நானொன்றும் இசை நிபுணன் இல்லை. எனக்கு சில ராகங்களின் பெயர்கள் தெரியும் அதுவும் பாப்புலரான சினிமாப்பாட்டுகளை வைத்து, பத்திரிக்கை செய்திகளின் அடிப் படையில், அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ‘ மன்னவன் வந்தானடி ‘ கல்யாணி என்று படித்ததாக ஞாபகம். பூபாளம் உதயத்திற்கும், முகாரி சோகத்திற்குமான ராகங் கள் என்கிற அளவில் இருக்கிறது எனது இசை அறிவு.
சின்ன வயதில் ஒற்றைத் தந்தியில் கொட்டாங்கச்சி பிடிலில் ‘ அன்று ஊமைப் பெண்ணல்லோ ‘ வைத் திரும்பத்திரும்ப வாசித்த ரோட்டோர கலைஞனைப் பார்த்து வியந்து, வாங்கி வாசித்துப் பார்த்த பிடிலில் டொய்ங் டொய்ங் தான் வந்தது. அதோடு விட்டுவிட்டேன் என் இசை முயற்சியை. சாண்டில்யன் கதைகளைப் படித்துப் பழக்கப்பட்டதனால், ஆரோகணம், அவரோகணம் என்பது குதிரை சவாரி சமாச்சாரம் என்று எண்ணிக் கொண்டிர்ந்தேன். இசை சம்பந்தப்பட்டது என்று அறிந்து கொள்ள எட்டு பத்து வருடங்கள் ஆனது.
போரூரில், சுவாமி பள்ளியின், கலைக் கிளையாகச் செயல்பட்டு வரும், ஷண்முகப்பிரியா அமைப்பின், ஓராண்டு நிறைவின் கொண்டாட்டமாக, கன்யாகுமரியின் வயலின் கச்சேரி. இசை பற்றித் தெரியாதே தவிர, இசை வித்வான்களைப் பற்றி கொஞ்சம் தெரியும். சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, சௌம்யா, நித்யஸ்ரீ, கத்ரி கோபால்நாத், ப்ளூட் ரமணி, குன்னக்குடி வைத்யநாதன், பாலக்காடு மணி, வீணை காயத்ரி எனப் பல இசை உலக பிரம்மாக்களின் பெயரும், வித்தையும் எனக்குப் பரிச்சயம்.
குளூரூட்டப்பட்ட, அக்யுஸ்டிக்ஸ் அருமையாக உள்ள, சிறிய அரங்கு. அனுமதி இலவசம். எட்டுமணிக்குள் கச்சேரி முடிந்து விடும். வீடு அருகாமையில். இத்தனை காரெட்டுகள் இருந்தால் எந்தக் குதிரையும் இழுபடும்.
கன்யாகுமரி பிரதான வித்வான். கூடவே வாசித்த வி. சஞ்சீவ் ( சுவாமி பள்ளியின் கரெஸ்பாண்டண்ட் திருமதி பிருந்தாவின் மகன் ), சீனியர் மிருதங்கிஸ்ட் மன்னார்குடி ஈஸ்வரன், கஞ்சிராவில் புருஷோத்தமன் ( நால்வரில் அவர்தான் ஜூனியர் ).
எலெக்ட்ரானிக் வயலினில் பிரமாதமாக வாசிக்கிறார் கன்யாகுமரி. விரல்கள் பேசுகின்றன. வாதாபி கணபதியில் ஆரம்பித்து கொஞ்சம் தெலுங்கு கீர்த்தனைகள், தியாகையர் என்று போய், கடைசியில் எல்லோருக்கும் தெரிந்த ஸ்ரீனிவாசா, கோவிந்தா, பட்டினத்தாரின் முத்தைத்தரு, கந்தசஷ்டிக் கவசம் என்று அமர்க்களப் படுத்தி விட்டார்.
இருநூறு சொச்சம் பேர் உட்காரக்கூடிய அரங்கில், இருக்கைகள் நிரம்பி, இன்னமும் சில நாற்காலிகளைக் கொண்டு வர வேண்டியதாகிவிட்டது. வித்வான்கள் எப்போது உற்சாகமாகிறார்கள் என்பதற்கு ஒரு விடை எனக்குக் கிடைத்தது. கொஞ்ச நேரம் தனக்குப் பிடித்த பாடல்களை வாசித்த கன்யாகுமரி, மைக்கை எடுத்துக் கொண்டு, ‘என்ன ராகம் வேணும் ‘ என்று கேட்டார். ஒவ்வொருவர் ஒவ்வொரு ராகம் சொன்னார்கள். ஒருவர் சக்கரவாகம். இன்னொருவர் கர்ணமஞ்சரி.. ‘ அது கர்ண மஞ்சரி இல்ல.. கர்ண ரஞ்சனி ‘ என்றார் கன்யாகுமரி. அதை வாசித்து விட்டு ‘ நீங்க கேட்டது என்று அந்த ரசிகரைப் பார்த்தும் சொன்னார்.
இன்னொரு ஆச்சர்யமான தகவல். சூர்யா என்றொரு பெயரில் ஒரு ராகம் இருப்பதுதான். ஒருவர் அதைக் கேட்டபோது, அஜீத், ஆர்யா என்று கூட கேட்பார்களோ என்று எண்ணினேன். நல்லவேளை கேட்கவில்லை.
கேட்பவர்கள் இசை ஞானம் உள்ளவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்ப்பர் வித்வான்கள். அப்படி ஒரு சில நபர்கள் இருந்தாலும், அவர்களுக்கு உற்சாகம் கரை உடைந்து போகும். முப்பதுக்கும் மேற்பட்ட ராகங்களைச் சொன்னார்கள் ரசிகர்கள். அத்தனையும், ஒரு ராகம், ஒரு நிமிடம் என்று வாசித்து, கேட்டவர்களின் திசை நோக்கி கைக் காட்டிக் கொண்டே இருந்தார் கன்யாகுமரி. அதில் அவரது அசாத்திய ஞானம் வெளிப்பட்டது. கூடவே ரசிக்கும் ரசிகனை மதிக்கும் பண்பு.
மன்னார்குடி ஈஸ்வரன் சீனியர் கலைஞர். பிரமாதமாக வாசிக்கிறார். தனி ஆவர்தனத்தில், கன்யாகுமரியே கைத்தட்டும் அளவிற்கு இருந்தது வாசிப்பு. கஞ்சிரா புருஷோத்தமனும் சோடை போகவில்லை. ‘ என்னமோ இன்னிக்கு அடக்கி வாசிச்சுட்டான் ‘ என்றார் பக்கத்திலிருந்தவர். அதுவே சூப்பர். சஞ்சீவ் மென்பொருள் நிறுவன வேலையை விட்டுவிட்டு, சங்கீதத்திற்கு வந்து விட்டாராம். கிடைத்த சந்தர்ப்பங்களில், அருமையாக வாசித்தார். எலெக்ட்ரானிக் சமாச்சாரம் இல்லாமல், சாதா வயலினில் வாசித்தது, மைக் மூலமாக ஒலிபெருக்கியில் கேட்டபோது, இன்னமும் இயற்கையாக இருந்தது.
அருணா சாய்ராம் போல, ஓ எஸ் அருண் போல கொஞ்சம் ஹிந்துஸ்தானி, கஜல், அபங் என்று சேர்த்திருந்தால், வெரைட்டி கிடைத்திருக்குமே என்று எண்ணினேன்.
மறுநாள் காலையில் பார்த்தபோது செயலாளர் விஸ்வநாதன் சொன்னார்: ‘ அத்தனை ராகங்களையும் ஞாபகம் வச்சிண்டு வாசிக்கறது பெரிய விஷயம். ஆனா முப்பதையும் வாசிச்சுட்டு, அதை அப்படியே திருப்பி ரிவர்ஸ்ல வாசிச்சா பாருங்கோ, அதுதான் அவாளோட கிரேட்னஸ் ‘
ஞான சூன்யமான எனக்கே புது அனுபவத்தைத் தந்தது நிகழ்ச்சி என்றால், இசையையே சுவாசமாகக் கொண்டிருக்கும் பல ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும்.
#
கொசுறு
சுவாமி பள்ளியில் இசைப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். முப்பது மாணவர்கள் கற்கிறார்கள்.
சென்னை மந்தைவெளியில் நடத்தப்படும், மாதக் கச்சேரிகளுக்குக் கூட இந்தளவு ரசிகர்கள் வருவதில்லை என்பது மன்னார்குடி ஈஸ்வரன் சொன்ன செய்தி புதுசு.
ஆண்டு விழா என்பதால் உள்ளே நுழையும்போது பைவ் ஸ்டார் சாக்லேட் கொடுத்தார்கள். வெளியே வரும்போது, சாப்பிடாமலே இனித்தது.
முழுவதுமாக சுவாமி பள்ளியின் நிதி ஆதாரத்துடன் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு வருவோரை அதன் உரிமையாளர் திருமதி பிருந்தா வெங்கட்ராமனே வரவேற்பதும், முதல் வரிசையில் இடம் கொடுத்து விட்டு ஓரமாக அமர்ந்து கொண்டதும் பாராட்டவேண்டிய பண்பு. ஷண்முகப்பிரியா அரங்கில் அட்டைகள் தொங்கும் இருக்கைகள் எல்லாம் இல்லை, நாரத கான சபையைப் போல!
குளிரூட்டப்பட்ட அரங்கிலிருந்து வெளியே வந்ததும், கொஞ்சம் சட்டை நனைந்தது போல் இருந்தது. இசைச் சாரலாக இருக்கக் கூடும்.
#
- “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
- காற்றின் கவிதை
- மகளிர் தினமும் காமட்டிபுரமும்
- நன்றி கூறுவேன்…
- நன்றி. வணக்கம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை
- நிஜங்களுக்கான பயணிப்புக்கள்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2
- பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி
- பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 33
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்
- பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.
- தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்
- சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
- பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
- வியாசனின் ‘ காதல் பாதை ‘
- கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
- கன்யாகுமரியின் குற்றாலம்
- முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை
- தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை
- வழிமேல் விழிவைத்து…….!
- அந்த முடிச்சு!
- கசீரின் யாழ்
- ஷிவானி
- வசந்தபாலனின் ‘ அரவான் ‘
- உழுதவன் கணக்கு
- மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?
- பருந்தானவன்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.
- நீ, நான், நேசம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா
- முன்னணியின் பின்னணிகள் – 30
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது
- பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
- ”சா (கா) யமே இது பொய்யடா…!”
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13
- விளையாட்டும் விதியும்
- காதலில் கதைப்பது எப்படி ?!
- மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்
- அச்சாணி…
- கணேசபுரத்து ஜமீன்
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)