காலம் ஒரு கணந்தான்

This entry is part 35 of 42 in the series 25 நவம்பர் 2012
1.காலம் ஒரு கணந்தான்…! part 1
மெழுகுவர்த்தியாய்
உருகி
வெளிச்சங்கொடு…
“சோனாமாரி”யிலும்
அணையாதே!
மேக கணங்களாய்
உழை…
மழைத்துளிகளாக
சேவை செய்…
பூமியைப்போல
பொறுத்திடு…
அகழ்வாரை
அன்போடு நோக்கு…
மின்னலிடம்
வெளிச்சங் கேள்…
இடியைத் தாங்கும்
இதயம் பெறு…
காற்றிலே
கீதம் அமை…
கைப்பிடிக்குள்
உலகம் எடு…
கால வெள்ளத்தோடு
கல்லாக உருளாதே,
பாறையாய் நில்லு.,
சந்தோஷச் சிறகில்
பறவையாய்ப் பற…
பனித்துளியாய் வாழ
இலையிடம்
இடங்கேள்…
சூரியன் சுட்டாலும்
அழியாமல் வாழ்…
தேனீயாய் சுற்று…
எறும்பாய் உழை…
தென்றலாய் வீசு…
மழையாய்ப் பொழி…!
2.காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(2)               
நல்லன எண்ணு
பொன் என மின்னு
தண்மதி போல்
ஓரழகிய உள்ளம் வை…
தாமதியாமல்
ஓர் இலட்சியம் தனை வகு..
அதையடைவதற்காய் என்றும்
அயராமல் முனை…
இன்பம்
உனை மறந்து
தூர ஓடினாலும்
இருவிழிகளும்
“ஆறு” போல்
ஆகினாலும்;
வாழ்வின் நிலையாமை
உணர்…
பூந்துணர் போல்
வெற்றி மலரும்,
பாடுபட்டால்
இருள்கள் புலரும்..
ஆயுள்
நீண்டுசெல்வதில்லை
அறிந்து கொள்..
வாழ்வே ஒரு
நீர்க்குமிழி..
அதற்குள் எதற்கு
“காட்டு வழி”..?
முடிந்தால் பிறர்க்கு
காட்டு “வழி” …!
கதிரோன் சுட்டெதென்று
பூமி
அழுததில்லை..
இலைகள்
காய்வதனால்
இன்பமாய் பறத்தல் காண்…
நதிகள் நெலிவதனால
அழகு
குறைவதில்லை
தோல்வி
கலப்பதனால்
வாழ்வு வளம் பெறுமே…
ஜுமானா ஜுனைட், இலங்கை.
3.காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(3)
உண்மைக்கு
உயர்வளி
உயிருக்கு
உணர்வளிக்கும்…
நீதிக்கு
உரமூட்டு
உன் வாழ்வுக்கு
மெருகூட்டும்…
கார்மேகமாய் இரு
இடமறிந்து பொழி…
உன் பாதைகளோ
பல்வேறு
அறிந்து செல் வழி…
வார்த்தையில்
உண்மை வை..
நெஞ்சத்தை
நிஜங்களால் நிரப்பு..
வஞ்சகத்தை விட்டு
நீங்கிவிடு…
மலைகளில்
ஊற்றெடுக்கும்
நீர் வீழ்ச்சியாய்
நில்லு…
அருவி போல்
பாய்ந்து போ…
சூர்யன் ஈர்த்தாலும்
வானில் சென்று
முகிலாகு…
உன்னை ஈன்ற
பூமிக்கே
திரும்பி வா
மழையாய்…
வாழை வேருட் சென்று
வெளி வா
குலையாய்…!
ஜுமானா ஜுனைட், இலங்கை.
4.காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(4)
ஒளியிலே தேடு
நிஜங்களை…
ஒளிவுமறைவின்றி
உண்மை பேசு..
படகு செல்ல
அருவியாய் நில்லு…
காலம் உணர்த்த
நட்சத்திரமாய் மின்னு…
வழிகாட்டும்
கலங்கரை விளக்காகு…
ஒளியூட்டும்
இரத்தினக் கல்லாகு..
பாறையில் மோதிடும்
நீரலை உடையினும்
நீரதில் குறைவுகள்
உண்டாவதில்லை…
பாரினில் சூழ்நிலைக்கு
நீரலையாய் உழை…
காலமோ மின்னல் போல் –
அதிலும்
வாழ்க்கையோ ஒரு துளி..
எதிலும் சோர்ந்திடாமல் துணி…
முயன்றால்
ஆயுள் நீளும்
ஆனால்
உயிரோ எமைவிட்டு
பிரிந்தே தீரும்…
இதை உணர்ந்தால்
எம் வாழ்வு முன்னேறும்;…!
ஜுமானா ஜுனைட், இலங்கை.
5.காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(5)
இது
மின்னல் வாழ்க்கை
மின்னிப் பாரு
மீதி வாழ்க்கை
எங்கு
தேடிப் பாரு
கண்ணில் இமைகள்
மூடிமூடி
காற்றினாலே
திறப்பதுண்டு,
மூடித்திறக்கும் ஆயிடையில்
வாழ்வே மாறும்
வாழ்ந்து பாரு!
காலைக் கதிர்
சுடுவதில்லையே,
சுணங்கிப் போனால்
பாதம் கூட
தீ மிதிக்குமே!,
பாரில் இந்த
வாழ்க்கை கூடவே
தாமதத்தால்
பாதம் போல ஆகக் கூடுமே!
ஓசை தரும்
அலைகள் கூடவே
கடலில்
உடைந்து –
நொருங்கி –
வீழ்ந்து போகுமே
ஒன்றுபட்டு
மீண்டும் இணைவதால்
அவை வானைத் தொட
தொடர்ந்து முனையுமே..
அலைகள்
தோற்று தோற்றே போயினும்
அவை துவண்டிடாமல்
விடாது முயல்வதால்
ஆவியாகி விண்ணையடையுமே…
உலக வாழ்க்கை
இதிலே யாமும்
விடாது முயல்வதால்
எதுவும் தோல்வியாக
இறுதி வரைக்கும்
ஆவதில்லையே..,
என்றோ ஒருநாள்
முயல்வின் முடிவைப்
பெற்று மகிழத்தான்
அலைகள் போல
தினமும் நாமும்
அலைந்து முயல்கிறோம்;…!!
ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 46) விழிக்கும் நெஞ்சுக்கும் போர்Arumbugal 2012 organised by Tamil Cultural Association in Hong Kong
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *