‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..’ செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.
ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.
தொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே: http://www.vadakkuvaasal.com/ . இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html
பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா?” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டுச் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.
***
ராமலக்ஷ்மி
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று