காய்க்காத மரம்….

This entry is part 6 of 36 in the series 18 மார்ச் 2012

அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க.
வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள்.

இதோ…….இந்த மரம் தான்…

கந்தசாமி…! .அப்போ…..நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ
எனக்குத் தெரியாது…நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது…இது காய்க்காத மரம்….வெட்டிப்போடு… ஆமா….
சொல்லிப்புட்டேன்..மத்தபடி பேசினதெல்லாம் நியாபகம் இருக்குதுல்லே…என்ன….நீ ஒரு ஐநூறு ரூபா கூட ..தர மாட்டேங்கறே….
இந்த மரத்துக்கு….ரொம்ப கறாரா கட்டாதுன்னு சொல்றே…..அதான் எனக்கு குறையாத் தெரியுது…..என்று ஆதங்கத்தோடு கேட்க..

நெசமாலுமே…கட்டாது சாமி…தோ ..பாருங்க….!..நானே…ஒரு மெசினை வாடகைக்கு எடுத்தாத்தான் வேலை ஆகும்.
மெசினுக்கு  ஒரு மணி நேர வாடகையே  ஐநூறு கேட்பான்…நான் கேக்கற  நேரத்துக்குக் எனக்கு மெசின் கெடைக்கோணும் …
பிறகு தூக்குக் கூலி, வண்டிக்கூலி……அது……இதுன்னு……எனக்கே செலவு ஆயிரம் ரூபாய்த் தாண்டிரும்.. நீங்களாப் பார்த்து ….
ஏதோ…இந்தாப்…. பொழைச்சுப் போன்னு….எனாமாக் கொடுத்தாத்  தான் நான் பண்ணுற செலவு எனக்குக் கட்டுப்படியாவும்….
வேணா..பூஜைக்கு ரெண்டு பலகை செய்து கொடுக்கறேன்…வெச்சுக்கங்கையா.…ஏதோ…என்னால முடிஞ்சது …
இப்ப….என்ன சொல்றீங்களோ….சொல்லுங்க.

நானும் பார்த்து பார்த்து….ஏமாந்து போயிட்டேன் கந்தசாமி……இந்த வருஷமாவது…இந்த வருமாவது..இது வருமா ன்னு நினச்சு…
நினச்சே…வருஷங்கள்  தான் ஓடுதே… தவிர….ஒண்ணையும்.. காணோம்..சும்மா தண்டத்துக்கு தண்ணி ஊதிக்கிட்டு…..!

ஏனுங்க…..பச்ச மரம்…..பறவைங்க கூடு கட்டியிருக்கு,  அம்சமா நிழல் தருது…அப்படியிருந்தும்..மாமரத்தை…
ஏன்யா ..வெட்டசொல்றீங்க?….என்றாவது ஒரு நாள் காய்க்கும் இது….என்று இழுத்தான் கந்தசாமி….

அதெல்லாம் தொல்லை தான்..இத்தனை வருஷமாக் காய்க்கலை…இனி எங்கே…காய்க்கப் போகுது…
ஒரே பறவைங்க கூச்சலும்….எச்சமும்…இடத்தை நாசம் பண்ணுதுங்க……நிலத்தைப் பூரா நிழல் அடைச்சி.வேற எந்த
தொட்டிச்செடிக்கும்  சூரியனைக் காட்ட மாட்டேங்குது….வேரு மட்டும் காம்பௌண்டு சுவத்தையே தூக்கிடும் போல..இருக்கு ….
அங்கன வரைக்கும் போய்ட்டுது….பாரேன்,,,,,அடுத்த மழைக்கு சுவரு அம்பேல் தான்….இந்த மரத்தோட வேரே……
காம்பௌண்டு சுவத்தைத்  தூக்கிறும்….

அதான்…கந்தசாமி……சும்மா நானும்… மரமுன்னு  வளர்ந்து நின்னாப் போதுமா..?  இந்த எடத்துல  வேற மரத்தையாவது
நட்டு வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….மரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த  உட்டுட்டு …..
இன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”

அதுகென்ன சாமி…..பண்றது….நீங்க மரத்தைப் பத்தி சொல்றீங்க…..எங்க சாதி சனங்க…..கண்ணாலம் கட்டி புள்ள
பொறக்கலைன்னா…அடுத்த வருஷமே பொஞ்சாதியை வெட்டி உட்டுட்டு  வேற கண்ணாலம் கட்டிகுவாங்க நம்ப பசங்க.

ஏம்பா….இது ரொம்ப அநியாயம்.!..புள்ள இல்லைன்னா… அதுக்கு அந்தப் பொண்ணு தான் காரணமா? புருஷனுக்கு இதுல பங்கு இல்லையா..
என்ன..? இதோ இந்த மூணு வீடு தாண்டி….ஒரு மாப்பிள்ளை இருக்காரு…அவரு இப்படித்தான்….வாரிசு இல்லைன்னு காரணம்
சொல்லி கட்டினவளை விவாகரத்து பண்ணிட்டு….இப்போ…. உள்ளதும் போச்சுடா…. நொள்ளக் கண்ணான்னு….மோட்டு வளையப்
பார்த்துட்டு உட்கார்ந்திருக்காரு. இவனுக்கெல்லாம் இனி யாரு பொண்ணு கொடுத்து……அவன் நினைச்சது நடந்து…ம்ம்ம்ம்…..!
சரி அத்த  விடு…நம்ம கதைக்கு வருவோம்….சொல்லிக் கொண்டிருக்கும்போதே….

கேட்டின் முன்னே ஆட்டோ  வந்து நிற்கவும் .அதிலிருந்து வித்யா இறங்குவதைப்  பார்த்ததும்…..வாசுதேவனுக்கு..
“அட…வித்யா….”  மகளைப் பார்த்த சந்தோஷத்தில்…”வாம்மா வித்யா…தனியாத் தான் வந்த்ருக்கியா…ஒரு
போன் பண்ணியிருந்தால் ஸ்டேஷனுக்கு நான்   வந்திருப்பேனே…..!
ஆமா…என்ன திடீர்ன்னு..சொல்லாமல் கொள்ளாமல்….!

ஒருவேளைத் தாய்மை அடைந்து விட்டாளா? முகத்தில் ஏனோ மலர்ச்சி தெரியவே இல்லையே….?
அதைத் தானே நாங்களும்  இத்தனை வருஷங்களா…எதிர் பார்த்துண்டிருக்கோம் வாரிசு  வேணும்…வாரிசு வேணும்னு….!

நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு குளிர்ச்சி…வித்யாவின் கையில் குழந்தையோடு மனக்கண்…படம்பிடித்தது அவசரத்தில்.

ஆட்டோக்காரன் தூக்க முடியாமல் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் உள்ளே வைத்து விட்டு வித்யாவிடம் காசை வாங்கி கொண்டு கிளம்ப..

கேட்டை சார்த்திவிட்டுத் திரும்பிய வித்யாவிடம்…நீ உள்ளபோ..நான் ..இவனை அனுப்ச்சுட்டு .வரேன்…..
அம்மா உள்ளதான் இருக்கா…சொன்ன படியே….ஜெயந்தி….ஜெயந்தீ …..யாரு வந்திருக்காப்…. பாரு….!
ஜன்னல் வழியாக்  குரல் கொடுக்கவும்….ஜெயந்தியும் உள்ளே நுழைந்த வித்யாவும் ஒருவரை ஒருவர்  கட்டிக் கொண்டு
குதூகலமாய்  குசலம் விசாரித்தது….கேட்டு வரைக்கும் கேட்டது.

சரிப்பா…..கந்தசாமி….நீ நாளைக்கு காலைலயே வந்துடு…நீ கொடுப்பதைக்  கொடு..எனக்கு இந்த மரம் கீழ விழனும்…வேலை முடியணும்
அவ்வளவு தான்…..மக..இப்பத்தான்…. ஊர்லேர்ந்து…வந்திருக்கு….நான் போகணும்….நீயும்  இப்போக் கிளம்பு..காலைல மறக்காமல் வந்துடு
என்ன…கொஞ்சம் பொறு…ஜில்லுன்னு மோர் தர சொல்றேன்….குடிச்சுட்டு போ….போகும்போது மறக்காமல் கேட்டைப் மூடிட்டுப்  போப்பா..!

சரிங்கையா…..கண்டிப்பா ஒரு பத்து பத்தரைக்கு வந்துடறேன் ….ரெண்டு மணி நேர வேலை தான்…மரத்த வெட்டி வீழ்த்தி இடத்தைச் சுத்தம்
பண்ணிக் கொடுத்திடறேன்…….என் வேலை எப்பவுமே சுத்தமா இருக்கும்.

சொல்லிவிட்டு இன்னொரு முறை  மாமரத்தை மேலிருந்து  கீழ் வரைக்கும் பரிதாபப்  பார்வை பார்த்து விட்டு….
தான் போட்ட கணக்கு சரியானது தான் என்ற திருப்தியோடு…தன் பழைய மொபெட்டை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

மொதல்ல…புதுசா ஒரு ஸ்கூட்டர் வாங்கணும்……..கந்தசாமி மனசு… கோட்டைக்கு அஸ்திவாரம் போட்டது….!

ஈயச்சொம்பிலிருந்து ரசம் கொதிக்கும் வாசனை … இங்கே வா…இங்கே வா…என்று வாசுதேவனை…சமையல் அறைக்கு அழைத்தது.
ஜெயந்தி வைக்கும் ரசமா..இல்லை ஈயச் சொம்பின் மகாத்மியமா..ஒரு ..பட்டிமன்றமே நடத்தலாம்….!
எப்பவும் ஒரே மாதிரி அபார ருசியில் ரசம் …சாப்பிட்ட பிறகும் கூட  கம கமன்னு ரச வாசனையோடு கை மணக்கும்….

வித்யா…வித்யா….அழைத்தபடியே..சமையலறை நோக்கி நடக்க அங்கே…அம்மாவும்…..பெண்ணும்….ஏதோ…பேசிக்கொண்டிருக்க..
வித்யாவின் கையில் ஆவி பறக்க காபியைப் பார்த்ததும்….

ம்ம்ம்….வித்யா….இனிமேல்….நான் காப்பி…. காப்பி …..ன்னு கரடியாக் கத்தினாத்  தான் காப்பி கிடைக்கும்….
அதான் தெரிஞ்ச விஷயமாச்சே….அம்மா…. பொண்ணு …. சுவாரசியத்தில் என்னை யாரு கவனிக்கப் போறா…?
ஏற்கனவே…உன்கிட்டேர்ந்து போன் வந்தா மணிக்கணக்கா பேசி நான்  ஒருத்தன் இருக்கறதையே மறந்துடுவா…..
இப்போ…பக்கத்துலேயே இருக்கியா …தலை கால் புரியாது உங்கம்மாக்கு…..!
நல்ல நாளிலேயே….. நாழிப் பால் தான்…இப்போ குட்டி வேற போட்டிருக்கு…..வாசுதேவன் தனக்குரிய பாணியில் மனைவியை…கேலி செய்ய….

போதும் ….. போதும்…….இதுக்கொண்ணும் குறைச்சலில்லை….நேரங்கெட்ட நேரத்தில் என்னைக் கேலி பண்றதே…
உங்களுக்கு வேலையாப் போச்சு……இந்தாங்கோ காப்பி…..ஜெயந்தி நீட்டிய காப்பியை வாங்கிக் கொண்டே வாசுதேவன்…..

அப்புறம் ….வித்யா…..ரொம்ப சந்தோஷம்…..கடவுள் கண்ணைத் திறந்துட்டார்….நேர்லயே சொல்லலாம்னு வந்துட்டியா …
நல்ல பொண்ணும்மா நீ ஒரு போன் பண்ணி  சொல்லிருந்தாப் போதுமே நானே  வந்து பார்த்து அழைச்சுண்டு வந்திருப்பேனே ….
எல்லாரும் சௌக்கியமா?……மாப்பிள்ளை சௌக்கியமா?  சம்பந்தியப் ஒரு நடை வந்து பார்த்துட்டு வரணும்னு போன வாரம்
தான் நினைச்சோம்..நல்ல வேளை…நீயே வந்துட்ட….

வித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று விழித்தால்….முகம் திரும்பியது….உடல் நடுங்கியது….அப்பா…வந்து…
நீங்க நினைக்கிறார்போல….அப்படியெல்லாம்…. வார்த்தை வந்தும்  வராமல்…முழுங்கினாள்.

ஜெயந்தி….குறுக்கிட்டு……வித்யா..நீ போய் குளிச்சுட்டு வா…சீக்கிரம்…சேர்ந்து சாப்பிடலாம்..

வித்யா அங்கிருந்து சட்டென்று  நகர்ந்ததும்…..

ஏன்னா…கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல்…கொழந்தை வந்ததும் வராததுமா….. நீங்க வேற…..?
அவளே… நொந்து போய் வந்திருக்கா…..நீங்க வேற எரியற நெருப்பில் நெய்யை  விட்டுண்டு….சித்த .. சும்மா இருங்கோ….
ஜெயந்தியின் பீடிகை…!

ஆமா…கந்தசாமிய நாளைக்கு என்ன வேலையா… வர சொல்லிருக்கேள்…?

அதொண்ணுமில்லை..வாசல்ல சும்மா  நிக்கற மாமரத்த எடுக்கச் சொல்லிருக்கேன்….நாளைக்கு வரேன்னான்….
போன வாரமே உன்கிட்ட சொன்னேனே….மறந்துட்டியாக்கும்…நியாபக மறதில…..உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது….

ஒ…..அதுவா..ஆமாமா ..மறந்துட்டேன்….ஆனால்……இப்ப அது  வேண்டாம்னா…..!

என்ன சகுனமா…? இல்ல….சம்பிரதாயமா….?.இந்த வருஷமும் மரம் தப்பிச்சுடுத்தா…! அது பாட்டுக்கு அது…இது பாட்டுக்கு இது….
அத்த எடுத்துட்டு…வேற வைக்கலாம்னு தான் சொன்னேன்…கந்தசாமிட்ட….

இல்லன்னா…..வித்யா  வந்த விஷயமே  வேற…..

வேற எதுக்காம்….புதுசாக் கார் வாங்கப் போறாரா மாப்பிள்ளை….? இல்லாட்டா…….மாடி எடுத்துக் கட்டப் போறாளா?
எனனோட பிச்செட் டேபாசிட் பணத்துக்கு  கத்தி வந்துடுத்துன்னு சொல்லு….!

சித்த சும்மா இருக்கேளா…? வித்யாவோட காதில் விழுந்து வைக்கப் போறது….உங்க தத்துப்பித்து உளறல்….
குழந்தை ஏற்கனவே மன வருத்தத்தோட இருக்கா பாவம்…..

அப்படி என்ன தான் வருத்தம்…அதைச் சொல்லேன் முதல்ல…!

அதானே…பொண்ணாப் பொறந்திருந்தாத் தெரியும்…உங்களுக்கெங்கே….புரியும்…

எல்லாம் எங்களுக்கும்  புரியும்….ஒரே பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுமே தலை நரைச்சுப்போச்சே……
அதிலேர்ந்தே தெரியலையாக்கும்…!

சரி சரி…..எனனோட மல்லுக்கட்டறது…போதும்…..சாப்பிட வாங்கோ…பசிக்கப் போறது…சொல்லிக்  கொண்டே அப்பளத்தை பொரித்தாள் ஜெயந்தி.

சரி வித்யா எங்கே..? இன்னுமா குளிச்சிண்டிருக்கா..?

இதோப்பா…நான் இங்கேருக்கேன்…..மாமரத்தின் அடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஈரத்தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.

வாசுதேவன் மகள் அருகில் சென்று…..உனக்கென்ன பிரச்சனைம்மா…  இப்போ….?

அப்பா…சின்ன வயசில் நான் வைத்த மரம் தானேப்பா இது…?.எவ்ளோ பெரிசா வளர்ந்து நிற்கறது  பார்த்தேளா?
இந்த வீட்டுக்கு இந்த மரம் தான்ப்பா…..அழகு….

பேச்சை  மாத்தாதே…நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு….என்ன ப்ராப்ளம் உனக்குன்னு கேட்டேன்….

இல்லப்பா… அது வந்து….அப்பா….சாப்பிட்டுட்டு பேசலாமே….நீங்க தானே சொல்லிருக்கேள்…ஒரு பிரச்சனையை பற்றி
பேசும்போது சாப்பிடற நேரத்திலையோ, தூங்கப் போற நேரத்துலையோ பேசப்படாதுன்னு…..

சரி…அப்போ வா….சாப்பிடலாம்…அம்மாவும் சமையல் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…

இதோப்பா…சுவாமி நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன்…..பக்கத்தில் இருந்த செடியில் இருந்து நாலு செம்பருத்தி
பூவைப் பறித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள் வித்யா..

வாசுதேவன் சோபாவில் ஆயாசமாக  அமர்ந்து ம்ம்…அப்பறம்…அதான் சாப்டாச்சே…இப்போ சொல்லு…
ஜெயந்தி… நீயும் வந்து உட்காரு…மீதி வேலையை அப்பறமாப் பார்த்துக்கோ…..அப்படி என்ன தான்
நாள் பூரா சமயலறையில் வேலை..  இருக்குமோ…? எப்பப்பாரு பூனை மாதிரி அங்கேயே உருட்டிண்டு இருப்பா….

ஜெயந்தி அவசர அவசரமாக ஈராக் கையை புடவை தலைப்பில் துடைத்தபடியே வந்து அமர்கிறாள்.

ஜெயந்தி….வித்யாவின்…  முகத்தைப் பார்த்தாள்…..அதில் எனக்கு சொல்லத் தயக்கம்…நீயே ஆரம்பி..என்று எழுதியிருந்தது….

இல்லன்னா..அங்க…. இவாத்தில் பெரிய சண்டையாம்…கல்யாணம் ஆகி ஆறு வருஷமாச்சு..இன்னும் இவ உண்டாகாம இருக்காளாம்…
அவாளுக்கு ஒரு வாரிசை பெத்துக் கைல கொடுக்கலையாம்….இனியும் பொறுமையாக் காத்திண்டு இருக்க முடியாதாம்…அவாளால.
அதனால் நம்ப சம்பந்தி மாமியோட தம்பி பெண்ணுக்கு நம்ம மாப்பிள்ளையை மறுபடியும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு
யோசிக்கறாளாம்…அதான்…வித்யா கோவிச்சுண்டு பெட்டியத் தூக்கிண்டு வந்து நிக்கறா….வந்து இத்தனை நேரமாச்சு….
இப்போ வரைக்கும் ஒரு போன் கூட வரலை  மாப்பிள்ளைட்டேர்ந்து…..அதான் கவலை… ஜெயந்தி சொல்ல..சொல்ல…
வித்யா தலையை குனிந்து கொண்டு….அவளது கண்ணீர்த் துளிகள் அவளது கால் பாதத்தில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது.

இதென்ன… கூத்து….இப்படிக் கூடவா..மனுஷா இருப்பா…? நீ அழாதேம்மா…..எவ்வளவு திண்ணாக்கம்..இருந்தா…நீ உயிரோட இருக்க..
மாப்பிள்ளைக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு உன்னண்ட  சொல்லியிருப்பார்….சம்பந்தி மாமி…!
எனக்கு…. வர… ஆத்திரத்துக்கு அவா மேல கேஸ் போடலாம்….கோர்டுக்கு இழுக்கலாம்…..சொல்லிக்கொண்டே ….
வாசுதேவனின் பார்வை வாசல் வரைக்கும்  சென்றது…அங்கே..அவர் பார்வைக்கு மாமரம்…காய்க்காத மாமரம்..!

மேற்கொண்டு எதுவும் பேச முடியாதவராக…..நேற்று கந்தசாமியிடம் இவர் சொன்ன வார்த்தைகள்….மனதோடு எதிரொலியாக…..
“சும்மா நானும்… மரமுன்னு  வளர்ந்து நின்னாப் போதுமா..?  இந்த எடத்துல  வேற மரத்தையாவது வைக்கலாம்….அதுவாச்சும் காய்கட்டும்….
மரத்தை வெச்சமா…பழத்தைத் தின்னமான்னு இருக்கணும்…அத்த  உட்டுட்டு ….. இன்னும் எத்தனை காலம் தான் காத்து கெடக்கறது…பூவிடும்…பிஞ்சுவிடும்னு…”
வந்து விழுந்தது. தன்னிச்சையாக எழுந்து நடந்தார்.

கூடவே….தனது நண்பன் ராஜகோபாலன் இதே காரணத்தைச் சொல்லி மலட்டு  மனைவியை விவாகரத்து செய்தது
மனதில் நிழலாக வந்து போனது….கல்யாண சந்தையில் இது சகஜம் தான் என்றாலும் இந்த ஒரு விஷயத்தால் தான்
இவர்கள் இருவருக்குள்ளும் வாய்த் தகராறு வந்து பேச்சு வார்த்தை நின்றுவிட்டது.

இன்னும் அவனுக்குப் பெண் தேடும் படலம் நடக்கிறது.

இப்போது தான் புரிகிறது…எத்தனை பெரிய பாவம்…செய்திருக்கிறான்..என்று.
தலைவலியும்…திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு…..சரியாத் தான் சொல்லிருக்கா..

மாமரத்தருகே…வாசுதேவனின் கைகள்…மரத்தை வாஞ்சையாய் தடவ…வித்யாவின் தலையைத் தடவுவது போல் உள்ளம்  உணர்ந்தது..

என்னை மன்னிச்சுக்கோ…மனம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டது… அருகில் வித்யாவும்..ஜெயந்தியும்….இருப்பதைக் கூட உணர முடியாமல்….
தனது செய்கையை நினைத்து கூனிக் குறுகினார் வாசுதேவன். இத்தனை ஆண்டுகள்… தான்… ஆசை ஆசையாய் வளர்த்த மரம்…
அதை வேரோடு வெட்டச் சொல்ல எனக்கு  எப்படி வந்தது மனம்…..?

இன்று இதே நிலையில் ..அவர்…மகள் இன்னொருவர் வீட்டில்…வேண்டாத …காய்க்காத மரமாக….! வெட்டி எறியத் தயாராக..!

காய்த்த  மரம்  தான் கல்லடி படும்னு சொல்வா….காய்க்காத மரத்தில் கோடாலியே….படும்னு சொன்னவனாயிட்டேனே….
அது தரும் நிழல் கூடவா  என் மனதில் தோன்றவில்லையே. பகவானே….எப்பேர்பட்ட பாவம்…. செய்ய இருந்திருக்கேன்.நான்.
என்  கண்ணைத் திறந்து விட்டாயே….ஊமை மனம்.. கதறியது.

அதன் பின்பு…. வீட்டில் ஒரு அமைதி….அவரவர் மனதில் எழுந்த போராட்ட எண்ணங்கள்…அடுத்தது என்ன செய்வது
என்ற கேள்விக் குறியாகவே….????…இரவும் வந்தது. உறக்கம் தான் மூவருக்கும் வரவில்லை. எப்போது விடியும் என்று வித்யா காத்திருந்தாள்.

எப்பவும் போல் வித்யா…. காலை அம்மாவுக்கு கூடமாட வேலைகளில் உதவி செய்து விட்டு…துவைத்த துணிகளை
கொடியில் காயப் போட மொட்டை மாடிக்கு எடுத்து செல்கிறாள்…..துணிகளை உலர்த்திவிட்டு மனதிற்குள்..எவ்வளவு பசுமை இந்த மரம்….
அடர்த்தியா…செழுமையா.நான் நட்ட மரம் இது….நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் பூரித்தது வித்யாவுக்கு. ..பச்சைக் கிளிகளின் .கீச்..கீச்..ஒலி
கேட்டு….அருகே சென்று மரக்கிளையை பார்க்க…அங்கே…அவளுக்காக இன்ப அதிர்ச்சி காத்திருந்தது….  .மாமரத்தின் உச்சி மரக்கிளையில்……
கொத்து கொத்தாக மாம்பூக்கள் ….இது போதாதா…அந்த வீட்டின் சந்தோஷத்திற்கு.

வித்யா துள்ளிக்கொண்டு படி இறங்கி…கடவுளே…என் கண்களையே என்னால் நம்ப முடியலையே…! .அம்மா…அப்பா….இங்க கொஞ்சம் ஓடி வந்து
பாருங்கோளேன்..இந்தக் கண்கொள்ளாக் காட்சியை…..நம்ம மாமரம்….பூத்திருக்கு..! குரலில் குதூகலம்..!

நிஜம்மாவா….! எங்கே…எங்கே…..பார்த்தே…நீ…? அம்மாவும் அப்பாவும் கோரஸாக,,,!

ஆமாம்மா…உச்ச்சிக் கிளையில் கொத்துக் கொத்தாப் பூத்துக் குலுங்கி இருக்கும்மா…சொல்லும்போதே….
வித்யாவின் முகம் ஆயிரம் வாட்ஸ்…பல்பு எரிவது போல் ஒளிர்ந்தது.

வாசுதேவன்…ஓடிச் சென்று மரத்தை கட்டிக் தழுவிக்கொண்டார்….பிறகு அவரும்……ஜெயந்தி….வித்யாவுடன் மாடிக்கு
ஓடினார்…

“கவலைப் படாதே…” இன்னும் பத்தே மாதங்களில் இதேபோல்…வித்யாவுக்கும் குழந்தை  பிறக்கும்”அசரீரியாக மரம் ஆசீர்வாதம் செய்வது போல்…..
ஆடியது…மாமரம்…….ஆனந்தக் கண்ணீரோடு வாசுதேவன்.

“காய்க்காத மரமும் ஒருநாள் காய்க்கும்..கந்தசாமி  சொல்லியது அவரது நினைவுக்கு வந்தது..

பாவம்…கந்தசாமியின் கனவு தான் இன்று பலிக்கப்போவதில்லை..

அதே நேரத்தில்…வாசலைத் தாண்டி…டும்..டும்..டும்…என  கெட்டிமேள சத்தத்தோடு நாதஸ்வர இசையும் கலந்து கடக்க….
ஆர்வத்தோடு….வாசுதேவன் கீழே எட்டிப் பார்க்க…அங்கே..ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு.
அங்கே…. மாலையும் கழுத்துமாகத்  தனது வயோதிக நண்பன்  ராஜகோபாலன்…அவனருகே இளவயதுப் பெண் புதுமனைவியாக…
தம்பதியாக…சுற்றத்தோடு கோவிலில் கல்யாணம் முடித்துக் கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

Series Navigationகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

15 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    காய்க்காத மரம் காய்க்கும் என்னும் இந்தக் கதை சிறுகதை இலக்கணத்தில் வார்த்துச் செதுக்கிய் ஒரு சித்திரம். கதை நோக்கும் போக்கும் வெகு ஜோர். காய்க்காத மரத்தை வெட்டு என்று கட்டளையுடன் கதையின் கரு பளிச்சென முதலில் வெளிச்சம் இடுகிறது. மரம் பலிகடாவாகப் போகுது என்று நாம் முடிவு செய்த பிறகு கதை உச்சத்தில் ஒரு திருப்பம் பூக்களாய் வெடிக்கிறது.
    காய்க்காத மரமாய்க் கண்ணீருடன் புக்ககம் வருகிறாள் அப்பாவி மகள். அவள் கண்வன் மறுமணம் செய்வேன் என்று அவள் கழுத்தின் மீது ஒரு கத்தியைத் தொங்க விடுகிறான். அது வாசகர் மனதை நோகச் செய்கிற்து. மரத்தில் எதிர்பாராது பூத்தது போல் மகளுக்கும் 10 மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று தந்தை மகிழ்கிறார். பிள்ளை பிறக்குமோ பிறக்காதோ ? யார் அறிவார் ? கதை முடிவில் வயோதிக வாலிபத் திருமண நடப்பு ஒரு திருப்பம் மறு திருப்பமாகிக் கதை வாசகரை அதிர்வில் வியக்க வைக்கிறது. உன்னத படைப்பு ஜெய்ஸ்ரீ. வாழ்த்துக்கள்.
    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      jayashree says:

      திருவாளர்.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு..

      தங்களின் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
      இந்தக் கதையை நீங்கள் படித்தீர்கள் என்ற நினைப்பே
      என்னுள் வியப்பையும்…சந்தோஷத்தையும் தருகிறது.
      தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.

      வணக்கத்துடன்.
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    KAAIKAATHGA MARAM another well written short story by JAYASRI SHANKAR is based on the common simile comparing a barren woman with a tree not bearing fruits. VITHYA is barren even after six years of married life. Her in – laws are planning to for a second marriage for her husband. By a strange coincidence, her father VASUTHEVAN decides to cut down the mango tree in their compound as it has not given any fruit for five years. KANDASAMY knowingly or unknowingly compares it to the custom in his community of men divorcing their barren wives for a second marriage in their quest for a heir. VAASUTHEVAN rebukes the practice as inhuman and unfair. He has his own daughter in mind when he utters it. At that moment VITHYA arrives with her luggage.The family is shocked at the news of what has transpired in her family. Vasuthevan is so furious that he wanted to go to court for justice.The next day tide of events changes dramatically when VITHYA sees flowers on the upper branches of the mango tree. Immediately Vasuthevan imagines that VIDYA too will give birth in ten months. Anyway the tree is saved from the saw of KANTHASAMY. To make the occasion more auspicious, the writer has given a young bride to the aged RAJAGOPALAN and their wedding procession passes by. So far it is a happy ending for the mango tree. But will the joy of VASUTHEVAN, JAYANTHI and VITHYA will last long? Will their in-laws be willing to accept their belief that the flowering of their mango tree is an indication that soon she too will conceive in the near future? This question lingers in my mind after reading this beautiful stoty. Congratulations JAYASRI SHANKAR!

    1. Avatar
      jayashree says:

      அன்பின் டாக்டர்.ஜான்சன் அவர்களுக்கு..

      தங்களின் பின்னூட்டம் கண்டு எப்போதும் போல் மகிழ்ந்தேன்.
      கதையைக் கூட எழுதி விடலாம்..ஆனால் அதன் சாரம்
      சிறிதும் மாறாமல்…உள்ளிருந்து எடுத்தது போல் அழகாக
      ரசத்தை எடுத்துத் தரும் தங்களின் பின்னூட்டம் போல
      எழுதுவது மிகவும் கடினம். தாங்கள் பின்னூட்டமே கதையை
      மணம் மாறாது சொல்லிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான்.
      மனமார்ந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி.

      வணக்கத்துடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar
    janani raghavan says:

    அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,
    அழகழகான கருத்துக்களை வைத்து கதை புனைந்து.
    அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
    எழுத்து நடை அழகு.
    எடுத்துச் சொல்லும் கருவும் அழகு.
    வாரா வாரம் திண்ணையில் படிக்கிறேன்.
    மேலும் மேலும் எழுதுங்கள்.
    நெஞ்சார்ந்த பாராட்டுக்குள்.
    ஜனனி ராகவன்,

    1. Avatar
      jayashree says:

      அன்பின் ஜனனி ராகவன் அவர்களுக்கு,

      தங்களின் ஊக்கம் தரும்
      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,

    அருமையான கதைக்களம். நல்ல நடை. ஆரம்பித்த வேகத்தில் தொய்வில்லாமல் சுவையாக நடை பயிலும் அழகு. கண் சிமிட்ட மறந்து வாசித்த அனுபவம்.. மொத்தத்தில் சிறுகதையின் இலக்கணம் மாறாத சுவையான படைப்பு. வாழ்த்துகள்.

    அன்புடன்

    பவள சங்கரி.

    1. Avatar
      jayashree says:

      அன்பின் பவளசங்கரி அவர்களுக்கு,

      வணக்கம்.ஆதரவுக்கு மகிழ்கிறேன்.
      தங்களின் ஊக்கம் தரும்
      பாராட்டுக்கு மிக்க நன்றி..
      அன்புடன்
      ஜெயஸ்ரீ ஷங்கர்.

  5. Avatar
    Dr.Subha says:

    அன்பு ஜெயஸ்ரீ,
    காய்க்காத மரம்…..கதை அற்புதமான முடிவோடு
    இயல்பான நடையில் தொய்வில்லாமல்
    எழுதி இருப்பது பாராட்டுக்கு உகந்தது.
    மேலும் எழுத வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    சுபா.

  6. Avatar
    அமைதிச்சாரல் says:

    அருமையானதொரு கதைக்களம்.. ஒரே மூச்சில் வாசிக்க வைத்த சரளமான நடையில் சென்ற சிறுகதையில் அற்புதமான முடிவையும் சரேலென்ற திருப்பத்தையும் ஒரு சேரக் கொடுத்து அசத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.

  7. Avatar
    charusthri says:

    arumaiyaana kadhai.kaachcha maram kalladi padum kaaikkadha maram kodali yaal vettuuppadum.Azhagaana vaarthai pirayogam.

  8. Avatar
    ganesan says:

    I feel more happy if the author narrates the other benefits of the mango tree such as protecting people from scortching sun , using its leafs for religious functions etc…thus making readers to feel the creation of god on earth including humanbeings have its own values…here i submit a poem written by Susan T. Aparejo regarding the god’s creation

    The warmth of the light, making the world so bright,
    The majesty of the sky for the birds to fly,
    The calm and quiet sea setting part the land in the lea,
    The generous souls of moon, stars and sun for human fun,
    The awesome birds, fish, beast and human kind,
    When there was nothing more to add,
    God knew His masterpiece was complete,
    And so, He called it ‘Earth-“ A Better Place to Live In..for one and all..

  9. Avatar
    s. revathy gevanathan says:

    oru pen padikkaamal vaangum pattam maladi pattam.manamaana pen eppothu thaan thaaimai adaivoom ena yenkum manathirku ithu pondra sol, ullathai neruppal suttatharku samamaagum. ithu kalikaalam. ariviyal munneri kondu pogirathu. kuzhanthai pakkiyam illathavarkalukku ‘sothanai kuzhai kuzhanthai’ moolam petru kollalaam. annal panamthan pesa vendum. vithya nattu vaitha ma poothathu pol aval vaidrylum pookkattum poo. annal than mappilaikku marumanam seithu vaippathai unarchi poorvamaga solli irunthal nandraga irunthirukkum. jayasri shankarikku paarattukal. s. revathi gevanathan.

    seithu vaikka povathai unarchi poorvamaaga solli irunthaal nandraga irunthirukkum. jayasri sah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *