொடுக்க அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி…அதே நேரத்தில் ரகுவும், நித்யாவும் அங்குள்ளவர்களின் உதவியோடு இலைபோட்டு சாதம் பரிமாற அனைவரும் மகிழ்வோடு ரசித்து சாப்பிட்டு எழுந்தனர்.
அங்கிருக்கும் ஒவ்வொரு மனசும் நிறைந்து வாயடைத்துப் போனது. .ஏதோ தெய்வங்களைப் நேரில் பார்ப்பது போல் இத்தனை நேரம் தாங்கள் பேசிய எதற்கும்……. இதற்கும்….. தொடர்பே இல்லையே…இவர்களது மகனையும் மருமகளையும் எத்தனை உதாசீனமாகப் பேசினோம்……என்ற எண்ணம் மனதை குனிய வைத்தது. தங்களை மன்னிக்கும்படி மானசீகமாக கேட்டது ஒவொருவரின் உள்ளிருந்த விவேகம். அன்று முழுதும் ஒரு உன்னத எண்ணம் அங்கிருந்த அத்தனை இதயங்களையும் அணைத்துக் கொண்டது போல உணர வைத்தது….அடிக்கடி வாங்கம்மா..என்று ஆசையாக அழைத்தனர் அனைவரும்…உங்கள் குடும்பம் நல்லா இருக்கணும்னு வாயார மனதார வாழ்த்தி சிறிது நேரத்தில் பிரியா… விடை தந்து வாசல் வரை வந்து கையசைத்து வழி அனுப்பினார்கள்….அவர்கள் கிளம்பிய கார் கண்ணிலிருந்து மறையும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஏதோ… தெய்வங்கள்… தங்களை வந்து பார்த்துவிட்டுப் போன திருப்தியுடன்……தங்களது சாதாரண மனத்தின் யதார்த்த நினைவுகளைக் கடந்து…அதையும் தாண்டி புனிதமான மனங்கள் இந்த உலகில் உண்டு என நேரில் கண்ட நிம்மதியில்…..வழக்கம்போல் மேனேஜர் …..இங்க என்ன சத்தம்…..பேசாமல் இருங்க……ன்னு சொல்லாமலேயே மௌனமானார்கள்.
========
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சிதம்பரம்.
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
- அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
- நினைவுகளின் சுவட்டில் – (87)
- பேரதிசயம்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
- அப்பாவின் சட்டை
- புலம்பெயர்வு
- சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
- மானம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
- குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
- பேஸ்புக் பயன்பாடுகள் – 3
- பட்டறிவு – 2
- பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 29
- பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
- விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
- s. பாலனின் ‘ உடும்பன் ‘
- பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
- வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- வரலாற்றை இழந்துவரும் சென்னை
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
- இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
- கவிதை
- கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
- ஆலமும் போதிக்கும்….!
- மீண்ட சொர்க்கம்
- அதையும் தாண்டிப் புனிதமானது…
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
- இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
- “தா க ம்”
- விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
- அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
- மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
- உயிர்த்தலைப் பாடுவேன்!