பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘

This entry is part 21 of 45 in the series 26 பிப்ரவரி 2012

இணையத்தில் இந்தப் படத்தின் முன்னோடியான, பத்து நிமிடக் குறும்படத்தைப், பார்த்ததாக ஞாபகம். ஆனால், அந்தச் சுவடே இல்லாமல், இதை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தற்கால இளைஞர்களின் காதல் விவகாரங்கள், அந்தக்காலம் போல் இல்லை என்பதை வலிக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.

அருண் ( சித்தார்த் ) பார்வதியை ( அமலா பால் ) காதலிக்கிறான். நடுவில் அடிக்கடி ப்ரேக் அப். ஆனாலும் கடைசியில் சேர்ந்து விடுகிறார்கள். இதிலென்ன புதுமை என்கிறார்களா? கையாண்ட விதத் தில் தான் புதுமை. ஆரம்ப அரைமணி நேரம், கிங் லியரின் ரேவிங் மாதிரி, ப்ரேமுக்கு முன்னால் வந்து சித்தார்த் பேசிக்கொண்டிருப்பது கொஞ்சம் போரடித்தாலும், அவர் சொல்வதை விஷ¤வலாகக் காட்டி சிரிப்பை வரவழைத்து விடுகிறார்கள். காதலுக்கு அட்வைஸ் தரும் காரெக்டருக்கு ஒரு காதலியும் இல்லை என்பதும், அவன் பேசும் பெண்களெல்லாம், அவனை அறைவதிலேயே குறியாக இருப்பதும் ஒரு உதாரணம்.
இன்னொரு காட்சி: காதலி : ‘ நீ இனிமே என்கிட்ட பொய்யே சொல்லக்கூடாது. பிராமிஸ். ‘ காதலன் கையடித்து சத்தியம் செய்கிறான். ‘ சரி இப்ப சொல்லு.. இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு? ‘ காதலன் : ‘ சகிக்கல ‘ – பிரேக் அப்.
நல்ல வசனங்களும் உண்டு. (உதா) பொண்ணுங்க சுவத்துல இருக்கற மோனோ லிசா பெயிண்டிங் மாதிரி. ரூமோட எந்த மூலையில இருந்து பார்த்தாலும் நம்மள பார்க்கறா மாதிரியே இருக்கும்.
பாடல்களில் தமன் கொஞ்சம் வெரைட்டி காட்டியிருக்கிறார். ஆனாலும் முதல் பாடல் அநியாயத்திற்கு காதலிக்க நேரமில்லை ‘ விஸ்வநாதன் வேலை வேணும் ‘ பாடல் போலவே இருக்கிறது. காமிரா கோணங்களிலும் வின்சென்டின் பாதிப்பு. நிரவ் ஷா யூ டூ?
சித்தார்த்துக்கு பெரிய நடிப்பு சந்தர்ப்பங்களெல்லாம் இல்லை. ஒரு காலேஜ் ஸ்டூடண்டாக கச்சிதமாக பொருந்துகிறார். அமலா பால் இந்தப் படத்தில் ஒரு சிக்கலான குடும்பப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் பெண். புல் மார்க்ஸ்.
படத்தின் சுவாரஸ்யமும் ஆச்சர்யமும் நாயகன் நாயகியிடம் இல்லை. அவர்களது பெற்றோர்களிடம். அழகிய கவிதை போல விரிகின்றன அந்தக் காட்சிகள்.
அருணின் அப்பா ( ரவி ராகவேந்தர் – ஒய் திஸ் கொலவெறிடி அனிருத்தின் நிஜ அப்பா ) குடும்ப வழக்காடு மன்றத்தின் வக்கீல். பேஸ் புக் பார்ப்பவர். இன்னமும், காதலித்து கைப்பிடித்த மனைவியை காதலிப்பவர். யங் அப்பாதான். ஆனால் குரல் தான் கொஞ்சம் பிசிறடிக்கிறது.
பார்வதியின் அப்பா ( பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ் – மெச்சூர்ட் ஆக்டிங் ) பிஸினெஸில் பணம் தொலைப் பவர். பொறுப்பில்லாதவர். அம்மா ரெயில்வேயில் பணிபுரிபவர். இருவரும் காதலித்து மணம் செய்து கொண்டவர்கள். பொறுப்பின்மைக்காக கணவரை விவாகரத்து செய்யும் முயற்சியில் இருக்கும் அம்மா. இதன் நடுவில் பார்வதி. அடிக்கடி மூட் அவுட் ஆகும் பெண். தாத்தாவின் எழுபதாம் திருமண விழாவில் பார்வதியின், தனியே வாழும் அப்பாவும், அம்மாவும் சந்தித்துக் கொள்ள, இன்னமும் தங்களிடையே காதல் இருப்பதை உணர்கிறார்கள். விவாக ரத்து, ரத்து செய்யப்பட்டு, சேர்கிறார்கள்.
பார்வதி வாழ்வில் குழப்பம் நீங்கிய பின்பும் அவள் இன்னமும் எடுத்ததெற்கெல்லாம் அருணின் மேல் கோபம் கொள்வது கதையின் பெரிய ஓட்டை.
படம் முழுக்க பெண்கள் இப்படி, பையன்கள் இப்படி என்று ஒரு வர்ணனை ஓடிக்கொண்டிருக்கிறது. அது கொஞ்சம் பழைய டெக்னிக் என்பதால் போரடிக்கிறது. அனுபவசாலிகளான இளைஞர் கூட்டம் அதையெல்லாம் கைத்தட்டி வரவேற்கிறது. அதனால் இதில் நமக்கு போரடித்தால் என்ன?
யாரையாவது இந்தப் படத்தில் பாராட்ட வேண்டும் என்றால் அது கலை இயக்குனரைத் தான். தற்கால பொறியியற் கல்லூரியின் கேண்டீனை ஒரு காபி ஷாப் ரேஞ்சுக்கு அழகாக அமைத்ததற்கு.
ஒரு விசயம். அடுத்து ஒரு படம் எடுத்தால், பாலாஜி மோகன் கல்லூரி பக்கமே போகக் கூடாது. போனால் அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள்.
#
கொசுறு
அன்னை கருமாரியில் இன்னமும் பழைய ரீல் பெட்டி டேபிளின் மேல் இருக்கிறது. அடிக்கடி படம் கட் ஆகிறது. முன்பெல்லாம் தான் அப்படி நடந்து கொண்டிருந்தது. டிஸ்க்கும் டிஜிட்டலும் வந்தபிறகும் கூட இப்படியா?

Series Navigations. பாலனின் ‘ உடும்பன் ‘வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *