தாயின் அன்பிற்கு இணையாகச் சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு அக்கா. மாலுவிற்கும், சாருவிற்கும் இரண்டு வயதே வித்தியாசம் என்றாலும் தான் மூத்தவள் என்ற பெருமையுடன் தாய் என்ற அந்தப் பதவியைத் தானே எடுத்துக் கொண்டவள், சாரு. ஆசிரமத்தில் மைதானத்தில் உள்ள வீணை மீட்டும் கலைவாணியின் திருஉருவிற்கு அன்றாடம் மலர்தூவி அருச்சித்து வணங்கும் சாருவின் பிரார்த்தனையில். தங்கை மாலுவிற்கு நல்ல வழி காட்ட வேண்டும், அவள் பெரிய படிப்பு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற வேண்டுதலே பிரதானமாக இருக்கும். இன்றும் அதை நினைத்தால் மாலுவின் மனதிற்குள் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
காலையில் 5 மணிக்கெலலாம் எழுந்து, பல் துலக்கி, முகம் அலம்பி, பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிரார்த்தனை முடிந்தவுடன் பால கொடுப்பார்கள். குடித்த பிறகு அவரவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட பணியை முடித்து, குளித்து, கிளம்பி, காலை உணவருந்திய பிறகு பள்ளி செல்ல வேண்டும். ஆசிரமத்துத் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் தானியங்களைக் கொண்டே பெரும்பாலும் அங்குள்ளவர்களுக்கான உணவைச் சமைப்பார்கள். சோளத்தை ரவையாக உடைத்து அதில் கோதுமை ரவையில் செய்வது போன்று உப்புமா செய்வார்கள். பெரும்பாலும் இதுவே காலை உணவாக இருக்கும். மாலு இந்த உப்புமா என்றால் காததூரம் ஓடுவாள். அதனால் சாரு, காலையில் தனக்குக் கிடைக்கும் பாலையும் சேர்த்து மாலுவிற்குக் கொடுத்துவிடுவாள். விசேச தினங்களில் கொடையாளிகள் வழங்கும் தின்பண்டங்களில் தன் பங்கையும் சேர்த்து மாலுவிற்குக் கொடுத்துவிடுவாள். இப்படி அனைத்திலும் மாலுவின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்றிருப்பாள்.. வாழ்க்கை அக்காவின் தயவால் வேதனையின்றி ஓடிக்கொண்டிருந்தது மாலுவிற்கு.
சாரு பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்து வந்தவுடனே, அதில் தேறமாட்டோம் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தவள், திரும்பவும் படிக்கவும் ஆர்வம் இல்லாத நிலையில் தையல் பயிற்சியில் சேர்ந்து ஒழுங்காக கற்றுக் கொண்டால், டைலரிங் தொழிலாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. பயிற்சி வகுப்பு மட்டும்தான் இலவசமே தவிர, அதற்கான துணிகள் மற்றும், கத்தரிக்கோல், பட்டன், ஊக்கு, ஊசி போன்றவைகளெல்லாம் வாங்குவது அவரவர் பாடு என்று சொல்லிவிட்டார்கள். சின்னம்மாவை கேட்டுத் தொல்லை கொடுக்க விரும்பாதவள் வேறு வழியின்றி சித்தப்பாவின் தொலைபேசிக்கு அழைத்து உதவி கேட்டாள்.
மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து பணம் அனுப்பியவர், பிறகு என்ன நினைத்தாரோ, படித்தது போதும் ஊருக்குத் திரும்பி வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். எப்படியிருந்தாலும் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் வரைதான் ஆசிரமத்தில் இருக்கமுடியும் என்பதால் சித்தப்பா சொல்லும்போதே போனால் ஏதாவது வழி பண்ணுவார் என்ற நம்பிக்கையில் மாலுவைக்கூட அவள் படிப்பு முடிய வேண்டும் என்பதற்காகத் தனியே விட்டுவிட்டு ஊர் திரும்ப முடிவெடுத்தாள். மாலு வருவதற்குள் தான் ஓரளவாவது செட்டில் ஆகிவிட்டால், அவளுக்கும் ஆதரவாக இருக்கும் என்றே கணக்குப் போட்டது அந்தப் பேதை மனது. ஆனால் நடந்ததெல்லாம் வேறு. சாரு ஆசிரமத்தை விட்டு வெளியேறியவுடன் முதல் முறையாக மாலு தனிமையை உணர்ந்தாள். பல நாட்கள் சரியான உணவும், உறக்கமும் இல்லாமல் தவித்தாள். வார்டன் அம்மாவின் அரவணைப்பினால் மெல்ல, மெல்ல் தேறிவந்தாள்.
ஊருக்குத் திரும்பிய சாருவிற்கு சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருந்தது. சித்தப்பாவின் வீட்டில் உறவினர்கள் சிலர் கூடியிருந்தனர். உள்ளே வந்தவுடன், தூரத்து உறவினர் ஒருவர், “அட இதுதான் சாருலதாவா, புள்ளை அப்படியே அம்மாவை உரிச்சி வச்சிருக்காளே.. தங்க விக்கிரமாட்டமில்ல இருக்கா.. சந்திரன் கொடுத்து வச்சவந்தான்..” என்று கண் சிமிட்டிய போதுதான் அந்தப்புறம் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞனின் பார்வை தன்மீது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. வெட்கத்தினால் குறுகுறுவென்றிருக்க, தலை கவிழ்ந்து நின்றாள்.
ஒன்றுமே புரியாமல் அலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளுக்கு சற்று நேரம் கழித்துதான் மெல்லப் புரிய ஆரம்பித்தது, கல்யாணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், திருமணம் என்ற பந்தம் தனக்கு பல புதிய உறவுகளைச் சேர்க்கப்போகிறது என்ற உற்சாகத்தில் தலைகால் புரியாமல் இருந்தாள். மாப்பிள்ளையும் மிகவும் அன்பானவராகத் தெரிந்ததால் சம்மதம் சொல்வதில் எந்த்த் தடையும் இல்லை. அடுத்த பத்து நாட்களுக்குள், எளிமையாக, குறிப்பிட்ட சில உறவினர்களின் முன்னிலையில், மாலுவின் மகிழ்ச்சியுடனும், குல தெய்வம் கோவிலில் வைத்து திருமணம் முடித்து வைத்தார்கள். 16 வயது என்பது திருமணத்திற்கு தோதான வயதில்லை என்றாலும் அவளுடைய சூழ்நிலைக்கு அது மட்டுமே நல்ல முடிவாக இருந்தது. கணவனும் அவளைத் தன் சக்திக்கு ஏற்றவாறு உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டுதானிருந்தான். உறவினர்கள் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் என்று 10 பவுன் நகைபோட்டு கட்டிக் கொடுத்திருந்தனர். பையன் ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்தான்.
வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால், மற்றொரு சன்னலாவது திறக்கும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தவளுக்கு, இப்படி ஒரு சுவர்க்க வாசலே திறக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை சாரு. ஆம் தம்மீது உயிரையே வைத்திருக்கும் அப்படி ஒரு அன்பான கணவன். எள் என்றால் எண்ணெயாக நிற்பவன். அளவான வருமானமும், நிறைவான மனதும் கொண்டு சுகமான இல்லறம் அமைந்தது ஆண்டவன் அருள், தாயின் ஆசீர்வாதம் என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்திருந்தாள் சாரு.. ஆனால் அனைத்தும் அணையப்போகும் தீபத்தின் பிரகாசம் என்பதை அவள் முதலிலேயே உணராததும் நல்லதாகப்போய் விட்டது. ஏதோ அந்த சொற்ப காலமாவது வாழ்க்கையின் மென்மையான பகுதியை அனுபவித்தாளே பாவி மகள்.
திருமண பந்தத்தின் சுகமான இராகத்தின் பலனாக உருவான கருவை எண்ணிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இன்னும் 6 மாதத்தில் தங்கள் கையில் தவழப்போகும் மழலையின் கற்பனை வடிவைக்கண்டு ஆனந்தம் கொண்டிருந்த வேளையில்தான் அந்த பயங்கரம் ஆரம்பித்தது. ஒருநாள் வேலைக்குச் சென்றுவிட்டு மழையில் நனைந்து கொண்டு வந்த சந்திரனுக்கு சரியான காய்ச்சல் வந்துவிட்டது. சாதாரண சளி, காய்ச்சல்தானேன்னு நினைத்து பக்கத்தில் இருந்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாட்பட சரியாகாமல், காய்ச்சல் விடாமல் அடித்துக் கொண்டிருக்கவும், டாக்டர் எடுக்கச் சொன்ன பலவகையான சோதனைகளின் முடிவு அவர்களின் வாழ்க்கையின் மறு பகுதியை தீர்மானித்துவிட்டது.
ஆம், சந்திரனுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து வெள்ளை அணுக்கள் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறதாம்… அவைகள் சிவப்பு அணுக்களைத் தின்று கொண்டிருக்கிறதாம். மருத்துவ மொழியில் லூக்கீமியா என்று பெயர் சொன்னார்கள். இரத்தத்தில் புற்று நோய். ஏதோ பெரிய நோய்தான் என்றாலும், மருத்துவத் துறையின் வளர்ச்சியால் எதையும் சரிபண்னி விடலாம் என்றுதான் நம்பிக்கையோடு இருந்தார்கள் இருவரும். ஆனால் அவை எல்லாம் ஒரு சில முறைகள் இரத்த மாற்று சிகிச்சை செய்யும் வரைதான் நீடித்தது. அந்த காலகட்டத்தில் ராய வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி வேலூர் சென்றுதான் வைத்தியம் பார்க்க வேண்டியிருந்தது. வேலைக்கும் ஒழுங்காகப் போக முடியாமல், மருத்துவ செலவு, போக்குவரத்துச் செலவு என கண் முழி பிதுங்க வேண்டிய சூழல் வெகுசீக்கிரமே வந்துவிட்டது. வயிற்றுப் பிள்ளைதாச்சியை சத்தான உணவு கொடுத்து கவனிக்கக்கூட முடியவில்லையே என்ற வேதனை ஒருபுறம். இருவரும் நொந்து போனாலும், வெளியில் யாரிடமும் சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக மாலுவிற்குத் தெரிந்தால் அவள் தாங்க மாட்டாள், படிப்பும் கெட்டுவிடுமே என்றே, மூடி மறைத்துக் கொண்டிருந்தாள். பிரசவ நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. மிக இறுக்கமான சூழலில் செய்வதறியாது தவித்துப்போன சந்திரன் ஒருமுறை இரவு, சாரு அசந்து தூங்கும் நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஃபேனில் தூக்கு போட்டுக்கொள்ள முயற்சி செய்தான். அந்த நேரம், பாத்ரூம் போக எழுந்திருந்த சாரு, அருகில் கணவன் இல்லாதலால் தேடிக்கொண்டு வெளியே வந்தவள், அங்கு நடந்த கொடுமையைக் கண்டு வாயடைத்து நின்றாள். சத்தம் போட்டால் அக்கம் பக்கத்தில் தெரிந்து பிரச்சனை ஆகிவிடும் என்ற அச்சத்தில், அவன் காலைப்பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் சாரு. அன்பு மனைவியை மகாராணியைப்போல வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவ்னுக்கு அவளுடைய கதறல் மரண வேதனையைக் கொடுத்தது. அப்போதே தன் முடிவை மாற்றிக் கொண்டான்.
ஆனாலும் நாட்கள் செல்லச்செல்ல பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் சாரு.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. இதற்குள் வாழ்க்கை ஆறு யுகமாக நீண்டது. குழந்தையை மனதாரக் கொஞ்சிக் குலவி சுகம் காணும் சூழல்கூட இருக்கவில்லை. கணவனின் நோயின் தாக்கம அதிகமாகவும், மருந்தின் வீரியமும், கதிர்வீச்சும் அவனை உருக்குலையச் செய்ததும், வெளியில் தெரிய ஆரம்பித்தது. மாலுவை வீட்டில் அண்டவிடாமல் தடுத்து வைத்திருந்ததும் இதனால்தான்.
அன்று மாலு குழந்தைக்கு சட்டைத்துணி வாங்கிக்கொண்டு, அதைக் கொடுக்க அக்கா வீட்டிற்குப் போகலாம் என்றிருந்தவளைப் பார்க்க, அவளே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதில் சந்தோசம் இருந்தாலும், அவள் முகத்தில் இருந்த குழப்பமும், அவள் பேசிய பேச்சும் விபரீதமாகப் பட்டது மாலுவிற்கு. அந்த வார இறுதியில் எப்படியும் சாரு வீட்டிற்குச் சென்றுவர எண்ணியிருந்தாள். ஆனால் அதற்குள் பூகம்பம் வெடித்தது போல செய்தி வந்துவிட்டது. ஆம், அன்று வெள்ளிக்கிழமையும் அதுவுமாக காலையில் பரபரபபாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம், ப்க்கத்து வீட்டு செல்வி தன் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள் பதட்டமாக. போனில் கேட்ட அந்த செய்தி மண்டையைப் பிளக்கச் செய்தது. அக்கா வீடு நோக்கி ஆட்டோ பிடித்து சின்னம்மாவுடன் ஓடினாள். அங்கு அவள காட்சி ஈரக்குலையே நடுநடுங்கிப் போனது.
வீட்டை நெருங்கும் போதே, கூட்டமாகவும், போலீசும் வேறு இருந்தது. கூட்டத்தை விலக்கி யாரோ இவளை உள்ளே கூட்டிச் சென்றார்கள். அங்கு வரிசையாக கணவன், மனைவி, இடையில் ஆறு மாதக்குழந்தை என நீட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்…. பிணமாக.
”கணவனின் நோய் அதிகமானதாலும், மேற்கொண்டு வைத்தியம் செய்துகொள்ள வசதி இல்லாதலாலும், அவருடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில், கணவனைப் பிரிந்து எங்களால் வாழமுடியாது என்பதாலும், மூவரும் சேர்ந்தே போய்விட முடிவு செய்துவிட்டோம். குழந்தையும் அனாதையாக இந்த பூமியில் வளர்வதில் எங்களுக்கு விருப்பமில்லாதலால் வேறு வழியின்றி அந்தப் பிஞ்சையும் நஞ்சு வைத்து அழிக்கிறோம். அந்த இறைவன் எங்களை மன்னிப்பாராக” என்று தபால் எழுதி வைத்திருந்தாள், கண்னில் படும்படியாக.. முத்து, முத்தான அக்காவின் கையெழுத்தைப் பார்த்து ஓவென்று அழுது புலம்பி மயங்கி விழுந்தாள் மாலு.
துரத்தித் துரத்தி அடித்த சுனாமியாக விதி செய்த வதையைக் கண்டு துவண்டு வீழ்ந்துவிடுவாளா…… அல்லது திரும்பி நின்று அதை விரட்டியடித்து வெற்றி காணப் போகிறாளா இந்த மாலதி? பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடரும்.
- பஸ் ரோமியோக்கள்
- சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
- வாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்
- பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம
- வாயு
- கேளா ஒலிகள் கேட்கிறவள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6
- நிழல்
- இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
- நம்பிக்கை ஒளி! (3)
- திருமதி சௌந்தரநாயகி வைரவன் சிங்கப்பூரில் தமிழ் தமிழர் .
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்
- கவிதை
- கிழவனும் கடலும் ஒரு வாசகனின் புரிதலில்
- தாகூரின் கீதப் பாமாலை – 35 கானம் பாடினேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு
- கைப்பீயத்து என்றால் என்ன?
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32
- எதிர் வினை!
- அக்னிப்பிரவேசம்- 5
- உத்தமம் INFITT – உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் மாநாடு…
- கதையே கவிதையாய்! (9)
- மன தைரியம்!