கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும் உயர் பதவி வகித்தவர்.
தாம் பணியாற்றிய கீழ்த்திசை நாடுகளின் சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், கலைகள், கைவினைத் திறமைகள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்வதில் ஈடுபாடு கொண்டவர் இவர். இதற்காகவே, விவரம் அறிந்த உள்ளூர் நபர்களை உதவியாளர்களாக வைத்துக்கொண்டு தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தினார். ஒரே தரப்பிலிருந்து விவரங்கள் தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக மெக்கன்ஸி ஒரு மாற்று வழி கண்டுபிடித்தார். ஒரு பிராமணரையும் பிராமணரல்லாதாரையும் அவர் உதவியாளர்களாக நியமித்துக்கொண்டார்.
மெக்கன்ஸி தொகுத்த சுவடிகளில் பழவேற்காடு பற்றிய ஆவணம் பலவிதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நாட்டு ஊர் ஒன்றின் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளலாம். இந்த ஆவணத்தை அவர் 1816ல் பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் வழக்குத் தமிழ் எப்படி இருந்தது என்பதற்கும் இந்தச் சுவடி ஓர் ஆதாரமாக விளங்குகிறது.
1816ல் பதியப்பெற்ற பழவேற்காடு ஆவணத்தை ஆய்வு செய்து, 1986ல் பழவேற்காடு எப்படி இருந்தது என்றும் அங்கு களப்பணியாற்றி நேரில் தகவல் திரட்டித் தமது ஆய்வை எழுதியிருக்கிறார் முனைவர் ம. ராஜேந்திரன். (பழவேற்காடு கி பி. 1816: மெக்கன்ஸி சுவடி பதிப்பாய்வு). வழக்கமான ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல் ஓர் சமூக ஒப்பீட்டு ஆவணமாகவும் இந்த நூல் வித்தியாசப்படுகிறது.
ம. ராஜேந்திரன் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுபவர். எனவே அவர் கையாளும் தமிழ் பொதுவாக முனைவர்கள் பின்பற்றும் கரடு முரடான பண்டித நடையாக இல்லாமல் படிப்பதற்கு சுவாரசியமான படைப்பிலக்கிய ஆளுமைத் தமிழாக அமைந்து விடுகிறது.
பல்வேறு மொழிகளின் தாக்கங்களால் தமிழ் மக்களின் பயன்பாட்டில் இருந்த மொழி எவ்வளவு சுவாதீனமாகப் பிற மொழிச் சொற்களைத் தமது மொழியின் இயல்புக்கேற்ப உருமாற்றிப் பிரயோகித்து வந்துள்ளது என்பதையும் மெக்கன்ஸியின் ‘பழவேற்காடு கைப்பீயத்து’ தெரிவிக்கிறது. இந்தக் ‘கைப்பீயத்து’ என்கிற சொல்லேகூட விவர அறிக்கை என்று பொருள்படும் கைஃபியத் (Kaifiyat) என்ற அரபி மொழிச் சொல்லின் திரிபுதான். இந்த அரபிச் சொல்லை ‘கைபீது,’ ‘கைபியத்’ என்றெல்லாம்கூடத் தமிழ் மொழியின் இயல்புக்கு ஏற்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஆங்கிலம், டச்சு, போர்ச்சுக்கீசிய மொழிச் சொற்கள் எல்லாம் வழங்கு தமிழில் உருமாறி, மெக்கன்ஸியின் சுவடி நெடுகிலும் விரவியிருக்கக் கண்டு, விடுகதைகளுக்கு விடை தேடுவதுபோல் ஒவ்வொன்றுக்கும் பொருள் தேடித் திண்டாடி, இறுதியில் வெற்றி பெற்ற அனுபவத்தை ம. ராஜேந்திரன் பகிர்ந்துகொள்கிறார். ‘கொற்நதோர்’ என்றால் என்ன? ‘கவர்னர் (Governor) என்பதைத்தான் ‘குவர்னதோர்’ என்று சொல்லத் தொடங்கி, எழுதும்போது ‘கொற்நதோர்’ என்றாகிவிட்டது என்பதைக் கண்டறிந்தது ஓர் உதாரணம்.
இதேபோல் ‘கடலோரம்’ என்பதைக் குறிக்கும் கோஸ்டல் (Coastal) என்னும் ஆங்கிலச் சொல் ‘கொஸ்த’ என்றாகிப் போனதையும் குறிப்பிட வேண்டும்.
‘பூற்வத்திலெ யிந்த அரசாகிய பளவற்காடு யெருக்கங்காடாயிருந்ததை வெட்டி வூருண்டானபடியினாலெ யிந்த வூருக்கு பளவற்காடென்று பேருண்டாச்சு’ என்று தொடங்கும் மெக்கன்ஸியின் ‘பழவேற்காடு கைப்பீயத்து’, ‘சகம் 1500 இறைவியென்கிறவள் பளவற்காட்டிலெ அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தாள். அப்பொ சந்திரகிரியிலெ றாயபட்டம் துரத்தினம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதிலெயிந்த பளவற்காடு செல்லுபடியாயிருந்தது’ என்று தொடர்கிறது.
இதிலிருந்து பல சுவையான செய்திகளை யூகித்து அறிந்துகொள்ள முடிகிறது. பழைய எருக்கம் செடிக்காடுதான் பழவெருக்கங்காடு, பழவெருக்காடு, பழவெர்க்காடு என்றெல்லாம் திரிந்து இறுதியில் பழவேற்காடு என நிலைபெற்றிருக்கிறது. சகம் 1500 என்பது 1578க்கு இணையான ஆண்டு. பழவேற்காடு வெறும் ஊராக அல்லாமல் அப்போதைய விஜயநகர ராஜ்ஜியத்துக்குக் கட்டுப்பட்ட முக்கியமான வட்டாரமாக இருந்திருக்கிறது என்பதோடு, ஒரு பெண் அதிகாரம் செலுத்துவதென்பது தமிழ் நாட்டு ஆட்சி முறையில் ஒரு சாதாரண நடைமுறையாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதை உறுதி செய்வதாகவும் உள்ளது.
மேலும், பழவேற்காடு சந்திரகிரி வட்டாரத்தின் தலைநகராகவேகூட இருந்தது என்பதற்கு, எச். ஹீராஸ் (H. Heras) எழுதிய ‘விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்தியா’ என்ற நூலிலிருந்து சான்று காட்டுகிறார் ராஜேந்திரன்.
பழவேற்காடு கைப்பீயத்தில் தகவல்களைப் பதிவு செய்தவர்கள் எழுதியிருக்கும் தமிழ் எப்படி இருந்தது என்று பார்த்தோம். ஆனால் இந்தப் படிப்பாளிகளே பழவேற்காட்டு மீனவர்கள் பேசும் தமிழைப் பற்றி விமர்சிக்கையில், ‘யிந்தப் பட்டணவரும் கரையாரும் பேசுவது தமிளேயானாலும் மிகவும் கொச்சையா யிருக்கும்’ என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது வரும் சிரிப்பை அடக்கிக்கொள்வது சிரமமாயிருக்கும்.
சென்னை மாநகரின் தலைமாட்டில்தான் இருக்கிறது பழவேற்காடு. 56 கிலோ மீட்டர் கடந்தால்
சென்றடைந்துவிடலாம். ஒடிசாவில் உள்ள சில்கா உப்பங்கழிக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி, தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலுமாக விரிந்து கிடக்கிறது. கடலோரத்தை ஒட்டியே உள்ள இந்த பிரமாண்ட நீர்ப் பரப்புக்காகவும், இடையிலே சிதறிக் கிடக்கும் ஊரில் உள்ள போர்ச்சுக்கீசிய, டச்சு அடையாளங்களாலும் இன்று ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டிருக்கும் பழவேற்காடு, ஒரு காலத்தில் துறைமுகமாகவே இருந்திருக்கிறது.
சென்னை மாநகரம் உருவாவதற்கே இது ஒரு தூண்டுதலாக இருந்திருக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி. கப்பல் துறையாகப் பயன்படும் பழவேற்காடு அருகில் இருப்பதாலேயே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது கோட்டையைக் கட்டிக்கொள்ள சென்னப்பட்டணத்தைத் தேர்வு செய்ததாம்!
1816ல் பதிவு செய்யப்பட்ட பழவேற்காட்டை 170 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலத்தில் அது எவ்வாறு உள்ளது என்று கண்டறியச் சென்ற ராஜேந்திரன், மீனவர்களோடு தானும் ஒருவராகக் கட்டுமரத்தில் கடலோடி வலைகளின் பிரிவுகளையும் மீன்களின் வகைகளையும் தெரிந்து கொண்டதோடு, அவர்கள் வாழ்க்கை முறையையும், இன்று பழவேற்காட்டில் உள்ள சமூகக் கட்டமைப்பு, மக்களின் வாழ்க்கைப் போராட்டம் முதலானவற்றையும் விசாரித்து அறிந்து தமது அனுபவங்களை நூலில் பதிவு செய்திருக்கிறார். ‘மெக்கன்ஸியின் பழவேற்காடு: 1816’ என்பதன் இரண்டாம் பாகமாக ‘ம. ராஜேந்திரனின் பழவேற்காடு: 1986’ அமைந்துவிட்டது.
பழவேற்காடு கி.பி. 1816
மெக்கன்ஸி சுவடி பதிப்பாய்வு
முனைவர் ம. ராஜேந்திரன்
வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
பக்கங்கள் 373 விலை ரூ.125.00
நன்றி: ஆழம் மாத இதழ், அக்டோபர் 2012 (கிழக்கு பதிப்பகம்)
- பஸ் ரோமியோக்கள்
- சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
- வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்
- பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
- வாயு
- கேளா ஒலிகள் கேட்கிறவள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6
- நிழல்
- இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
- நம்பிக்கை ஒளி! (3)
- திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்
- கவிதை
- கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்
- தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு
- கைப்பீயத்து என்றால் என்ன?
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32
- எதிர் வினை!
- அக்னிப்பிரவேசம்- 5
- உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…
- கதையே கவிதையாய்! (9)
- மன தைரியம்!