தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 – கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் ஜீவாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே பத்திரிகை சஞ்சிகைகள் வாயிலாக யமுனா ராஜேந்திரனை அறிந்திருந்தாலும், ‘பதிவுகள்’ மூலமாகத்தான் அவருடனான மின்னஞ்சல் தொடர்பு முதலில் ஏற்பட்டது. ஆனால் இன்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு குறுகிய நேரம்தானென்றாலும் மிகவும் பயனுள்ளதாகவும், நெஞ்சில் நிலைத்து நிற்கும் சந்திப்புகளிலொன்றாகவும் அமைந்து விட்டது.
அந்தக் குறுகிய நேரத்தில் யமுனா ராஜேந்திரனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடினோம். ஈழத்து அரசியல் நாவல் பற்றி அண்மையில் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய உரை சம்பந்தமாகக் குறிப்பிடும்போது தனக்கு 25 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியதால் , முழுமையாக தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க முடியவில்லையென்று தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
மேலும் ஈழத்து அரசியல் நாவல் பற்றித் தொடர்ந்த உரையாடல் மைக்கல் ஒந்தாச்சியின் அனிலின் ஆவி பற்றித் திரும்பியது. மைக்கல் ஒந்தாச்சியின் அரசியல் நோக்கினை அந்நாவல் புலப்படுத்துவது பற்றிக் குறிப்பிடும்போது தென்னிலங்கையில் நடைபெற்ற ஜே.வி.பி அமைப்பினரை புரட்சியாளர்களெனக் குறிப்பிடும் மைக்கல் ஒந்தாச்சி வடகிழக்கில் நடைபெற்ற போரிலீடுபட்ட போராளிகளைக் குறிப்பிடும்போது ‘பயங்கரவாதிகள்’ என்னும் பதத்தினைப் பாவித்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். மைக்கல் ஒந்தாச்சியின் எழுத்து மிகவும் கவித்துமானது. அதற்காக அவரது அரசியலை ஒதுக்கி அவரது எழுத்தினைப் பார்க்கத் தன்னால் முடியாது என்றார் யமுனா ராஜேந்திரன். இது போல் ஜெயமோகனின் எழுத்தின் சிறப்பை மட்டும் கருத்தில்கொண்டு அவரது அரசியலை ஒதுக்கி விடமுடியாது என்றார். ‘ஜெயமோகன் உண்மையில் ஒரு வலதுசாரி எழுத்தாளன். அதிலெந்தவித சந்தேகமுமில்லை. இச்சமயம் ஜெயமோகனின் இந்திய அமைதிப் படை ஈழத்தில் புரிந்ததாகக் குறிப்பிடப்படும் குற்றங்கள் பற்றிய கருத்துகள் அதனையே புலப்படுத்துகின்றன’ என்பது யமுனா ராஜேந்திரனின் கருத்தென்பதை அவருடனான உரையாடலின்போது அறிந்துகொள்ள முடிந்தது.
அடுத்ததாக அவர் குறிப்பிட்ட இன்னுமொரு கருத்து. ஈழத்து அரசியல் நாவல் பற்றிய ஆய்வில் அவர் சில எழுத்தாளர்களின் படைப்புகள் வாசித்துவிட்டு ஒதுக்கிவிட்டதாகக் குறிப்பிட்ட கருத்தினைக் குறிப்பிடலாம். ஒரு படைப்பை விமர்சனத்துக்குள்ளாக்கும்போது சில படைப்புகளை ஒதுக்கிவிடலாம். ஆனால் ஆய்வென்று வரும்போது எல்லாப் படைப்புகளையும் குறிப்பிடுவது அவசியமென்பது என் கருத்து. ஈழத்து அரசியல் நாவலென்றால் அது அமைப்புகளில் இருந்தவர்களால் மட்டும்தான் எழுதப்படவேண்டுமென்பதில்லை. வெளியிலிருந்து எழுதுபவர்களின் படைப்புகளைப் புறக்கணித்துவிடமுடியாது. ஆய்வின் நோக்கம் ஈழத்து அரசியல் நாவல் என்பது. அந்த வகையில் ஈழத்து அரசியலைப் பற்றி விபரிக்கும் அனைத்து நாவல்களைப் பற்றியும் குறிப்பிடுவது அவசியம். படைப்புகள் இலக்கியத் தரமானவையா அல்லவா என்பது விமர்சனத்தைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகவிருந்தபோதிலும் ஆய்வைப் பொறுத்தவரையில் முழுப்படைப்புகளையும் குறிப்பிடவேண்டும். அவ்விதம் குறிப்பிடும்போது ‘இப்படைப்புகள் மேலோட்டமாகவிருக்கின்றன; கலைத்துவமில்லாதவை.’ , ‘இந்தப் படைப்புகள் கூறும்பொருளிலும், கலைத்துவத்திலும் சிறந்து விளங்குகின்றன’ என்று ஆய்வாளர் குறிப்பிடுவதே பொருத்தமானது. இவ்விதமில்லாமல் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் பூரணத்துவமான ஆய்வுக்கட்டுரைகளாக இருக்கப்போவதில்லை. இவ்விதமான கட்டுரைகளை ஆய்வுக் கட்டுரைகளென்பதற்குப் பதிலாக ஒருவிதமான விமர்சனக் கட்டுரைகளாகக் குறிப்பிடலாம். அந்த வகையில் ஈழத்து அரசியல் நாவல் என்ற தலைப்பில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரையானது எழுத்தாளர்களான செ.கணேசலிங்கன், டானியல் போன்றவர்களின் படைப்புகளை ஒருபோதுமே ஒதுக்கிவிட முடியாது. ஈழத்து அரசியல் என்றால் அது வெறும் ஈழத்தில் நடைபெற்ற வட, தென்னிலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் பற்றி மட்டுமானதல்ல. இவ்வகையான ஆயுதப் போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரே பல ஆண்டுகளாக ஈழத்தில் பல்வேறின மக்களுக்கு மத்தியில் நிலவும் சமூக, அரசியல் போராட்டங்கள் பற்றி வெளிவந்த படைப்புகள் என்னும் அர்த்தத்தில்தான் ஈழத்து அரசியல் அணுகப்படவேண்டும். அதற்கமைய ஈழத்து அரசியல் நாவல் பற்றிய ஆய்வென்பதும் என்பதும் இவையனைத்தையும் பரந்த அளவில் உள்ளடக்கியதாக அமைந்திருக்க வேண்டும். ஈழத்துத் தமிழர்களின் சமூக,அரசியல் போராட்டங்களைப் புலப்படுத்தும் படைப்புகள், சிங்கள மக்களின் சமூக, அரசியல் போராட்டங்களை விபரிக்கும் படைப்புகள், ஈழத்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிகழ்ந்த சமூக, அரசியல் விளைவுகளை மையமாக வைத்து உருவான படைப்புகள். இவ்விதம் பரந்த அளவில் அணுகப்பட வேண்டுமென்பதால், இவ்வகையான ஆய்வென்பது ஓரிரு நாவல்களை மட்டும் படித்துவிட்டு எழுதப்பட முடியாது. உண்மையில் ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல், ஈழத்துச் சிங்கள அரசியல் நாவல், ஈழத்து இஸ்லாமிய அரசியல் நாவல் போன்ற பல்வேறு தலைப்புகளில், தளங்களில் விரிவாக விபரிக்கப்பட வேண்டும்.
இவ்விதமானதொரு அணுகுமுறையின்படி செங்கை ஆழியானின் படைப்புகளையும் ஆராயவேண்டும். தாமரைச்செல்வி போன்றவர்களின் படைப்புகளையும் ஆராயவேண்டும். செ.கணேசலிங்கனின் ‘நீண்ட் பயணம்’ போன்ற படைப்புகளையும் , தளையசிங்கத்தின் படைப்புகளையெல்லாம் ஆராயவேண்டும். அவையெல்லாம் அவை படைக்கப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற சமூக, அரசியல் நிகழ்வுகளை, போராட்டங்களை விபரிப்பவை. இவ்விதமான படைப்புகள் ஈழத்து அரசியலைப் பற்றிக் கூறுகின்றனவா என்பதே முதலில் அவதானத்துக்குள்ளாக்கப்பட வேண்டும். இறுதியில் வேண்டுமானால் ஆய்வாளர் தனது நோக்கின்படி முக்கியமான படைப்புகளாகத் தென்படும் படைப்புகளைப் பற்றிய தனது கருத்துகளைக் குறிப்பிடலாம். இவ்விதமான அணுகுமுறையினாலேற்படும் நன்மைகளிலொன்று எதிர்காலத்தில் ஈழத்து அரசியல் நாவல் பற்றி ஆராய விளையும் ஒருவருக்கு, நிறைய படைப்புகளைப் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. மேலும் எழுத்தாளர்களின் பல படைப்புகள் அவர்களது வாழ்நாளில் அவர்களது காலகட்ட ஆய்வாளர்களால் (?), விமர்சகர்களால் கண்டுகொள்ளப்படாமலே போய் பின்னாளில் கண்டுகொள்ளப்பட்டுப் பிரபலமாகியிருக்கின்றன. இதனால்தான் இவ்விதமானதோர் ஆய்வில் கூறும் பொருளின் அடிப்படையில் அனைத்துப் படைப்புகளும் குறிப்பிடப்பட வேண்டும். அவ்விதமானதோர் ஆய்வுதான் ஆய்வென்னும் அடிப்படையில் சிறந்து விளங்குமென்பதென் கருத்து.
மேற்படி யமுனா ராஜேந்திரனுடனான உரையாடலின்போது அவர் தெரிவித்த இன்னுமொரு முக்கியமானதொரு கருத்து: ஜெயமோகன் போன்றவர்கள், எழுத்தாளர்கள் சிலரையும், பதிலுக்கு அவரால் முக்கியத்துவப்படுத்தபப்டும் எழுத்தாளர்கள் அவரைப் போன்றவர்களையும் ஒருவருக்கொருவர் முக்கியப்படுத்தி வரும் போக்கு பற்றியது. என்னைப் பொறுத்தவரையில் இது தவிர்க்க முடியாதது. காலப்போக்கில் உண்மையான படைப்பு நிலைத்து நிற்கும். பாரதியின் படைப்புகளை அவன் வாழ்ந்த காலத்தில் எவ்விதம் அன்றைய காலகட்டது இலக்கிய ஜாம்பவான்கள் பலர் அணுகினார்களென்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்களே இன்றிருந்தால் பாரதியைத் தூக்கிக் கொண்டாடியிருப்பார்கள். பாரதியின் கவிதைகள் தவிர்ந்த ஏனைய படைப்புகள் பலவற்றை இன்றைய காலகட்டத்துப் பிரபல்ய எழுத்தாளர்களில் சிலர் இலக்கியமாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும்கூட பாரதியின் கவிதைகளையும், கட்டுரைகளையும், கதைகளையும் மக்கள் படிக்கத்தான் போகின்றார்கள் நாம் இன்று இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தினைப் படிப்பதுபோல். ஆனால் இன்றைய பிரபல்யங்களின் பல படைப்புகளை மக்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்களென்பதே வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடம். எனவே இது போன்ற விடயங்களில் வீணாக மனதைத் திருப்பி, பொன்னான நேரத்தை இழப்பதிற்குப் பதில் ஆக்கபூர்வமான விடயங்களில் எந்தவிதப் பயன்களையும் எதிர்பார்க்காமல் ஈடுபடுவது சிறந்ததென்பதென் கருத்து.
மேலும் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மேற்படி கலந்துரையாடலின்போது பதிவுகள் இணைய இதழில் ஆரம்பத்தில் பங்குபற்றிய காலகட்டம் பற்றியும், குறிப்பாக பதிவுகளின் விவாதத்தளத்தில நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் நினைவு கூர்ந்தார். பதிவுகள் இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் நிடைபெற்ற விவாதங்களில் குறிப்பாக ‘சைபர் வெளியும் மனித உடல்களும்’, படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல’ போன்ற விவாதங்களில் யமுனா ராஜேந்திரன் ஜெயமோகன், ஆதவன் தீட்சண்யா, ரவிக்குமார், புதியமாதவி, R.P..ராஜநாயஹம், , ரவி ஸ்ரீனிவாஸ், நேசகுமார் போன்றவர்களுடன் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகளை அத்தருணத்தில் எண்ணிக்கொண்டேன்.
மேலும் அச்சமயத்தில் அவர் கூறிய கருத்தொன்று எனக்கு வியப்பினையும் கூடவே சிரிப்பினையும் ஊட்டியது. ‘பதிவுகள்’ இணைய இதழினை நான் எனது ஏனைய வேலைகளைச் செய்துவிட்டுக் கிடைக்கும் நேரத்தில் செய்வதாக அவர் கருதித் தெரிவித்த கருத்துகளைக் கேட்டபோதுதான் எனக்குச் சிரிப்பு வந்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணித்தியாலயங்கள் வரையில் வாசிப்பிற்கும், எழுதுவதற்கும் ‘பதிவுகள்’ தளத்துப் பணிகளுக்கும் செலவிடுகின்றேன். தற்போது என் வாழ்வின் முக்கியபணிகளொன்றாக விளங்குபவை இவையே. இதற்கேற்பவே என் ஏனைய பணிகளை அமைத்துக்கொண்டிருக்கின்றேன். எனவே இங்குள்ள எழுத்தாளர்கள் பலர் அடிக்கடி தம்மைப்பற்றிக் கூறுவதுபோல் நான் பகுதிநேர எழுத்தாளனோ, இதழாசிரியனோ அல்லன். முழுநேர இதழாசிரியன்; எழுத்தாளன். ஆங்கிலத்திலும் , தமிழிலும் முக்கியமான (சமகாலப் படைப்புகள், மொழிபெயர்ப்புகளுட்பட) குறிப்பிடத்தக்க படைப்புகள் என்னிடமுள்ளன. இவற்றை வெறும் அழகுக்காக அடுக்கி வைத்திருப்பவனல்லன் நான். எப்பொழுதும் அவற்றில் பலவற்றை வாசிப்பதென் முக்கியமான என் வாழ்வியற் செயற்பாடுகளிலொன்று. மேலும் பதிவுகள் இணைய இதழில் சில விடயங்கள் காலகட்டத் தேவைகளுக்கேற்ப மீள்பிரசுரமாகின்றன. ஆனால் பதிவுகளுக்கு படைப்பாளிகள் பலர் தொடர்ச்சியாகப் படைப்புகளை அனுப்பிக்கொண்டே வருகின்றார்கள். அன்றிருந்ததைப்போல் இன்றும் பதிவுகளைப் பலவேறு நாடுகளிலிருந்தும் ஆர்வத்துடன் படித்து வருகின்றார்கள். குறிப்பாக அண்மைககாலமாக இலங்கையிலிருந்து பதிவுகளுக்குப் பெருகிவரும் வாசகர்களைக் கூறலாம். பதிவுகளின் வாசகர்களைப் பொறுத்தவரையில் மு
மேற்படி உரையாடலின்போது ஒரு விடயத்தை மட்டும் நன்கு அறிய முடிந்தது. யமுனா ராஜேந்திரன் தான் நம்பும் கோட்பாடுகளுக்கமைய , நேர்மையாகச் செயற்படுகிறவரென்பதையும் அதற்காக எவ்விதமான சமரசங்களையும் செய்துகொள்ளாதவரென்பதையும் அறிய முடிந்தது. ஆனால் இவர் மதிக்கும் பலர் தம் வாழ்வில் மிகவும் எளிதாகச் சமரசம் செய்து கொள்பவர்களாக இருந்து விடுகின்றார்களென்பது ஆச்சரியத்திற்குரியது. உதாரணமாக யமுனா ராஜேந்திரன் உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். ஆனால் மனுஷ்யபுத்திரனோ அண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடாத்திய ‘இயல்விருது’ பாராட்டு விழாவில் இலக்கியத்திற்குச் சம்பந்தமில்லாத ரஜ்னிகாந்தை அழைத்து அவரை மிகப்பெரிய வாசகராக அறிவித்து முதுகு சொரிந்ததை என்னவென்பது. இங்கு நடிகர் ரஜ்னிகாந்த் தமிழ்கத்தின் மிகப்பெரிய வாசகரா என்பது முக்கியமல்ல. ஆனால் அவரை விட உயிர்மை இதழினை தொடர்ச்சியாக வாசிக்கும், பல்வேறு சமகாலப் படைப்புகளையெல்லாம் வெளிவந்தவுடனேயே வாங்கி வாசித்து,மகிழும் தமிழ் வாசகர்கள் ஆயிரக்கணக்கிலுள்ளார்கள். ரஜனிகாந்த மிகப்பெரிய வாசகரென்றால் இவர்களையெல்லாம் என்னவென்பது.
மொத்ததில் குறுகிய நேரச் சந்திப்பென்றாலும், பயன் மிக்க சந்திப்பாக, நேரத்தை வீணாக்கிவிட்டோமேயென்று வருந்தாததொரு சந்திப்பாக, மறக்க முடியாததொரு சந்திப்பாக அமைந்து விட்டது எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனுடான சந்திப்பு. அதற்காக எழுத்தாளர் தேவகாந்தனுக்கும், எழுத்தாளர் டானியல் ஜீவாவுக்கும் எனது நன்றி.
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)
- தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?
- முள்வெளி அத்தியாயம் -9
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)
- திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
- சுந்தர் சி யின் “ கலகலப்பு “
- அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.
- கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “
- யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்
- எம் சூர்யோதயம்
- வளவ. துரையனின் நேர்காணல்
- நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்
- உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
- கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்
- பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்
- மலைப்பேச்சு -செஞ்சி சொல்லும் கதை-26
- என் முகம் தேடி….
- தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்
- சின்னமகளிடம் கிங் ஃபிஷர் பற்றி ஒரு உரையாடல்
- தருணங்கள்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்
- வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்
- ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
- 2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
- முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
- துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்