பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி

This entry is part 35 of 36 in the series 30 செப்டம்பர் 2012

வடக்குப் பிரதேசத்தில்  மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு விட்டுவிடு. அதனால் ஒருவரும் அறியமாட்டார்கள்’’ என்றான். அதைக்கேட்ட மந்திரி ‘’மஹாராஜா, மூன்று ஸ்தனங்களையுடையவள் குலத்திற்குக் கெடுதலை கொண்டு வருவாள் என்று அறிந்ததே. இருந்தாலும் பிராமணர்களை அழைத்துக் கேட்க வேண்டும். அதனால் இரு உலகங்களுக்கும் எதிராக நடக்காமலிருக்கலாம். எவ்விதமெனில்,

அறிவு உள்ள புருஷன் எப்பொழுதும் கலந்தாலோசிப்பவனாக இருக்க வேண்டும். முன்பு ராக்ஷஸனைப் பிடித்தும் கூட பிரஸ்னத்தால் அவனை விட்டான்.

அரசன் ‘’அது எப்படி?’’ என்று கேட்க, மந்திரி சொன்னான்:

கால் அலம்பிய ராக்ஷஸன்

ஏதோ ஒரு காட்டில் சண்டகர்மா என்ற ராக்ஷஸன் இருந்தான். ஒரு சமயம் அவன் சுற்றி வரும்பொழுது, ஒரு பிராமணனைச் சந்தித்தான். உடனே அவன் தோளில் ஏறிக்கொண்டு கட்டளையிட்டான். ‘’முன்னே செல்’’ என்று. பிராமணனும் பயத்தினால் நடுங்கும் உள்ளத்துடன் அவனைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டான். ஆனால் ராக்ஷஸனுடைய தாமரை இதழ்களுக்கொப்பான பாதகங்களைப் பார்த்து அவனிடம் ‘’ஏய், எப்படி உனக்கு இப்படிப்பட்ட மிருதுவான கால்கள் உண்டாயிற்று?’’ என்று கேட்டான்.

ராக்ஷஸன் ‘’நான் கால்களை அலம்பாமல் ஒருபொழுதும் ‘பூமியைத் தொடுவதில்லை என்று எனக்கு ஒரு விரதம் இருக்கிறது’ என்று சொன்னான். பிராமணனும் தன்னை விடுவித்துக்கொள்ள உபாயத்தை நினைத்துக்கொண்டே ஒரு ஏரியை அடைந்தான். அப்பொழுது ராக்ஷஸன் ‘’ஏய், நான் ஸ்னானம் செய்து சுவாமிக்கு பூஜையும் செய்துவிட்டுத் திரும்பி வரும்வரை நீ இந்த இடத்திலிருந்து வேறு எங்கும் செல்லக்கூடாது’’ என்றான். அவ்விதமே செய்த பொழுது, பிராமணன் ‘’நிச்சயம் தெய்வ பூஜைக்குப்பின் என்னை இவன் விழுங்கி விடுவான். அதனால் வேகமாகச் செல்கிறேன். ஏனெனில் கால்களை அலம்பாமல் அவன் என்னைப் பின் தொடரமாட்டான்’’ என்று யோசித்து அவ்விதமே செய்தபொழுது, ராக்ஷஸன் விரதம் பங்கமாகிவிடும் என்ற பயத்தால் அவன் பின்னே செல்லவில்லை.

அதனால்தான் ‘அறிவுள்ள புருஷன் எப்பொழுதும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் மந்திரி.

அவனுடைய வார்த்தையைக் கேட்டு அரசனும் பிராமணர்களை அழைத்து, ‘’ஏ பிராமணர்களே, எனக்கு மூன்று ஸ்தனங்களுடன் ஒரு பெண் பிறந்திருக்கிறாள். அவளுக்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா இல்லையா என்று சொல்லுங்கள்’’ என்று கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்: ‘’தேவ, கேளுங்கள்!

அங்கஹீன முள்ளவளாகவோ, அதிக அங்கமுள்ளவளாகவோ எங்கு பெண் பிறக்கிறாளோ அவள் கணவனுக்கு நாசத்தை உண்டு பண்ணுவாள், தன் குணமும் கெட்டுப்போவாள்.

மூன்ற ஸ்தனங்களுடைய எந்த மகளை தந்தை கண்ணெடுத்துப் பார்க்கிறானோ, அவள் வேகமாக தந்தையின் நாசத்தை சந்தேகமற உண்டு பண்ணுகிறாள்.

அதனால் அவளைக் கண்ணெடுத்தும் பார்க்காதீர்கள். யாராவது அவளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவனுக்கு அவளைக் கொடுத்து தேசத்திலிருந்து வெளியேற்றிவிடும். இவ்விதம் செய்தால் இரு உலகிற்கும் எதிராகச் செய்தவர் ஆகமாட்டீர்’’ என்றார்கள்.

அவர்களின் யோசனைப்படியே அரசன் எங்கும் பறையடிக்கச்சொல்லிக் கட்டளையிட்டான் ‘’மஹாஜனங்களே, மூன்று ஸ்தனங்களையுடைய அரச குமாரியை எவன் மணம்புரிந்து கொள்கிறானோ, அவனுக்கு அரசன் லக்ஷம் பொன் கொடுப்பான். ஆனால் தேசத்தைவிட்டு அனுப்பி விடுவான்’’ என்று. இவ்விதமே வெகுகாலம் சென்றது. ஆனால் ஒருவரும் அவளை மணம்புரிய முன்வரவில்லை. அவளும் தனியிடத்தில் இருந்து வளர்ந்து யௌவனப் பருவத்தை அடைந்தாள்.

அந்த ஊரில் ஒரு குருடனும் இருந்தான். அவனுக்கு மந்தரகன் என்ற குச்சியைப் பிடித்து உதவும் கூனன் ஒருவன் இருந்தான். அவர்கள் தமுக்கடிக்கும் சப்தத்தைக்கேட்டு தங்களுக்குள் ஆலோசித்தனர். ‘’அந்தத் தமுக்கை நாம் தொட்டால் பெண்ணும் பொன்னும் கிடைக்கும். பொன் கிடைப்பதால் சுகமாகக் காலத்தைக் கடத்தலாம். பெண்ணின் தோஷத்தால் மரணம் ஏற்பட்டாலும் நம்முடைய இந்த தரித்திரத்தின் கஷ்டத்திற்கு முடிவு ஏற்படும். எவ்விதமெனில்,

ஜீவன்களின் வயிறு பூராவாக நிரம்பாவிட்டால் வெட்கம், நட்பு, சங்கீதம், புத்தி, யௌவனத்தின் அழகு, பிராண சங்கடம், துக்கத்தின் பாரம், கேளிக்கை, தர்மம், சாஸ்திரம், மிகப்பெரிய அறிவு, சுத்தம், ஆசாரச் சிந்தை இவை ஒன்றையும் கவனிப்பதில்லை.

இவ்விதம் யோசனை செய்து குருடன் சென்று பேரிகையைத் தொட்டு, ‘’நான் அந்தப் பெண்ணை மணந்துகொள்கிறேன்’’ என்றான்.  அப்பொழுது அந்த அரசனின் ஆட்கள் சென்று அரசனிடம் ‘’தேவ யாரோ ஒரு குருடன் பேரிகையைத் தொட்டான். இனி இந்த விஷயத்தை அரசனே தீர்மானிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர். அரசன் சொன்னான்:

“குருடனானாலும், செவிடனானாலும், குஷ்டரோகியானாலும், நீச குலத்தோனானாலும் லக்ஷம் பொன்னுடன், பெண்ணை ஏற்றுக்கொண்டு வேறுதேசம் செல்லட்டும்.”
அரசனின் கட்டளைக்குப்பின் அரசனின் ஆட்கள் அந்த  மூன்று ஸ்தனங்களுடையவளை நதிக்கரைக்கு அழைத்துச்சென்று அந்தக் குருடனுக்கு மணம் முடித்து லக்ஷம் பொன்களையும் கொடுத்தனர். பிறகு மீன் பிடிக்கும் படகில் அவர்களை ஏற்றி செம்படவர்களிடம், ‘’இவர்களை வேறு தேசத்திற்கு அழைத்துச் சென்று, கூனனுடனும் மனைவியுடனும் கூடிய இந்தக் குருடனை ஏதாவது ஊரில் தங்கச் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள். அவ்விதமே செய்தபொழுது, அவர்கள் வேறு தேசம் சென்று ஏதாவது ஒரு ஊரில் மூவரும் அந்தப் பணத்தால் ஒரு வீட்டை வாங்கி சுகமாகக் காலத்தைக் கடத்தி வந்தனர். குருடன் எப்பொழுதும் கட்டிலில் தூங்கிக் கொண்டேயிருந்தான். வீட்டு வேலை முழுவதையும் கூனன் செய்தான்.

காலப்போக்கில் மூன்று ஸ்தனங்களையுடையவள் கூனனுடன் சேர ஆரம்பித்தாள். அவனிடம், ‘’அழகனே, இந்தக் குருடனை எப்படியாவது கொன்றுவிட்டால் அப்பொழுது நாமிருவரும் சுகமாகக் காலத்தைக் கடத்தலாம். அதனால் ஏதாவது விஷத்தைத் தேடு. அதை அவனுக்குக் கொடுத்து அவனைக் கொன்று நான் திருப்தியடைவேன்’’ என்றாள்.

மறுதினம் கூனன் ஒரு இறந்த கருநாகத்தை எங்கோ கண்டான். அதை எடுத்துக்கொண்டு சந்தோஷமான மனதுடன் தன் வீட்டை அடைந்து அவனிடம், ‘’அன்பே, இந்தக் கருநாகம் எனக்கு கிடைத்தது. இதைத் துண்டுகளாகப் பண்ணி நல்ல வஸ்துக்களால் பக்குவப்படுத்தி அந்தக் குருடனுக்கு ‘மீன்’ என்று சொல்லிக் கொடு. அதனால் அவன் சீக்கிரம் இறந்துவிடுவான்’’ என்றான். இவ்விதம் சொல்லி மறுபடியும் கடைப்பக்கம் சென்றான்.

அவளும் அந்தக் கருநாகத்தைத் துண்டுகளாக்கி மோருடன் கலந்து பாத்திரத்தில் விட்டு அதை நெருப்பில் வைத்துத் தனக்கு வீட்டு வேலை வேறு இருந்ததால்  அந்தக் குருடனிடம் மரியாதையுடன் இவ்விதம் சொன்னான்: ‘’அன்பனே, நான் இன்று உனக்கு மிகவும் விருப்பமான மீன்களை வாங்கி வந்து சமைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வேறு வீட்டுக்காரியம் செய்யும் வரை நீ கரண்டியை எடுத்து இதைக் கிளறிக் கொண்டிரு’’ என்றாள். அவனும் அதைக் கேட்டு சந்தோஷத்துடன் கைகளை நக்கிக்கொண்டே வேகமாக எழுந்து கரண்டியை எடுத்து அதைக் கிளற ஆரம்பித்தான். அதைக் கிளறும் பொழுது விஷம் நிரம்பிய ஆவிபட்டதால் அவன் கண்களை மறைத்திருந்த திரை மெல்ல மெல்ல விலகிற்று. அவனும் அதையே குணமுள்ளதாக எண்ணி நன்கு அந்த ஆவியைக் கண்களில் ஏற்றுக்கொண்டான். பிறகு பிரகாசமாகப் பார்க்க முடிந்ததும் அவன் பார்த்தபொழுது பாத்திரத்தில் கேவலம் கருநாகத் துண்டுகளேயிருந்தன. அப்பொழுது அவன்,  ‘ஐயோ, இது என்ன? எனக்கு இதை மீன்களென்று முன்பு சொன்னாள். ஆனால்  இவைகளோ கருநாகத் துண்டுகள் ஆயிற்றே! அதனால் நான் இதை நன்கு ஆராய்ந்தறிய வேண்டும். இதை மூன்று ஸ்தனங்களுள்ளவள் செய்தாளா? அல்லது என்னைக் கொல்வதற்காக மந்தரகன் செய்த உபாயமா? அல்லது வேறு யாராவது ஒருவனுடைய வேலையா?’ என்று எண்ணினான். இப்படி எண்ணிக்கொண்டே, தன் எண்ணங்களை மறைத்துக்கொண்டு குருடனைப் போலவே காரியம் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதற்கிடையில் மந்தரகன் திரும்பி வந்து பயமின்றி மூன்று ஸ்தனங்களுள்ளவளை ஆலிங்கனம் செய்து, முத்தமிட்டு அனுபவிக்க ஆரம்பித்தாள். குருடனும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.  ஆனால் அருகில் கத்தியொன்றும் கிடைக்காததால் கோபத்தினால் குருடனாகி முன்பு போலவே அருகில் சென்று மந்தரகனை கால்களால் தூக்கி தன் பலம் கொண்ட மட்டும் தலைக்கு மேல் சுழற்றி அவனை மூன்று ஸ்தனங் களுடையவளின் மார்பில் எறிந்தான். அப்பொழுது கூனனின் உடல் பட்ட அடியால் அவளுடைய மூன்றாவது ஸ்தனம் உள்ளே சென்று விட்டது. முதுகுப் பக்கத்தில் நல்ல அடிபட்டதால் கூனனும் நேராக நிமிர்ந்துவிட்டான்.

அதனால்தான் ‘குருடனும் கூனனும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் சக்ரதரன். சுவர்ணசித்தன் சொன்னான். ‘’நண்பனே, நீ உண்மையையே சொன்னாய். விதி அனுகூலமாக இருப்பவர்களுக்கு எங்கும் மங்களம் ஏற்படும். ஆனால் மனிதன் விதியை நினைத்துக் கொண்டு எப்படி நீ என் வார்த்தையைக் கேட்கவில்லையோ அப்படி விவேகத்தை விடக்கூடாது’’ என்று.
இவ்விதம் சொல்லி சுவர்ணசித்தன் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

கவனமற்ற செய்கை என்ற ஐந்தாவது தந்திரம் இத்துடன் முடிவடைகிறது. அதன் முதல் செய்யுளானது:

நன்கு பார்க்காமலும் நன்கு அறியாமலும்
நன்கு செய்யாமலும் நன்கு சோதிக்காமலும்
நாவிதன் செய்ததுபோல் ஒருவனும் செய்யக்கூடாது.

Series Navigation“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”அனைவருக்குமான அசோகமித்திரன்!
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *