அக்னிப்பிரவேசம் -3

This entry is part 29 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அன்று மாலையே இடி விழுந்தது. அஃப்கோர்ஸ்! ரொம்ப சின்ன இடிதான்.

“சுந்தரி இருக்கிறாளா? என் பெயர் மூர்த்தி, சுந்தரியின் அண்ணன்” என்றான் அவன்.

“வாங்க.. உட்காருங்க. சித்தியைக் கூப்பிடுகிறேன்” என்று உள்ளே ஓடினாள் பாவனா.

“அண்ணாவா? எதுக்காக வந்தான் இப்போது?” யோசனையுடன் வெளியே வந்தாள் சுந்தரி. கூடத்திற்கு வந்தவள் “நீ போ காலேஜுக்கு. உனக்கு நேரமாகிவிடும்” என்றாள்.

மாலையில் பாவனா வீட்டிற்குத் திரும்பி வந்த போது விஸ்வம் கூடத்திலேயே உட்கார்ந்து இருந்தான். அவன் முகம் கம்பீரமாய் இருந்தது.

பாவனா சமையல் அறைக்குப் போனாள். சுந்தரியின் முகத்தில் சிரிப்பைக் காணவில்லை. மௌனமாய் காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன நடந்தது? ஏன் எல்லோரும் ஏதோ போல் இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“ஒன்றும் இல்லை. நீ போய் படி. எனக்கு வேலை இருக்கு.” தொந்தரவு பண்ணாதே என்பது போல் பதில் கொடுத்தாள். சுந்தரி என்றுமே அவ்வாறு இருந்தது இல்லை. பாவனா எழுந்து தாயிடம் போனாள். அருந்ததியின் வாடிய முகத்தில் வேதனை கோடுகள் தென்பட்டன.

“என்னம்மா நடந்தது? ஏன் இப்படி இருக்கிறாய்?” எல்லோரும் கோபமாய் இருக்கீங்களே ஏன்?”

“மூர்த்தி மாமா வந்தான். சுந்தரியை அழைத்துக் கொண்டு போவதாக சொல்கிறான்.”

“எதுக்காகவாம்?”

“அவனுடைய அம்மாவுக்கு உடம்பு சரியாக இல்லையாம். படுத்தப் படுக்கையாய் இருக்கிறாளாம். பார்த்துக்கொள்ள யாருமே இல்லையாம். மாமி வேலைக்குப் போகிறாளாம். காலையில் போனால் மாலையில்தான் திரும்பி வருவாளாம். வீட்டில் யாராவது இருக்கணும் இல்லையா?”

“அப்போது என்னவோ சரியாய் பார்த்துக் கொள்ளாமல் சனியன் பிடித்தவள் என்று அனுப்பி விட்டார்கள். இப்போது தேவை ஏற்பட்டதுமே அந்த சனியன் பிடித்தவள் வேண்டியிருக்கிறதாமா? அனுப்ப வேண்டாம் அம்மா” என்றாள் பாவனா ஆவேசமாய்.

“அனுப்ப வேண்டாம் என்று சொன்னால் எப்படி நடக்கும் பாவானா? அவளுடைய அம்மாவுக்கு உடம்பு சரியாக இல்லை என்றால் சுந்தரியைத் தவிர வேறு யார் பார்த்துக் கொள்ள முடியும்? நீயே சொல்லு. நாம் நம்முடைய சுகத்தை மட்டுமே பார்த்துக்கொள்வது ரொம்ப தவறு” என்றாள் அருந்ததி.

‘வேலைக்காக மட்டுமே பெண்’ என்ற உணர்வு முதல் முறையாய் ஏற்பட்டது பாவனாவுக்கு.

“இவ்வளவு நாளும் அண்ணி வேலைக்குப் போனால் வீட்டையும், குழந்தைகளையும் அம்மா பார்த்துக் கொண்டாள். அப்போது நான் வேண்டாத பாரமாய் தோன்றினேன். இப்போது அம்மா படுத்த படுக்கையாகி விட்டதால் என் நினைவு வந்து விட்டது. ஏதோ சாக்கு சொல்கிறார்களே ஒழிய எனக்கு அம்மாவைப் பார்த்துக்கொள்ள நேரம் இருக்காது. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், சமையல் செய்யவும்தான் நேரம் சரியாக இருக்கும்” என்றாள் சுந்தரி.

“அப்படி என்றால் வரமாட்டேன் என்று சொல்லி அனுப்பி விடு சித்தி.”

“என்னால் எப்படிச் சொல்ல முடியும்? இந்த வீட்டில் தங்கியிருக்கும் உரிமை எனக்குக் கிடையாதே”

“ஏன் அப்படிப் பேசுகிறாய் சுந்தரி? அவர்களுக்கு வேண்டிய சமயத்தில் அனுப்பாமல் போனால் எங்களைத்தான் சொல்லுவார்கள். உன்னை அனுப்பி வைக்க மாட்டேன் என்று சொல்லும் உரிமை எங்களுக்கு ஏது? வீணாய் பழி போடாதே’ என்றாள் அருந்ததி.

அப்பொழுதுதான் புரிந்தது பாவனாவுக்கு. சுந்தரிக்குப் போவதில் விருப்பம் இல்லை. ஆனால் அப்பாவும், அம்மாவும் சமுதாயத்திற்கு பயந்து போகச் சொல்கிறார்கள். வலுக்கட்டாயமாய் அனுப்பி வைக்கிறார்கள்.

“ஒரு காலத்தில் அத்தானுக்கு என்னைக் கட்டி வைப்பதற்குத் தயாராய் இருந்தார்கள். கல்யாணம் பண்ணிக்கொண்டு நான் இந்த வீட்டிற்கு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? மாமியார் வீட்டை விட்டுவிட்டு வந்து அம்மாவைப் பார்த்துக்கொள் என்று சொல்லி இருப்பார்களா?”

“அப்படி நடந்திருந்தால் உன் சார்பில் வாதாடும் உரிமை எனக்கு இருந்திருக்கும். இப்போது நிலைமை அப்படி இல்லை. நீ போய்த்தான் தீரணும் சுந்தரி. உன் அண்ணன் எவ்வளவு கீழ்த்தரமாய் பேசினானோ உனக்குத் தெரியாது.” கதவு அருகில் வந்து நின்ற விஸ்வம் சொன்னான்.

அன்றிரவு படுக்கப்போகும்போது தன் வருத்தத்தை எல்லாம்  வெளிப்படுத்தினாள் சுந்தரி.

“அந்த வீட்டில் எனக்கு மதிப்பே இல்லை பாவனா. இங்கே ஒருத்தருக்குப் பாரமாய் இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கு வந்தது இல்லை. நீங்களும் அப்படிப்பட்ட ஸ்தானத்தை கொடுத்திருக்கீங்க. அங்கே அப்படி இல்லை. அண்ணி சொல்கிறபடி நான் நடந்து கொள்ளணும். சாப்பாடு கூட அவள் சாப்பிட சொல்லும் போதுதான், அவள் போடுவதைதான் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நரகம்தான் அந்த வீட்டில்.”

“போக மாட்டேன் என்று சொன்னால் என்ன பண்ணி விடுவார்கள்?” ஆவேசமாய் கேட்டாள் பாவனா.

‘உங்க அப்பாவுக்கு எனக்கும் ஏதோ ரகசியமான உறவு இருப்பதாய் சொல்லுவார்கள். கல்யாணம் பண்ணிக்கொண்டால் சொத்தில் பங்கு கொடுக்கணும் என்பதால் இப்படி வெச்சுக்கிட்டான் என்று பழி போடுவார்கள்.” இருட்டை வெறித்துப் பார்த்தபடி உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள் சுந்தரி.

******

சுந்தரி போன பிறகுதான் அவள் இல்லாத குறை முழுவதுமாகத் தெரியத் தொடங்கியது. விஸ்வம் ஸ்கூலுக்கு வைஸ் பிரின்ஸ்பால் ஆகிவிட்டான். சுந்தரி இருந்த போது மிடுக்காய் பள்ளிப் பொறுப்பு முழுவதும் தலையில் போட்டுக் கொண்டான். இப்பொழுது கழட்டிக் கொள்ள முடியவில்லை. பாவனாவுக்கு ஒரு நிமிடம் கூட ஒய்வு இல்லாமல் வேலை இருந்துகொண்டே இருந்தது. ஒரு பக்கம் காலேஜ் படிப்பு, இன்னொரு பக்கம் வீட்டு வேலைகள் என்று நலிந்துப் போய்க் கொண்டிருந்தாள். என்றும் இல்லாதபடி தம்பி, தங்கைகள் மீது எரிந்து விழத் தொடங்கினாள்.

ஒரு நாள் மாலையில் தன் வேதனையை சைலஜாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

“உங்க அப்பா சுந்தரியை அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாய் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்” என்றாள் சைலஜா.

“அவரால் எப்படிச் சொல்ல முடியும்?”

“ஏன் சொல்லக் கூடாது. சுந்தரிக்குப் போகவே விருப்பம் இல்லை. அவள் மேஜர் என்பதால் வலுக்கட்டாயமாய் அவள் அண்ணன் அவளை அழைத்துப் போக முடியாது. உங்கள் சப்போர்ட் கொஞ்சமாவது இருக்கும் என்று தெரிந்தால், அவளால் தன் அண்ணனுடன் சண்டை போட முடிந்திருக்கும். அந்தப் பெண்ணை நீங்க ஒரு இயந்திரமாய் பயன்படுத்திக் கொண்டு இருக்கீங்க, அவ்வளவுதான்.”

“அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அந்த பழி எங்கள் மீதுதான் வரும் என்று அப்பா பயந்தார். அது மட்டுமே இல்லை. அப்பாவுக்கு சுந்தரியை அனுப்புவதில் விருப்பம் இல்லை என்று அந்த மாமா இல்லாத பழியைச் சுமத்தினார்.”

“ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக தன் சக்தியெல்லாம் தாரை வார்த்தாளே? அவளுக்காக அந்த அளவுக்குப் பழியையாவது தாங்கிக்கொள்ள முடியவில்லையா உங்களால்? அவ்வளவு தூரம் முடியாமல் போனால் அந்த தாயையே இங்கே அனுப்பச் சொல்லியிருந்தால் புத்தி வந்திருக்கும்.”

“நானும் அதைத்தான் சொன்னேன். அம்மா என்ன சொன்னாள் தெரியுமா? என் ஒருத்திக்கே அப்பாவால் மருந்து வாங்க முடியவில்லை. இன்னொரு நோயாளியின் பாரத்தைத் தலையின் போட்டுக்கொள்கிற நிலையின் அவர் இல்லை என்று. அதுவும் உண்மைதானே? அதனால்தான் சுந்தரி சித்தியை வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்தோம். யோசித்துப் பார்த்தால் ரொம்ப வருத்தமாய் இருக்கு. இது போன்ற பிரச்சனைகள் ஏன் வருமோ புரியவில்லை” என்றாள் வருத்தத்துடன் பாவனா.

“கரெக்ட்! நானும் அதைத்தான் எப்போதும் சொல்லி வருகிறேன். நிலைமை என்றுமே நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த காரியத்தைச் செய்ய முடியாமல் போய் விடும். பண்ணக் கூடாத காரியத்தைப் பண்ண வேண்டியிருக்கும். யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. நான்கு நாட்களுக்கே நீ இவ்வளவு வேதனைப் படுகிறாயே? சம்பளம் கிம்பளம் எதுவும் இல்லாமல் உங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்தாள். உங்கள் சந்தோஷத்திற்காக தவித்துப் போனாள். தேவையான சமயத்தில் ஆதரவு கொடுக்கச் சொல்லி வாய்விட்டுக் கேட்டபோதும் உங்களால் பண்ண முடிந்ததா? நாலுபேர் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்ற பயம். வாழ்க்கை என்றால் கணவன் மனைவி இருவருக்கு மட்டுமே  சம்பந்தப்பட்டது இல்ல. சமூகத்தின் பாதிப்பு இல்லாத வீடு இருக்க முடியாது. இன்னும் நான்கு நாட்கள் கழித்து  பக்கத்து வீட்டைப் பார்த்து நீ பொறாமைப் பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. நம் அம்மா கூட உடல்நலத்தோடு இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. உங்க அப்பாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவர் சலித்துக் கொண்டாலும் வியப்படைய வேண்டியது இல்லை. உன் எதிர்பார்ப்புகள்  எப்போதும் பெரிய அளவில் இருக்கும். அது அவ்வளவு நல்லது இல்லை.”

“சொற்பொழிவு போதும். நிறுத்திக்கொள். தவறிப்போய் உன்னிடம் என் கஷ்டத்தைப் பற்றிச் சொன்னேன்” என்று வேகமாய் எழுந்தாள் பாவனா. அவளால் எதையுமே தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் தந்தையை ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதுவும் சைலஜா போன்ற வேற்றுப்பெண்!

ஒருபக்கம் பரீட்சைகள் நெருங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் வீட்டு வேலைகளால் மிகவும் நலிந்து போய்க் கொண்டிருந்தாள். பரீட்சைகள் முடிந்து லீவ் விட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

—————

Series Navigationபத்தி எரியுது பவர் கட்டுவெற்றியின் ரகசியம்!
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *