சீதாலட்சுமி
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
நினைவுகள் அனைத்தும் சுகமாக இருக்குமென்பதில்லை. சுமையான நினைவுகளும் உண்டு
என் பயணத்தில் மலர்த்தோட்டங்களும் உண்டு. குமுறும் எரிமலைகளும் இருக்கும்.
எளிதில் உணர்ச்சி வயப்படுவேன். இது என்னிடமுள்ள குறைகளில் ஒன்று.
வெளிப்படையான பேச்சு விவேகமல்ல. இதுவும் என் குறைதான்.
என்னிடமிருக்கும் குறைகளை அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பதுடன் திருத்திக் கொள்ளவும் முயற்சிப்பேன். மனிதன் ஓர் கலவைதானே. ஒன்றில் மட்டும் என்றும் நான் உறுதியானவள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதில் தயக்கம் கிடையாது
மும்பாய் பயணத்தில் சில அரிய படிப்பினைகள் பெற்றேன்.
1975 – ஜூன்மாதம் . பம்பாய் பயணம் (இப்பொழுது மும்பாய் அப்பொழுது பம்பாய் )
மும்பாயில் சந்திரமோகன் ஒரு தொழில் அதிபர். அவரது சகோதரி சகுந்தலா என்பணிக்களத்தில் ஆரம்பமுதல் பணியாற்றி விருப்ப ஓய்வெடுத்து வீட்டில் இருப்பவள். இரண்டு குழந்தைகள். என் மகனுக்கு நண்பர்கள். சகுந்தலாவின் குடும்பத்துடன்தான் என் மகனையும் அழைத்துக் கொண்டு மும்பாய் சென்றேன். சகுந்தலா இருப்பதால் மகனை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு நான் என் தேடலைத் தொடரலாம்
முதல் நாள் மாலை சந்திரன் வீட்டிற்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார். பெயர் சாரி. அய்யங்கார் பிராமணன். நெற்றியில் மெல்லிய நாமம். தனியார் கம்பெனியில் வேலை.. தினமும் மாலை சந்திரன் வீட்டிற்கு வந்துவிட்டுத்தான் தன் வீட்டிற்குச் செல்வாராம். சந்திரனுக்கு ஏதாவது வேலைகள் செய்ய வேண்டுமென்றால் செய்வாராம். எங்களுக்குள் அறிமுகப்படலம் முடிந்தது. சந்திரன்தான் முதலில் உரையாடலைத் தொடங்கி வைத்தார்
மேடம், மும்பாயில் கோயில்கள், கடைத்தெருக்கள்தவிர வேறு இடங்கள் ஏதாவது குறிப்பாகச் செல்ல வேண்டுமா? யாரையாவது பார்க்க வேண்டுமா?
ஆமாம், சில இடங்களுக்குப் போக வேண்டும். அங்கே உள்ளவர்களிடம் பேச வேண்டும்
எங்கே?
தாராவி போகணும். அங்கே வீடுகளுக்குள் போய்ப் பார்க்கணும். அங்கே இருக்கிற பெண்கள், ஆண்கள். குழந்தைகள் இவர்களில் சிலருடனாவது பேச வேண்டும்.
நடுராத்திரியில் பிளாட்பாரத்தில் தூங்கற மனுஷங்களைப் பார்க்கணும்
தூங்கறபோது எழுப்பி பேட்டியா ? –சாரி குறுக்கிட்டார்
ஒருத்தரையும் எழுப்ப வேண்டாம். பார்த்தால் போதும்
தூங்கறவங்களைப் பாத்து என்ன செய்யப்போறேள். அதுசரி, உங்க பாடு. — சாரிதான் தொடர்ந்து பேசினார்
சிகப்பு விளக்கு ஏரியா போகணும்
அய்யோ –சாரி அலறினார்
அங்கே அந்த பெண்களைப் பார்க்கணும், பேசணும்
“கடவுளே, பொம்மனாட்டிகள்னா கோயில், குளம்னு போவா, கடைக்குப் போய் துணி வாங்குவா. இந்தம்மா ஆசையைப் பாருங்க, இப்படியும் ஒரு லேடியா?” சாரியிடம் ஓர் பதட்டம்.
சந்திரன் அதற்குப் பதில் கொடுத்தார்
சாரி, இந்தம்மா, சமூக நலத்துறையில் வேலை பார்க்கிறாங்க. ஏதாவது இவங்களுக்கு உதவி செய்ய முடியுமான்னு பார்க்கலாம். இவங்க கதை எழுதறவங்க. அதுக்கும் அந்த இடத்துக்குப் போக நினைக்கலாம்
REDLIGHT AREA
பார்வையாளராகப் போவது கடினம். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் போகிறவர்களுக்குப் பிரச்சனை. பெண்கள் தங்கியிருக்கும் வீட்டில் அவர்களைப் பாதுகாப்பில் வைத்திருப்பதும் ஓர் முதியவள். அவர்கள் வசிக்கும் இடத்திற்கோ, அந்த தொழிலுக்கோ சிறிது தொல்லை வந்தாலும் உடனே அங்கே பாதுகாக்க வருபவர் ஓர் ஆண். இந்த இருவருக்கும் ஏதோ பெயர் சொல்லி அழைத்தனர்.. வருடங்கள் பல ஆகிவிட்டதில் நினைவில்லை. அந்தப் பெண்ணை அம்மா என்றும் அவனை காவல்காரன் என்றும் குறிப்பிடுவதைப் பொறுத்தருள்க. அப்பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இவர்களின் ஒப்புதல், ஒத்துழைப்பு தேவை. சந்திரன் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறினார். சாரி உடன் வருவார் என்றார். உடனே சாரி “ கர்மம், கோயிலுக்குக் கூட்டிண்டு போகச் சொன்னா சந்தோஷமா இருக்கும்., கண்ட இடத்துக்குப்போக நானா கிடைச்சேன். சந்திரன் நீங்க வேறு ஆளை இதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க “ என்றார் ஆனால் சந்திரன் என்னுடன் சாரிதான் செல்ல வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த இடங்களுக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் நகரத்தில் மற்ற இடங்களைப் பார்க்கச் சொன்னார். நானும் சரி என்றேன்.
சந்திரனின் மனைவி விஜயா. மும்பாயில் பல வருடங்கள் வாழ்ந்து வருவதால் எங்களுக்கு விஜயா வழித்துணையானார். மேலும் அவர்கள் வீட்டு கார் டிரைவர் துரையும் பல ஆண்டுகள் இவர்களிடம் வேலை பார்ப்பது மட்டுமன்றி சிறுவயதிலேயே மும்பாய் வந்துவிட்டவன். எனவே நகரச் சுற்றுலா அருமையாய் அமைந்தது
முதலில் விநாயகர் கோயில், பின் மஹாலட்சுமி கோயிலுக்குச் சென்றோம். பளிங்குச் சிலைகளிலும் ஓர் அழகு. தென்னகத்து கோயில் சிற்பங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நானோ வரலாற்று பிச்சி. சென்ற கோயில்கள், பார்த்து ரசித்த சிற்பங்கள் எத்தனை எத்தனை ! பல்லவர் காலம், சோழர்காலம், நாயக்கர் கால சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஹொய்சளர் சிற்பங்களையும் ரசிப்பேன்.. சிலையைப் பார்த்தவுடன் அது யார் காலத்தில் செதுக்கப்பட்டது என்று கூறிவிடுவேன்.
கல்லிலே காணும் கலைவண்ணம் வேறு. அதுமட்டுமல்ல. அந்தச் சிற்பங்களை வணங்கத் தோன்றும். வடநாட்டுச் சிற்பங்கள் ரசிக்கத் தோன்றும். இது என் உணர்வு.
சர்ச்சுக்கும் போனோம். மசூதியையும் விடவில்லை
இந்தியாவின் நுழைவாயில் சென்றோம். Gateway of india .
வெளிநாட்டவர் நுழைந்தது இந்த ஒரு வாயிலில் மட்டுமா? தென்னகத்தில் கடல் மல்லையிலிருந்து எத்தனை துறைமுகங்கள் இருக்கின்றன?! அக்காலத்தில் வாணிபம் அந்தப் பாதைகளில் நடந்த செய்திகள் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கடல் கொள்ளையரை அடக்குவது மட்டுமல்ல கடல்வழி சென்று போரிட்ட செய்திகளும் நம்மிடையே நிறைய உண்டு.
பார்வையில் பட்டது ஹோட்டல் தாஜ்
செல்வந்தர்கள், வெளி நாட்டவர்கள் விரும்பும் சொகுசு இல்லம்
நான் அதைப் பார்த்த வருடம் 1975 ஜூன் மாதம்.
இன்று அதனை எழுதும் பொழுது அதற்கு நேர்ந்த விபத்து நினைவிற்கு வந்தது. எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டன?! மனப்பறவை இன்னும் வேகமாக எங்கோ பறக்க ஆரம்பித்தது
என் வாழ்விடம் தமிழகத்திலிருந்து அமெரிக்காவானது. அவ்வப்பொழுது என் மண்ணைப் பார்க்க வருவேன். என் மகனிடம் ஒரு குணம் உண்டு. வயிற்றில் அவன் குழந்தையாக இருக்கும் பொழுதே நான் ஊர் சுற்றியதால் அவனுக்கும் ஊர் சுற்றும் பழக்கம் வந்துவிட்டது. . அமெரிக்காவில் முக்கிய இடங்களைப் பார்க்க எண்ணித் திட்டம் வகுத்து முக்கியமான எல்லா இடங்களுக்கும் சென்றோம். நியூயார்க் போக வேண்டுமென்று சொல்லவும் அங்கே என்ன இருக்கின்றது என்றான். வரலாறு என்றால் இறந்தகாலம்தானா, நிகழ்கால வரலாற்றில் மிகவும் முக்கியமான அமைப்புகள் இருக்குமிடம் நியூயார்க் என்றேன்
அப்பொழுதும் எனக்கு கால்வலி உண்டு. நியூயார்க்கில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம்.. ஒரு நாட்டு அதிபரை பதவியை விட்டு இறக்க முடிந்த பத்திரிகையுலகம் wall street.. நாடகக் கலையில் லண்டனுக்கு அடுத்தபடியாகப் பெயர் பெற்ற broadway theater. நினைவுகளுடன் காட்சிகளைச் சம்பந்தப்படுத்தி ரசித்துக் கொண்டே நடந்தேன். கம்பீரமான காளை சிலைவடிவில் அருகில் சென்று தடவிப் பார்த்தேன். உயிருடன் இருந்தால் தொட முடியுமா? இன்னும் நடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கால்வலி அதிகமாயிற்று. உட்கார நினைக்கவும் உடன் வந்தவர்களைத் பார்த்தேன். மகனையும் குடும்பத்தையும் காணோம். போகின்ற பாதையில் ஓர் அழகான இடம் மரங்கள். உட்கார இடங்கள் சின்னச் சின்ன பறவைகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. அங்கே உட்கார்ந்துவிட்டேன். மகன் தேடிவரும் வரை பறவைகளுடன் கொஞ்சிக் கொண்டிருக் கலாம் என்று அமர்ந்துவிட்டேன்.
மகன் வந்து என்னை எழுந்திருக்கச் சொன்னான் உட்கார்ந்த இடத்திற்கருகில் உயர்ந்து நின்ற கட்டடத்தைக் காட்டி அங்கே போகலாம் என்றான். அது என்ன இடம் என்று கேட்டேன். ஆம் அதுதான் WORLD TRADE CENTER கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்துவிட்டு கட்டடத்திற்குள் நுழையும் முன்னர் சுவர்களைத் தொட்டுப் பார்த்தேன். நான் சென்றதேதி ஜூலை 27, 2001. நான் பார்த்த 47 நாட்களுக்குள் அந்தக் கட்டடம் தாக்கப்பட்டு வீழ்ந்தது
செத்தவர்கள் என்ன தவறு செய்தார்கள்?
ஹோட்டல் தாஜ்பற்றி எழுதும் பொழுது இந்தத் துயரச் சம்பவங்கள் என்னை அழுத்தியது..மனப்பறவையினால் எக்காலத்திலும் பறக்கமுடியும்.
தாராவி
துரை அங்கேயே வசித்து வருவதால் யாரையும் உடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காலை 11 மணிக்கு நான் புறப்பட்ட பொழுது அவர்களும் சுற்றுலா புறப்பட்டு விட்டார்கள். துரையைப் பற்றி எதுவும் தெரியாததால் அவனிடன் முதல் விசாரணை ஆரம்பமாயிற்று. கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது அவன் பேச வேண்டும். எனவே பேசுவதால் கவனச் சிதறல்கள் ஏற்பட்டு விடாத அளவு பேச்சு கொடுத்தேன். அதுவும் தவறுதான். ஆனால் துரை கெட்டிக்காரன். அவன் முதல் கவனம் வண்டியில் இருந்தது. உணர்ச்சி வயப்படாமல் தன் கதையைக் கூறினான்
சென்னையில் அவன் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்தது. அவன் பெற்றோர்களுக்கு அவன் ஒருவன்தான் பிள்ளை. அவன் தந்தை ஓர் குடிகாரன். அத்துடன் பெண்பித்து கொண்டவன். வீட்டிற்கே பெண்களை அழைத்து வருவான். அவன் தாயார் ஆரம்பத்தில் அழுதிருக்க வேண்டும். அவன் பெரியவனாகிய பொழுது மரத்துப் போயிருந்த அம்மாவைத்தான் பார்த்தான்.
வாழ்க்கையில் மனதுக்கு ஒவ்வாதது நேரின் முதலில் அதிர்ச்சியைக் கொடுக்கும். அதுவே தொடரின் காலப் போக்கில் அதிர்ச்சியும் மரத்துப்போய்விடும்.
ஒருநாள் வீட்டில் அம்மாவை விறகுக் கட்டையால் அடிக்க ஆரம்பித்த பொழுது துரையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அங்கே ஒருபக்கம் இருந்த இன்னொரு கட்டையை எடுத்து அவர்மேல் வீசி எறிந்துவிட்டான். அவ்வளவுதான் அவனை அடிக்க அருகில் வந்தார். அவன் ஓட்டம் பிடிக்கவும் அவரும் ஓட வேண்டி வந்தது. சில நிமிடங்கள் கழித்து மனைவியிடம் கண்டிப்பாகக் கூறி விட்டார் “இனிமேல் அவன் வீட்டில் இருக்கக் கூடாது. இருந்தால் கொலை நடக்கும். “அவன் அம்மா அவரை முறைத்துப் பார்த்தாள். இதுவரை எதிர்க்காத மனைவி அப்படி பார்க்கவும் மேற்கொண்டு பேசாமல் வெளியில் சென்றுவிட்டார்.
துரைக்கு ஒரு மாமன் உண்டு. லாரி ஓட்டுவார். பல ஊர்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்கின்றவர். அவனுடைய அம்மா அவனை இழுத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டிற்குச் சென்றாள். அண்ணன் மனைவி பொல்லாதவள். எனவே அங்கே அன்பை எதிர்பார்த்துப் போகவில்லை. மகனை ஏதாவது வெளியூருக்கு அழைத்துச் சென்று ஏதாவது ஓர் இடத்தில் வேலைக்கு வைத்துவிடச் சொன்னாள்> உள்ளூரில் இருந்தால் அவன் வீட்டிற்கு வருவான், சண்டை வரும் என்று தன் ஒரே மகனையும் அவன் உயிர்காக்க மகனைப் பிரியும் நிலையை ஏற்றுக் கொண்டாள். துரையின் மாமன்தான் அவனை பம்பாய்க்குக் கூட்டிவந்து ஒரு கடையில் வேலைக்கு வைத்தார். படிக்கும் சிறுவன் அந்த சிறுவயதில் படிப்புமட்டும் போகவில்லை பெற்றோர் இருந்தும் அனதையாகிவிட்டான்.
மும்பாய்க்கு மட்டுமல்ல பல நகரங்களுக்கு சின்ன வயதில் வீட்டைவிட்டு வரும் சிறுவர்கள் வீதிக்கு வந்துவிடுகின்றார்கள் ( street children ). மேரியம்மாவின் பல பணிகளில் இந்த வயது குழந்தைகளின் நலமும் உண்டு. இத்தகைய சிறுவர்கள் கொடியவர்கள் கண்களில் பட்டுவிட்டால் சிறுவயதிலேயே திருட்டுத் தொழில் முதல் சமுதாயம் அங்கீகரிக்காத பல தொழில்களில் ஈடுபடுத்தப்படுவர்.
துரையின் மாமன் உதவியால் அவன் நல்லவர்களிடம் போய்ச் சேர்ந்தான். அந்தக் கடை முதலாளியின் கார் டிரைவர் ஹசன்பாய் அவனிடம் பரிவுகாட்டி தன்வீட்டில் வைத்துக் கொண்டார். முதலாளிக்கும் தன் டிரைவர்மேல் அன்பிருந்ததால் மறுப்பு கூறவில்லை. ஹசன்பாய்க்கு குழந்தையில்லாக் குறையைத் தீர்த்து வைத்தான் துரை. மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை. கடையில் வேலை பார்த்துவந்தான். வயது வரவும் டிரைவிங் கற்றுக் கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்துவிட்டான்.
சென்னையில் அவனைப் பெற்றவன் குடித்துவிட்டு தெருவில் ஒருவனுடன் சண்டை போட்டு காயப்படுத்தியதால் சிறைக்குச் சென்றுவிட்டான். அவன் தாயாரையும் அவன் மாமன் மும்பாய் கூட்டிவந்துவிட்டுவிட்டார். தனி வீடு எடுத்துப் போவதை ஹசன்பாய் விரும்பவில்லை. எல்லோரும் ஒரே இடத்தில் வசித்தனர். ஓர் விபத்தில் ஹசன்பாய் இறந்துவிட்டார். அவர் மனைவி ஜென்னத் அம்மாவும் இவர்களுடனேயே இருந்ததால் அவர்களுக்குப் பிரச்சனையில்லை. துரையின் அம்மா வீட்டு வேலைகளுக்குச் செல்வார்கள் துரை சந்திரன் வீட்டில் காரோட்டியானான். சந்திரனும் அவர் மனைவியும் அவனை வேலைக் காரணமாக நடத்தாமல் பிரியமாக இருந்ததால் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை என்று தன் கதையைக் கூறி முடித்தான்.
“ஏன் கல்யாணம் கட்டிக்கல்லே?”
கட கடவென்று சிரித்தான் துரை
“அம்மா, தப்பா நினைக்காதீங்க. இப்போ நான் நிம்மதியா வாழறேன். வீட்டிலிலே இரண்டு வயசான பொம்புள்ளைங்க. பொண்டாட்டி வந்தா ..? பொம்புள்ளைங்க நல்லவங்கதான். ஆனா மாமியார் மருமகள்னு வரும்போது அவங்க மாறிடறாங்களே. சந்தோஷம்னு எதையோ நினச்சு இருக்கற நிம்மதிய ஏன் இழக்கணும். எனக்கும் சேத்து என் அப்பன் அனுபவிச்சிட்டான்.”
பிஞ்சு வயதில் மனத்தில் காயம்பட்டு விட்டால் அது ஆறாது.
துரையின் கூற்று முதலில் நான் கேட்பதல்ல. இன்னொரு பெரிய இடத்துப் பையனும் இதையே சொன்னான். அப்பனைப் பார்த்து கெட்டுப்போகின்றவனும் உண்டு.. வாழ்க்கையை வெறுத்தவனும் உண்டு. குழந்தைகளுக்கு முன்னால் அதனைப்பெற்றவர்கள் நடந்து கொள்வதைப் பொறுத்து குழந்தைகளின் குணங்கள் செதுக்கப்படும்.
துரை தொடர்ந்தான். “இப்போ நான் தனி ஆளில்லை அம்மா. அங்கே வந்து பாருங்க. எத்தனை அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பிகள், குழந்தைகள்னு. பிறந்த இடத்துலே கிடைக்காத பாசமும் பந்தமும் புழைக்க வந்த இடத்துலே கிடைச்சிடுத்து. நான் சந்தோஷமாக இருக்கேன் “
எவ்வளவு பெரிய தத்துவம். இரத்த பந்தம் மட்டுந்தானா உறவு? ஒட்டி வாழ்கின்றவர்களும் உறவுகள்தான். என் அனுபவத்தில் எனக்கு இத்தகைய நிறைய உறவுகள் உண்டு
துரை வீட்டில் அவன் இரண்டு அம்மாக்களையும் பார்த்தேன். அது ஓர் அன்பு இல்லம். அந்த வீட்டில் சாதி, மதம் வேறுபாடுகள் இல்லை. ஏற்கனவே அக்குடும்பக் கதை தெரிந்ததால் அவர்கள் கேட்க நான் பதில்கள் கூறிக் கொண்டிருந்தேன். நேரம் போனது தெரியவில்லை. மதிய உணவு சாப்பிட்டோம். துரையின் அம்மாவின் சமையல் ருசியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த நேரத்தில் ஓர் பெண்மணி நான்கு குழந்தைகளுடன் அங்கே வந்தாள். அவள் பெயர் காமாட்சி. . அவளும் கதையுடன் வந்திருந்தாள். கதைமட்டுமல்ல, பெரிய படிப்பினையும் உணர்த்தினாள். பெயர் காமாட்சியல்லவா?!
அவள் கணவரும் ஓர் குடிகாரன்தான். கப்பலிலிருந்து சாமான்கள் ஏற்றி இறக்கும் வேலை. உடல்வலி மறக்க என்று குடி. வீட்டிற்கு வரும் பொழுதே தள்ளாடி வருவான். கொடுத்ததைத் தின்றுவிட்டு உடல்தேவைக்கு மனைவியையும் தொட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விடுவான். காலையில் அவள் அவனை எழுப்ப வேண்டும். அவன் வேலைக்குப் போக வேண்டுமே. அவன் போன பிறகு அவளும் வீட்டு வேலைக்குப் போவாள். குழந்தைகளை ஜென்னத் அம்மாவிடம் விட்டுப் போவாள்.
கணவன் மீது கோபம் கிடையாது. அவனை நினைத்து அவன் உடம்பு கெட்டுப் போகின்றதே என்று அழுதாள். அவன் ஒரு பிணம்போல் வாழ்ந்து கொண்டிருந்தான். ஓர் நடைப்பிணத்துடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாள் காமாட்சி. இந்த லட்சணத்தில் நான்கு குழந்தைகள். புருஷனையும் சேர்த்து ஐந்து குழந்தைகள் என்றாள்.. அவளுக்கும் மனம் உண்டு. ஆசைகள் இருக்காதா? மரத்துப் போன மனத்தில் மணம் வீசாதோ?!. எத்தனை பெண்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்?!. புருஷனை வீசி எறிந்துவிட்டு இன்னொருவன் பின்னால் போனால் அவன் மட்டும் குறையில்லதவனாக இருப்பான் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? “கட்டியவனை விட்டு எங்கிட்டே வந்த மாதிரி என்னிக்காவது என்னையும் விட்டுட்டு ஓடுவே என்ற பாட்டு கேட்காமல் இருக்குமா? இரட்டை வாழ்க்கை வாழ அவர்கள் பணக்காரர்கள் அல்ல. ஏழைகள். அங்கே ரகசியம் கிடையாது. வெளிப்படையான தவறுகள். பச்சோந்தித்தனம் இல்லாதவர்கள்.
காமாட்சியின் பிரச்சனைகளில் சிலவற்றிகாவது உதவ முடியும். அவள் குழந்தைகளுக்குப் படிக்க, இருக்க இடம் தேடித்தர முடியும். குழந்தை உண்டாகாமல் இருக்க குடும்பக் கட்டுப்பாடு முறையில் லூப் போட ஏற்பாடு செய்ய வேண்டும். அவள் கணவனின் பிரச்சனையில் உழல்கிறவர்கள் மும்பாயில் எண்ணிக்கை அதிகம். பிழைக்க என்று ஊரைவிட்டு வந்து உழைக்கின்ற கூட்டம். உல்லாசத்துக்குக் குடிப்பவனும் உண்டு. உழைப்பின் களைப்பை மறக்கவும் குடிப்பவன் உண்டு. இந்த உழைப்பாளிகளின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? பதில் கிடைக்கவில்லை.
இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கின்றது. எப்படி? குடும்பக் கட்டுப்பாடுதிட்டத்தின் சின்னம் அதற்கு மட்டுமல்ல, வளர்ச்சிபற்றி பேசினால் அதே முக்கோணம் காணலாம். பணம்பெருக்கிக் கொண்டவர்கள் முக்கோணத்தின் உச்சி. உழைப்பவர்களின் எண்ணிக்கை அந்த கோணத்தின் அடிக்கோடு.
தாரவியில் இருந்த ஓர் சங்கத்திற்குச் சென்றோம். அங்கே இருந்தவர்கள் சிலர்தான். நான்தான் கூட்டம் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். மேலும் தனிப்பட்ட விஷயங்களை விசாரிக்கும் பொழுது கூட்டம் கூட்டினால் பிரச்சனைகள் வரலாம். அங்கிருந்த ஒருவர் இருந்தவர்களின் பெயர்களைக் கூறி அறிமுகப்படுத்திவிட்டு வேலை இருப்பதாகச் சொல்லி சென்றுவிட்டார். மனத்திற்குள் சிரித்துக் கொண்டேன். அவர் சென்ற பின்னர் இருப்பவர்களிடம் அவர்கள் எப்படி மும்பாய் வந்தார்கள் என்பதையும் என்ன வேலை செய்கின்றார்கள், வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதையும் கூறச் சொன்னேன்.
இளங்குற்றவாளிகள், சீர்திருத்தப்பள்ளிகள், விபச்சாரத்தொழில் செய்யும் பொழுது கைதாகி இருக்கும் பெண்களின் புனர் வாழ்வில்லங்கள் இவைகளும் அரசு அளவில் சமூக நலத்துறையின் கீழ்தான் வருகின்றன.. மாநில அளவில் தனித் தனி துறையாக இயங்கி வருகின்றன. மேரியம்மா பல ஆண்டுகள் இத்தகையோரைப்பற்றிய வழக்குகளைக் கவனித்துவருகின்றவர். என்னிடம் பேசும் பொழுது நான் எங்கு சென்றாலும் சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் பரிந்து பேசி பிரச்சனைகளைக் கேட்க வேண்டுமென்று கூறியிருந்தார்கள். உடனே பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் நேரம் வரும் பொழுது தீர்வுகள் காணலாம் என்றார்கள். அரசுதான் செய்ய வேண்டுமென்பதில்லை. தொண்டு நிறுவனங்கள், இன்னும் சில அமைப்புகள் பொதுநலன் கருதி செயல்படும் என்றார்கள். என் அனுபவத்திலும் பார்த்தேன்.
பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்று சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
அங்கே உள்ளவர்களிடம் பேசிய பொழுது எல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயங்கள்தான். வீட்டைவிட்டு வெளிவந்து திக்குத் தெரியாமல் பயணம் செய்து வந்தவர்கள் சிலர். சிறுவயதில் கடத்தப்பட்டு வந்து குற்றத் தொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டு அதுவே தொழிலாய் வாழ்பவர்கள், வெளிநாடு வேலைக்குச் செல்லலாம் என்று பணத்துடன் வந்து போகவும் முடியாமல் கையிலிருந்த பணமும் செலவழிந்து இங்கேயே வேலையில் சேர்ந்தவர்கள், மும்பாய் சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டு நகரத்திற்கு வந்தவர்கள் — சொல்லிக் கொண்டே போகலாம். கள்ளக் கடத்தல்தொழில், திருட்டுத் தொழில், அதிகாரத்திற்கும் பணம் படைத்தோருக்கும் கையாட்களாக செய்யும் பணிகள், இது போன்று சமுதாயக் குற்றங்களைத் தொழிலாகச் செய்பவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மன நிலையைக் கேட்ட பொழுது அவர்கள் சொன்னதுதான் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
எந்தத் தவறும் முதலில் செய்ய நேரும் பொழுது மனம் நம்மைத் தடுக்கின்றது. அச்செயலை வெறுக்கின்றோம். அப்படியும் தவறு செய்துவிட்டால் இரண்டாம் முறை செய்யும் பொழுது தயங்குகின்றோம். ஆனால் மூன்றாம் முறை வழக்கமாகிவிடும். ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டைக் காக்க வேண்டும்.
கசப்பு தின்று பழகிவிட்டால் கசப்பும் சுவையாகத் தெரியும்.
உண்மைகளின் தரிசனம். தத்துவம் பேசவில்லை
என்னிடம் பேசும் பொழுது தயக்கப்படாது வெளிப்படையாகப் பேசினர். என்னால் அவர்களுக்குத் தீங்கு ஏற்படாது என்ற நம்பிக்கையில் மனம்விட்டுப் பேசினார்.
புறப்படலாம் என்று துரை கூறவும் எழுந்தேன். இன்னும் இரு பெண்மணிகளை நான் அவசியம் பார்த்தாக வேண்டும் என்று கூறினான் துரை.
“பிறரது குறை நிறைகளை கவனிக்காமல் , நாம் செய்யும் நல்வினை, தீவினைகளீல் உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல குணமுள்ளவர்கள் எதிலும் பற்று கொள்வதில்லை. இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவது இல்லை. சுகமோ, துக்கமோ எது ஏற்பட்டாலும் எழுச்சி யடைவதும் இல்லை. சோர்வு கொள்வதும் இல்லை”
புத்தர்
[ தொடரும் ]
படத்திற்கு நன்றி
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று