கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை

This entry is part 20 of 45 in the series 4 மார்ச் 2012

கணையாழியின் ஆரம்பகால வாசகர்கள், அதாவது இன்னமும் ஜீவித்திருப்பவர்கள், அந்த இதழ் திரும்பவும் வரப்போகிறது என்கிற செய்தியைக் கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். அப்படி மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் கணையாழி லேசில் எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை. கவிதாவுக்கு தொலைபேசியபோது, மைலாப்பூரில் மட்டும் போடுவதாகச் சொன்னார்கள். நல்லவேளை, அந்தப் பகுதியில் எனக்கு பணி இருந்ததால், ஓரிரண்டு மாதங்கள் வாங்கிக் கொண்டேன். அப்புறம் புறநகர் போருரில் தடயமே இல்லை. அதுசரி, இங்கு கணையாழியைக் கொண்டு வர ஆஞ்சநேயரா வருவார்!
சாதாரண சாணித்தாள் பேப்பரில், குமுதம் சைஸில் நூறு பக்கங்களைக் கொண்ட பழைய இதழ்கள் என்னிடம் உள்ளன. அப்போது தரமான இலக்கியம் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது இதழ். ஆனால் இப்போது முற்றிலும் வணிகமாகி விட்டது. சைசும் கையடக்கமில்லை. விலையும் பர்ஸ் அடக்கமில்லை. தொடர்பு விட்டுப் போய், எப்போதாவது கண்ணில் பட்டால் வாங்குவது என்கிற நிலைக்கு, நானும் தள்ளப் பட்டுவிட்டேன். இந்த இதழைப் பார்த்தவுடன் அதுவும் சரிதான் என்று தோன்றியது.
தொடர்ந்து டிராட்ஸ்கி மருதுவின் படங்களோடு வருவது கொஞ்சம் ஆறுதல். மை டெஹ்ரான் பார் சேல் என்கிற திரைப்படத்தை முன்வைத்து, ரதன் எழுதியிருக்கும் கட்டுரை, நமக்கு அன்னியமாகப் படுகிறது. கேள்விப்படாத பெயர்கள். அமெரிக்க ஹாரிகேமெல்மேனின் சிறுகதையை மொழி பெயர்த்திருக்கிறார் ஷங்கரநாராயணன். நண்பர்களுக்கிடையேயான வாக்குவாதமாகப் போகிறது கதை. ஆனால் முடிவில் அது ஒரு கொலையைப் பற்றிய செய்தியாக முடிகிறது. கொஞ்சம் குழப்படிதான். ஆனால் புதிய பாணியில் இருக்கிறது கதை. என்னடா இது எல்லாம் வெளிநாட்டு சமாச் சாரமாக இருக்கிறதே என்று புரட்டினால், வாஸந்தி கதை ‘ புகல் ‘! அடக்கடவுளே! இதுவும் வட இந்திய பறையடிப்பவனைப் பற்றி. ஏகத்துக்கு இந்தி வாசனை.
உருப்படியான ஒரு நூல் அறிமுகம் இருக்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் ‘ துயில் ‘ நாவல் பற்றி இமையம் எழுதியிருக்கிறார். சுவாரஸ்யமாகக் கொண்டுபோய் தலையில் குட்டும் வைக்கிறார் இமையம். ஒரு நூல் விமர்சனம் இப்படித்தான் இருக்கவேண்டும். 1992ல் துவங்கி ஒன்பது இதழ்களே வெளிவந்து 1997 ல் நின்று போன இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் ‘ மவ்னம் ‘ கவிதைக்கான இதழைப் பற்றி க.அம்சப்பிரியா எழுதியிருக்கும் பதிவு உருப்படியானது.
அடுத்து சிங்கப்பூர் ( தமிழ் ஆட்களே எழுதமாட்டார்களா? ) கமலாதேவியின் கதை. ரொம்ப சுமாரான தீம். எண்பது வயதுக் கிழவர், இளம் வயதுப் பெண்ணுடன் இணைத்து பேசப்படுவதால், பத்தாவது மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொள்கிறார். எல்லா இதழ்களும் இப்போது பின்பற்றி வரும் இலக்கியக் கோட்பாடு களின்படி, ஒரு இலங்கைத் தமிழர் கதை, அவர்கள் பாஷையில்!
நா.விச்வநாதன், முகுந்தராஜன் என்று நல்ல கவிஞர்களின் கவிதைகள் நடுநடுவே.. அதிலும் முகுந்தராஜனின் ‘ சாலை ஓரம்/ சாய்வாய் நிற்கும்/ பழைய வீட்டிலிருந்து/ பிடுங்கப்பட்ட கதவுகள்/ கதைகள் சொல்ல / காத்திருக்கின்றன / கேட்கத்தான் நேரமில்லை பல எண்ண அலைகளை எழுப்புகின்றன.
முன் உள் அட்டை, பின் அட்டையிலும் உள்ள பல வண்ண பளபள விளம்பரங்கள் லட்சம் பெற்றுத் தரும். பின் எதற்கு இதழ் விலை இருபது ரூபாய்?
#

Series Navigationவியாசனின் ‘ காதல் பாதை ‘கன்யாகுமரியின் குற்றாலம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *