அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
தேடல்
தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது.
சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான்.
நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர் மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் தோற்றுவித்த அச்சமின்மை, இலக்கிய ஈடுபாடு. பெற்றவரால் சோதிடம், இப்படி பல திக்குகளில் ஆர்வம். எதிலும் முழுமையாய் அறிய முடியாத வயது. வீட்டிலே தங்கி இருந்த சித்தப்பாவால் திராவிடக் கட்சிகயைப் பற்றி அறிமுகம், வீட்டுப் பால்காரனால் அண்ணாவின் புத்தகங்கள். இன்னும் எத்தனையோ கோணங்களில் ஆர்வமும் தெரிந்து கொள்ளும் முயற்சியும் தொடர்ந்தன.
களப்பணிக்கு வரவிட்டுத்தான் அனுபவங்கள் பெறப் பெற ஓர் தெளிவும் கிடைக்க ஆரம்பித்தது. என் காலத்தில் சத்தியாகிரகம், சர்வோதயம் இத்துடன் பூமிதான இயக்கம், சுயமரியாதை இயக்கம் இவைகளிலும் சிந்தனை செல்ல ஆரம்பித்தது. வத்தலக் குண்டு வட்டாரத்தில்தான் கிராமதான், பூமிதான் இயக்கத்தில் நிலங்கள் பெறப்பட்டு பணிகள் நடப்பதையும் பார்க்க நேரிட்டது. மேடைப் பேச்சுக்களாலும், கவர்ச்சி எழுத்துக்களாலும் , சினிமாக் காட்சிகளாலும் திராவிடக் கட்சி வேகமாக வளர்வதைக் கண்டேன்.
சொல்லழகர் அறிஞர் அண்ணா முதல்வரானார்.
ஒருவர் தனித்து இருக்கும் பொழுது சுதந்திரமாக தன் விருப்பத்தின்படி நடக்கலாம். ஆனால் அரசுக் கட்டிலில் அமர்ந்தால் செய்யும் சத்தியப் பிரமாணப்படி நடக்க வேண்டும். பொறுப்பேற்றுக் கொண்ட பகுதி மக்கள் எல்லோரிடமும் பாகுபாடின்றி நடக்க வேண்டும். எல்லோருக்கும் நன்மை புரிய வேண்டும்.
ஒருவன் தவறை எப்பொழுதும் சுட்டிக் காட்டிப் பழிக்கும் குணத்தை வளர விடுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. பழிவாங்கும் மன நிலை தொடர்ந்தால் அக்குணம் பரவலாகி மனித நேயம் மாய்ந்துவிடும். மனிதம் செத்துவிடும்.
அறிஞர் அண்ணா வந்த பாதை ஒன்று. ஆட்சியில் அமர்ந்தவுடன் பிறர் மனம் நோகக் கூடாது என்று சொற்களைக்கூட நயமாகக் கையாண்டார். பிராமணனைத் திட்டுவதைவிட்டு பிராமணீயம் கண்டிக்கப்பட வேண்டும் என்றார். அதாவது சாதீயம் கூடாது. அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இப்பொழுது எங்கும் எதிலும் சாதிகள் கும்பலாக வளர்ந்திருக் கின்றதே , இது நடந்திருக்காது. மனிதன் பிறக்கும் பொழுது சாதிகள் கிடையாது. வாழ்வியலில் ஏற்பட்ட பொருளா தாரமும் தொழில்களும் காலச் சூழலுக் கேற்ப ஏற்படுத்திய பெயர்கள் சாதிகளாகி விட்டன. எந்த வேற்றுமையும் கூடாது என்பதுதான் சுயமரியாதை ஒற்றுமை நீங்கில் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்காது.
அடுத்து அவர் சொன்னது ஒருவனே தேவன் என்பது.
கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பது வேறு. ஆனால் அந்த நம்பிக்கை இருந்தால் மனிதன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளைக் காப்பான். பெண்ணாசை, மண்ணாசை, பொருளாசை இவைகளில் மனிதன் சிக்கிக் கொண்டு போதையிலும் வன்முறையிலும் சமுதாயம் திணறிக் கொண்டிருக்கின்றது..
அண்ணா அவர்களுக்கு அறிஞர் பட்டம் சேர்ந்திருப்பது அர்த்தமுள்ளது. கொள்கைகள் இருக்கலாம். கொள்கைகள் எதற்காக? சமுதாயம் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் முரண்பாடுகளைக் களைய வேண்டும். திராவிட நாடு பெற முடியுமா? குடிக்கத் தண்ணீர் கூட மறுப்பவன் ஒன்று சேர்வானா? அப்பொழுது பேசியது சரி. ஆனால் காலம் சூழல் பார்த்து சில கொள்கைகளில் மாறுதல் கொண்டுவருவதில் தவறில்லை.
வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ள ஆர்வமில்லை. ஆர்வம் இருப்ப வர்க்கும் கூட சரியான தகவல்கள் கிடைக்காமல் போகும் அளவு சுயநலமும் வரட்டு கவுரமும் ஆட்டிப் படைக்கின்றன .இருக்கும் வரலாற்றுத் தகவல் களையும் மறைத்தோ அழித்தோ புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டு புதுமையான வரலாறைப் படைக்கின்றோம். அதென்ன கதையா, திருத்தி எழுதுவதற்கு ?! எக்காலத்தில் நடந்தவைகளை இக்காலத்து நடைமுறைகளுடன் ஒப்பிட்டு சரி யென்றும் சரியல்லவென்றும் எழுதுவது சரியா?
அறிஞர் அண்ணா சீக்கிரம் மறைந்தது தமிழ்நாட்டின் துரதிருஷ்டம்.
அறிஞர் அண்ணாவிடம் மனம் விட்டுப் பேச முடியும் என்பார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அந்த பெருந்தகையை நேரில் கண்டு நன்றியாவது கூற முடிந்தது. ஓர் முடிவு எடுத்து, அது பத்திரிகை செய்தியாகவும் வரவிட்டு, காரணங்களோடு கோரிக்கை வைத்த பொழுது சுய கவுரவம் போகின்றது என்று நினைக்காமல் தன் நிலையை மாற்றிக் கொண்டாரே, அவரைப் புகழாமல் இருக்க முடியுமா? அந்த கட்சியைச் சேராதவர்கள் கூட அவர்மீது மதிப்பு வைத்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். தனக்கென்றோ, தன் குடும்பத்திற்கென்றோ எதையும் செய்து கொள்ளவில்லை.
காஞ்சியில் நான் வேலை பார்த்த பொழுது அண்ணா வீட்டுக்குப் போவேன். அவர் மருமகள் விஜயா இளங்கோவன் மகளிர் நலப் பணிகள் காரணமாக எங்களுடன் வருவார். அண்ணாதான் போய்விட்டாரே அவர் வாழும் வீட்டையாவது பார்க்கலாமே என்ற ஆதங்கத்துடன். அவர் எங்கே உட்கார்வார், அவர் வீட்டில் நடமாடிய இடங்கள் இவைகளையெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்ப்பேன். அவர் வாழ்ந்த இல்லத்தில் அவருடன் பேசுவது போல் கற்பனை செய்து மகிழ்வேன். இது என் சுபாவம். பாரதி வீட்டில் இருந்து வளர்ந்த கற்பனை, அண்ணா வீட்டிலும் உதவியது. அதிகமாகப் புகழ்வதாக நினைக்கலாம். என் உணர்வைப் பற்றி எழுதுகின்றேன். அவ்வளவுதான்
தமிழ்நாட்டு அரசில் 34 ஆண்டுகள் பணியாற்றினேன். ஆரம்பத்திலிருந்து இருந்த முதல்வர்கள் திரு . காமராஜ் அவர்கள். என்னை இப்பணிக்குப் போவென்று அனுப்பும் பொழுது ஏற்பட்டநேரிடைச் சந்திப்பும் உரையாடலும் ஒரே முறைதான். மற்ற தருணங்களில் அரசு விழாக்களில் பார்த்ததுதான். அடுத்து திரு பக்தவதசலம் அவர்கள் முதல்வராக வந்தார். சரோஜினி அம்மா வீட்டிற்குப் போகும் பொழுது எப்பொழுதுதாவது சவுகரியமா என்று கேட்பார். அவ்வளவு தான். அடுத்து அறிஞர் அண்ணா அவர்கள். எங்கள் குறையைக் கூறப் போன பொழுதுதான் நேரிடைச் சந்திப்பும் உரையாடலும். பல மேடைகளில் அவர் பேச்சு கேட்டிருக்கின்றேன். ஆனால் இத்தகைய சந்திப்பு கிடைக்கவில்லை.
அடுத்து வந்தவர்கள் திரு கலைஞர் கருணாநிதியும் , திரு எம்.ஜி ஆர் அவர்களும். இவர்கள் இருவருடனும் பல முறை நேரிடைச் சந்திப்பும் உரையாடலும் நிகழ்ந்திருக்கின்றன.
காஞ்சியில் இருக்கும் பொழுது திடீரென்று கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டு எழுத உட்கார்ந்தேன். 83 பாடல்கள் எழுதும் வரை எழுந்திருக்கவில்லை. மறுநாள் மீதி எழுதி நூறு பாக்களாக்கி விட்டேன். அது ஒரு பாமலர் மாலை
என் இளங்கோவன் அண்ணாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அவர் அதனைத் திருப்பித்தர மறுத்துவிட்டார். ஆனால் அச்சிட்டு புத்தகமாக் வெளிக் கொணர்ந்தார். வெளியிட்டவர் திரு மா. பொ.சி அவர்கள்.விழாவிற்குப் பல சிறப்பு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சாவியும் ஒருவர். இந்த கவிதைப் புத்தகம்தான் கலைஞரின் அறிமுகத்திற்குக் காரணம். நேரில் சந்தித்த பொழுது சில விபரங்கள் கேட்டார். இதனைச் சாவியிடம் சொன்னேன். அவ்வளவு தான் சாவி என் முழுக் கதையையும் கலைஞரிடம் கூறிவிட்டார்.
கலைஞருக்குப் பிடிக்காதவர்கள் எனக்கு நண்பர்கள் மூவர்.
காங்கிரஸ் மேடைகளில் கலைஞருக்கு வசை மாலை சூடும் ஜெயகாந்தன்
கலைஞரையும் கட்சியையும் விமர்சனம் செய்யும் பத்திரிகை குமுதத்தின் அரசியல் ரிப்போர்ட்டர் பால்யூ
எல்லாவற்றிற்கும் மேலாக கட்சிலியிருந்து விலக்கப்பட்ட திரு எம் ஜி, ஆர் அவர்களின் நண்பர் மணியன்
அடுத்த சந்திப்பில் என் நட்புகளைப் பற்றிய விசாரணை.
இவ்வளவு விளக்கமாக கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. சொல்கின்றேன்
நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு எந்தப் பக்கத்திலிருந்து சோதனை வரும் என்று சில சமயங்களில் கணிக்க முடியாது. என் பதவியே போகும் அளவு சோதனை வந்தது.
நான் காஞ்சியில் பணியாற்றும் பொழுது திரு திவான் முகமது அவர்கள் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அப்பொழுது எனக்கு அமைச்சரும் காஞ்சிபுரத்துக் காரர்தான். பெயர் திரு சி.வி.எம் அண்ணாமலை அவர்கள். ஆட்சியாளரும் அமைச்சரும் பேசுவதில்லை. காரணம் எனக்குத் தெரியாது. ஒரு முறை ஆட்சியாளர் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து கவர்னர், இன்னும் சில அமைச்சர்களைக் கூப்பிட்டிருந்தார். ஆனால் உள்ளூர் அமைச்சர் அவர்களை இன்னும் கூப்பிடவில்லை. என்னை அவரிடம் அதுபற்றி பேச அனுப்பினார். இதுதான் தர்ம சங்கடம். நானும் அமைச்சர் அவர்களும் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் கடுமையாகப் பேசினார். மரியாதைக் குறைவான பேச்சைக் கேட்கவும் நானும் பொறுமை இழந்து அவரைத் திட்டிவிட்டேன். அன்று முதல் அமைச்சருக்கு என் மீது ஆத்திரம் வளர ஆரம்பித்தது. அதனால் எனக்குச் சோதனைகளும் தொடர்ந்தன.
பெரியார் திடலில் எங்கள் துறை நடத்திய சிறப்பு கூட்டம். விதவைகளூக்குத் தையல் இயந்திரங்கள், வழங்குதல், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்கு காசோலை வழங்குதல். இந்த விழாவிற்கு முதல்வர் அழைக்கப் பட்டிருந்தார். வந்திருந்த கூட்டத்தைச் சீராக உட்காரவைத்து கவனிக்க எல்லா அலுவலர்களையும் பிரித்து நிற்க வைக்கப்பட்டிருந்தது. நான் இருந்த பகுதிப் பக்கம் தற்செயலாக வந்த திருமதி அலமேலு அப்பாத்துரை அவர்கள் என்னைக் கண்டதும் கையைப் பிடித்துக் கொண்டு தந்தை பெரியார் இல்லத்திற்குள் நுழைந்தார். திருமதி மணியம்மையுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முதல்வரும் எங்கள் அமைச்சரும் இன்னும் சிலரும் அங்கே வந்தனர். முதலில் அம்மாவிடம் முதல்வர் பேசினார். பின்னர் அலமேலு அம்மா பக்கம் திரும்பி “சீதாலட்சுமி மாநாடு நடத்துவதில் கெட்டிக்காரி. மதுரை மகளிர் மாநாட்டிற்கு என்னென்ன செய்ய வெண்டுமென்று ஆலோசனை கேளுங்கள் “ என்று சாதாரணமாகக் கூறி விட்டுச் சென்றுவிட்டார். என் அமைச்சரின் முகத்தில் மலர்ச்சி இல்லை. பல இலக்கிய விழாக்களில் என் பணிகளைப் பார்த்தவர் முதல்வர். அதனால் அவர் சாதாரணமாக நினைத்துப் பேசிவிட்டார். ஏற்கனவே என் மீது கோபமாக இருந்த எங்கள் அமைச்சருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. கூட்டம் நடக்கும் பொழுதும் இன்னொரு சம்பவம் அவர் ஆத்திரத்தை அதிகமாக்கியது.
சென்னை மாவட்ட மகளிர் நல அதிகாரிக்கு தமிழில் அவ்வளவு தெளிவு கிடையாது. ஆரம்பகாலத்தில் பணிக்கு வந்த ஆந்திராக்காரர். மேடையில் பேசும் பொழுது திணறல். கலப்புத் திருமண தம்பதிகளின் பெயர்களைக் கூறும்பொழுது மாறி மாறிச் சொல்லவும் முதல்வருக்குக் கோபம் வந்திருக்கின்றது. உடனே அவர் என் பெயரைக் கூறி தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவர் இருக்கும் பொழுது ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான் அதன் பின்னர் நடந்தது சூறாவளி. உதவி கேட்டு முதல்வரிடம் போகவில்லை. அமைச்சரிடமும் போய்ப் புலம்பவில்லை என்னுடைய மேலதிகாரிகளின் புரிதல் காரணமாக சோதனைகளிலிருந்து மீண்டேன்.
கலைஞரிடம் எனக்கு உதவி கேட்டு எப்பொழுதும் போனதில்லை
கலைஞர் அவர்கள் காலத்தில் அவர் பிறந்த நாளின் பொழுது அறிவித்த பல திட்டங்கள் எங்கள் துறைக்குத்தான் வந்தன.
ஆதரவற்ற பிள்ளைகளுக்குப் பல பள்ளிகள் நடதத மத்திய அரசு மான்யம் வழங்க ஆரம்பித்தது. இத்திட்டத்தில் அதிகப்பயனை அடைந்தது தமிழ்நாடுதான்.
மத்திய அரசின் நிதி உதவி பெற்று ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே புகழும் ஓர் திட்டம் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது தொடங்கிய காலக் கதையைக் கூறவும். “தாயையும் சேயையும் பிரிக்க மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.
1967 இல் கிடைத்த அனுபவங்களுக்குப் பிறகு தொழில் சங்கத்தில் தீவிரமாக இறங்கிவிட்டேன். எங்களுக்கு வந்த பல சோதனைகளைச் சமாளிக்க முடிந்தது.
முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்னைப் பற்றிய அறிமுகமும் வித்தியாச மானது. தொடர்பில்லாத அரசியல் தகவல்களை எழுத விரும்பவில்லை. இருப்பினும் சில எழுத வேண்டியிருக்கின்றது.
தி. மு. க. விலிருந்து பிரிந்து வரவும் திரு எம்.ஜி. ஆர் அவர்கள் தனித்து களம் இறங்கிய தேர்தல் காலத்தில் நடந்தது. மணியன் பெயரைச் சொன்னால் பல விமர்சனங்கள் வரும் என்று தெரியும் . ஆனாலும் எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை. மணியன் அவர்கள் என்னை அரசியல் களத்தில் இறங்கச் சொன்னார். இதனை அவர் எம்.ஜி, ஆர் அவர்களிடமும் கூறி அனுமதி பெற்று விட்டார். ஆனால் அவரால் என்னை வெல்ல முடியவில்லை
(என்னை அரசியலில் சேரச் சொல்லி சில கட்சி நண்பர்கள் முயன்றதும் நான் மறுத்ததும் தனிக்கதை )
ஒரு கட்சியில் சேர்ந்தால் அடுத்த கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறை கூற வேண்டும். தான் சார்ந்த கட்சித் தலைவனைப் புகழ வேண்டும். இரண்டும் என்னால் முடியாது. நான் வெளிப்படையானவள் . சுதந்திரமாக இருக்க நினைப்பவள் மணியனுக்கு பினாமியா என்று அவரிடமே கேட்டு என் எண்ணங்களை வெளிப்படையாகக் கூறிவிட்டேன். மணியனோ அதனை அப்படியே திரு எம். ஜி. ஆர் அவர்களிடம் கூறிவிட்டார். இந்த நிகழ்ழ்சியால் என் மீது ஒரு பரிவு ஏற்பட்டது. மணியன் முலமாக என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் அவர் அறிந்து கொண்டார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
தாய்க் குலத்தின் மீது இயல்பான பரிவு கொண்டவர். கிராமங்களில் பெண்கள் வாழும் நிலையும், குழந்தைகளின் நிலையும் நன்கு அறிந்தவர். அவர் இயல்பிலே கோபம் வரும் என்பார்கள். எளிதில் யாரையும் நம்பி விடமாட்டர் என்றும் சொல்வர். அவர் வெறும் நடிகரல்ல. படத் தயாரிப்பாளரை உருவாக்குவார். அவர்களில் மணியனும் ஒருவர். விகடனில் அவரின் சுய சரிதம் வந்த நாள் முதல் மணியன் அவருடன் ஒட்டிக் கொண்டார். மணியனிடம் உள்ள குணம். விகடனில் திரு வாசன் அவர்களின் புதல்வர் திரு பாலாவுடன் ஒட்டிக் கொண்டு பயணக் கட்டுரை எழுதும் மணியன் என்ற பெயர் பெற்றார். எம்.ஜி. ஆர் அவர்களுடன் ஆரம்பத்தில் எக்காரணம் கொண்டு பழக ஆரம்பித்திருந்தாலும் இயற்கையான பாசமும் அவர்களுக்குள் வளர்ந்ததை நான் அறிவேன். இது எம்.ஜி. ஆர் அவர்களின் சக்தி. . மணியன் -எம்.ஜி. ஆர் பழக்கத்திற்குக் காரணம் வித்துவான் லட்சுமணனும் காரணம். “இதயம் பேசுகிறது” அலுவலகத்தில் மணியனின் அறையில் உடகர்ந்திருக்கும் பொழுது மணியனும் திரு எம் ஜி ஆர் அவர்களும் எந்த அளவு பேசுவார்கள் என்பதை தொலை பேசியில் பேசும் பொழுது கேட்டிருக்கின்றேன். பல நாட்களில் தோட்டத்து வீடு இட்லி சாப்பிட காலையில் மணியன் ஓடுவார். மணியன் ஓர் சாப்பாட்டுப் பிரியர் . இவைகளைக் கூறுவதற்கும் காரணம் ஒன்று உண்டு. முதல்வர் அவர்கள் ஏற்கனவே என்னைப் பற்றி முழு விபரங்கள் அறிந்திருந்ததால் எனக்கு வந்த ஒரு அரசியல் சோதனை யிலிருந்து அவர்தான் காப்பாற்றினார். .
அவர்காலத்தில். எங்களுக்கு அமைச்சராக திருமதி பி.டி சரஸ்வதி அவர்கள் இருந்த காலத்தில் நடந்தது. அவர்கள் தொகுதி மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் தொகுதி. அவர்களே விரும்பி என்னை மதுரைக்கு வர வழைத்துக் கொண்டார். ஒரு முறை முதல்வர் அவர்கள் போடி, கம்பம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளுக்காக வந்திருந்த பொழுது நடந்தது. அந்த சமயத்தில் எங்கள் அமைச்சரை கூப்பிட்டு கண்டித்திருக்கின்றார். எங்கள் அமைச்சர் இதற்குக் காரணம் நான் என்று நினைத்துவிட்டார்கள். அவர்களின் கோபம் காணவும் நான் உடனே மருத்துவ விடுப்பு எடுத்து சிகிச்சைக்குச் சென்றுவிட்டேன். திரு பாலகுருவா ரெட்டியார் அவர்கள் வாடிப்பட்டி காலத்திலிருந்து என் மீது பரிவு கொண்டவர். என்னைப் பார்க்க வந்த பொழுது எனக்கு மாறுதல் உத்திரவு வந்திருந்தது. அமைச்சரின் கோபத்திற்குக் காரணம் தெரியவில்லையென்று அவரிடம் மட்டும் நடந்தவைகளைக் கூறினேன். உடனே அவர் நடந்த குழப்பதைப் புரிந்து கொண்டார். அப்பொழுது அமைச்சராக இருந்த திரு ராகவானந்தம் அவர்கள்தான் எங்கள் அமைச்சரைப் பற்றி முதல்வரிடம் குறை கூறி யிருக்கின்றார். விஷயம் தெரியவும் எங்கள் அமைச்சரைச் சந்தித்து மாறுதல் உத்திரவை ரத்து செய்து மீண்டும் மதுரைக்கே என்னை அலுவலராக்கக் கேட்டிருக்கின்றார். அப்பொழுது எங்கள் அமைச்சார் சொன்னது :
“சீதாலட்சுமிக்கு நம் தலைவரையும் தெரியும். எதிர்க்கட்சித் தலைவரையும் தெரியும். பத்திரிகைகளின் சகவாசம். எங்கு வேண்டுமானலும் மாற்றுகிறேன். என் தொகுதியுள்ள மதுரை மாவட்டம் மட்டும் வேண்டாம்”
ரெட்டியார் முதல்வருக்குப் பிரியமானவர்களில் ஒருவர். அதனால்தான் அவரை சுற்றுலாதுறைத் தலைவராக நியமித்தார். . என்னை சென்னைக்கு மாற்றினார்கள். ரெட்டியாரிடம் இனிமேல் தலையிட வேண்டாம் என்று கூறி விட்டேன். சென்னையில் குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் அலுவரானேன். இதில் அமைச்சர் அவர்களைச் சந்திக்க வேண்டி வராது. ஆனாலும் எனக்குச் சோதனை தொடர்ந்த்து.. சென்னையில் ஓர் விழா ஏற்பாடாயிற்று. அதற்கு முதல்வரும் வருகை தந்தார். எங்கள் அமைச்சர் என்னை மேடைக்கே வர வழைத்து என்னையும் வைத்துக் கொண்டே முதல்வரிடம் புகார் செய்தார்கள். “இவள் கருணாநிதி ஆள். தி. மு. க. கட்சி. இவளை அரசுப் அணியில் வைக்கக் கூடாது. நடவடிக்கை எடுக்க வேண்டும் “
நான் ஒன்றும் பேசவில்லை. முதல்வர் என்னைப் பார்த்து” நீங்கள் போங்கம்மா” என்று சொல்லி அனுப்பினார்.
நினைத்துப் பாருங்கள். அம்மையாரின் கோபம் என் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் விளைந்தது. என் முன்னால் வெளிப்படையாக முதல்வரிடம் புகார் செய்யும் அளவு கோபம். இதுபோன்று அரசு அலுவலர்கள் சில சூழ்நிலைகளில் செய்யாத தவறுக்கு அல்லல் படுவதுண்டு.
மணியன் என்னை அலுவலகம் வரச் சொன்னார். மேடையில் நடந்த நிகழ்ச்சி பற்றி விசாரித்தார். உடனே புரிந்து கொண்டேன். முதல்வர் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியிருக்கின்ரார். நான் மணியன் அறையில் இருக்கும் பொழுது மணியனே முதல்வரிடம் தொலை பேசியில் பேச ஆரம்பித்தார். பேச்சு அவருடன் நிற்கவில்லை. முதல்வர் என்னிடமும் நடந்த உண்மைகளைக் கூறச் சொன்னார். இதுவரை என் பழக்கங்களை எனக்காகப் பயன்படுத்திக் கொண்ட தில்லை. ஆனால் முதல்வரே விசாரிக்கவும் ரெட்டியார் கூறிய வைகளைக் கூறினேன். “ கவலைப் படாதீர்கள். அம்மையார் உங்கள் மேல் மிகவும் கோபமாக இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும் ஏதாவது பிரச்சனை என்றால் தயங்காமல் உடனே வந்து சொல்லுங்க”
என்னைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால் எம்.ஜி.ஆர் அவர்கள் என்னைத் தவறாக நினைக்கவில்லை அவருடைய மனித நேயம் பற்றி அறிய எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாகப் பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கை களையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு பெரிய குறை. ஆனாலும் எம். ஜி. ஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை. எல்லோரும் விரும்பினார்கள். அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள்.
சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவடன் அங்கே துலாக் கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்.
நான் யாருடைய குறைகளையும் கூற விரும்பவில்லை. அதே நேரத்தில் சமுதாயத்தின் அமைதிக்கு ஆதரவாக இருந்தவர்களைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. இது வாழ்வியல் தொடர். எனக்கு இந்த சமுதாயம்தான் முக்கியம். இதற்கு நன்மைகள் செய்தால் அவர்களுக்கு நன்றி கூறுவது எனக்கு திருப்தி கொடுக்கின்றது. எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் ஓர் நல்ல மனிதர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். ஆனால் நானே என்னை மறந்து ஒருவரை வணங்கினேன். அது எம்.ஜி. ஆர் அவர்கள். பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி யிருந்தார்கள். இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். அந்த முகமும் குரலும் என்னை அவரை வணங்க வைத்தது. தாய்க் குலத்தை மதிக்கும் அவர் குரலில் அன்று தாய்மைப் பரிவை உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டிய தில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்
மனித நேயம் உள்ளவர்கள்தான் மனிதம் காப்பாற்றுகின்றார்கள்.
அரசியல்வாதிகள் தொடர்பினை நான் தேடிச் சென்றதில்லை. தற்செயலாக நிகழ்ந்த வாய்ப்புகள். நண்பர்களுடன் கொடுக்கல் வாங்கல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் ஆதாயம் பெற்றால் நாம் என்ற சுயம் அழிந்துவிடும். எனக்கென்று பயன் இல்லாவிட்டாலும் இவர்கள் தொடர்பால் பணிக்களத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடிந்தன. இந்தத் தொடர்பால் சில சமயம் பிரச்சனைகள் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை.
1980ல் ஒருங்கிணந்த ஊட்டசத்து திட்டம் உலக வங்கியால் தமிழகத்தில் கொட்டாம்பட்டியில் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்திற்கு விரிவாக்கம் செய்த பொழுது உதவி இயக்குனர் பொறுப்பில் மதுரைக்குச் சென்றேன். 1981 முதல் என் பணிச்சுமையும் தொழில் சங்கப் பணிகளும் சேர்ந்து அரசியல் உலகினின்றும், பத்திரிகை உலகினின்றும் சிறிது ஒதுங்க வைத்தது. 1967 ஆண்டுக்குப் பின் வந்த சில திட்டங்கள் பற்றி மட்டும் சிறு குறிப்புகள்தான் எழுதியிருக்கின்றேன். தகவல்கள் வேண்டுபவர்கள் விபரங்களைச் சேகரித்து இத்துடன் இணைத்துக் கொள்ளலாம். ருக்மணி இதனைச் செய்வார் என்று நம்புகின்றேன்
இதுவரை பெண்களின் முன்னேற்றம், குழந்தைகள் நலம் பற்றி இந்த நூற்றாண்டில் நடந்தவைகளைப் பார்த்தோம். இது வாழ்வியல் தொடர் இன்னும் சில விஷயங்கள் பொதுவானவை கூற விரும்புகின்றேன்
மனிதன் எப்பொழுதும் தன் குறையை உணராமல் பிறரைக் குறை கூறுவது இயல்பாகி விட்டது.
அரசியல்வாதிகள்மேல் பழி போடுவது பழக்கமாகிவிட்டது. அவர்களுக்குக் கோபம் வந்தால் அரசுப் பணியாளர்களுக்கு மாறுதல் மட்டும் வரும். அரசில் உயர்நிலை அதிகாரிகளுக்குக் கோபம் வந்தால் கீழே உள்ளவர்களுக்கு மாறுதல் மட்டுமல்ல பல இன்னல்கள், நஷ்டங்கள் ஏற்படும். இவர்கள் இருவரையும் இப்படி ஆக்கியது யார்
நாம். ஆம் பொது மக்கள்.
குறுக்கு வழியில் வேலை முடிக்க லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தோம். நம் காரியங்களை முடிக்க அரசியலிலும் சேர்வோம்.
நம் கொள்கை என்ன? நாம் சுகமாக இருக்க வேண்டும். விரும்பும் அனைத்தும் கிடைக்க வேண்டும். எனவே லாபம் கிடைக்கும் இடங்களூக்கு ஓட்டப் பந்தயமும் நடத்துவோம்.
சிலர் நேரடியாகத் தவறுகள் செய்வார்கள். ஒதுங்கிப் போவதாகக் கூறுவதும் பொறுப்பற்ற செயல். நம் கடமைகளைச் சரிவரச் செய்கின்றோமா? நம்மைப் பற்றி அலசிப் பார்ப்போமா? முயல்வோம். எங்கும் எதிலும் தீமை வளர்ந்து விட்டது. நம் ஊரில் மட்டுமல்ல, நம் நாட்டில் மட்டுமல்ல உலகத்திலேயே மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. மனிதம் காக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிறிது சிந்திப்போமே. அடுத்து பார்ப்போம்
“எப்பொழுதும் சம நிலைப்பட்ட மனத்துடனிரு.
அன்பின் மூலம் பலம் பெறு.
வாழ்க்கையில் பரந்த நோக்கம் கொள். “
சுவாமி சிவான்ந்த மஹரிஷி
[படத்திற்கு நன்றி]
(தொடரும்)