சென்ற நூற்றாண்டின் தொடக்க காலச் சென்னைக்குக் கொஞ்சம் போய் வருவோமா? 1914-ல் சென்னையை ஒரு நகராட்சி என்றுதான் குறிப்பிட முடியும் என்றாலும் முனிசிபல் கார்ப்பரேஷன் என்றுதான் அப்போதே அது கவுரவமாக அழைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி மன்றத்திற்கு மொத்தம் முப்பத்து ஆறே உறுப்பினர்கள்தான். அவர்களிலும் இருபதுபேர்தான் வாக்காளர்களால் தேந்தெடுக்கப்படுபவர்கள்! ஏனென்றால் அப்போது சென்னை வெறும் இருபது வார்டுகளாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது. எட்டு உறுப்பினர்கள் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரயில்வே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள். மேலும் எட்டுபேர் அரசின் நியமன உறுப்பினர்கள். இந்த அவைக்குத் தலைவர் உண்டு. ஆனால் அவர் உறுப்பினர்களால் தேர்வு செய்யப் படுபவர் அல்ல. மாறாக ஆங்கிலேயரான ஓர் அரசாங்க உத்தியோகஸ்தர்தான். அவர் பிரெசிடென்ட் அழைக்கப்பட்டார். இன்றைய மநகராட்சி ஆணையருடன் இவரை ஒப்பிட முடியாது. ஏனென்றால் மாநகராட்சியைப் பொருத்தவரை பிரெசிடென்ட் மன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக சர்வ வல்லமையுள்ளவர்.
சென்னை மாநகராட்சியின் பிரெசிடென்டாக 1914-ல் பொறுப்பு ஏற்றவர் ஜான் சாட்ரஸ் மொலோனி என்பவர். அந்த ஆண்டு ஜூலை மாதம்தான் அவர் இங்கிலாந்திலிருந்து நம் நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்ததார். அவர் இங்கு வந்ததே சென்னை மாநகராட்சித் தலைவர் என்கிற உத்தியோகம் கிடைத்ததால்தான்.
அன்று ஆங்கிலேயர்களிடையே காலனி நாடுகளில் அதிலும், நம்நட்டில் பணியாற்றுவதில் ஆர்வமும் போட்டா போட்டியும்கூட இருந்தது. இங்கு தான் ஒரு சாதாரண பதவியில் இருந்தாலும் வீடு நிறைய எடுபிடிகளும் வெளியே சென்றால் ராஜோபசாரமும், தட்டிக் கேட்க ஆளில்லாமல் தாந்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் வாய்ப்பும் ஆங்கிலேயர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் இங்கிலாந்தில் இதெல்லாம் சாத்தியமில்லை!
மொலோனி தமது பணிக் கால அனுபவங்களை விவரித்து தென்னிந்தியாவைப் பற்றிய புத்தகம் (Book of South India) என்றொரு நூல் எழுதியிருக்கிறார். அதில் சென்னை மாநாகராட்சியில் தாம் பணியாற்றிய அனுபவங்களைக் குறித்து அவர் பதிவு செய்துள்ள தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை (வெளியீடு: ஏஷியன் எஜுகேஷனல் சர்வீசஸ் 1926)
சென்னையின் அன்றைய மக்கள் தொகை ஐந்து லட்சத்துக்குச் சிறிது அதிகம். பெரும்பாலானவர்கள் அவரவர் வீட்டுக் கிணறுகளிலிருந்தே அவர்களின் எல்லாவிதமான அன்றாடத் தண்ணீர்த் தேவைகளையும் நிறைவு செய்து கொண்டார்கள். இருப்பினும் மாநகராட்சியும் தண்ணீர் வழங்கும் கடமையை மேற்கொண்டிருந்தது. அதன் நீர் வழங்கும் திறன் நாளொன்றுக்கு மூன்று கோடியே இருபது லட்சம் லிட்டர் என்று கணிக்கப் பட்டிருந்த போதிலும் நடைமுறையில் அதனால் தினசரி இரண்டரைக் கோடி லிட்டர் அளவுக்குத்தான் தண்ணீர் வழங்கிவர முடிந்தது.
மாநகராட்சி வழங்கும் தண்ணீர் சென்னை அருகில் உள்ள ரெட் ஹில்ஸ் ஏரியிலிருந்து திறந்தவெளி கால்வாய் மூலமாக வந்தது. ரெட் ஹில்ஸ் ஏரி அப்படியொன்றும் அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமோ அமுத சுரபியோ அல்ல. அதனால் ஏரியின் ஆழப்பகுதியில் துளையிட்டு நீரேற்றும் குழாய்கள் மூலமாகவும் தண்ணீரை எடுக்க வேண்டிவரும். கோடை காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எடுக்கும் தண்ணீரோடு கசடுகளும் தூரும் கலந்து வரத் தொடங்கிவிடும்.
அன்றைய சென்னையின் வடமேற்கு எல்லைக்கு வரும் இந்தத் தண்ணீர் பெரிய சிமிட்டிக் குழாய்கள் மூலம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குழாய்களின் நீர் வழங்கும் திறன் நாளொன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் என்று சொல்லப்பட்டா லும் நடைமுறையில் கோடையின்போது அது மிகக் குறைவாகவே இருந்தது.
தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க நாளொன்றுக்கு ஒரு நபரின் எல்லாத் தேவைகளுக்குமாக நூறு லிட்டர் மட்டும் என்ற கணக்கில் தண்ணீர் வழங்கலாம் என மாநகராட்சி முடிவு செய்தது. இந்த அளவின்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதானால் இருபத்தோரு வடிகட்டும் படுகைகள் தேவைப்படும் என்று பொறியாளர்கள் கணக்கிட்டுச் சொன்னார்கள். ஆனால் கைவசம் இருந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு பதினான்கு வடிகட்டிப் படுகைகளைத்தான் மாநகராட்சி யால் கட்டமைக்க முடிந்தது.
மொலோனி இதற்கு மூன்று தீர்வுகள் இருப்பதாகக் கருதினார். ஒன்று மக்கள் தாமாகவே முன்வந்து சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு தண்ணீர்த் தேவையைக் குறைத்துக் கொள்வது. இரண்டாவது எல்லாத் தண்ணீரயும் ஒரே சமயத்தில் வழங்கிவிடாமல் பகுதி பகுதியாக இடைவெளிவிட்டு வழங்குவது. மூன்றாவது வடிகட்டிய நீர், வடிகட்டாத நீர் என்று பாகுபாடு இன்றி சேர்த்து வழங்குவது!
முதல் தீர்வு மக்களின் மனோபாவம் நன்கு தெரிந்திருந்ததால் சாத்தியமில்லை என்று எடுத்த எடுப்பிலேயே கைவிடப்பட்டது. இரண்டாவது தீர்வை பரிசோதித்த போது தலைமடைப் பகுதியில் உள்ளவர்களே எல்லாத் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பின்னால் உள்ளவர்களைத் திண்டாட வைக்கத் தொடங்கியதால் அதுவும் கைவிடப்பட்டது. மூன்றாவது தீர்வின் படி எழுபது சதவீதத்தை வடிகட்டிய நீராகவும் எஞ்சிய முப்பது சதவீத நீரை வடிகட்டாமலும் வழங்கத் தொடங்கி னார்கள்! இதன் விளைவாக வடிகட்டிய நீருடன் வடிகட்டப்படாத நீரும் கலந்து நூறு சத நீரும் மாசடைந்த தண்ணீராகவே வழங்கப்படலாயிற்று!
அப்போது மாநகராட்சியில் அரசாங்கப் பிரதிநிதியாக உள்ளாட்சி நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வந்த ஸர் பி. ராஜகோபாலாச்சாரியார் இந்தக் கலப்படத் தண்ணீருக்கு மொலோனி மிக்சர் என்று பெயர் சூட்டினாராம். கடைசியில் மாநகராட்சி வழங்கும் தண்ணீருக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது என்று எழுதுகிறார், மொலோனி.
மொலோனியின் பதவிக் காலத்தில்தான் நீதிக் கட்சியின் பிரதான தலைவர்களாகப் பின்னர் முக்கியத்துவம் பெறவிருந்த ஸர் பி.ட்டி தியாகராய செட்டியாரும் டாக்டர் டி எம் நாயரும் மாநகராட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்களாக எப்போதும் மோதிக் கொள்பவர்களாகவே இருந்தார்கள்.
அப்போதெல்லாம் மாநகராட்சி மன்ற விவாதங்கள் சென்னை ராஜதானி சட்டசபைக் கவுன்சிலில் நடக்கும் விவாதங்களைவிடச் சூடாகவும் சுவையாகவும் இருந்ததோடு ஆக்கபூர்வமாகவும் அமைந்திருந்தன என்று குறிப்பிடுகிறார், மொலோனி.
தறவாடு மாதவன் நாயர் என்கிற டக்டர் டி. எம் நாயர் பிராமணர்களே பெருவாரியான வாக்காளர்களாக இருந்த திருவல்லிக்கேணி வார்டிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்! ஒரு கோடை காலத்தின்போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளம் முற்றிலும் வற்றிவிட்டதால் தெப்போற்சவம் நடத்தத் தண்ணீர வழங்கி உதவுமாறு கோயில் நிர்வாகிகள் மாநகராட்சியை வேண்டினர். மாநகராட்சி வழங்கும் தண்ணீர் பொதுச் சொத்து, அதைக் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் பயன்பாட்டுக்கு அளிக்கக் கூடாது என்று அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். டி எம் நாயர். பக்தி உணர்வு மிக்க பி.ட்டி தியகராய செட்டியார் அதை வன்மையாகக் கண்டித்தார்! அடுத்து வந்த தேர்தலில் அதே திருவல்லிக்கேணி வார்டில் போட்டியிட்ட நாயர் தோல்வியடைய நேரிட்டது. அரசாங்கம் உடனே அவரை நியமன உறுப்பினராக மாநகராட்சி மன்றத்தில் இடம் பெறச் செய்தது. இந்த முறை நாயர் சமயம் தொடர்பான விவகாரங்களில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இணங்கிப்போகும் அணுகுமுறையை மேற்கொண்டு விட்டதாகப் பதிவு செய்துள்ளார், மொலோனி.
மொலோனியின் பதவிக் காலத்தில்தான் சென்னை மாநகராட்சி மன்ற விதிமுறைகள் திருத்தப்பட்டு வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் பிரெசிடென்ட்டாகப் பதவி ஏற்கும் விதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி முதல் முறையாகச் சென்னை மாநகராட்சியின் தலைவர் பதவியை ஏற்கும் பெருமை தியாகராஜ செட்டியாருக்கு வாய்த்தது. தியாகராயச் செட்டியாரைப் பற்றி ஒரு சுவரசியமான தகவலைத் தருகிறார், மொலோனி. தியாகராய செட்டியார் நேர்மையாளர். எப்போதும் மாநகராட்சி நிர்வாகத்தையும் குறை கூறிக்கொண்டே இருப்பார். எந்தவொரு நடைமுறையும் இருநூறு ஆண்டுப் பழமையாகவாவது இருந்தால்தான் அதன் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கும். புதிய முயற்சி எதுவானாலும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்ப்பார்! தியாகராயச் செட்டியாரிடம் இருந்த இன்னொரு முக்கிய அம்சம் அவர் தமது கலாசார அடையாளத்தைத் துறக்காமல் இருந்தது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் வெண்ணிறத் தலைப்பாகை, காலர் இல்லாத வெள்ளைக் கோட்டு, பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய எட்டு முழ வேட்டி என்ற கோலத்தில்தான் அவரைக் காணமுடியும்.
+++++
நன்றி: ‘நம்ம சென்னை’ மாதம் இருமுறை, மே 16-31, 2012
- தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14
- தொல்கலைகளை மீட்டெடுக்க
- பெண் என்ற ‘புதிரும்’ ‘குறிப்பும்’
- மொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-3)
- முள்வெளி அத்தியாயம் -10
- கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்
- என்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்
- திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- மே 17 விடுதலை வேட்கை தீ
- உட்சுவரின் மௌன நிழல்…
- என் மணல் குவியல்…
- மறுபடியும்
- ஞான ஒளி (கலீல் கிப்ரான்)
- மகளிர் விழா அழைப்பிதழ்
- இரு கவிதைகள்
- யாதுமாகி …
- தாகூரின் கீதப் பாமாலை – 15 ஆத்மாவோடு விளையாட்டு !
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 21)
- பஞ்சதந்திரம் தொடர் 45
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றொன்று
- ஆவணப்படம்: முதுமையில் தனிமை
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27
- கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு
- பிரேன் நிசாரின் “ இஷ்டம் “
- இரண்டு குறும்படங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.
- ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ – துபாய் ‘அமீரகத் தமிழ் மன்றத்தின்’ பெண்கள் விழா
- துருக்கி பயணம்-3
- அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
- கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா