தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்

This entry is part 1 of 33 in the series 27 மே 2012
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தங்கம் அதிக மதிப்புக்  கொண்ட உலோகமாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அதை ஆபரணங்கள் செய்யவே பயன்படுத்தி வருகின்றனர்.  பெண்ணின் திருமணத்தின் போது, தங்கமாகவும், ரொக்கமாகவும் வரதட்சிளையாகத் தருவது நம்மில் ஊறிப் போன பண்பாகவே ஆகிவிட்டது.  பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாத காலத்தில், தங்கத்தையே சொத்தாக எண்ணி, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிற்கு வரும் போது நிறைய நகைகளைப் போட்டு வர வேண்டும் என்று விரும்பினர்.  தற்போதும் அந்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
உலகிலேயே தங்கம் அதிகம் வாங்கவோரில் முதலிடம் வகிக்கும் இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை இன்று உருவாகியுள்ளது. ஆம். இன்று பல்வேறு நாட்டினர் தங்கத்தை அதிகமாக வாங்க ஆரம்பத்துள்ளனர். அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் சீனர்கள்.
1959ஆம் ஆண்டில், சீனர்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டால், அது குற்றம். 2002ஆம் ஆண்டு வரை அதற்கு சிறை தண்டனை என்ற அளவிற்கு சட்டம் இருந்தது.  ஆனால் 2002இல், ஷாங்காய் தங்க பரிமாற்றக் குழு அமைக்கப்பட்ட பின், தங்கம் வாங்குவது விற்பது அனுமதிக்கப்பட்டது. இந்தச் சில ஆண்டுகளில், சீனர்கள் தங்கத்தை வாங்க ஆரம்பித்ததும், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, தங்க விலையும் அதிகமாக ஆரம்பித்தது.  இன்று சீன மத்திய தொலைக்காட்சியில் தங்கத்தை வாங்குங்கள் என்று விளம்பரம் செய்யும் அளவிற்கு, தங்க முதலீட்டில் சீன அரசாங்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.
தங்கத்தை கடைக்குச் சென்று தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. கணினி மூலம் உடனுக்குடன் வங்கிக் கணக்கின் வாயிலாக வாங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.  தானியங்கி தங்க விற்பனை இயந்திரம் பெய்ஜீங்கில் நிறுவப்பட்டு, மிகவும் வெற்றிகரமாக, தங்க விற்பனை முறை புகுத்தப்பட்டது. இந்த ஆண்டில், 2000 விற்பனை இயந்திரங்கள் நிறுவ ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் தங்க இருப்பு 8133 டன்கள். இரண்டாவதாக ஜெர்மனி 3396 டன்கள்.  சீனா ஆறாம் இடத்தில் 1054 டன்கள் என்று உள்ளது.  ஆனால் இன்றைய வாங்கும் வேகத்தைப் பார்த்தால், சீனா விரைவில் பல நாடுகளையும் முந்திவிடும் அளவில் இருக்கிறது.
1905ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, தென் ஆப்பிரிக்கா தான் தங்க உற்பத்தியில் 101 ஆண்டுகள் முதல் நிலை வகித்தது. ஆனால் 2007ஆம் ஆண்டு, அந்த இடத்தை சீனா பிடித்தது.  பத்து வருடங்களில் 70 சதவீத வளர்ச்சி. அதற்கு சீன தங்கக் கழகமும், சீன சர்வதேச சுரங்கக் குழுவும் தான் காரணம். ரஷ்யா, கனடா நாட்டினரின் உதவியோடு, பல சுரங்கங்கள் சீனாவில் தற்போது செயல்பட்டு வருகின்றன. சீன அரசாங்கமும் தங்கச் சுரங்கத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2011இல், சீனா அளவில் 25 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது.  அது உலக அளவில் 7 சதவீத வளர்ச்சியும் கூட.
தங்க விலையை இலண்டன் புல்லியன் கழகம் தினம் இரண்டு முறை நிர்ணயிக்கிறது. இதனுடன் அமெரிக்க கோமெக்ஸ்-உம் உடன் செயல்படுகிறது. இன்று சீனாவில் பேன் ஆசியா தங்க பரிவர்த்தகம் என்ற நிறுவனம், தினம் 8:00 மணிக்கு, சீன யுவானில் விலையைக் கடந்த ஆண்டு முதல் நிர்ணயிக்க ஆரம்பித்துள்ளது.  அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய குறைய, ஐரோப்பியப் பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக, இந்த விலை நிர்ணயம் வருங்காலத்தில் உலகம் முழுவதும் ஏறு;றுக் கொள்ளப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டே சீன அரசு தங்கத் துறையில் அதிக கவனம் செலுத்தி, பல யுத்திகளைப் புகுத்தி வருகிறது.
சீனர்கள் இன்று உலகில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் கிரெடிட் கார்ட் மூலமாக தங்கத்தை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சீன விவசாய வங்கி, ஐ.சி.பி.சி வங்கிகள் அதற்கு துணை புரிகின்றன.
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாக இருந்து போது, எல்லா நாட்னெரும் அமெரிக்க டாலரையே தங்கள் இருப்பாக பயன்படுத்தி, டாலர்களை வாங்கவும் விற்கவும் செய்தனர். ஆனால் இன்றைய நிலை தலைகீழாக மாறியதும், எந்த நாட்டு நோட்டுகளை பயன்படுத்துவது என்ற ஐயம் ஏற்பட்ட சூழலில், அனைவரது கண்களும் தங்கத்தின் மேல் விழுந்தது. அதனால், இன்று எல்லா நாட்டவரும் டாலரை விடுத்து, தங்கத்தை வாங்கிச் சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.
நம் நாட்டின் பண்டைய வரலாற்றில், பொன் தான் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தபட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தொன்று தொட்ட பழக்கம் என்பதும் தெரியும். 1000 பொற்காசுகள், 100 கழஞ்சு பொன் என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.  இனி வரும் காலங்களில் விரும்பிய அளவில் அச்சடிக்கப்படக்கூடிய காகித நோட்டுக்களின் மதிப்பு குறைந்து, தங்கமே மதிப்பு வாய்ந்த பொருளாக மாறக் கூடிய சூழல் ஏற்படலாம். ரஷ்யா, சீனா, மெக்ஸிகோ, கொரியா, தாய்லாந்து நாட்டு மத்திய வங்கிகள், இன்று தங்கத்தை வாங்கி, சேர்கிறார்கள்.
பணம் உள்ளவர்கள் தங்கத்தை வாங்கிச் சேர்க்க சேர்க்க, அதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் விலை கூடிக் கொண்டே தான் செல்லும். அதனால், நீங்களும் வாய்ப்பு இருந்தால், வாங்கிச் சேர்க்கப் பணம் இருந்தால், குறைந்த வட்டி தரும் வங்கியில் சேமிப்பதை விடுத்து, தங்கத்தை வாங்கிச் சேர்ப்பது நல்லது.
Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *