பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

This entry is part 29 of 36 in the series 18 மார்ச் 2012

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, பின்வரும் செய்யுளைச் சொன்னான்.

எனது வில்லையும் அதில் தொடுத்துள்ள அம்பையும் கண்டபிறகும் அது பயமில்லாமல் என்னை நெருங்குகிறது. நிச்சயமாக அதை யமன் என்னருகில் அனுப்பி வைத்திருக்கிறான் என்று தெரிகிறது.

அதன்மேல் கூரிய அம்பு எறிந்தான். அதனால் கோபமடைந்த காட்டுப் பன்றி இளம்பிறைபோல் வெண்ணொளி வீசும் தன் பல் நுனியால் வேடனின் வயிற்றைக் கிழிக்கவே வேடன் உயிரற்றுத் தரையில் வீழ்ந்தான். வேடனைக் கொன்ற பிறகு அந்தக் காட்டுப் பன்றியும் அம்பால் அடிபட்ட வேதனையிலே உயிர் விட்டது.

இந்தச் சமயத்தில், எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு நரி அங்கு வந்து சேர்ந்தது. காட்டுப்பன்றியும் வேடனும் செத்துக்கிடந்ததை நரி கண்டது. மிகவும் சந்தோஷமடைந்தது. ‘’விதி என்மேல் கருணை கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக எனக்கு இந்த உணவு படைத்து வைத்திருக்கிறது.

முற்பிறவியில் செய்த வினைகளின் நற்பயனையோ தீயபயனையோ, மறுப்பிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமலே, விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறது.

எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த வயதில் செய்யப் பட்டிருந்த போதிலும், நல்வினையும் தீவினையும் அதற்குரிய பயனை அனுபவித்துத் தீருகிறது.
என்று சொல்லி வைத்துள்ளது சரியே. இதைக் கொண்டு ரொம்ப நாள் காலம் தள்ளும் விதத்தில் தின்று வருவேன். முதன் முதலில் வில்நுனியில் நாண் நரம்பு இருக்கிறதே, அதைக் கைகளால் பிடித்து மெள்ளத் தின்கிறேன்.

சுயமாகச் சம்பாதித்த செல்வமேயானாலும், அறிவாளிகள் அமுதத்தை உண்பதுபோல் மெள்ள மெள்ளத்தான் அனுபவிக்க வேண்டும். ஒரே வாயில் விழுங்கிவிடுவது ஒருபோதும் கூடாது.

என்றொரு பழமொழி உள்ளது’’ என்றபடி நரி எண்ணமிட்டது. இவ்வாறு எண்ணியபின் நரி வில்நுனியை வாயில் கவ்விக் கொண்டு அதில் தொங்கிய நாண் நரம்பைத் தின்னத் தொடங்கியது. நாண் நரம்பு அறுந்தவுடனே, வில்லின் நுனி நரியின் மேல்வாய்ப் புறத்தைத் துளைத்துக் கொண்டு தலைக்கு வெளியே உச்சிக்குடுமிபோல் பொத்துக்கொண்டு வந்து விட்டது. அதன் வேதனை தாங்கமாட்டாமல் நரி உயிர்விட்டது.

அதனால்தான் ‘பேராசைக் கொண்டதால் நரிக்கு உச்சிக்குடுமி உண்டாயிற்று’ என்றெல்லாம் சொல்கிறேன்’’ என்றான் பிராம்மணன்.

அவன் மேலும் சொன்னான்: ‘’அன்பே, நீ இதைக் கேட்டதில்லையா?

எத்தனை வயது, என்ன தலைவிதி, எவ்வளவு சொத்து, எத்தனைக் கல்வியறிவு, எங்கே சாவு – என்கிற இந்த ஐந்து விஷயங்களும் ஒருவன் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன.

இந்தப் போதனையைக் கேட்ட பிராமணப் பெண், ‘’அப்படியானால் சரி. வீட்டில் கொஞ்சம் எள் இருக்கிறது. அதைப் பொடி செய்து எள்ளுப் பொடியைக் கொண்டு பிராமணனுக்கு உணவளிக்கிறேன்’’ என்று சொன்னாள். அவள் வார்த்தையைக் கேட்டபிறகு அந்தப் பிராமணன் வேறொரு கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். பிராமணப் பெண் எள்ளை நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி, வெய்யிலில் காயப்போட்டுவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கத் திரும்பிவிட்டாள். அந்த நேரத்தில் ஒரு நாய் அந்த எள்மேல் மூத்திரம் பெய்து விட்டுச்சென்றது. பிராமணப் பெண் அதைப் பார்த்து விட்டாள்.

‘’விதி எதிராகப் போனால் எத்தனை சாதுரியமாக வேலை செய்கிறது! இந்த எள்ளைக்கூடச் சாப்பிடத் தகாததாகச் செய்துவிட்டதே! சரி, இதை எடுத்துக்கொண்டு அண்டை அயலார் வீட்டுக்குப் போய் தோல் நீக்கிய இந்த எள்ளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாகத் தோல் நீக்காத எள் வாங்கி வருகிறேன். யாராயிருந்தாலும் இந்த பேரத்துக்கு ஒப்புக்கொள்வார்களோ!’’ என்று எண்ணினாள்.

எண்ணியபடியே ஒரு கூடையில் அந்த எள்ளை வைத்து, வீடு வீடாக ஏறி, ‘’தேய்த்த எள்ளைத் தேய்க்காத எள்ளுக்குப் பதிலாகப் பெற்றுக் கொள்கிறீர்களா?’’ என்று கேட்டுக்கொண்டே போனால் கடைசியில் நான் பிச்சைக்காக நுழைந்த அதே வீட்டிற்கு அவளும் எள்ளைக் கொண்டுவந்து, மேலே சொன்னபடியே பேரம் பேசினாள். அந்த வீட்டுக்காரி சந்தோஷத்துடன் தேய்க்காத எள்ளைக் கொடுத்து விட்டு அவளிடமிருந்து தேய்ந்த எள்ளைப் பெற்றுக் கொண்டாள். சிறிது நேரம் கழிந்தவுடன் அவள் கணவன் வீட்டுக்கு வந்தான். ‘’அன்பே, இது என்ன?’’ என்று விசாரித்தான்.
‘’நான் ஒரு சாதுரியமான பேரம் பண்ணினேன். தேய்க்காத எள்ளைக் கொடுத்து தேய்த்த எள்ளைப் பெற்றுக்கொண்டேன்’’ என்றாள் அவள். இதைக் கேட்டு அவன் யோசித்தான். ‘’இது யாருடைய எள்?’’ என்று கேட்டான்.

‘’சாண்டிலித்தாய்க்குச் சொந்தமானது அது’’ என்று பதிலளித்தான் காமந்தகி என்ற பெயருடைய அவன் மகன்.

அதைக் கேட்ட அவன் ‘’அன்பே, அவள் மிகவும் கெட்டிக்காரி. வியாபாரத்தில் தேர்ச்சி மிகுந்தவள். இந்த எள்ளை அப்பால் எறிந்துவிடு. ஏனென்றால்,

காரணமில்லாமல் சாண்டிலித்தாய் எள்ளுக்குப் பதிலாக எள் பேரம் செய்யமாட்டாள். தேய்த்த எள்ளைக் கொடுத்து தேய்க்காத எள்ளை அவள் பெற்றுக்கொண்டதற்குக் காரணம் ஏதாவது இருக்கத்தான் செய்யும். என்று சொன்னான்’’ என்று முனிவர் கதையை முடித்தார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், ‘’எனவே, தானியக் குவியலின் வாசனையால்தான் இப்படி எலி குதிக்க முடிகிறது. அந்த எலி எப்படித் தாக்குகிறது தெரியுமா?’’ என்று கேட்டார் முனிவர். ‘’தெரியும், சுவாமி! தனியாக அது வருவதில்லை, எலிகளோடு கூட்டமாய் வருகிறது அது’’ என்றான் பூடகர்ணன்.

‘’சரி, இங்கே தோண்டுவதற்கு ஏதாவது கருவி இருக்கிறதா?’’ என்று முனிவர் கேட்டார்.

‘’இருக்கிறது. கைக்கு எளிதான இரும்புக்கடப்பாரை இதோ’’ என்றான் அவன்.

‘’சரி, நீயும் நானும் நாளை விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும். காலையில் அந்த எலியின் காலடி அடையாளங்கள் தரையில் படிந்திருக்கும். அவற்றை நாமிருவரும் பின்பற்றிச் செல்லவேண்டும்’’ என்று சொன்னார் விருந்தாளியாக வந்த முனிவர்.

அந்தக் கொடியவனின் சொற்கள் எனக்கு இடி விழுந்தது போலிருந்தது. நான் யோசித்தேன், ‘’ஐயோ இதனால் எனக்குச் சாவுதான் உண்டாகும். ஏனெனில் இவன் பேச்சில் வேறெதோ அர்த்தமிருக்கிறது. என் தானியக் குவியலைப் பற்றித் தெரிந்து கொண்டது போலவே, இவன் என் கோட்டையையும் நிச்சயமாகத் தெரிந்துகொள்வான். இவன் பேச்சிலுள்ள மறை பொருள் இதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரு பொருளைக் கையில் தூக்கியபடியே அதன் எடையைக் கூறும் சாமர்த்தியசாலிகள் உண்டு. அதேமாதிரி ஒரு மனிதனை ஒரே பார்வையால் அளந்தெடுத்துவிடும் விவேகிகளும் இருக்கிறார்கள்.

முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளின் பயனாக வந்து வாய்க்கிற குணங்கள் பிறவியிலிருந்தே வெளிப்படத் தொடங்கும். மயில் குஞ்சுக்குத் தோகை வளராதிருக்கலாம். இருந்தாலும் குளக்கரையில் அது ஒரு நடை நடந்து காட்டும்போது உடனே அதை மயில்குஞ்சு என்று அடையாளம் கண்டு கொள்கிறோம் அல்லவா?
நான் பயந்து நடுங்கிவிட்டேன். என் கோட்டைக்கு (வளைக்கு) வழக்கமாய்ச் செல்கிற வழியில் போகாமல் நான் என் பரிவாரங்களோடு வேறொரு வழியாகச் செல்ல முயற்சித்தேன்.

ஆனால் பெரிய பூனை ஒன்று எதிரே வந்தது. அது எலிகளைப் பார்த்துவிட்டதோ இல்லையோ, உடனே எலிக் கூட்டத்தின் நடுவே பாய்ந்தது. பல எலிகளைக் கொன்றது. சரியான வழியில் நான் அழைத்துச் செல்லவில்லை என்று உயிர் தப்பிய மற்ற எலிகள் என்னைத் திட்டின. தரையெல்லாம் ரத்தக் கறை படிய அவை ஓடிப்போய் பழைய வளைக்குள்ளேயே புகுந்துகொண்டன.
கட்டை அறுத்துக்கொண்டு வளையைப் பலவந்தமாகக் கிழித்து விலக்கிக் கொண்டு ஒரு மான் ஓடியது. நாற்புறமும் தீப்பிடித்த காட்டிலிருந்தும் தப்பித்து ஓடியது. வேடனின் அம்புக்கும் இலக்காகாமல் தப்பித்துச் சென்றது. கடைசியில் ஒரு கிணற்றில் போய் விழுந்தது. என்ன கஷ்டம்! விதி கெட்டுப்போனால் அதற்கு எதிராக என்ன முயற்சித்தும் என்ன பயன்?

ஆகவே நான் ஒருவன் மட்டும் வேறிடம் சென்றேன். துரதிஷ்டம் பிடித்த மூடர்கள் மற்ற எலிகள்! எல்லாம் பழைய வளைக்குள் புகுந்துவிட்டன. தரையில் ரத்தக்கறைகள் படிந்த அடையாளங்களைப் பின்பற்றிச் சென்ற முனிவர் வளைக்கு வந்து சேர்ந்தார். ஒரு கடப்பாரையை எடுத்துத் தோண்டத் தொடங்கினார். தோண்டுகையில் எனது தானியக் குவியலைக் கண்டு கொண்டார். இந்தத் தானியக்குவியல்தான் என் பிழைப்புக்கு ஒரு சாதனமாக இருந்துவந்தது. இதன் வாசனையைக் கொண்டுதான் நான் முன்பெல்லாம் வளைக்குத் திரும்பி வந்துவிடுவது வழக்கம்.

அதைக் கண்டதும் முனிவர் சந்தோஷமடைந்தார். ‘’ஏ பூடகர்ணனே! இனிமேல் நீ நிம்மதியாகத் தூங்கலாம். இந்தத் தானியக் குவியலின் வாடையைக் கொண்டுதான் எலி உன்னை இதுகாறும் தூங்கவிடாமல் செய்து வந்தது’’ என்று சொன்னார். தானியக் குவியலை எடுத்துக்கொண்டு முனிவர் மடாலயத்துக்குத் திரும்பிச் சென்றார்.

அந்த இடத்துக்கு நான் திரும்பிச் சென்றேன். அங்குள்ள அலங் கோலத்தையும், துயரக் காட்சியையும் என்னால் காணச் சகிக்கவில்லை. ‘’ஐயோ, இனி என்ன செய்வது? எங்கே போவது? இனி எனக்கு மனச்சாந்தி எப்படி கிடைக்கும்?’’ என்று எண்ணமிட்டேன், இந்த எண்ணங்களை எண்ணுவதிலேயே அன்றையப் பகற்பொழுது பூராவும் வெகு கஷ்டத்துடன் கழித்தேன்.

ஆயிரங் கிரணங்களுடன் சூரியன் அஸ்தமித்தவுடன், நான் மனக் கவலையோடு உற்சாகமிழந்தவனாய் என் பரிவாரங்களோடு அதே மடாலயத்திற்குள் நுழைந்தேன். நாங்கள் பிறாண்டுகிற சத்தத்தைக் கேட்டு விட்டு, பூடகர்ணன் ஒரு மூங்கில்கழி எடுத்து பிச்சைப் பாத்திரத்தை அடிக்கடி தட்டத் தொடங்கினான். அதைக் கண்ட முனிவர், ‘’தோழா, இன்றைக்குக்கூடக் கவலையொழித்துத் தூங்கமாட்டாயா என்ன?’’ என்று கேட்டார்.

‘’சுவாமி, அந்தத் துஷ்ட எலி தன் பரிவாரங்களுடன் நிச்சயமாக மறுபடியும் வந்திருக்கிறது. அந்தப் பயத்தால்தான் இப்படிச் செய்கிறேன்’’ என்று சொன்னான் பூடகர்ணன்.
முனிவர் சிரித்துக்கொண்டே, ‘’தோழா, பயப்படாதே! அதன் சொத்து பறிபோனதும் அந்த எலியின் துள்ளிக்குதிக்கும் சக்தியும் அத்தோடு போய்விட்டது. விதி விலக்கின்றி எல்லா ஜீவன்களுக்கும் இதுவே கதி.

ஒருவன் எப்பொழுதும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறான், பிறரை அலட்சியம் செய்து பேசுகிறான், அதிகாரம் செய்து ஏசுகிறான் – என்றால் அதற்குக் காரணம் பணம் படைத்ததால் ஏற்பட்ட தெம்பு ஒன்றுதான்.

அந்தச் சொற்கள் எனக்குக் கோபமூட்டின. பிச்சைப் பாத்திரத்தை நோக்கிப் பலமாக எம்பிக் குதித்தேன். அதை எட்டத் தவறி தரையில் விழுந்தேன். என் எதிரியாகிய முனிவர் என்னைப் பார்த்துவிட்டார். அவர் பூடகர்ணனைப் பார்த்து, ‘’தோழா, பார் அந்த அதிசயத்தை! அதைக் கவிதையிலே சொல்லலாம் போலிருக்கிறது:

பணம் இருந்தால் எல்லோரும் பலசாலிகள்தான்; பணம் இருந்தால் எல்லோரும் அறிஞர்கள்தான். சொத்து இழந்த இந்த எலியைப் பார்! மற்ற எலிகளைப்போல் அதுவும் ஒரு சாதாரண எலியாகி விட்டிருக்கிறது.

அதை இப்படிச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்:

விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு, மதநீர் அற்ற யானை, பணம் இல்லாத மனிதன் — இவர்கள் எல்லோரும் பெயரளவில்தான் பாம்பாகவும், யானையாகவும், மனிதனாகவும் இருக்கிறார்கள்.

இந்தச் சொற்களைக் கேட்டதும், நான் யோசிக்கலானேன். ‘’ஆஹா, எதிரி சொல்கிற சொல்லாயிருந்தாலும் அது உண்மைதான். என்னால் இன்று ஒரு அங்குலம் கூட எகிறிக் குதிக்க முடியவில்லை. பணம் இல்லாத மனிதனின் வாழ்க்கை பாழ்தான், சந்தேகமில்லை!

ஒருவன் அற்ப புத்தியுள்ளவனாக இருந்து, அவனுடைய சொத்தும் போய்விட்டால், பிறகு அவன் செய்யும் முயற்சிகள் எல்லாம் கோடைக்காலத்தில் சிற்றாறு வறண்டு விடுவதுபோல் வறட்சிதான் அடைகின்றன.

காட்டில் பயிராகும் எள்ளும் வால் கோதுமையும் எப்படி நிஜ எள் மாதிரியும் நிஜக் கோதுமையாகவும் இல்லாமல் பெயரளவுக்கு இருந்து உபயோகமின்றி இருக்கின்றனவோ, அதேபோல் பணமில்லாத மனிதனும் உபயோகமில்லாதவனாய் பெயரளவில்தான் மனிதனாக இருக்கிறான்.

ஏழையிடம் நற்குணங்கள் உண்டு; என்றாலும் அவனிடம் அவை ஒருபோதும் பிரகாசிப்பதில்லை. உலகத்துக்குச் சூரிய வெளிச்சம் எவ்வளவு அவசியமோ அப்படியே நற்குணங்கள் விளங்குவதற்குப் பணம் அவசியம்.

செல்வம் கொழித்துச் சுகபோகத்தில் வாழ்ந்தவன் பின்னால் தன் செல்வத்தை இழந்து துயரம் அனுபவிக்கிறது போல் பிறவி ஏழை அவ்வளவு துயரம் அனுபவிப்பதில்லை.
பணம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் வைக்கும் நம்பிக்கைகளும் விருப்பங்களும், விதவைகளின் தொங்கிப்போன ஸ்தனங்களைப்போல் அவனது மனத்தில் வீணே தொங்கி விழுந்தவாறு இருந்து விடுகின்றன.

எதிரே நின்று முயற்சித்துப் பார்த்தாலும் சூரியனைப் பார்க்க முடிகிறதில்லை. அதே வெளிச்சத்தை இரவில் தரித்திரம் என்ற திரை மறைத்து விடுகிறது.

இப்படி மனமுடைந்துபோய் நான் பலவாறு புலம்பினேன். என் தானியக்குவியல் என் எதிரிக்குத் தலையணையாக மாறிப் பிரயோஜனப் படுவதையும் கண்டேன். தோல்வி கண்டவனாய் நான் என் முயற்சியைக் கைவிட்டு, பொழுது புலரும் நேரத்தில் வளைக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன்.

அப்போது என் வேலைக்காரர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்று வம்பளக்கலாயினர். ‘’அவனைப்பார்! நமக்குச் சோறுபோட அவனுக்குத் திராணி கிடையாது. மேலும், அவனை நாம் பின்பற்றித்திரிந்தால் பூனைகள் முதலான விபத்துக்கள் உண்டாகின்றன. எனவே அவனுக்கு மரியாதை செய்வதில் என்ன பிரயோஜனம்?’’

கொடைகள் எதுவும் வழங்காமல் விபத்துக்கள் மட்டும் வந்து சேரும்படி செய்து கொண்டிருக்கிற அரசனை விட்டுத் தூர விலகிவிட வேண்டியதுதான். அப்படிப் பட்ட அரசனைப் படைவீரர்கள்தான் முதலில் விட்டுச் செல்லவேண்டும்.

என்றொரு பழமொழி கூறுகிறது’’ என்று பேசிக்கொண்டன. வழியில் இந்தப் பேச்சைக் கேட்டபடியே வளைக்குள் சென்றேன். என்னிடம் சொத்து இல்லாமற் போனதால் வேலையாட்கள் யாரும் என்னோடு வரவில்லை. நான் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ‘’சீ, வறுமை என்பது எத்தனைக் கேவலமானது! இந்தச் செய்யுளில்தான் எத்தனை விவேகம் இருக்கிறது:

வறியவனின் வார்த்தையை அவனது உறவினரும் மதித்து நடப்பதில்லை. அவனுடைய மானம் கப்பல் ஏறிவிடுகிறது. அவனது நற்குணம் என்கிற சந்திரன் ஒளி மங்குகிறது. பிறகு சீக்கிரத்தில் மறைந்தும் போகிறது. நண்பர்களாக இருந்தவர்கள் வெறுத்து விலகிவிடுகின்றனர். துன்பத்துயரங்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. பிறர் செய்த பாவங்களுக்கு இவன்மேல் பழி சுமத்தப்படுகிறது.

ஒருவன் வறுமைக்கும் ஆளாகி, விதியின் சோதனைக்கும் இலக்காகிவிட்டால் அவனது நண்பர்களே அவனுக்கு விரோதிகளாகி விடுகின்றனர், அன்பே வெறுப்பாக மாறிவிடுகின்றது.

பிள்ளையில்லாத வீடு பாழ்; நட்புணர்ச்சி இல்லாத நெஞ்சம் பாழ். முட்டாளுக்கு எட்டுத் திசைகளும் சூனியம். ஏழைக்கோ எல்லாமே சூனியம்தான்.

அவனது விருப்பு உணர்ச்சிகள் எதுவும் மாறவில்லை. அவன் பெயரும் மாறவில்லை. அறிவும், சொல்லும மாறிவிடவில்லை. முன்பிருந்த அதே மனிதன்தான். இருந்தாலும், அதோ பார்! அவனிடமுள்ள பணம் போய்விட்டதா? அப்படியானால் அவன் வேற்று மனிதன்தான்!என்ன விசித்திரமான காட்சி இது!

சரி போகட்டும். என் போன்றவர்களுக்குப் பணத்தால் என்ன கிடைக்கப் போகிறது? என்போன்ற ஜனங்களுக்கு இதுதான் தலைவிதி என்றால் பிறகு பணம் இருந்தென்ன, போய் என்ன? சொத்து பறிகொடுத்த நான் இனி காட்டில் வசிப்பதே மேல்.

மானங்காத்தால் வீட்டில் இரு; மானமிழந்தால் வீட்டில் இராதே! மானம் அழிந்தபிறகு, தேவ விமானமே வந்தாலும் விலகிச் சென்றுவிடு!

தோல்வி விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தபோதிலும் தன்மானமுள்ளவன் நெஞ்சு நிமிர்ந்து நடக்கிறான். தன்மானத்தைக் கைவிட்டு அவன் பணப்பெருக்கின் முன்னே தலைவணங்குவதில்லை.

இப்படியே மேலும் பல யோசனைகளில் மூழ்கினேன். ‘’பிச்சை எடுப்பது சாவுக்குச் சமானம். காரணம்,

காட்டுத் தீயால் எரிக்கப்பட்டு, பூச்சிகளளால் அரிக்கப்பட்டு, பட்டையுரிந்து பட்டுப்போய் உரமில்லாத மண்ணின் மேல் நிற்கும் மரம் இருக்கிறதே, அதன் நிலை பிச்சைக்காரனின் நிலையைவிட எவ்வளவோ மேல்!

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்றுசத்யசிவாவின் ‘ கழுகு ‘
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *