சிறை

This entry is part 10 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று தோன்றிற்று. மின்சாரம் தடைப் பட்டிருக்கலாமோ ? அவ்வாறெனில் அடுத்த கேள்வி மின்சார விளக்கு உள்ளே வரும் போது இருந்ததா இல்லையா என்பது. உண்மையில் இத்தகைய கேள்விகள், தருக்கத் தோண்டல் எதுவுமே தேவையில்லை. இவைகள் எந்த அறுதியான தீர்வுகளையும் நோக்கித் தன்னை இதுவரை நகர்த்தவில்லை என்பதே அனுபவம். இந்தத் தெளிவு சற்று ஆசுவாசமாக இருந்தது.

டென்னிஸ் பால் வைத்து கிர்க்கெட் விளையாடிய பிள்ளைப் பருவ நாட்களில் பாதி நேரம் எங்கேயோ எகிறி ஓடிய பந்தைத் தேடுவதிலேயே நேரம் கழியும். நாலாப் புறமும் கலைந்து பந்தைத் தேடி ஓடிய நண்பருள் தான் ஒருவனாக இருந்ததே இல்லை. அதே சமயம் அவர்கள் கிண்டலடிப்பார்கள் என்று ஏதேனும் ஒரு சந்தில் பதுங்கி இருந்து விட்டு சற்று நேரத்தில் அவர்கள் பந்து கிடைத்த உற்சாகத்துடன் குரல் கொடுக்கும் போது போய்ச் சேர்ந்து கொள்வான். பந்தை அடித்து விளையாடும் வாய்ப்புக்காகப் போட்டியிட்டு சண்டையிடாமல், அவர்களுடன் ஒன்றாயிருப்பது மட்டுமே இலக்காக இருந்ததால் குழுவில் ஒருவனாகத் தன்னைச் சேர்த்துக் கொண்டார்கள்.இது போன்ற நினைவு கூறல்களே தன்னைத் தனக்கே மீட்டுத் தருகின்றன.

கம்மோடை விட்டு எழுந்து சற்றே முன்னால் நகர்ந்து எதிர்பட்ட சுவரைக் கைகளால் உணர்ந்தான். பக்கவாட்டுக்களில் நகர்ந்து தொட்டு உணர்ந்த படியே சென்றான். ‘ப்ளாஸ்டிக்’ வாளி காலில் உதை பட்டு உருண்டது.கவனம் சிதறாமல் தொடர்ந்து சென்று ஒரு மூலையை உணர்ந்தான். அதே போல் மற்றொரு மூலை. மற்றொன்று. இறுதியில் கம்மோடின் மீது மோதி நின்றான். இப்போது தெளிவாகி விட்டது. நாலாப் பக்கமும் சுவரே இருந்தது. கதவு ஏதும் இல்லை. மீண்டும் கம்மோடின் மீது அமர்ந்து ஆழ்ந்த மூச்சு ஒன்று வாங்கினான். இந்தத் தெளிவு மிகவும் அவசியம். இங்கே நான்கு சுவர்கள் மட்டுமே இருக்கின்றன. கதவு ஏதும் இல்லை. இப்படி யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதை எதிர் கொள்வதில் தான் ஒரு வலிவான ஆளுமையின் சிறப்பு உள்ளது.

அக்காவின் திருமண ஏற்பாடுகள் எதிர்பார்த்த வேகத்தில் நகராத போது, தனக்கு ‘கேம்பஸ் செல்க்ஷன்’ நிகழாத போது அப்பா அவற்றை யதார்த்தம் என்று எதிர் கொள்ளவில்லை. அன்னியமான ஒரு துக்க நிகழ்வாக எண்ணி பொறிக்குள் எலியாகத் தவித்தார். இப்போது இங்கே இருந்திருந்தால் எந்தப் புரிதலும் அவரிடம் இருந்திருக்காது. அம்மாவால் பணப் பிரச்சனையோ, எதிர்பாராத துக்கமோ, இழப்போ எதையும் எதிர் கொள்ள எளிதாக இயன்றது. அம்மாவுக்கு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதில் எந்தக் கழிவிரக்கமும் இரக்கவில்லை. வெளியில் வேறு உலகம் இருப்பதே அம்மாவுக்கு ஒரு பொருட்டில்லையோ என்று தோன்றும். எப்போதாவது வெகு அபூர்வமாக குடும்பத்துடன் வெளியே போகும் போதும் அம்மாவிடம் பெரிய உற்சாகம் இருக்காது. அமைதியாக எடுத்துச் சென்ற பணம், வாங்கிய வாங்க வேண்டிய பொருட்கள் மீதே கவனமாக இருப்பாள். காலையில் ‘மொபைல்’ போனில் பேசும் போது போன மாதம் அந்த நினைவில் நிற்கும் இரவில் இருவரும் இருந்த உணர்ச்சி ஆரோகண அவரோகணங்கள் பற்றிப் பேசிய போதும் சிறு மெளனத்திற்குப்பின் வேறு பேச்சே பேசினாள்.

கம்மோட்டின் மூடியைப் போட்டு அதன் மீது கவனமாக ஏறி நின்றான். இடது கைப்பக்கம் மேலே சாளரம் இருக்க வேண்டும். தடவினான் யூகமாக. சாய்வு கோணத்தில் வரிசையாக வைக்கப் பட்டிருந்த மறைப்புக் கண்ணாடித் துண்டுகள் கையில் பட்டன. காற்று ஏனோ உணரப் படவில்லை. கண்ணாடிகளை உருவி வெளிச் செல்ல வழி கிடைக்கலாம். ஒரு கண்ணாடியை உருவினான். மறு கையை வெளியில் நீட்ட முயன்ற போது இரும்புக் கிராதிக் கம்பி தென்பட்டது. உருவிய கண்ணாடியை அங்கேயே வைத்தான். இப்போது ஒரே ஒரு சாத்தியம் மட்டுமே இருக்க இயலும். மேற்கூரையில் ஏதேனும் வழி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சிறு வெளிச்சமோ அல்லது நட்சத்திரங்களோ தென்பட வேண்டுமே. இல்லையே. இதை இன்னும் ஆழ்ந்து அவதானிக்க வேண்டும். கம்மோட்டிம் மீது மறுபடி அமர்ந்தான்.

Series Navigationகண்ணீரில் எழுதுகிறேன்..நான்கு நண்பர்களும் சசிகுமாரும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *